
கும்பாபிஷேகம் ஆகாத ஆலயங்களில் வழிபடுவதால் பலன் உண்டா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? இறைபக்தி மிகுந்தவர்கள் வீட்டிலேயே அனுதினமும் வழிபடும்போது, ஆலயத்துக்கும் சென்று வழிபடுவது அவசியமா? இரண்டில் எது சிறப்பு?
- அபிராமி சங்கரன், திருநெல்வேலி-2
எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிற கடவுளை, எங்கே வழிபடுவது சிறந்தது என்று எப்படிச் சொல்வது? அப்படிச் சொல்ல ஆரம்பித்தால், ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து கடைசியில் மனதில் இறைவனை இருத்தி வழிபடுவதே சிறந்தது என்பதில் போய் முடியும். அதுவும் அப்படி வழிபடுவது சிறந்தது என்று அர்த்தமில்லை. அந்த அளவுக்கு நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதுதான் சிறப்பு. மனதுக்குள்ளேயே பகவானை இருத்த முடிகிற சக்தி உங்களுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். மற்றபடி அது சிறந்ததா, இது சிறந்ததா என்கிற பட்டிமன்றத்துக்குப் போகாதீர்கள்.
சிறப்பாக இல்லாத ஒன்று, சாஸ்திரத்தில் வராது. சிறப்பு- சிறப்பின்மை, முதலிடம்- இரண்டாவது இடம் இவை எல்லாவற்றையும் சாஸ்திரத்தில் எதிர்பார்க்காதீர்கள். ஏன் கோயில் வந்ததென்றால், வீட்டில் இருந்தபடியே இறைவனை வழிபடும் பக்குவம் இல்லாதவர்களுக்கும், நேரம் கிடைக்கவில்லை என்பவர்களுக்கும், வறியவர்களுக்கும் இறைவனை நினைவுபடுத்த கோயில். மற்றபடி வீடு இருக்கிறது. இடம் இருக்கிறது என்றால் வீட்டிலேயே வழிபடலாம். மற்றவர்களைக் கோயிலுக்குப் போக வைக்க முன் உதாரணமாக கோயிலுக்கு சென்று கும்பிட வேண்டும்.கோயிலுக்குப் போய் வந்துவிட்டேன். அதனால் வீட்டில் வேண்டாம் என்பதோ, வீட்டிலேயே கும்பிட்டாச்சு... கோயில் வேண்டாம் என்பதோ சரியாகாது. இரண்டும் தேவை.

கும்பாபிஷேகம் ஆகாத கோயில்களில் வழிபடலாமா? அதனால் பலன் உண்டா?
- சேதுராமன், கடலூர்
எந்தக் கோயிலானாலும் ஆகம விதிப்படி கோயில் கட்டி, ஆகமப்படி விக்கிரகம் வடித்து, ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து பாஞ்ச ராத்ரம், வைகானசம் அல்லது வைதீக சம்பிரதாயம்
ஏதாவது ஒன்றின்படி அமைக்கப்பட்டிருந்தால் அங்கு கும்பாபிஷேகம் நடைபெறாமலேகூட வழிபடலாம். இன்னொரு வகையான கோயில் இருக்கிறது. அது முறைப்படி கட்டப்பட்டதல்ல. அங்கே ஒரு கல் இருந்தது. அதைச் சுற்றி கோயில் எழுப்பியிருக்கிறார்கள். அங்கே கும்பாபிஷேகமே இல்லை. அங்கேயும் வழிபடலாம். சுயம்பு என்பார்கள். அங்கேயும் சாந்நித்யம் (தெய்வ சக்தி) இருக்கத்தான் செய்யும்.
மரத்தின் அடியில் ஒரு விக்கிரகம் இருக்கும். பல காலமாக வணங்கி வருவார்கள். அங்கும் சாந்நித்யம் இருக்கும். அதற்குக் கூரை கூட இருக்காது. கேரளாவில் ஏகப்பட்ட சாஸ்தா கோயில்கள் இருக்கின்றன. அவற்றுக்குக் கூரை கிடையாது.
மக்கள் அவற்றை வணங்கித்தான் வருகிறார்கள். அந்த மூர்த்திக்கு சாந்நித்யம் இருக்கிறது. ஏற்கெனவே பல நாட்களாக பிரதிஷ்டை ஆகியிருக்கிற இடத்திலும் சாந்நித்யம் இருக்கும்.
எங்கே சாந்நித்யம் போகும்? ஒரு கோயில் இருக்கிறது. விக்கிரகத்தை, மருந்து வைத்து அடைத்து பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள். பன்னிரண்டு வருடங்களில் அடைத்தது நெகிழ்ந்து விக்கிரகத் தைப் பொருத்தியிருக்கும் உறுதி குறையும். அந்த விக்கிரகத்தில் இருந்த மருந்து போய்விட்டது. அப்போது அந்த மூர்த்தியில் இருக்கும் சாந்நித்யத்தை நீரால் ஆகர்ஷணம் செய்து, ஒரு கும்பத்தில் வைப்பார்கள். அப்போது அந்த மூர்த்தியில் சாந்நித்யம் இருக்காது. அந்தச் சமயத்தில் பூஜை செய்யக்கூடாது. நமஸ்காரம் செய்யவேண்டியதில்லை. மறுபடி விக்கிரகத்தைச் சரிசெய்து, அதிலிருக்கும் அழுக்கை அகற்றி, பிரதிஷ்டை செய்து கும்பத்திலிருக்கும் நீரை அபிஷேகம் செய்ததும் அதிலிருக்கும் சாந்நித்யம் விக்கிரகத்துக்கு வந்துவிடும். அப்போது பூஜை செய்யலாம்.
? கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அங்கே விக்கிரகங்கள் அமைப்பது குறித்து தங்களின் அறிவுரையும் விளக்கமும் தேவை.
- கீர்த்தனா அருணாசலம், சென்னை-28
விக்கிரகம் என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? எப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும்? எப்படி பூஜை செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதற்கு ஆகம சாஸ்திரம் என்று தனிப்பிரிவே இருக்கிறது. அந்த ஆகம சாஸ்திரம், விக்கிரகத்தின் அளவை வைத்து கோயிலின் அளவைச் சொல்லிவிடும். கல்லின் தன்மையை வைத்து கோயிலின் தன்மையைச் சொல்லிவிடும். சிற்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதை சிற்ப சாஸ்திரம் கூறிவிடும். அந்த இரு சாஸ்திரங்களும் விக்கிரகத்தை நிர்மாணம் பண்ணலாம்.
கோயிலில் நிர்மாணம் செய்வதாக இருந்தால், கல்லாலான விக்கிரகத்தை மருந்து வைத்து, அசையாதபடி பிரதிஷ்டை செய்து தினப்படி, நாலுகால பூஜையுடன் வழிபடவேண்டும்.
வீதி உலா போவதற்காக அதேபோல இன்னொரு விக்கிரகத்தை உலோகத்தில் செய்யலாம். அதையும் சிற்ப சாஸ்திரப்படி உண்டாக்கி, அதற்கும் உயிர் ஏற்படுத்தி ஆகமப்படி பூஜை செய்ய வேண்டும். ஆனால், அதை மருந்து வைத்து ஓரிடத்தில் அடைக்கக் கூடாது. எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும்படி உலோக விக்கிரகத்தை வைக்க வேண்டும். இதற்கும் நியமம் உண்டு. ஆகம சாஸ்திரப்படிதான் எல்லாம் செய்யவேண்டும்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் வீட்டில் வழிபட கல்லால் ஆன அல்லது உலோகத்தால் ஆன விக்கிரகங்கள் அவசியம் இல்லை. நாம் வீட்டில் வைத்து வழிபட இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சாளக்கிராமம், இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சிவலிங்கம், இயற்கையாகக் கிடைக்கும் ஸ்படிகம், இயற்கையாகக் கிடைக்கும் ரத்னம் போன்றவற்றில் தெய்வத்தை ஆவாகனம் செய்து கும்பிட்டாலே போதும்.
? திருக்கோயிலில் உள்ள விக்கிரகங்களை தீண்டக்கூடாது என்பது மரபு. அப்படியிருக்க, பிரதோஷ தினங்களில் நந்தியைத் தொட்டு வணங்குவதும், அவர் காதில் பிரார்த்தனையைச் சொல்வதும் சரியான அணுகுமுறையா?
- எம். முருகன், ஆரணி
ஒவ்வொரு கோயிலுக்கு என்றும் சில கதைகள் இருக்கும். சில நடைமுறைகள் இருக்கும். அந்த நடைமுறைகள் எல்லாக் கோயிலுக்கும் இருக்காது. நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாகச் சில விஷயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வரும். தென்னிந்தியாவில் குருக்கள்தான் பூஜை பண்ணவேண்டும். காசிக்குப் போனீர்கள் என்றால், நீங்களே தண்ணீர் விட்டு லிங்கத்தை அபிஷேகம் செய்யலாம். தலையை லிங்கத்தோடு முட்டிக்கொள்ளலாம். எனவே, நந்தியைக் கட்டிக்கொண்டாலே எல்லாம் வந்துவிடும் என்பதில்லை. இவையெல்லாம் சம்பந்தப்பட்ட கோயில்களில் உள்ள நம்பிக்கை.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கோயிலுக்கு நேரடியாகப் போகாமல், கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தால், புண்ணியம் கிடைக்குமா?
- சி.கார்த்திகேயன், சாத்தூர்
தினமும் காலையில் எழுந்ததும் ஸ்நானம் எல்லாம் செய்து கோயிலுக்குச் சென்று பகவானை வழிபடுவது என்று வைத்திருக்கிறோம். வயோதிகத் தாலோ, வியாதியாலோ அப்படி கோயிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியாதவர்கள், கோயிலிலேயே உயரமான கோபுரத்தைப் பார்த்து, ‘என்னால் கோயிலுக்கு வர இயலவில்லை. நான் ஏற்கெனவே இந்த கோபுரத்தின் கீழ் இருக்கும் பகவானைத் தரிசனம் செய்திருக்கிறேன். கோபுரம் பார்க்கும்போதே எனக்கு பகவானின் நினைவு வருகிறது’ என்று கோபுர தரிசனத்தோடு பகவானின் ஞாபகத்தைச் சிந்தைக்குள் வைப்பவர் களுக்கும், கோயிலுக்குச் சென்று பகவானை வழிபட்ட பலன் கிடைக்கும்.
மற்றபடி, எல்லா வசதிகளும் இருந்தாலும் ‘மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே கோபுரம் தெரிகிறதே... எனக்கு கோடி புண்ணியம்’ என்று எண்ணிக் கொண்டால் அது கோபுர தரிசனம் ஆகாது. கோடி புண்ணியம் அல்ல; ஒரு கோடியில் கொஞ்சம் புண்ணியம் கூடக் கிடைக்காது.
கோபுரத்தைத் தரிசிப்பதே கோடி புண்ணியம் என்றால், உள்ளே இருக்கும் சுவாமியைத் தரிசித் தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணி நாம் கோயிலுக்குப் போகவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பழமொழி அது.
? ஆலயங்களில் ஒவ்வொரு சாமியையும் இத்தனை முறை வலம் வர வேண்டும் என்று கணக்கு இருக்கிறதா? அதேபோல், நவகிரகங்களை வலம் வரும்போது இடமிருந்து வலமாக ஏழு முறையும், வலமிருந்து இடமாக இரண்டு முறையும் சுற்ற வேண்டும் என்கிறார்களே... அப்படியா?
- சி.சுப்புலட்சுமி, சின்னசேலம்
சுற்றுதல் என்பது தெய்வ வழிபாட்டில் இருக்கும் பதினாறு அம்சங்களில் ஒன்று. கண்டபேர், கண்டபடி கடவுளை ஆராதிக்கக் கூடாது என்பதற்காக, இந்தப் பதினாறு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு தெய்வத்தை முதலில் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் ‘இங்கே உட்கார்’ என்று சொல்லவேண்டும். ‘கை, கால் அலம்பு’ என்று சொல்ல வேண்டும். ‘இந்தப் பழங்களைச் சாப்பிடு’ என்று சொல்லவேண்டும். ‘குளித்து விட்டு வா’ என்று சொல்லவேண்டும். ‘இந்த வஸ்திரத்தைக் கட்டிக் கொள், நெற்றிக்கு இட்டுக் கொள்’ என்று சொல்லவேண்டும். வாசனைக்குத் தூபத்தைக் காட்டவேண்டும். கண்ணுக்குப் பிரகாசத்தைக் காட்டவேண்டும். காதுக்கு இனிமையான மந்திரங்களைச் சொல்ல வேண்டும். வாய்க்கு ருசியாக ஆகாரம் படைக்கவேண்டும். அதோடு வெற்றிலைப்பாக்கும் கொடுக்க வேண்டும். ‘வந்திருக்கும் உன்னைக் கொண்டாடுகிறேன்’ என்று சொல்லி தூப தீபங்கள் காட்ட வேண்டும். கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
‘உன்னைச் சுற்றி வந்து வணங்குகிறேன்’ என்று சுவாமியை வலம் வரவேண்டும். இப்படித்தான் சுற்றுதல் என்கிற முறை வந்தது. வலம் வருதல் என்பது ஆட்டுக்கல்லைச் சுற்றுவது போல் சுற்றுவது அல்ல; பூஜா முறைகளில் இது ஒன்று.
தற்சமயம், எந்தக் கோயிலுக்குப் போனாலும் மூன்று சுற்று சுற்றுங்கள். மற்ற விஷயங்களை எல்லாம் ஆழ்ந்த படிப்பு, ஆழ்ந்த பக்தி வரும்போது தெரிந்துகொள்வீர்கள். இப்போதைக்கு மூன்று சுற்று என்று ஏன் சொல்கிறேன் என்றால், மூன்று என்னும்போது அங்கே ஒரு முடிவு இருக்கிறது. ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்று மும்முறை திருமணத்தை உறுதிப்படுத்துகிறோம். கோர்ட்டில் மூன்று முறை அழைப்பார்கள். வரவில்லை என்றால் அவ்வளவுதான். ஏலத்தில் மூன்று முறை சொல்லியாயிற்று என்றால் முடிவாயிற்று என்று பொருள். மூன்று என்பதில் ஒரு முடிவு இருக்கிறது. மும்முறை சுற்றுவதாலேயே உங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்துவிடும். அதிக ஆழமான விஷயங்களைத் தற்சமயம் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.

அதேபோல் நவகிரக பிரதட்சணம் குறித்தும் கேட்கிறீர்கள். பிரதட்சணம் என்பதற்கு வலப் பக்கமாகச் சுற்றுவது என்பது பொருள். அப்பிரதட் சணமாகச் சுற்றவே கூடாது. ‘இடப்பக்கம் சுற்று’ என்று உங்களுக்கு வந்திருக்கும் தகவல் தவறானது. அதை வைத்துக் கொண்டு குழம்பாதீர்கள். ஒன்பது சுற்றையும் பிரதட் சணமாகவே பண்ணுங்கள்.
? நெருங்கிய உறவினர்கள் இறந்துவிட்டால் குறிப்பிட்ட காலத்துக்குக் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்கிறார்களே... ஏன்?
- கே.பாலுமகேந்திரன், வீரவநல்லூர்
பெற்றோர் இறந்துவிட்டார்கள். பெற்றோருக்குப் பிள்ளை கர்மா செய்யவேண்டும். ஒரு வருடத்தில் வரக்கூடிய சிராத்தம், ஆப்திகம். அதுவரைக்கும் அவனுக்கு கர்மா தொடர்கிறது. எனவே, அந்தப் பிள்ளை, இறந்தவரையே நினைத்துக் கொண் டிருந்து பக்தியோடு செய்யவேண்டும்.
கர்மாவில் ஈடுபட்டிருப்பவரை மட்டும் தினமும் சிராத்தம் செய்யச் சொல்லியிருக்கிறது. தினப்படி ஒருவரைக் கூப்பிட்டு அன்னதானம் பண்ணச் சொல்லியிருக்கிறது. என்றைக்கெல்லாம் ஒருவர் தன் முன்னோர்களை எண்ணி ஆராதனம் செய்கிறாரோ அன்றைக்கெல்லாம் கடவுளை வழிபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அன்றாட பூஜை என்றால் பண்ணலாம். விசேஷ பூஜைகளோ வழிபாடுகளோ பிதுர் தினத்தில் கூடாது.
முன்னோர் ஆராதனையில் கவனக் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இன்னொன்று, தினப்படி கர்மா பண்ணிக் கொண்டிருக்கும்போது வெளியில் போனால், ஏதாவது விபத்து ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவரால் கர்மாவைத் தொடர முடியாமல் இடையூறு ஏற்படலாம். காரியம் செய்வது தடைப்பட்டு போகவும் வாய்ப்பு உண்டே... அதனால், ‘பயணத்தையே தள்ளிப்போடு’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
- பதில்கள் தொடரும்...
வாசகர்களே!
இறப்பு தீட்டு யார் யாருக்கு எத்தனை நாட்கள்? இந்தக் கேள்விக்கு விரிவான விளக்கங்களுடன் கூடிய பதில் அடுத்த இதழில் இடம்பெறும்.
