Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 6

கயிலை... காலடி... காஞ்சி! - 6
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 6

நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 6

நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 6
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 6
கயிலை... காலடி... காஞ்சி! - 6

ஸம்ஸார கர்ம பரிதாபஜுஷாம் நராணாம்
   காமாக்ஷி சீதளதராணி தவேக்ஷிதானி:
சந்த்ராதபந்தி கனசந்தன கர்தமந்தி
   முக்தாகுணந்தி ஹிமவாரி நிஷேசனந்தி


தேவி, காமாக்ஷி! கோடையின் வெம்மை போன்ற துன்பத்தை தரக்கூடிய பிறவித் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் மனிதர்களுக்கு உன் மிகக் குளிர்ந்த பார்வைகள், நிலவாகவும், சந்தனக் குழம்பாகவும், முத்துமாலையாகவும், பனிநீர்த் துளிகளாகவும் இதம் தருகின்றன.

-மூகபஞ்சசதீ

மகான்களைப் பொறுத்தவரை அவர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டவர் களாக இருந்தாலும், தங்களைப் பார்த்து மற்றவர்களும் சாஸ்திரங்களை அனுசரித்து நடக்கவேண்டும் என்பதற்காக, தாங்களும் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடியே தர்மங்களை அனுஷ்டிக்கிறார்கள்.

மேலும் உலக நன்மைக்காக தங்களுக்குத் தாங்களே சில நியதிகளை வகுத்துக் கொண்டு, அவற்றை தீவிரமாகக் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

காஞ்சி பெரியவரும் அதேபோல் உலக மக்களாகிய நம்முடைய நன்மைக்காக, தமக்குத் தாமே சில நியதிகளை ஏற்படுத்திக் கொண்டு கடைப்பிடிக்கவும் செய்தார். அப்படி அவர் ஏற்படுத்திக் கொண்ட நியதிகளில் ஒன்றுதான் காஷ்ட மௌனம் அனுஷ்டிப்பது. காஷ்ட மௌனம் என்றால் சைகையால்கூட எதுவும் சொல்லமாட்டார். அப்படி ஓர் ஆழ்ந்த அழுத்தமான மௌனம்.

ஆனால், மனிதநேயம் என்று வரும்போது தங்களுடைய நியதிகளை மாற்றிக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள் மஹான்கள். அதனால்தான் அவர்கள் மஹான்கள்! அப்படி நம்முடைய மஹா ஸ்வாமிகளும் தமக்குத் தாமே விதித்துக் கொண்ட காஷ்ட மௌனத்தை கலைத்துக் கொண்ட மனிதநேய சம்பவம்...

கயிலை... காலடி... காஞ்சி! - 6

80-களின் தொடக்கத்தில் மஹா ஸ்வாமிகள் சிவாஸ்தானமாகிய தேனம்பாக்கத்தில் எழுந்தருளி இருந்தபோது, பூந்தமல்லி யில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியின் ஆசிரியர், மஹானை தரிசிப்பதற்காகக் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தார். மஹானை தரிசித்து நமஸ்கரித்தவர், தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். பின்னர், பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் இருக்கும் பிள்ளைகளை அழைத்து வருவதாகவும், அந்தப் பிள்ளைகளால் மஹா ஸ்வாமி களை தரிசிக்க முடியாது என்பதால், மஹா ஸ்வாமிகள் அந்தப் பிள்ளைகளுக்கு தம்முடைய அமுத மொழிகளால் ஆசி கூறி அனுக்கிரஹம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கருணையே வடிவமான மஹானும் சம்மதம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நாளில் அந்த ஆசிரியர் தனி பஸ் ஏற்பாடு செய்துகொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தேனம்பாக்கத்துக்கு வந்தார். அன்றைக்கு பார்த்து மஹா ஸ்வாமிகள் தமது அறைக்குள் காஷ்ட மௌனத்தில் இருந்தார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அறைக்குள் சென்று ஸ்வாமிகளிடம் எதுவும் கேட்க முடியாது. எனவே வெளியில் நின்றபடி தனக்குத் தானே புலம்பத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ‘‘ஸ்வாமி, பார்க்கும் சக்தி இல்லாத இந்தக் குழந்தைகள், உங்களுடைய அமுதமான வார்த்தைகளைக் கேட்டாவது ஆறுதலும் சந்தோஷமும் பெறுவார்களே என்று நினைத்துதான் இவர்களை அழைத்து வந்திருக்கிறேன்? இத்தனைக்கும் தங்களிடம் கேட்டு, தங்களுடைய சம்மதத்துக்குப் பிறகுதானே இவர்களை அழைத்து வந்திருக்கிறேன். தங்களை தரிசிக்க முடியாவிட்டாலும், தங்களுடைய அமுதமொழிகளை அவர்கள் கேட்கவேண்டாமா? சிறு பிள்ளைகளான அவர்களால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதே!’’ என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கி விட்டார். அந்தக் குழந்தைகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல், தங்கள் ஆசிரியரைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைக் கண்டு அங்கு இருந்தவர்களும் கண்ணீர் கசிய பரிதாபமாக அந்தப் பிள்ளைகளைப் பார்த்தபடி இருந்தனர். பாவம், அவர்களால் என்ன செய்யமுடியும்?

இப்படி சிலபல நிமிடங்கள் கடந்தன.

காஞ்சி மஹான் ஓர் அறைக்குள் மௌன விரதத்தில் இருந்தாலும், வெளியில் நடப்பதை அறியாதவரா என்ன? கல்லினுள் தேரைக்கும் சாலப் பரிந்தூட்டும் கயிலை நாயகனின் கலியுக அவதாரம் அல்லவா அவர்?!

தம்முடைய அறைக்குள் மோனத் தவத்தில் லயித்திருந்த அந்த ஞானமூர்த்தி, மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்தார். அவரிடம் கிணற்றுக்கு அருகில் ஒரு மணைப் பலகையைப் போடச் சொல்லி சைகை செய்தார். பலகை போடப்பட்டதும் மெள்ள தமது அறையில் இருந்து வெளியில் வந்த மஹா ஸ்வாமிகள் அந்தப் பலகையில் அமர்ந்துகொண்டு, அந்த ஆசிரியரைத் தமக்கு அருகில் வருமாறு அழைத்தார். ஆசிரியர் மிகுந்த தயக்கத்துடன் மஹா ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என்ற அச்சத்தோடு அருகில் சென்றார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 6

அச்சத்துடன் சென்றவர் ஆனந்தம் கொள்ளும்படியாக மஹா ஸ்வாமிகள் அவரிடம், தான் ஒவ்வொரு குழந்தையிடமும் தனித் தனியாக பேச இருப்பதாகக் கூறி தன்னிடம் அழைத்து வரச் செய்து, ஒவ்வொருவரிடமும் அன்பு ததும்ப உரையாடினார். அவர்களுடைய பெயர், அவர்களுடைய பெற்றோர்கள், அவர்களுக்கு பார்வை எப்படிப் பறிபோனது என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன், அவர்களுக்கு அமுத மொழி களால் ஆறுதல் சொல்லி, பிரசாதமும் கொடுத்து ஆசிர்வதித்தார்.

வந்திருந்த அத்தனை குழந்தைகளையும் தனித் தனியாக அவர் ஆசிர்வதித்து அனுக்கிரகம் செய்த காட்சியைக் கண்டு ஆசிரியரும், அங்கிருந்த மற்ற பக்தர்களும் அளவற்ற சந்தோஷம் அடைந்தனர்.
சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் வந்தபோதுகூட, தமக்கு தாமே விதித்துக்கொண்ட நியதியில் இருந்து சற்றும் விலகிச் செல்லாத மஹா ஸ்வாமிகள், பார்வையற்ற அந்தப் பிள்ளைகளுக்காக, தாம் அதுவரை உறுதியுடன் கடைப்பிடித்து வந்த காஷ்ட மௌனத்தைக் கலைத்து அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தது, மனிதநேயத்தின் நிதர்சன சாட்சி!

தேசத்தை ரக்ஷிக்க வந்த காஞ்சி முனிவர், மக்கள் அனைவருக்கும் தெய்வப் பற்றுடன் தேசப் பற்றும் இருக்கவேண்டும் என்பதை உபதேசித்த ஞானி! தேசப் பற்று கொண்டிருந்த ஒருவருக்கு அந்த மஹான் அனுக்கிரகம் செய்த சம்பவம்...

- திருவருள் தொடரும்

 படங்கள்: தே.அசோக்குமார்