Published:Updated:

தில்லைவனத் திருக்குளத்தில் நீராடி சந்தான கிருஷ்ணனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்!

தில்லைவனத் திருக்குளத்தில் நீராடி சந்தான கிருஷ்ணனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்!
தில்லைவனத் திருக்குளத்தில் நீராடி சந்தான கிருஷ்ணனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்!

திருமணக் கோலத்தில் ராமபிரான் சீதாபிராட்டியுடன் முகம் கொள்ளா பூரிப்புடன் காட்சி தரும் திருத்தலம் தில்லை விளாகம்.  முற்காலத்தில் தில்லைவனமாக இருந்த இந்தப் பகுதியில் வேலுத்தேவர் என்பவர் வசித்து வந்தார். ஒருநாள் இரவு அவர் கனவில் தோன்றிய ராமர், ராமேஸ்வரத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் பக்தர்கள், இங்கே குளித்துவிட்டு ஓய்வெடுத்துச் செல்வதற்காக ஒரு குளம் ஏற்படுத்துவதுடன், ஒரு மடமும் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டார். வேலுத்தேவரும் குளம் வெட்டத் தொடங்கினார். சுமார் பத்தடி ஆழம் தோண்டியபோது, மண்ணுக்குள் மறைந்திருந்த சிலைகளின் சிறிய பகுதி தென்பட்டது. உடனே தோண்டுவதை நிறுத்திவிட்டு, மண்ணை மெள்ள அப்புறப்படுத்தியபோது, பஞ்சலோகத்தினாலான வீரகோதண்ட ராமர், சீதா பிராட்டியார்,லட்சுமணன், ஆஞ்சநேயர், சந்தான கிருஷ்ணன், விஷ்ணு, சத்தியபாமா,ருக்மணி மற்றும் சக்கரத்தாழ்வார் சிலைகள் இருந்தன. உடனே, அந்த இடத்துக்கு அருகிலிருந்த அரசமரத்தினடியில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து, சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். முதலில் அய்யாவு பட்டர் என்பவர்தான் பூஜை செய்து வந்தார்.

பல வருடங்கள் கோயில் கீற்றுக் கொட்டகையாகத்தான் இருந்தது. தனக்கு அழகியதோர் ஆலயம் அமையவேண்டும் என்று ராமபிரான் திருவுள்ளம் கொண்டார் போலும். அதற்கான கருவியாக அமைந்தவர்தான் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். திருமணமாகி நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தவருடைய கனவில் தோன்றிய ராமபிரான், 'தில்லைவனத்துக்கு வந்து, கோயில் திருக்குளத்தில் நீராடிவிட்டு, சந்தான கிருஷ்ணனை வேண்டிக்கொண்டால் உனக்குக் குழந்தை பிறக்கும்' என்று கூறினார்.

அவரும் மனைவியுடன் தில்லைவனத்துக்கு வந்து சந்தான கிருஷ்ணனை வேண்டிக்கொண்டதுடன், தனக்குக் குழந்தை பிறந்தால், கொட்டகையில் இருக்கும் ராமபிரானுக்குக் கோயில் கட்டுவதாக சங்கல்பம் செய்துகொண்டார். அதன்படி ஒரு வருடத்திலேயே கோபால கிருஷ்ண அய்யரின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் கோதண்ட ராமர் என்று பெயரிட்டவர், தான் சொன்னது போலவே ஆலயம் கட்டுவதற்கான உதவிகளையும் செய்தார். அவருடைய உதவியுடன் இந்தக் கிராமத்தினர் 1907ம் ஆண்டு ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கினார்கள். இரண்டரை அடி உயரமுள்ள  ராமர், இரண்டே கால் அடி உயரம் உடைய இளையபெருமாள், சீதாபிராட்டியார் எனப் பஞ்சலோக திருமேனிகள் செய்து வைத்ததுடன் ஆலயம் கட்டும் பணிகள் 1913-ல் முடிந்து  முதல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை வைகாநச ஆகம முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

குளம் வெட்டியபோது கிடைத்த பஞ்சலோக ராமர்தான், வீர கோதண்டராமர் என்னும் திருப்பெயருடன், சுமார் ஐந்தடி உயரத்தில் காட்சி தருகிறார். பஞ்சலோகத்தினாலான சிலையே, மூலவராகக் காட்சி தருவது இந்தக் கோயிலின் சிறப்பு. ராமர் வலது கையில் அம்பும், இடது கையில் கோதண்டம் என்ற வில்லுடனும் கம்பீரமாகக் காட்சி தருவதுடன், அவருடைய வலது கையில் உள்ள அம்பில், 'ராமசரம்' என்று தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். கை விரல்கள் மற்றும் கெண்டைக் கால்களில் உள்ள பச்சை ரேகைகள்கூட நன்றாகத் தெரியும்படி அத்தனை நுணுக்கமான வேலைப்பாட்டுடன் காட்சி தருகிறார் வீரகோதண்டராமர். ஆஞ்சநேயர் குருவுக்கு முன்பாக இருக்கும் சீடனைப் போல் கை கட்டி வாய் பொத்திய கோலத்தில் காட்சி தருகிறார்.

திருமணத் தடை உள்ளவர்கள், வேலையில் பதவிஉயர்வு வேண்டுபவர்கள், படிப்பில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, ஒரு படி தயிர்சாதம் தயாரித்து, புதிய நான்கு முழ வேஷ்டியில் தயிர்சாதத்தை மூட்டை போல் கட்டி, ஆஞ்சநேயர் உடலில் சாத்தி, அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து, ராமரின் சந்நிதியில் சிறிய விக்கிரகமாக இருக்கும் சந்தான கிருஷ்ணனை கையில் வாங்கி வேண்டிக்கொண்டால், உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை அமாவாசை நாள்களில் கோயில் குளத்தில் நீராடிவிட்டு, சந்தான கிருஷ்ணனை வேண்டிக்கொண்டாலும் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.


அட்சயத் திரிதியை நாளில் கோயிலில் உற்சவம் நடைபெறுகிறது. மேலும், ராமநவமியையொட்டி 11 நாள்கள் பிரம்மோற் சவமும், புரட்டாசி நவராத்திரி, விஜயதசமி, கிருஷ்ண ஜயந்தி ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 12.30 வரை; மாலை 5 முதல் 8.30 வரை

எப்படிச் செல்வது... திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில், கோபாலசமுத்திரம் என்ற இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.