Published:Updated:

’எந்த நோயையும்விடக் கொடுமையானது பசி!’ - வள்ளலார் வழிநடக்கும் பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம்

’எந்த நோயையும்விடக் கொடுமையானது பசி!’ -  வள்ளலார் வழிநடக்கும் பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம்
’எந்த நோயையும்விடக் கொடுமையானது பசி!’ - வள்ளலார் வழிநடக்கும் பாடியநல்லூர் சன்மார்க்க சங்கம்

சென்னைப் பாடியநல்லூர்... நேரம் சரியாக மதியம் பன்னிரண்டு. உச்சிவெயில் மண்டையைப் பிளந்து, உடலில் தேங்கியிருக்கும் ஒருசொட்டு நீரைக்கூட ஆவியாக்கி, அனல் பரப்பிக்கொண்டிருந்தது. அந்தக் கணத்தில், நல்ல ஆரோக்கியமான மனிதர்கள் வெளியே உலவினாலே அரை மயக்கத்துக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், அங்கேயோ ஐம்பது, அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் ஒவ்வொருவராக ஒரு கட்டத்தை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஊன்றுகோலின் உதவியோடு சிரமப்பட்டு அந்தக் கட்டடத்தை அடைந்தார்கள். அத்தனை பேர் முகத்திலும் சோக ரேகைகள் தெரிகின்றன; ஏக்கமும் எதிர்பார்ப்பும் அப்பிக்கிடக்கின்றன. `எதற்காக இத்தனை பேர் அந்தக் கட்டடத்தை நோக்கிச் செல்கிறார்கள்... அவர்கள் அடைந்த இடம் ஒரு மருத்துவமனையும் அல்ல. அது என்ன இடம்?’ என்று தெரிந்துகொள்ள நாம் அவர்களை நோக்கிச் சென்றோம்.

ஓர் ஆலமரத்து நிழலில் எதையோ எதிர்பார்த்து அந்த முதியவர்களையும் சேர்த்து, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கடந்து சென்றால் ஒரு சமையலறை. அங்கே உணவு தயாராகிக்கொண்டிருக்கிறது. வெளியில் அவர்கள் காத்துக்கொண்டிருப்பது இந்த உணவுக்காகத்தான். சமையலையறையைக் கடந்து நிமிர்ந்து பார்த்தால், ஒரு பெயர்ப்பலகை. அதில், அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமகனின் புகைப்படத்தோடு 'பாடியநல்லூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' என்கிற பெயர். அதற்குக் கீழே வெள்ளை - மஞ்சள் நிறத்தில் சன்மார்க்கக் கொடி பறந்துகொண்டிருக்கிறது. `அனைத்துப் பிணிகளையும்விட பசிப்பிணியே கொடுமையானது’ என்று போதித்த வள்ளலார் பெருமகனின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அது.

கொடிக்கம்பத்தைக் கடந்து சற்று தூரத்தில் நான்கைந்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் சங்கத்தின் நிர்வாகிகள் என்று தெரிந்துகொண்டு அவர்களை நெருங்கினோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினோம்.

"1970-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக இந்தச் சன்மார்க்க சங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 1964-ம் வருஷம் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களுக்காகக் கொடுக்கப்பட்ட நிலம்தான் இது. நாங்கள் அனைவரும் பர்மாவிலிருந்து வந்தவர்கள்தாம். புனிதவதி அம்மா என்பவர்தான் இந்தச் சங்கத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் நலிந்தோர், மெலிந்தோர், வயதானவர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை உணவளித்து வந்தோம். 2013-ம் ஆண்டிலிருந்து மூன்று வேளையும் உணவளிக்கிறோம்.

காலையில் 30 பேருக்குக் கஞ்சியும், மதியம் 150 பேருக்கு நித்திய அன்னதானமும், இரவு பத்துப் பேருக்கு சிற்றுண்டியும் கொடுத்துவருகிறோம். இவைதவிர உடல் ஊனமுற்றோர், ஆதரவில்லாத வயதானவர்களை இங்கேயே தங்கவைத்துப் பராமரித்தும் வருகிறோம். சங்கத்தில் மொத்தம் 50 பேர் உறுப்பினர்கள். ஒவ்வொருவரும் மாதத்துக்கு இவ்வளவு என ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்துகிறோம். அதோடு, பலர் நன்கொடையும் அளிக்கிறார்கள்.

பலர் அவர்கள் வீட்டுக் குழந்தைகளின் பிறந்தநாள், இறந்தபோன முதியவர்களின் நினைவுநாள், திருமண நாள் ஆகிய தினங்களில் நன்கொடை கொடுப்பார்கள். எங்களால் முடிந்த அளவுக்குப் பசிப்பிணியைப் போக்க முயற்சி செய்துவருகிறோம். கல்வி உதவி, வேறு ஏதேனும் மருத்துவ உதவி என்றாலும்கூட ஞாயிறுதோறும் இங்கே நடக்கும் சொற்பொழிவு நிகழ்வில் வந்து தெரிவித்தால் அதற்கான உதவிகளைப் பெற்றுத் தருகிறோம்" என்று சொல்லிவிட்டு சமையற்கட்டு வேலைகளைக் கவனிக்க நகர்ந்தார் சன்மார்க்க சங்கத்தின் செயலாளர் ராமையா.

" 'எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்முயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடமென நான் தெரிந்தேன்’ ‘’ என்ற பாடல் வரிகளோடு பேச ஆரம்பிக்கிறார் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன்.

" `சாதி, மத பேதமில்லாமல் எந்த உயிரையும் தன்னுயிர்போல் கருதி சமத்துவச் சிந்தனையோடு வாழ்பவரின் உள்ளத்தில்தான் இறைவன் இருக்கிறான்.’ இறைவன் வாழும் இடம் எது என்று கேட்டதற்கு அருட்பெருட்சோதி வள்ளலார் ஐயா அளித்த பதில் இது. அதைத்தான் நாங்களும் செய்துவருகிறோம். இது பக்தி மார்க்கம் கிடையாது. ஞான மார்க்கம். அது மற்றவர்கள் திணித்து வராது... தானாக உணர்ந்து வருவது.

வள்ளலார் ஐயா, மனிதநேயம், மனிதப் பண்பு அதற்கு அடுத்ததாகத்தான் ஆன்மநேயத்தை வலியுறுத்துகிறார். பசிப்பிணிகளைப் போக்க வேண்டும் என்கிறார். அவரைப் பின்பற்றும் நாங்கள் அவரின் வழியில் தருமசாலையை நிறுவி பசிப்பிணியைப் போக்கிவருகிறோம். இன்னும் சில நாள்களில் நடமாடும் தருமசாலைகளைத் தொடங்கவிருக்கிறோம்" என்று சொன்னபடி உணவு பரிமாற ஆயத்தமாகிறார் .

ஆலயத்துக்குள் அமர்ந்து பாடல் படித்துக்கொண்டிருந்தார் ஒருவர். நம்மைக் கண்டதும், ``அருட்பெருஞ்சோதி...’’ என்றபடி வந்து பேசத் தொடங்கினார்... "என் பெயர் உமாபதி. பூதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். ஓய்வு பெற்ற நாளிலிருந்து தினமும் இங்கே வந்துவிடுவேன். சாப்பிட, தூங்க மட்டும்தான் வீட்டுக்குப் போவேன். வீணாகப் பேசுதல், தேவையில்லாத செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு ஆன்மத் தேடலுக்காக இங்கே வருகிறேன்.

வள்ளலார் ஆன்மிக நெறிகளை மட்டும் போதிக்கவில்லை. பன்முகத் திறனாளர் அவர். எனக்குத் தெரிந்து உலகின் முதல் கல்வெட்டு ஆய்வாளர் அவர்தான். ஏகப்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். `கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’வென்று மூடப்பழக்கவழக்கங்களைச் சாடியிருக்கிறார்.

சாதியமும் மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதியும் அவரே’’ என்று வள்ளலார் குறித்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் தமிழாசிரியர் உமாபதி.

அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதே அங்கே கைக்குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்தது. 'ஜோதி' இருக்கும் இடத்தில் அந்தக் குடும்பமும், நிர்வாகிகளும் கூடி அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி வாழ்த்தி, பாடல் பாடினார்கள். அந்தக் குழந்தையின் பெயர் ஜீவன். இன்றைக்கு முதல் பிறந்தநாள். இன்றைக்குச் சங்கத்தில் தயாராகும் உணவு அவர்களின் நன்கொடை. பாடல்கள் பாடி வழிபாடு முடிந்ததும், அனைவரும் தருமசாலையை நோக்கி நடந்தார்கள்.

குழந்தை ஜீவனின் தந்தை தீனேஷிடம் பேசினோம்... "நான் அபுதாபியில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். என் பையனின் முதல் பிறந்தநாள். என் மனைவி கர்ப்பமாக இருந்தப்போ எங்க அம்மா, நல்லபடியா குழந்தை பிறந்தா எல்லோருக்கும் சாப்பாடு போடுறதா வேண்டிக்கிட்டாங்க. அதான் முதல் பிறந்தநாளான இன்னைக்குப் பண்றோம். இவ்வளவு பேரோட வாழ்த்து என் பையனுக்குக் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என்றபடி பரிமாறத் தொடங்கினார் தினேஷ்.

காத்திருந்த அனைவருக்கும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பாயசம், அப்பளத்துடன் உணவு பறிமாறப்பட்டது. வாசலில் காத்திருந்து, பந்தியில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்போது ஒரு தெளிவைக் காண முடிந்தது. எல்லாத் துன்பங்களையும், பிணிகளையும்விட கொடுமையானது பசிப்பிணி என்பதை நேரில் கண்டுணர்ந்த தருணம் அது.

தலைசிறந்த ஆன்மிகப் பெரியவர்கள் பலர் எவ்வளவோ உயர்ந்த தத்துவங்களைப் போதித்திருக்கிறார்கள். அவை அத்தனையையும்விட மனிதர்களுக்கு அவசியமான ஒன்றைப் போதித்த பெருமகன் வள்ளலார். எவ்வளவு சிறப்பு வாய்ந்த, வாழ்க்கையையே புரட்டிப் போடும் போதனைகளாக இருந்தாலும், காய்ந்த வயிற்றோடு இருக்கும் மனிதனின் துன்பத்தை அது போக்காது என்பதை அறிந்த ஞானி அவர்.