Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்
News
ஆலயம் தேடுவோம்

வானமே கூரையாக... வானளந்த நாயகன்!எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்

‘குறையொன்றும் இல்லாத கோவிந்தன்’ என்று ஆண்டாள் பாடிப் பரவசம் அடைந்த பரந்தாமன், நமக்கெல்லாம் அருள்புரிவதற்காக அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கும் எண்ணற்ற திருக்கோயில்கள் நம் புண்ணியபூமி யில் அமைந்திருக்கின்றன. மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்விய தேசங்கள் 108-தான் என்றாலும், அபிமான ஸ்தலங்களாகவும் எண்ணற்ற கோயில்கள் அமைந்திருக்கின்றன.   அவற்றில் ஒன்றுதான் வேண்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் சென்னகேசவ பெருமாள் திருக்கோயில்.

ஒரு காலத்தில் பிரசித்தியுடன் திகழ்ந்த இந்தக் கோயிலில் காலம்காலமாக பக்தர்களுக்கு அருள்புரிந்த பரந்தாமன், இன்று வானமே கூரையாக வெட்டவெளியில் தாயாருடன் திருக்காட்சி தரும் நிலையைக் கண்டால், ஆண்டாள், ‘குறையொன்றும் இல்லாத கோவிந்தன்’ என்று அன்று பாடியதை நினைத்து கண்ணீர் வடித்திருப்பாள்.

ஆலயம் என்று ஒன்று இருந்தது என்பதற்கான அறிகுறிகூட எதுவும் இல்லாத அந்த இடத்தில், தாயாருடன் அருளும் பெருமாளைத் தரிசித்தபோது, வானளந்த நாயகன் இப்படி வானமே கூரையாக வெட்டவெளியில்  நின்றருள்கிறாரே என்று எண்ணி மனம் பதறித் துடித்தது நமக்கு.

ஆலயம் தேடுவோம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாம் அங்கே சென்றிருந்தபோது நம்மைச் சந்தித்த சாரங்கபாணி என்பவர் நம்மிடம், ‘‘எங்களுக்குத் தெரிஞ்சு ரொம்ப வருஷமாவே பெருமாள் கூரை இல்லாமல்தான் இருக்கார். பக்கத்துல இருக்கற சரஸ்வதிங்கற அம்மாதான் அவங்களால முடிஞ்ச அளவுக்கு தண்ணி தெளிச்சு, கோலம் போட்டு விளக்கேத்தி வர்றாங்க. இப்பத்தான் ஊர்ல இருக்கறவங்களோட சேர்ந்து முன்ன இருந்ததுபோல்
பெரிசா இல்லாட்டியும் சின்ன அளவுலயாவது ஒரு கோயிலைக் கட்டணும்னு நெனைச்சிருக் கோம். பெருமாள்தான் எங்களுக்கு அருள் புரியணும்’’ என்றார்.

பெருமாளைத் தரிசித்தோம். சென்னகேசவன் என்ற பெயருக்குப் பொருத்தமாக வெகு சுந்தர ரூபனாக திருக்காட்சி தருகிறார் பெருமாள். அவருக்கு எதிரில் ஒரு தூண் முக்கால்வாசி உடைந்திருக்கிறது. அதன் கீழ்ப்பகுதியில் ஆஞ்ச நேயரின் சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கிறது.

அருகில் சென்று உற்றுக் கவனித்தபோது, ஒரு காலத்தில் கோயிலைத் தாங்கி நின்ற தூண்களில் ஒன்றுதான் அது என்பதை அறியமுடிகிறது. மற்ற தூண்கள் இருந்த இடமே தெரியவில்லை. அந்தத் தூணுக்கு சற்று தள்ளி ஒரு கல்வெட்டும் காணப்படுகிறது. அதுவும்கூட பாதி சிதைந்த நிலையிலேயே இருக்கிறது. அந்தக் கல்வெட்டில் சென்னகேசவ பெருமாள் என்ற எழுத்துகள் இருப்பதைக் கொண்டுதான், அந்த இடத்தில் இருந்தது சென்னகேசவ பெருமாள் கோயில் என்று தெரிந்துகொண்டதாக ஊர்மக்கள் சொல்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்

அந்த ஊரைச் சேர்ந்த ரவணாஜி என்பவர், ‘‘இந்தக் கோயில் ரொம்ப பழைமையான கோயில்னு சொல்றாங்க. பெருமாள் தாயாரோட சிலைகளையும், உடைஞ்சிருக்கற தூணையும் பார்க்கும்போது எப்படியும் 500 வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு சொல்றாங்க. அவ்வளவு பழைமையான இந்தக் கோயில் கடந்த 100 வருஷத்துக்கும் மேல இப்படித்தான் இருக்கு. சீக்கிரம் பெருமாளுக்கு ஒரு சின்ன கோயில் கட்டிடணும்னு நினைச்சிருக்கோம்’’ என்றார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பெருமாளுக்கு தீபம் ஏற்றி வருவதாகச் சொன்ன சரஸ்வதி அம்மாளைச் சந்தித்தோம்.

‘‘எங்களுக்கு பெருமாள்தான் எல்லாமே. 30 வருஷமா நான்தான் என்னால முடிஞ்ச அளவுக்கு பெருமாளுக்கு தினமும் பூஜைகள் செய்து வருகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யறோம்.  நாம கேட்கறதை எல்லாம் தரும் கண்கண்ட தெய்வம் இவர்'' என்றவர் பல வருடங்களுக்குமுன் நடந்த சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘பல வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் நாங்க பெருமாளுக்கு அபிஷேகம் பண்ணிக் கிட்டிருந்தோம். அப்ப வேற மதத்தைச் சேர்ந்த ஒருத்தர் இந்தப் பக்கமா வந்தார். அவர் கிட்டத் துல வந்தபோது அவருக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சாம். உடனே எங்ககிட்ட வந்து விஷயத்தைச் சொன்னார். நாங்க அவருக்கு என்ன குறைன்னு கேட்டப்ப, அவர் தன்னோட மனைவி கர்ப்பம் தரிச்சிருக்கறதாவும், நல்லபடியா ஆண் குழந்தை பிறக்கணும்னு ஆசைப்படறதாவும் சொன்னார். நாங்களும் அவர்கிட்ட பெருமாளை வேண்டிக்கிடச் சொன்னோம். அவரும் வேண்டிக்கிட்டார். அவர் வேண்டிக்கிட்டபடியே ஆண் குழந்தை பிறந்தது. இப்ப அவங்க பெங்களூர்ல இருக்காங்க’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவருடைய கணவர் பாண்டுரங்கன், ‘‘பெருமாள் எல்லோருக்குமே அவங்க வேண்டிக்கிட்டதை நிறைவேத்தறார். ஆனால், அவருக்கு சின்ன அளவுலயாவது ஒரு கோயில் கட்டணும்னு ரொம்ப வருஷமாவே பெருமாள் கிட்ட வேண்டிக்கிட்டும் இன்னும் அது நிறைவேறாமலேயே இருக்கு. இப்பத்தான் நாங்க ஊர்மக்கள் சேர்ந்து சின்னதா ஒரு கோயில் கட்ட முடிவு செஞ்சிருக்கோம். பெருமாள்தான் சீக்கிரம் அதை நிறைவேத்தனும்’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்

‘வெட்டவெளியில் இருந்தாலும், வேண்டி யவர்களுக்கு வேண்டியபடியே அருள்புரியும் சென்னகேசவ பெருமாளும் தாயாரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருப்பது? விரைவிலேயே அவருக்கு ஒரு கோயில் எழுப்பவேண்டும்; அங்கே நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் கோலாகலமாக நடக்கவேண்டும். வந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண் டும்’ என்ற நல்ல எண்ணத்தில் பெருமாளுக்குக் கோயில் கட்ட முயற்சி எடுத்திருக்கும் ஊர் மக்களுடன் நாமும் சேர்ந்து நம்மால் முடிந்த பொருளுதவியைச் செய்ய வேண்டியது நம்முடைய கடமை அல்லவா?

பெயருக்கேற்ப அழகிய வடிவத்துடன் காட்சி தரும் சென்னகேசவரின் ஆலயத் திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்து, சென்னகேசவரின் அருளுடன், ‘அகலகில்லேன்’ என்று விடாப்பிடியாக அவருடைய திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகளின் அருளையும் பெற்று மகிழ்வோமே!

 படங்கள்: தே.அசோக்குமார்

எங்கிருக்கிறது..?  எப்படிச் செல்வது..?

சென்னை, தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் பண்ருட்டிகண்டிகை என்ற இடத்தில் இருந்து இடப்புறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ.

தூரத்தில் உள்ளது வேண்பாக்கம் கிராமம். பண்ருட்டிகண்டிகை வரை பேருந்து வசதி உள்ளது, அங்கிருந்து ஆட்டோ மூலம் வேண்பாக்கம் செல்லலாம்.