Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

Published:Updated:
அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
அருட்களஞ்சியம்
அருட்களஞ்சியம்

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள்

-டி.என்.ஸ்ரீநிவாஸன்

சிவபெருமானுக்கு எவ்வாறு பஞ்சபூத ஸ்தலங்கள் எனப் பழைமையான இடங்கள் ஏற்பட்டனவோ, அம்மாதிரியே மகா விஷ்ணுவுக்கென தனியே எட்டுத் தலங்களை ‘ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்’ என தனிப் பெயருடன் அழைத்து, அவை மற்றச் சிறந்த தலங்களைக் காட்டிலும் தனிமையான மகிமை உள்ளவையென நம் பெரியோர்கள் கருதினார்கள். இந்தத் திருத்தலங்கள் தென்நாட்டில் நான்கும், வட நாட்டில் நான்குமாகப் பரவிக் கிடக்கின்றன.

பதரீகாச்ரமம்: பனி படர்ந்த இமயமலைச் சாரலிலே, கடல்  மட்டத்துக்குச் சுமார் 10,300 அடிக்கு மேலே, அலகநந்தா நதியின் வடகரையில் உள்ளது இத்தலம். இங்கு பகவான் தப்த ரூபியாக - அதாவது உஷ்ண நிலைமையில் - இருப்பதாகக் கருதப்படுகிறது. பத்ரீ நாராயணன் கோயிலுக்கு எதிரே உள்ள வெந்நீர் ஊற்றுத்தான் பகவானின் இயற்கை அம்சமாகும்.

நைமிசாரண்யம்: உத்தரப் பிரதேசத்தில், சீதாபூருக்கு வடக்கே அமைந்திருக்கும் தலம் இது. இங்கு மஹாவிஷ்ணு அரண்யரூபமாக - அடர்ந்த காடாக - காட்சியளிக்கிறாராம். இந்தக் காட்டிலேதான்
பழம்பெரும் முனிவர்கள் தவமியற்றி முக்தியடைந்தனராம்.

புஷ்கரம்: ஆஜ்மீரிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கும் இந்தத் தலத்தில், இறைவன் தீர்த்த ரூபியாகக் காட்சித் தருகிறார். இங்கு ‘புஷ்கர்ஜி’ என்று அழைக்கப்படும் திருக்குளம் ஒன்று உள்ளது. இதையே பகவானின் அம்சமாகக் கருதி, பூஜை முதலியன செய்து வருகிறார்கள்.

திருவேங்கடம்: கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடேசப் பெருமானின் உறைவிடமான திருமலையே பகவானின் ஓர் அம்சமாகக் கருதப்படுகிறது. பகவான் இங்கு சேஷ (மலை) ரூபியாகக் காட்சியளிக்கிறார் என்பது ஐதீகம். இதனாலேயே ஸ்ரீராமாநுஜர் போன்ற பெரியோர்கள் திருமலையைத் தங்கள் பாதம் படாதபடி முழங்கால்களால் ஊர்ந்து சென்றனர் எனச் சொல்வார்கள்.

அருட்களஞ்சியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீமுஷ்ணம்: சிதம்பரம் திருத்தலத்துக்கு அருகிலுள்ளது இந்தத் தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபூவராஹ ஸ்வாமியை வாயு (காற்று) ரூபி என்பார்கள். தண்டகாசுரன் வதம் இங்கேதான் நடந்ததாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

திருவரங்கம்: பூலோக வைகுண்டம் என்று கருதப்படும் இத்தலத்தில், பகவான் பிரணவ ரூபமாய்க் காட்சி தருகிறார். ஆகையால்தான் அவர் எழுந்தருளியிருக்கும் விமானத்துக்கு ப்ரணவாகார விமானம் எனப் பெயர் வந்தது. இவ்விமானம் ஆதியில் பிரம்மாவால் ஸ்தாபிக்கப்பட்டு, பிறகு ஸ்ரீராமபிரானால் விபீஷணனுக்குக் கொடுக்கப்பட்டதாகும்.

வானமாமலை: நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்தத் தலத்தில் பகவான் தைல (எண்ணெய்) ரூபியாக இருப்பதை யொட்டி, இங்குள்ள தோதாத்ரி நாதப் பெருமாளுக்குத் தினமும் நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகப் பிரசாதம் சிறந்த ஔடதமாகக் கருதப்படுகிறது.

முக்தீநாராயணன்: நேபாளத்தின் தலை நகரமான காட்மாண்டுவுக்கு வடமேற்கே இமயமலைச் சிகரம் ஒன்றில் இருக்கிறது. இங்கு பகவான் சீதள ரூபியாக - அதாவது பனி நீரால் நிரம்பிய ஏரியாகக் காட்சியளிக்கிறார். இங்கு சென்று திரும்புவது கடினம் என்பார்கள்.

** 1958 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

அருட்களஞ்சியம்

ஓவியங்கள்: சித்ரலேகா

தாயின் சந்தேகம்

‘‘காட்டுக்குப் போக வேண்டும்” என்று எதிர்பாராதபடி கைகேயி சொல்லியும், ராமன் மிக்க திருப்தியுடனும் மகிழ்ச்சி யுடனும் ‘‘இப்போதே போகிறேன்” என்று சொல்லி, அவள் அடிகளில் பணிகிறான். தந்தையைப் பார்த்து விடைபெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. அந்த மாளிகைக்குள்ளே தந்தை இருக்கிறார் என்பது ராமனுக்குத் தெரியும். எனினும், தான் சந்தித்துவிட்டால், தன் மேலுள்ள பாசத்தால் அவர் வாக்குத் தவறிக் கைகேயியின் திருப்திக்குக் கேடு விளைத்துவிடுவாரோ என்றுதான் கவலை.

ஆகவே, தந்தை இருந்த திசையை நோக்கிக் கைதொழுதுவிட்டுக் கைகேயி மாளிகைக்கு வெளியே போகிறான். சிறிய தாயின் மாளிகையிலிருந்து தன் தாயான கோசலையின் மாளிகைக்குப் போகிறான்:

என்றுகொண்(டு) இனைய கூறி,
அடியினை இறைஞ்சி மீட்டும்,
தன்துணைத் தாதை பாதம்
அத்திசை நோக்கித் தாழ்ந்து,
பொன்திணி போதி னாளும்
பூமியும் புலம்பி நையக்,
குன்றினும் உயர்ந்த தோளான்
கோசலை கோயில் புக்கான்.


லட்சுமிதேவியும் பூமிதேவியும் புலம்பி நைந்தார்கள் என்றால் என்ன?

‘‘ஐயோ, அராஜகம் வந்துவிடுமே! செல்வமும் பயிர்த் தொழிலும் பாதுகாப்பில்லாமல் சீரழிந்து போகுமே!” என்ற கவிஞனின் புலம்பல்தான்.

அருட்களஞ்சியம்

எதிர்பார்த்ததும், பார்த்ததும்

ட்டாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்திமா நகரத்தில் தெருவெல்லாம், வீடெல்லாம் ஒரே உற்சாகம். கோசலையின் அரண்மனைக்கு முன்பும் மக்கள் சந்தோஷ ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆரவாரங்களை அனுபவித்துக் கொண்டு கோசலையும் ராமனை எதிர்பார்த்திருக்கிறாள்.

‘‘இப்போது, அவன் கிரீடமும் தலையுமாய் என்னை நோக்கி விரைந்து வருகிறான். சக்ரவர்த்தியின் அதிகார ஆடம்பர வைபவங்களோடும், ராஜ்ய பாரம் தாங்குவதற்கு உரிய அடையாளங்களோடும் என் கண்மணி இதோ என் கண்குளிர வந்துவிடுவான்!” என்று நினைக்கிறாள் கோசலை. மழை முகம் நோக்கித் தழைக்கும் பயிர் போல, ராமன் வருகையை எதிர்நோக்கித் தழைத்துக் கொண்டிருக்கிறது தாயின் உள்ளம்.

இத்தகைய கோசலைக்கு முன் அரசுச் சின்னம் ஒன்றுமில்லாமல், பரிவாரமுமில்லாமல், தன்னந்தனியனாக ராமன் வருகிறான். ‘பக்கத்திலே சாமரம் வீசவில்லை; தலைக்குமேல் சந்திர வட்டக் குடை பிடித்திருக்கவில்லை’ என்று தொடங்கும் கவிஞன் ‘முன்னே ஆடம்பரமாய்க் கட்டியங் கூறிச் செல்லவில்லை; பின்னே மரியாதையாக கைகட்டிச் செல்வதற்கு வேலைக்காரர்கள் கூட இல்லை!’ என்பதை,

‘இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் இரங்கி ஏக’ என்று குறிப்பிடுகிறான். கட்டியம் கூறுவோனது ஸ்தானத்தில், வாழ்க்கையை உருவாக்குகிற விதி செல்கிறதாம். இவ்வளவையும் இழைத்துவிட்டு, ‘வா, வா’ என்று சொல்லிக் கொண்டும், ‘இதோ வருகிறான் சக்ரவர்த்திக் கோலத்தை அறவே துறந்து என்று தெரிவித்துக்கொண்டும், விதி முன்னால் செல்கிறதாம்.

பின்தொடர்ந்து செல்வோரது ஸ்தானத்தில் ஒரே ஆசாமியைத்தான் பார்க்கிறோம். அந்த ஆசாமி வேறு யாருமில்லை, அப்பாவி தர்மம்தான்! ‘‘தர்மம் பின் இரங்கி ஏக” என்று கூறுவது கவனிக்கத் தக்கது. எப்போதும் ராமனைத் தொடர்ந்து செல்லும் தர்ம தேவதையும் இனி அவன் பின்னே நெருங்கிச் செல்ல முடியாமல் வருந்தி ஏங்கும்படி,  அவ்வளவு கஷ்டமான - கரடு முரடான - நெறியிலே விதி ராமனை அழைத்துப் போகிறது என்பது குறிப்பு.

தியாகப் போட்டி

கோசலைக்கு விஷயம் விளங்கவில்லை. அருமையாக வாழ்த்தி, ‘‘நினைத்த காரியம் என்ன ஆயிற்று? முடி சூடுவதற்கு இடையூறு உண்டோ?” என்று கேட்கும் தாயையும், அவள் காலில் வணங்கிக் கொண்டிருக்கும் ராமனையும் இதோ பாருங்கள்:

‘‘பட்டாபிஷேகத்துக்கு இடையூறு உண்டோ?” என்ற கோசலையின் கேள்விக்கு ராமன் என்ன பதில் சொல்லக்கூடும்? அவ்வளவு அருமையாக வாழ்த்தி, அப்படிப் பளிச்சென்று கேட்டுவிட்டதும், ராமன் திகைத்துப் போயிருக்க வேண்டும். சிறிது ஆலோசனை பண்ணி மெள்ளப் பேச ஆரம்பிக் கிறான். அவள் கேள்விக்குச் சாதுரியமாக ராமன், ‘‘பட்டாபிஷேகத்துக்கு இடையூறு இல்லை. உன் காதல் திருமகனும், குற்றமில்லாத என் தம்பியுமாகிய பரதனே முடிசூடுகிறான்” என்று உறுதி கூறுகிறான்.

மங்கை அம்மொழி கூறலும், மானவன்
செங்கை கூப்பி, ‘நின் காதல் - திருமகன்,
பங்கம் இல்குணத்(து) எம்பி பரதனே,
தூங்க மாமுடி சூடுகின்றான் என்றான்.


(மானவன் - மனு வம்சத்தில் பிறந்த ராமன், செங்கை - சிவந்த கை. நின்காதல் திருமகன் - உன்னுடைய அன்புக்கு உரிய மகன். பங்கம் இல்குணத்து - குற்றம் இல்லாத நற்குணம் உடைய. எம்பி- தம்பி. துங்க மாமுடி - உயர்வும் பெருமையும் வாய்ந்த கிரீடம்.)

இப்படிப் பேசும் ராமன், இனிமேல் தாயின் நிலைமை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொண்டு மேலே பேசவேண்டும் என்று தீமானிக்கிறான். அவள் பேசுகிறாள்:

‘முறைமை அன்றென்ப(து) ஒன்றுண்டு; மும்மையின்
நிறைகு ணத்தவன் நின்னினும் நல்லனால்,
குறைவி லன்’ எனக் கூறினள், நால்வர்க்கும்
மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்.


(முறைமை - வாரிசுக் கிரமம். மும்மை - மூன்று, மும்மையின் நிறைகுணத்தவன் - தாமஸம், ராஜஸம், ஸாத்விகம் என மூன்று குணங்களுள், நிறைந்த குணமாகிய ஸாத்விகத்தை உடையவன். நின்னினும் நல்லவன் - உன்னைக் காட்டிலும் சிறந்தவன். நல்லனால் - நல்லவன் என்பது நிச்சயம். மறுவில் - குற்றமற்ற.)

‘‘மூத்தவன் இருக்க இளையவன் அரசாளுதல் முறையன்று என்கின்ற ஒரு குறை மாத்திரமுண்டு. மற்றபடி பரதன் குறைவில்லாதவன், குணசாலி; உன்னைக் காட்டிலும் நல்லவன்!” என்று பேசும் கோசலையின் மனநிலையைப் பாருங்கள். சாதாரண ஸ்திரீயாக இருந்தால், துயரம் மேலிட்டு மூச்சையடைக்க மூர்ச்சையாக விழுந்திருப்பாளே!

பரதன் முடிசூடாமல் போனால் தன் உயிரையே விட்டுவிட வேண்டுமென்று கைகேயி சொல்லவில்லையா? ஆனால், கோசலை ஒப்பற்ற உயர்ந்த பண்பு வாய்ந்தவள்; ராமலட்சுமண பரத சத்ருக்கனர் என்ற நாலு பிள்ளைகளையும் ஒரு நிகராக நினைப்பவள். ‘குடும்பம் க்ஷேமமாக இருக்க வேண்டும்; நாடு எப்படியாவது நலம் பெற வேண்டும்’ என்று நினைக்கிறவள். கைகேயி போல் கேவலம் உணர்ச்சிவசமாக நடந்துகொள்ளாமல், அறிவுத் திறமையினால் நால்வரிடத்திலும் வேற்றுமை கருதாமல் ஒரே மாதிரி அன்பு செலுத்தி வந்தாள்.

‘ராமன் ஆண்டாலென்ன, பரதன் ஆண்டாலென்ன, எல்லாரும் க்ஷேமமாயிருக்க வேண்டும்’ என்ற மனப்பான்மையுள்ள கோசலை மேலும் பேசுகிறாள்:

‘மன்னவன் ஏவிய(து)
அன்(று)எ னாமை,
மகனே உனக்(கு) அறன்!
நன்று நும்பிக்கு
நானிலம் நீகொடுத்(து),
ஒன்றி வாழுதி
ஊழிபல!’ என்றாள்.


ராமனின் தாயல்லவா? பெருந்தன்மையிலும், தியாக புத்தியிலும் மகனோடு போட்டிபோடப் பார்க்கிறான்! ராஜ்யத்தை இழப்பது குறித்துச் சிறிதும் மனத்தாங்கல் கொள்ளாமல், தாயார் தான் எதிர் பார்த்ததற்கு மேலான மன அமைதியோடும், திருப்தியோடும், பிதுர்வாக்கிய பரிபாலனம் செய்ய வேண்டுமென்று தன்னையே தூண்டக்கூடிய தைரியத்தோடும் இருப்பதைக் கண்ட ராமன், காட்டுக்குப் போக வேண்டுமென்ற கட்டளையையும் வெளியிடுகிறான். எனினும் அதை உடனே வெளியிட்டு விடாமல் அதற்கு ஒரு முன்னுரையாக, ‘‘சக்ரவர்த்தி என்னை நன்னெறியில் செலுத்துவதற்கு நியமித்திருக்கும் கட்டளை ஒன்று உண்டு” என்று சொல்கிறான்:

தாயு ரைத்தசொல் கேட்டுத்த ழைக்கின்ற
தூய சிந்தைஅத்தோம்இல்கு ணத்தினான்,
‘நாய கன்எனை நன்னெறி உய்ப்பதற்(கு),
ஏய துண்(டு) ஓர் பணி’ என்(று) இயம்பினான்.


‘‘அந்தக் கட்டளை யாது?” என்று கோசலை கேட்கிறாள். அப்பொழுதும் ராமன் அதை அப்படியே வெளியிட்டு விடாமல், அதன் கொடுமையை மட்டுப்படுத்தி, ‘‘ ‘ஏழோடு ஏழு ஆண்டு காட்டிலே ஞான மூர்த்திகளான மகரிஷிகளோடு சேர்ந்து தங்கிப் பிறகு, நீ திரும்பி வர வேண்டும்’ என்பதாகச் சக்ரவர்த்தி கட்டளையிட்டார்” என்று தெரிவிக்கிறான்.

** 20.10.46 மற்றும் 27.10.46

ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...