Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

க்ஷீண சந்திரன் (கலைகளை இழந்த சந்திரன்) பாப கிரகத்துடன் இணைந்து 7-ல் இருந்தால், பிறர் மனைவியிடம் ஈடுபாடு வந்துவிடும்; பிறந்த வேளையில் (லக்னத்தில்) 7-க்கு உடையவன் பாவ கிரகத்துடன் இணைந்து இருந்தால், ‘பர ஸ்த்ரீரதன்’ - பிறருக்குச் சொந்தமான ஒருத்தியிடம் ஈடுபாடு இருக்கும் என்கிறது ஜோதிடம் (க்ஷீணே சசாங்கே யதிபாபயுக்தே... லக்னேஸபாகுபயதிதாரஹிதே...).
வளர்பிறை ‘தசமி’ (10-வது நாள்) முதல் தேய்பிறை ‘பஞ்சமி’ (5-ம் நாள்) வரையிலும் சந்திரன் கலைகள் நிரம்பியவனாகத் தென்படுவான். பௌர்ணமியில் தென்படும் முழு வளர்ச்சி இல்லாவிட்டாலும், ஓரளவு வளர்ச்சி இருக்கும். அதிகமான கலைகள் அவனது செயல்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும். சந்திரனுக்கு கலைகளின் நிறைவு அல்லது போதுமான வளர்ச்சிதான் பலம். அதற்குப் பெயர் ‘சந்திரபலம்’ (சந்திரபலம் ததேவ...). அதை பக்ஷபலம் (வளர்பிறை) என்றும் சொல்லும் ஜோதிடம், கலைகளை இழந்தவனை க்ஷீண சந்திரன் என்று குறிப்பிடும். அந்த வேளையில் அவன் வெப்ப கிரகத்தின் தரத்தை அடைந்து, பாப கிரகம் அல்லது அசுப கிரகமாக மாறிவிடுகிறான்.

சூரியனிலிருந்து அதிகமான கிரணங்கள் சந்திரனில் பட்டு, அதிலிருக்கும் நீருடன் இணையும்போது தட்ப கிரகமாக மாறுவான். குறைந்த கிரணங்கள் பட்ட சந்திரனில் தட்பத்தின் அளவு குறைந்தபடியால் அவன் வெப்ப கிரகமாகவே இருப்பான்.

அமாவாசை முடிந்து பிரதமையில் (மறுநாள்) இருந்து பௌர்ணமி வரை வளர்பிறை என்றும், பௌர்ணமி முடிந்து பிரதமையில் (மறுநாள்) இருந்து அமாவாசை வரை தேய்பிறை என்றும் நடைமுறையில் நாம் கணக்கிடுவோம். அமாவாசையில் சந்திரன் சூரியனுடன் இணைந்து கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பான். அதற்கு மறுநாள் முதல் ஒவ்வொரு கலையாக வளர்ந்து பௌர்ணமி அன்று முழு கலையோடு விளங்குவான். பிறை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருவதால், வளர்பிறை என்று சொல்கிறோம். பௌர்ணமியில் முழு நிலவை எட்டிய சந்திரன், அதற்கு அடுத்த நாள் முதல் ஒவ்வொரு கலையாக தேய்ந்து அமாவாசையில் சூரியனில் மறைந்துவிடுவதால் அதை தேய்பிறை என்கிறோம்.

ஜோதிடத்தின் கண்ணோட்டம் வேறு. சந்திரன் கண்ணுக்குப் புலப்படுவதால்- அதிக கலைகளோடு இருப்பவனை வளர்ந்தவன் என்றும், கலைகள் குறைந்து இருப்பவனை தேய்ந்தவன் என்றும் குறிப்பிடும். ஆகாசத்தில் வளர்பிறை தசமியில் வளர்ந்த சந்திரனைப் பார்க்க இயலும். தேய்பிறையில் பஞ்சமி வரை அவன் வளர்ந்த சந்திரனாக இருப்பான். இதை வைத்து வளர்பிறை தேய்பிறைக்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கும் ஜோதிடம்.

சந்திரன் மனதுக்குப் பிரதிநிதி (காரகன்). வளர்ந்த மனம் சிந்தனை செய்யும்; தேய்ந்த மனம் சிந்திக்கும் வலுவை இழந்துவிடும். அந்த சந்திரனோடு பாப கிரகம் இணையும்போது, அதன் தாக்கத்தால் தன் வசமிழந்து, பாப கிரகத்தின் இயல்பில் செயல்பட்டுவிடும். அவன் 7-ல் அமைந்தால், மனைவியோடு திருப்தி அடையாமல், பிறர் மனைவியிடம் ஈடுபாட்டை வளர்த்துவிடும். தவறான
பாதையில் அடியெடுத்து வைத்துவிடும். க்ஷீண சந்திரன் (கலைகளை வெகுவாக இழந்த சந்திரன்) தனது சிந்தனை வளத்தை இழக்கிறான். வெப்ப கிரகத்தின் சேர்க்கை யில் தன் வசமிழந்து விடுகிறான். 7-ல் அமைந்தபடியால், மனைவியைத் தவிர்த்து பிறர் மனைவியிடம் ஆசையைத் தணிக்க முற்படுகிறான் என்று ஜோதிடம் விளக்கும்.

பிறந்தவேளையில் (லக்னம்), 7-க்கு உடை யவன் பாபியோடு இணைந்து இருந்தாலும் பிறர் மனைவியிடம் பற்று இருக்கும். பாபியோடு இணைந்த லக்னம் சுய சிந்தனையில் தவறிவிடும். அத்துடன் 7-க்கு உடையவன் இணையும் வேளையில், தன் மனைவியைத் தவிர மாற்றான் மனைவியிடம் ஆசையைத் தணிக்க முற்படுகிறான் என்று ஜோதிடம் விளக்கும்.

கணவனோடு இணைந்தவளோ அல்லது கணவனை இழந்த ஒருத்தியோ இவனுக்கு இலக்காவாள். இருவரும் இந்தத் தவற்றுக்கு பங்கு அளிப்பதால் ஒருதலைப்பட்சமான ஆசை இங்கு இருக்காது. பண்டைய நாளில் ‘சின்ன வீடு’ என்று வைத்துக்கொள்வதும், திரைமறைவில் பிறர் மனைவியிடம் ஈடுபாட்டை வைத்துக் கொள்வதும் இதில் அடங்கும். மற்றபடி, பண்பை மறந்து, சூழலையும் மறந்து, ஆசையின் உச்சக்கட்டத்தை எட்டிய செயல்பாட்டில், பெண்களை பாலியல் வன்முறை செய்வது போன்றவை இதில் அடங்காது.

இவர்களது ஜாதகத்துக்குப் பண்பான பெண் ஜாதகங்களை இணைக்கவேண்டும். வலுவான சிந்தனை வளம் பெற்ற ஜாதகம் அமையும்போது, அவர்களது மன ஒற்றுமையில் ஆணின் பேராசை அடக்கப்பட்டு, பிறர் மனைவியில் ஈர்ப்பு செயல்படாமல் தணிந்துவிடும். ஆக, நன்கு ஆராயாமல் நட்சத்திரத்தையும் பத்துப் பொருத்தங்களையும் மட்டுமே ஆராய்ந்து இணையைச் சேர்க்கும்  முயற்சியில் பிரபலங்கள் ஈடுபடுவது அதர்மம். பிறர் மனைவியிடம் ஈடுபாடு என்பது இரு குடும்பங்களையும் தரம் இழக்கச் செய்துவிடும். அமைதியின்மையும் விரக்தியும் ஏற்பட்டு வாழ்க்கை நரகமாகிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏதுமறியாத அப்பாவி மக்கள், சான்றில்லாத வார்த்தையை நம்பி ஜோதிடரிடத்தில் நம்பிக்கை வைத்து, தங்களது வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்திக்கொள்கிறார்கள். இந்த நிலைமை மாறி பண்பான வாழ்க்கையை ஈட்டித் தரும் விதத்தில் இணையைச் சேர்க்கும் திறமை ஜோதிட பிரபலங்களுக்கு வரவேண்டும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

இரண்டிற்கு உடையவன், 7-க்கு உடையவன் இவர்கள் இருவரும் ஸ்வக்ஷேத்திரம் பெற்றிருந்தால் (தனது ராசியில் இருந் தால்), ஒரு மனைவியுடன் வாழ்நாள் முழுமையும் மகிழ்ந்து வாழ்வான்; ஏகபத்னீவ்ரதனாகத் திகழ்வான். இரண்டுக்கு உடையவனோடும், 7-க்கு உடையவனோடும், எத்தனை கிரகங்கள் சேர்ந்து இருக்கின்றனவோ, அத்தனை மனைவிகளைச் சந்திக்க நேரிடும். முதல் மனைவி இழக்கப்பட்டு, இரண்டாவது-மூன்றாவது மனைவிமார்களை ஏற்றவர்கள் பண்டைய நாளில் இருந்தார்கள்.

பகு பார்யா யோகம், பகு களத்ர யோகம் என்று சொல்வதுண்டு. இரண்டும் வேறுபட்டவை.

மனைவியை இழந்து மற்றொருத்தியை மனைவி யாக ஏற்பது, பகுகளத்ர யோகத்தில் வரும். மனைவியை இழக்காமல், அவள் சம்மதத்தோடு மற்றொருத்தியை மனைவியாக ஏற்பது பகுபார்யா யோகத்தில் வரும். தசரதனுக்கு மூன்று மனைவிகள் இருந்ததாக வரலாறு உண்டு. பண்டைய நாளில் ஜமீன்தார்கள், பண்ணையர்கள் இரண்டு  மனைவிகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டாமவளை ஸபத்ளீ (சக்களத்தி) என்று சொல்வதுண்டு. இரண்டாம் தாரம் வேறு, சக்களத்தி வேறு (ஸ்வர்ஷே குடும்பாதிபதௌகளத்ர...).

சுக்கிரன் பாப கிரகத்துடன் இணைந்தும், பாப கிரகத்தின் பார்வை பட்டும் (7-ம் பார்வையாக இருக்க வேண்டும்), அந்த சுக்கிரன் நீசம் பெற்று அல்லது நீசாம்சகம் பெற்று இருந்தால், முதல் மனைவியை இழந்து இரண்டாவது மனைவியை ஏற்பான் என்கிறது ஜோதிடம். இங்கு 7-லும் 8-லும் சுப கிரகம் இருந்தாலும், பாப கிரகம் இல்லாமல் இருந்தாலும் விவாஹ காரகன் அதாவது திருமணத்தை நடைமுறைப்படுத்துபவனான சுக்கிரன் முற்றிலும் பலமிழந்த நிலையில், மனைவி தங்கமாட்டாள் என்கிறது ஜோதிடம்.

இதைக் கவனிக்காமல், ஜோதிட பிரபலங் கள் பலரும்  ‘இரண்டும் சுத்த ஜாதகம்’ என்று கூறிச் சேர்த்துவைக்க, மனைவியை இழந்து தவிப்பவர்களைக் காணமுடிகிறது. கணினி ஜாதகங்களிலும் இந்த தோஷத்தைக் குறிப்பிடாமல் பலன் சொல்வது இறுதியாக்கப் படுகிறது.

சுக்கிரனுக்கு பாபயோகம், சுக்கிரனுக்கு பாபமத்யஸ்திதி, சுக்கிரனுக்கு உபயபாபித்வம், சுக்கிரனுக்கு சதுரச்ரயோகம் இவை முதல் களத்ரத்தை இழக்கவைக்கும் என்கிறது ஜோதிடம். அந்த சுக்கிரன் ஏழிலோ, எட்டிலோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

1. சுக்கிரன் பாப கிரகத்துடன் இணைந் திருக்கிறான்

2. சுக்கிரன் இருக்கும் ராசியில் அவனுக்கு முன்னும் பின்னும் கிடுக்கிப்பிடி போல் இரண்டு பாபிகள் அமைந்திருக்கிறார்கள்.

3. சுக்கிரன் இருக்கும் முன்பின் ராசிகளில் இரு பாப கிரகங்கள் அமைந்திருக்கின்றன.

4. சுக்கிரனுக்கு 4-லும் 8-லும் இரண்டு பாபிகள் வீற்றிருக்கிறார்கள்.

- இந்த நான்கிலும் சுக்ர க்ரஹத்தில் சுப கிரக பார்வை  படாமல் (7ம் பார்வை) இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு என்று விளக்குகிறது ஜோதிடம்.

 எல்லோராலும் ஜோதிடத்தில் சுலபமாக வெற்றி பெற இயலாது. சிந்தனை வளம் பெற்றவர்களும், ஆராயும் தகுதியிருப்பவர்களும் மட்டுமே ஜோதிடத்தின் தரத்தை எட்ட இயலும்.

7-ல் அல்லது 2-ல் பாப கிரகம் இருக்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். 7-க்கு உடையவன் அல்லது 2-க்கு உடை யவன் பலமிழந்து இருக்கவேண்டும். அப்போது அவன் முதல் மனைவியை
இழந்து, இரண்டாவது மனைவியை ஏற்பான். இதை களத்ர தோஷம் என்று சுட்டிக்காட்டும். 7-ல் பாப கிரகம் அல்லது பார்வை, ஏழுக்கு உடையவன் பலம் குன்றியிருக்கிறான். 2-ல் பாப கிரகம் அல்லது பார்வை. இரண்டுக்கு உடையவன் பலம் குன்றியிருக்கிறான். இந்த இரண்டு இடங்களிலும் களத்ர தோஷம் செயல்படும் என்கிறது ஜோதிடம்.

7- மனைவியின் தரத்தை வரையறுக்கும். 2 - அவளது முயற்சியில் வளர்ந்த குடும்பத்தையும் அதன் மகிழ்ச்சியையும் சுட்டிக்காட்டும். குடும்பம் சிறப்புப் பெற்றால் அது மனைவியின் பெருமை என்பதில் ஐயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நிரந்தரத் தொடர்பு உண்டு. குடும்பத்தலைவன் இருந்தாலும், குடும்பம் சிறப்புப் பெற மனைவியின் பங்கு நிச்சயமாக இணையவேண்டும்.

7-ல் பாப கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை. 2-ல் பாப கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை. குடும்பத்தையும் மனைவியையும் பாதிப்புக்கு உள்ளாவதைச் சுட்டிக்காட்டும். 7-க்கு உடையவனும், 2-க்கு உடையவனும் பலம் இழக்கும்போது,  பாதிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதிப்பின் இறுதி அவளது இழப்பில் முற்றுப்பெறுகிறது.

ஜோதிடம் அனைத்தையும் காரண காரியத்துடன் அலசி ஆராயும். யுக்திவாதி களும் அதை ஏற்கும்படி செய்யும். காரண காரியத்துடன் விளக்கும் சாஸ்திரம் தர்க்க சாஸ்திரம். அதன் கோட்பாட்டில் சந்தேகத் துக்கு இடம் இல்லாமல் விளக்கும் தகுதி ஜோதிடத்துக்கு உண்டு.

எனவே, விளம்பரங்களால் பிரபலங்களாகி சமுதாயம் அங்கீகாரம் பெற்ற ஜோதிட வல்லுநர்களை வைத்துக்கொண்டு, ஜோதிட வாசனையற்ற சிந்தனையாளர்களை அவர்களோடு மோதவிட்டு, அவர்களின் தன்னிச்சையான கேள்விக் கணைகளை தாங்கமுடியாமல் தவிக்கும் ஜோதிட பிரபலங்களை நேயர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து, ஜோதிடம் மூட நம்பிக்கை என்று முடிவெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல.

அந்த சாஸ்திரத்தைப் படித்துப் பட்டம் பெற்று, கையாள முடியாத விரக்தியில் ஏற்பட்ட காழ்ப்பு உணர்ச்சியே இப்படியெல்லாம் விளையாட வைக்கிறது.

 வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவன் ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று சொன்னான் என்பதை வைத்து, நாமும் ஆராயாமல் கிளிப் பிள்ளை போல் திரும்பத் திரும்ப ஜோதிடத்தைக் குறை கூறுவது அறியாமையின் வெளிப்பாடு. காரண காரியத்துடன் ஆராயும் தர்க்கவியலில் தேர்ச்சி பெற்றவனுக்கு ஜோதிடம் தெரியும். குழந்தையை ஈன்றெடுக்காதவளுக்கு பிரசவ வேதனை தெரியாது.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism