Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்

ஜல்லிக்கட்டு... அட்டைக்கட்டு!யுவா, ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம்

ஜல்லிக்கட்டு... அட்டைக்கட்டு!யுவா, ஓவியம்: மகேஸ்

Published:Updated:
கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்
கலகல கடைசி பக்கம்

“அப்பா, நாளைக்கு ஸ்கூல் திறக்கறாங்க. அட்டை போடாமல் கொண்டுபோனா மிஸ் திட்டுவாங்க!” என்றான் யோகேஷ். மேஜை மீது மூன்று அடுக்குகளில் இருந்தன அவனது எட்டாம் வகுப்புச் சொத்துக்கள்.

“புக்ஸ், நோட்புக்ஸ், ஸ்கிராப் புக் அது இதுன்னு 42 அயிட்டம் இருக்கு. போன வருஷம் ஆபீஸ் டூர்னு நீங்கபாட்டுல கிளம்பிப் போயிட்டீங்க. நாலு மணி நேரம் அட்டை போட்ட பிறகு, ரெண்டு நாளைக்கு எழுந்திருக்கவே முடியாம இடுப்பு வலி பின்னி எடுத்துடுச்சு. ஆளை விடுங்க!” என்று உஷாராக எஸ்கேப் ஆகிவிட்டார் யோகேஷின் அம்மா உஷா.

“அட்டை போட நாலு மணி நேரமா? அரை மணி நேரத்துல அடிச்சுத் தள்ளறேன் பாரு” எனப் பந்தாவாகச் சொல்லியிருந்தார் அப்பா அருண்குமார். ஆனால், ஒரு வாரமாக அந்த அரை மணி நேரம்தான் இன்னும் அவருக்கு வாய்க்கவில்லை. தினமும் காலையில் ஆபீஸுக்குக் கிளம்பும்போது, “இன்னிக்கு எப்படியும் சாயந்திரம் வந்து முடிச்சுடறேன்” என்பார். அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், கொஞ்சம் நேரம் அரட்டை, தொலைக்காட்சியில் ஐபிஎல் மேட்ச் என நேரம் ஓடும். 10 மணிக்கு, “ஆபீஸ்ல எக்கச்சக்கமான வேலை. உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. நாளைக்கு போடறேன்டா” என்பார் கொட்டாவியோடு.

இதோ, நாளைக்குப் பள்ளிக்கூடமே திறக்கப்போகிறார்கள். அன்று அப்பா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கே எட்டு மணி ஆகிவிட்டது. வந்தவர் அம்மா தந்த காபியை ருசித்துவிட்டு, சிறிதே ரிலாக்ஸ் செய்துகொண்டுவிட்டு, “சரி சரி... பிரெளன் ஷீட், கம், கத்தரிக்கோல் எல்லாத்தையும் எடு” என்றபடி லுங்கியை மடித்துக் கட்டி, ஜல்லிக்கட்டுக்குத் தயாராவதுபோல சுறுசுறுப்பானார்.

வீடே பரபரப்பானது. “ஃபேனை ஸ்லோவா வை”, “அப்படி கட் பண்ணினா ஒரு ஷீட்ல ரெண்டு புக்ஸ்கூடப் போட முடியாது. இப்படி கட் பண்ணுங்க”, “ஸ்டேப்லர் போடாதீங்கப்பா, செல்லோபன் டேப் ஒட்டணும்”, “ஒரு பக்கம் இழுத்துக்கிச்சு பாருங்க. நல்லா அழுத்திப் போடணும்...”

அட்டை போடும் படலம் ஏக தடபுடலாக ஆரம்பித்த அடுத்த அரை மணி நேரத்தில் மின்சாரம் போய்விட்டது. “போச்சு! நாளைக்கு நான் ஸ்கூலுக்குப் போன மாதிரிதான்” என்று தலையில் கை வைத்துக்கொண்டான் யோகேஷ்.

“இருடா, ரொம்ப டென்ஷன் ஆகாதே! இதோ, அஞ்சு நிமிஷத்துல கரன்ட் வந்துடும்” என்ற அப்பாவின் குரலில்தான் டென்ஷன்!

ஆனால், ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் கரன்ட் வந்தது. புக்ஸ், நோட்புக்ஸ் எல்லாவற்றுக்கும் அட்டை போட்டு முடித்தபோது நள்ளிரவு 1 மணி. ஹால் முழுக்க பிரெளன் ஷீட் துண்டுகள் இறைந்து கிடக்க, அதற்கு நடுவிலேயே அப்பாவும் மகனும் களைப்பாகப் படுத்து உறங்கினார்கள்.

மறுநாள் மாலை வீட்டுக்கு வந்த அப்பா, “என்னடா... புது கிளாஸ் எப்படி இருக்கு? புது மிஸ் என்ன சொன்னாங்க?” என்று கேட்டார்.

“நிறைய புது ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க! புது மிஸ் கலகலன்னு பேசினாங்க. ‘அன்னன்னிக்குண்டான பாடங்களை அன்னன்னிக்கே படிச்சுடணும்; எதையும் நாளைக்குப் பாத்துக்கலாம்னு ஒத்திப் போடக்கூடாது! புரியுதா?’ன்னு ஸ்ட்ரிக்டா சொன்னாங்கப்பா” என்றான் யோகேஷ்.

“குட்! உனக்காகவே சொல்லியிருக்காங்க. புரிஞ்சு நடந்துக்கோ!” என்ற அப்பா, ‘எனக்காகவும்தான் சொல்லியிருக்காங்க. ட்ரை பண்றேன்’ என மனசுக்குள் சொல்லிக்கொண்டார்.