தொடர்கள்
Published:Updated:

திருத்தல ஆன்மிக தகவல்கள்...

திருத்தல ஆன்மிக தகவல்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
திருத்தல ஆன்மிக தகவல்கள்...

திருத்தல ஆன்மிக தகவல்கள்...

திருத்தல ஆன்மிக தகவல்கள்...

உலகம் அளந்த மாயவன்

திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டு, பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்த திரிவிக்கிரமனாக அவதாரம் செய்த கோலத்தை 108 திவ்விய தேசங்களில் மூன்றே இடங்களில் மட்டும் தரிசிக்கலாம்.

முதலாவது நடுநாட்டுத் திருப்பதியான திருக்கோவிலூர். இங்கு திருவடியை உயரே தூக்கி நின்ற கோலத்தில் உள்ளார்.

இரண்டாவது- தொண்டை நாட்டுத் திருப்பதியான காஞ்சியிலுள்ள திருஊரகம் எனப்படும் உலகளந்த பெருமாள் ஆலயம் ஆகும்.

மூன்றாவது சோழ நாட்டுத் திருப்பதியான சீர்காழி காழிச்சீராம விண்ணகரம். இங்கு பெருமாள் தாடளன், திருவிக்கிரமன் என்ற நாமம் கொண்டுள்ளார்.

நேர்த்திக்கடனாக சிலைகள்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் என்ற கிராமத்தில் பிரசித்திப்பெற்ற முனியப்பன் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், தீராத பிணிகள் விலகவும், தொழில் அபிவிருத்தி அடையவும் முனியப்பனை வேண்டிக் கொள்கின்றனர். அவர்களது கோரிக்கை நிறைவேறினால், உருவச்சிலைகளை செய்து காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றனர். இதனால் ஆலய வளாகத்தில் பலவகை சிலைகளைக் காணலாம்.

அபூர்வ நரசிம்மர் சிலை

நாகப்பட்டினத்திலுள்ள நீலமேகப் பெருமாள் ஆலயத்தின் ரங்கநாதர் சந்நிதியில் மிகவும் அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மரைத் தரிசிக்கலாம். ஐம்பொன்னால் ஆன இந்த மூர்த்தியின் விக்கிரகத்தில் ஒரு கரம் பிரகலாதன் தலையைத் தொட்டவாறும், மற்றொரு கரம் அபயகரமாகவும் உள்ளதுடன், எஞ்சிய ஆறு திருக்கரங்களும் இரணியனை வதம் செய்யும் நிலையில் உள்ளன.

- இரா.கணேசன், சேலம்-1

காவிரியின் மகள்!

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் தீர்த்தக்குளமான ஹரித்ரா நதியில் ஆனி பெளர்ணமி அன்று தெப்பத் திருவிழா நடைபெறும். இக்குளத்தில் கோபாலகிருஷ்ணன் கோபியருடன் ஜலக்கிரீடை செய்ததாக ஐதீகம். கோபியர் நீராடிய போது அவர்கள் உடலில் பூசி இருந்த மஞ்சள் இக்குளத்தில் கலந்து குளத்தின் நீரினை புனிதம் அடையச் செய்ததுடன் குளத்தின் நீர் மஞ்சள் நிறமாக மாறியதால் ஹரித்ரா நதி என்று பெயர் பெற்றது.

எல்லா காலங்களிலும் நீர் நிறைந்து காணப்படும் இக்குளம் 'காவேரியின் மகள்' என்று சிறப்புப் பெயரையும் பெற்றது. இக்குளத்தில் 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலந்திருக்கிறதாம். இதில் ஆனி பெளர்ணமியில் நீராடினால் புண்ணியம் கிட்டுவதுடன் நோய்களும் மாயமாகும் என ஞான நூல்கள் கூறுகின்றன.

- எஸ்.மாரிமுத்து, சென்னை-64