Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

தெய்வச் சிலைகளுக்கே சோதனையா..?

நாரதர் உலா

‘தெய்வம் என்றால் அது தெய்வம்... வெறும் சிலை என்றால் அது சிலைதான்’ என்று மெல்லிய குரலில் ராகம் போட்டுப் பாடியபடி நமது அறைக்குள் பிரவேசமானார் நாரதர். ‘சரிதான்... சிலைக் கடத்தல் பற்றிய தகவல்களுடன் வந்திருக்கிறார் போலும்!’ எனப் புரிந்துகொண்டோம். நமது யூகம் சரியே!

நாரதர் உலா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கோயிலுக்கு வரும் பக்தர்களின் சிரமங்களையும், நிர்வாகத்தில் இருக்கும் குறைகளையும் பற்றித்தான் நாம் இதுவரை பார்த்தும் கேட்டும் வந்திருக்கிறோம். ஆனால், கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகளுக்கும் ஆபத்து இருக்கவே செய்கிறது என்று கேள்விப்படுகிறபோது வருத்தமாக இருக்கிறது’’ என்ற நாரதரிடம், ‘‘சிலைக் கடத்தல் என்பது ஒன்றும் புதியதல்லவே? பல வருஷங்களாகவே நடந்துவரும் விஷயம்தானே?’’ என்று கேட்டோம்.

‘‘அதென்னவோ உண்மைதான்! ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு, கடத்தல் தடுக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன்’’ என்றார் நாரதர்.

‘‘எப்படி இது சாத்தியமாயிற்றாம்?’’

‘‘சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் தீனதயாளன் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் இருந்து சிலைகள் கடத்தப்படுவதாக, சிலைக் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு ஒரு தகவல் வந்தது. அப்போது அவர் ஒரு வழக்கு விஷயமாக சித்தூரில் இருந்திருக்கிறார். உடனே அவர் சென்னையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு, அவர்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்று போனிலேயே அறிவுரைகளும் வழங்கினார்.

நாரதர் உலா

அதன்படியே டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையில் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சோதனை செய்தபோது, பெரிய கருடாழ்வார் சிலையை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக பார்சல் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள். உடனே அவர்களைக் கையும் களவுமாக கைது செய்திருக்கிறது போலீஸ். வீட்டை முழுவதும் சோதனை செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள், கல் சிலைகள், பழங்கால ஓவியங்கள், தந்தத்தாலும் மரத்தாலும் ஆன நுண்ணிய வேலைப்பாடு மிக்க கலைப் பொருட்கள் போன்றவற்றையும் மீட்டிருக்கிறார்கள். மேலும், அதே பகுதியில் இன்னும் இரண்டு வீடுகளில் தீனதயாளன் கடத்தி வைத்திருந்த சிலைகளையும் மீட்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எட்டியதும், இந்த விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் சுதந்திர மாகச் செயல்பட்டு, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.”

‘‘கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதே. அதிருக்கட்டும், தீனதயாளனின் பின்னணி பற்றி விசாரித்தீரா?’’

‘‘போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தேன். அவருடைய பூர்வீகம் ஹைதராபாத்.

நாரதர் உலா

1965-ம் ஆண்டு முதலே சிலைகளைத் திருடி கடத்தும் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். ஒருமுறை, ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் சிலை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர், சென்னையில் இருந்த ஆர்ட் கேலரிகளை மூடிவிட்டு, ஆந்திராவுக்கே போய்விட்டார். பின்பு அங்கிருந்து மும்பை வழியாக சிலைகளைக் கடத்தும் முயற்சிகள் தோல்வியில் முடியவே, மீண்டும் சென்னைக்கு வந்து பழையபடி இங்கே சிலை கடத்தல் தொழிலைத் தொடர்ந்திருக்கிறார். தஞ்சாவூர், அரியலூர் பகுதிகளில் உள்ள கோயில்களின் சிலைகள் தீனதயாளன் கும்பலால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் என்கிறது போலீஸ்!’’

‘‘இதுவரை மொத்தம் எத்தனை சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன?’’

‘‘தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை வீடு மற்றும் இரண்டு கிடங்குகளில் இருந்து மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த 54 உலோகச் சிலைகள், 250-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 28 மரச் சிற்பங்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கிருஷ்ணன், இரண்டு கோமாதாக்களின் நுட்பமான சிற்பங்கள், 151 ஓவியங்கள் போன்றவை கிடைத்திருக்கின்றன. சோதனை முழுமையாக முடிந்த பிறகுதான் சரியான எண்ணிக்கை தெரியவரும் என்கிறார்கள்.’’

‘‘தீனதாயளன் இன்னும் கைது செய்யப்படவில்லையாமே?’’

‘‘தன் வீட்டுக்கு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட உடனே தீனதயாளன் தப்பிவிட்டார். அவருடைய வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ராஜாமணி, மான்சிங், குமார் ஆகியோர்தான் முதலில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போலீஸார் கொடுத்த சட்ட ரீதியான அழுத்தத்தால், சில தினங்களில் தீனதயாளன் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு சி.ஐ.டி. பிரிவு அலுவலகத்தில் சரணடைந்துவிட்டார். தீனதயாளன் வயதானவர் என்பதால், அவரைக் கைது செய்யாமலேயே தீவிரமாக விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள்.”

‘‘இப்படிக் கோயில் சிலைகள் காணாமல் போவது பற்றி, அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லையா?’’

நாரதர் உலா

‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்?

2002-ம் ஆண்டில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இருந்து அர்த்த நாரீஸ்வரர் சிலை திருடு போய்விட்டது. ஆனால், அதுபற்றி அறநிலையத் துறையோ, கோயில் நிர்வாகமோ புகார் எதுவும் கொடுக்கவில்லை. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பொன். மாணிக்கவேலுவின் கவனத்துக்கு இந்த விஷயம் தெரியவர, அவர் உடனே இது பற்றி அறநிலையத் துறையின் அப்போதைய ஆணையரிடம் விவரம் கேட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதாக பதில் வந்திருக்கிறது. பின்னர், தனக்குக் கிடைத்த ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி, கண்டிப்புடன் கேட்டதும்தான் உண்மை வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு 2013-ம் ஆண்டில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருக்கிறது. இதுதான் அறநிலையத் துறையின் லட்சணம்! தமிழகக் கோயில்களில் உள்ள விக்கிரகங்கள், கற்சிலைகள், நகைகள் பற்றிய முழுமையான விவரங்களை அறநிலையத் துறை முறையாக ஆவணப்படுத்தாமல் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள்.’’

‘‘இனியாவது அறநிலையத் துறை விழித்துக் கொள்ளுமா?’’

‘‘இப்போது மீட்கப்பட்டுள்ள சிலைகளைப் பற்றி ஆய்வு செய்யுமாறும், எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பதை உறுதி செய்யுமாறும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் அறநிலையத் துறையினரை வலியுறுத்தி இருக்கிறார்கள். கடந்த 15 நாட்களாகத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மீடியாக்கள் சாட்டையை சுழற்றவும், இப்போதுதான் சுதாரித்து சிலைகளைப் பார்த்து ஆய்வு செய்து வருகிறது அறநிலையத் துறை.’’

‘‘அதிருக்கட்டும்... போனமுறை வந்தபோது கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலில் 25 வருடமாக பங்குனி உத்திர பிரம்மோற்ஸவம் நடைபெறவில்லை என்று பக்தர்கள் ஆதங்கப்பட்டதாகச் சொன்னீரே, அதுபற்றி விசாரித்தீரா?’’ என்று பேச்சை திசை மாற்றினோம்.

நாரதர் உலா

‘‘விசாரிக்காமல் இருப்பேனா? சுவாமிமலை திருக்கோயிலின் துணை ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன்தான் கொட்டையூர் கோயில் நிர்வாகத்தையும் பார்த்து வருகிறார். அவரிடம் கேட்டபோது, ‘கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி உற்சவ பிரம்மோற்ஸவ திருவிழா நடைபெற்றுப் பல வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த முறை என்னுடைய முயற்சியில் பங்குனி பிரம்மோற்ஸவ திருவிழா நடைபெறுவதற்கான வேலைகளைத் தொடங்கி, திருவிழா நடத்த இருக்கிறோம். சுவாமி புறப்பாட்டுக்குத் தேவையான விக்கிரகங்கள் தவிர்த்து, மற்ற விக்கிரகங்களை பாதுகாப்பு கருதி சுவாமி மலையில் வைத்திருக்கிறோம். தேர் ஓடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு, திருத்தேர் வெள்ளோட்டம் விடப்படும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்றார்’’ என்ற நாரதர்,

‘‘தீனதயாளன் வீட்டிலிருந்து சிலைகள் கடத்தப்படுவதாக பொன் மாணிக்கவேலுக்குத் தகவல் வந்தது என்று சொன்னேனே... யார் மூலம் எப்படி அந்தத் தகவல் அவருக்குக் கிடைத்தது என்று யூகித்தீரா?” என்று புதிர்க் கேள்வி கேட்டுவிட்டு, “அடுத்த முறை வரும்போது சொல்கிறேன்” என்று சொல்லிச் சடுதியில் மறைந்தார்.

படங்கள்: ப.சரவணகுமார்