Published:Updated:

ஊர்வலம்! - கன்னியாகுமரி

ஊர்வலம்! - கன்னியாகுமரி
பிரீமியம் ஸ்டோரி
ஊர்வலம்! - கன்னியாகுமரி

ஊர்வலம்! - கன்னியாகுமரி

ஊர்வலம்! - கன்னியாகுமரி

ஊர்வலம்! - கன்னியாகுமரி

Published:Updated:
ஊர்வலம்! - கன்னியாகுமரி
பிரீமியம் ஸ்டோரி
ஊர்வலம்! - கன்னியாகுமரி
ஊர்வலம்! - கன்னியாகுமரி

‘மகிமைமிகுந்த தீர்த்தக்கட்டம்' என்று வால்மீகி ராமாயணமும், வியாச பாரதமும் போற்றும் முக்கடல் சங்கமத்தால் புகழ்பெற்ற திருத்தலம் கன்னியாகுமரி.

இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்த பின்

குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்

தரும யாத்திரையெனத் தக்கிணம் போந் துழி’...

- என இத்தல மகிமையைச் சொல்கிறது ‘பெருங்கதை’.


•   குமரிக்குத் தெற்கே இருந்த (கடலில் மூழ்கா திருந்த) நிலப்பரப்பு லெமூரியா கண்டம் அல்லது குமரிக்கண்டம் எனப்பட்டது.        
   

•   கன்னியாகுமரிக்கு ‘நாஞ்சில் நாடு’ என்றும் ஒரு பெயர் உண்டு. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சில் எனும் கலப்பையைக் குறிக்கும் சொல்லில் இருந்து, இம்மாவட்டத்துக்கு இப்பெயர் அமைந்ததாகக் கூறுவர்.

•   முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கரையில் உள்ள மண் 7 நிறங்களில் காணப்படுவது வியப்புக்கு உரிய விஷயம். மேலும் இங்கு நிகழும் சூரியோதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள் சிறப்பானவை! பெளர்ணமியன்று ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும், சந்திரோதயத்தையும் காணலாம்.

•   முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் ஸீ ’ என்ற கிரேக்கப் புத்தகம், கன்யாகுமரியை முக்கியமான தீர்த்த தலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.

•   ஜாவா தீவிலிருந்து பார்க்க இயலாத துருவ நட்சத்திரத்தை, குமரிமுனையிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரம் பயணித்து, தான் பார்த்ததாக மார்க்கோபோலோ என்ற வெனிஸ் யாத்ரீகர் தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.

•   குமரித்துறை முதலில் பாண்டியரின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர், அது மாறி மாறி சோழர் மற்றும் சேர ஆதிக்கத்துக்கு உட்பட்ட தாயிற்று.

ஊர்வலம்! - கன்னியாகுமரி

•   இங்கே கோயில் கொண்டிருக்கும் பகவதி அம்மனை மூவேந்தர்களும் போற்றியுள் ளனர். பாண்டியர்களுக்கு குமரி அன்னை குலதெய்வமாக விளங்கியுள்ளாள்.

•   சுமார் 15-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி சேர நாட்டுடன் இணைந்தது. அதனால் பாண்டிய- சோழ- சேர மன்னர்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு திருப்பணிகள் செய்தது உறுதியாகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் இடம்பெற்றிருந்த கன்னியாகுமரி மாவட்டம், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு கன்னியாகுமரியும், மண்டைக்காடும் தமிழ்நாட்டுத் தலங்களாக ஆகிவிட்டன.

•   முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற அசுரர் இருவர் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். தேவர்கள், காசி விஸ்வநாதரிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழிக்க காசி விஸ்வநாதர் இரண்டு பெண்களைப் படைத்தருளினார். அவர்களுள் ஒருத்தி வடக்கே (கொல்கத்தா) உள்ள காளிதேவி. மற்றொருத்தி தெற்கே குமரியில் உள்ள பகவதி. இவர்கள் பகன் - முகனை அழித்ததுடன் பாரதத்துக்கு தீங்கு நேராமலும் காத்தருள்கின்றனர்.

•   பார்வதி தேவி, குமரியாக இருந்து சிவனை திருமணம் செய்துகொள்ள தவம் செய்தமையால், இங்கு வீற்றிருக்கும் சக்தியின் வடிவமான பகவதிக்கு ‘கன்னியாகுமரி அம்மன்’ என்னும் திருநாமம் வாய்க்கப் பெற்றது. அதன் காரணமாகவே, கன்னியாகுமரி என்ற பெயர் இவ்வூருக்கு ஏற்பட்டதாகக் கூறுவர். கன்னியாகுமரி அம்மனுக்கு பகவதி என்ற பெயரும் உண்டு.

•   திருமணத்துக்காகக் காத்திருந்த தேவி பரமனைக் காணாததால் சமைத்த சாதம் மணலாகும்படி சபித்தாளாம். அதனால் இந்தக் கடற்கரையின் மணல் முழுவதும் அரிசி, நொறுங் கிய அரிசி, தவிடு ஆகிய வடிவங்களில் காணப் படுகின்றன என்கிறார்கள்.

•   நாஞ்சில்நாட்டில் நங்கை (கொற்றவை) வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள நங்கை தெய்வங்கள்: முன்னுதித்த நங்கை - சுசீந்திரத்திலும், அரியகுலசேகர நங்கை - வடக்கு தாமரைக்குளத்திலும், குலசேகர நங்கை - குலசேகரபுரம் மற்றும் கோட்டாரிலும் , அழகிய சோழவநங்கை - சோழபுரத்திலும், வீரவநங்கை -அழகிய பாண்டியபுரத்திலும், குலசேகரமங்கை -கன்னியாகுமரியிலும், ஆதிநங்கை - தேரூரிலும் அருள்பாலிக்கிறார்கள்.

•   குமரி-பகவதி அம்மன் கோயிலின் கிழக்கு வாயில் திருக்கதவுகள் ஆராட்டு, திருக்கார்த்திகை, விஜயதசமி, இரண்டு அமாவாசைகள் ஆகிய ஐந்து தினங்களில் மட்டும்தான் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மூடியபடியே  இருக்கும்.

•   குமரி-பகவதிக்கு கன்னிதெய்வம், அபர்ணா, கன்னிகா பரமேஸ்வரி, பகவதி அம்மன் என்ற பெயர்களும் உண்டு. பண்டைய காலத்தில் இவளை சங்கரி, கெளரி, ஆர்யா, சாமரி குமாரி, சூலி, நீலி, செய்யாள், கொற்றவை ஆகிய பெயர்களாலும் அழைத்தனர்.

•   குமரி-பகவதி அம்மன் ஆலய திருவிழாக்களுள் முக்கியமானது வைகாசி உற்சவம். இந்த உற்சவத்தின் போது கொடியேற்றுவதற்கான கயிறை ‘வாவாத்துறை’ என்ற மீனவப்பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் தயாரிக்கின்றனர். இதற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. ஒரு முறை ‘வழுக்கம்பாறை' மீது நின்றிருந்த ஒரு சிறுமி தன்னை ஊர் எல்லையில் கொண்டுவிடுமாறு, அவ்வழியே சென்ற கிறிஸ்துவர்களிடம் உதவி கேட்டபோது, அதற்கு அவர்கள் பனை ஓலைக் குடுவையில் அவளை வைத்து ஊர் எல்லையில் கொண்டுபோய் சேர்த்தார்களாம். பின்னர் அப்பெண் ‘இந்த ஊர் திருவிழாவுக்கு இனிமேல் நீங்கள்தான் கொடிமரத்துக்குக்  கயிறு திரித்துத் தரவேண்டும்’ என்று கூறி மறைந்தாள். அதன்படி மீனவர்களே  இத்திருவிழா கொடியேற்றத்துக்கு  விரதம் கடைப்பிடித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து கோயில் நிர்வாகத்திடம்  தாங்கள் திரித்த கயிறை அளிக்கின்றனர்.

ஊர்வலம்! - கன்னியாகுமரி

•   பகவதிக்கு தோழிகள் இருவர் உள்ளனர். அவர்களுள் ஒருவர் கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும், மற்றவர் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

•   பரத கண்டத்தை ஆண்ட மன்னன் பரதனுக்கு எட்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவன்  பிள்ளைகள் அனைவருக்கும் தனது நாட்டைப் பிரித்துக் கொடுத்தான். அவன் தன் மகளான குமரி என்பவளுக்குக் கொடுத்தது பாரதத்தின் தென்முனையான குமரிப் பதியாகும். அவள் ஆட்சி செய்த இடமே இன்றைய ‘குமரிமுனை’  என்றும் சிலரால் நம்பப்படுகிறது.

•   பகவதி அம்மனின் விக்கிரகத்தின் மேல்பகுதி சொரசொரப்பாகக் காணப்படுகிறது. இங்கு கொடிமரம் அருகில் உள்ள ஒரு கல்வெட்டு இந்த விக்கிரகத்தை ‘ருத்திராட்ச விக்கிரகம்’ என்கிறது.

•   தமிழ் மொழிக்குக் கிடைத்த அரிய செல்வம் தொல்காப்பியம். இதை நமக்குத் தந்தவர் ‘அதங்கோட்டாசான்’ எனும் மொழியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் உள்ள ‘அதங்கோடு’ என்னுமிடத்தில்  அவர் வாழ்ந்ததால் ‘அதங்கோட்டாசான்’ என அழைக்கப்பட்டார். 

•   மரத்தின் கிளையை ‘கோடு’ என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மரக்கிளையோடு தொடர்புடைய பெயர்களை ஊருக்கு இட்டு வழங்கும் வழக்கம் குமரி மாவட்டத்துச் சிறப்புக்களில் ஒன்று. விளவங்கோடு, பாகோடு, கட்டிமாங்கோடு, விரிகோடு, திருபன்னிக்கோடு, திருவிதாங்கோடு, குருத்தங்கோடு, திக்கணங்கோடு, குழிக்கோடு, கொல்லங்கோடு, கோழிக்கோடு, கொற்றிக்கோடு, பிலாக் கோடு, மருதங்கோடு, ஆலங் கோடு, அதங்கோடு, புதுக்கோடு, திரு‘ப்ரங்’கோடு, திருவித்துவக்கோடு, காசர்கோடு முதலிய ஊர்ப்பெயர்கள் இவ்வகையில் அமைந்தவையே.

•   கொல்லூர் மூகாம்பிகை, வடகரா லோகாம்பிகை, பாலக்காடு ஹேமாம்பிகை, கொடுங்கல்லூர் மகாபகவதி, கன்னியாகுமரி பாலாம்பிகா ஆகிய இந்த ஐந்து தலங்களும் பகவான் பரசுராமரால் நிறுவப்பட்ட  பகவதி ேக்ஷத்திரத் தலங்களாகும். அதனால், இவை ‘பஞ்ச பகவதி தலங்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

•   ராமபிரான் இலங்கை கிளம்பும் முன் கன்னியாகுமரி வந்து அன்னை பகவதியை வணங்கியதாக ‘சேதுபுராணம்’ குறிப்பிடுகிறது.

• குருஷேத்திரப் போரில் கலந்துகொள்ள விரும்பாமல் தீர்த்தயாத்திரை மேற்கொண்ட பலராமர் கன்னியாகுமரிக்கு வந்ததாகவும் ‘மகாபாரதம்’ ஒரு இடத்தில் குறிப்பிடுகிறது.

•   இந்தியாவில் பார்வதிதேவி, வடக்கே வைஷ்ணவியாகவும், தெற்கே கன்னியாகுமரியில் பகவதியாகவும், கல்கத்தாவில் காளியாகவும், மேற்கே மும்பையில் மும்பாதேவியாகவும் இருந்து பாரதத்தைக் காப்பதாக ஐதீகம்.

•   குமரியினைச் சுற்றி ஒன்பது தீர்த்தங்கள் காணப்படுகின்றன.கிழக்கே உள்ள வங்காள விரிகுடா வில் சாவித்திரி, சரஸ்வதி, கன்யா, காயத்ரி, விநாயகர் முதலிய 5 தீர்த்தங்கள் உள்ளன.  தெற்கே இந்து மகாசமுத்திரத்தில் மாத்ரு, பித்ரு தீர்த்தங்கள் உள்ளன. மேற்கே அரபிக்கடலில் ஸ்தாணு தீர்த்தம் உள்ளது. வடக்கே பாபவிநாச தீர்த்தம் உள்ளது.

•   குமரி-பகவதி அம்மன் கோயிலின் வடக்கு வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் சந்நிதி ‘சக்தி பீடம்’ எனப்படுகிறது. தினமும் பகவதி கோயிலில் 11 கால பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவில் ‘உச்சைசிரவஸ்’என்னும் குதிரை வாகனமேறி, 11 கி.மீ தூரம் சென்று மகாதானபுரம் என்னும் இடத்தில் பாணாசுர சம்ஹார விழா நடைபெறுகிறது.

•   கன்னியாகுமரியிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் காசிக்குச் சமமான  காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது.

•   முக்கடல் சங்கமிப்பில் அமைந்திருந்தாலும், கன்னியா குமரியம்மன் ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் உப்பு கரிக்காத  சுவையான தண்ணீர் கிடைப்பது அதிசயமே!

•   கன்னியாகுமரி அம்மனை வழிபட்ட சுவாமி விவேகானந்தர், கன்னியாகுமரியில் உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்ததை போற்றும் வண்ணம், இங்கே விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் அருகிலேயே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருப்பது தமிழின் மாட்சிக்கு  ஒரு சாட்சி.

 1937-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் மகாத்மா காந்தியடிகள் கன்னியாகுமரி கடலில் புனித நீராடினார். பின்னர் அவர் கன்னியா குமரி அம்மனை தரிசிக்க விரும்பினார். ஆனால், கடல்கடந்து சென்று வந்தவரை திருக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாம் திருவிதாங்கூர் சமஸ்தானம்.

•   குமரிக்கடலோரத்தில் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. குமரி சங்கமத்தில் காந்தியடிகளின் அஸ்தியை 1948-ம் ஆண்டு பிப்ரவரி-12-ம் நாள் கரைத்ததன் நினைவாக வடஇந்தியக் கட்டிடக்கலை அமைப்பில் இம்மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அஸ்தி வைக்கப்பட்ட பீடத்தில், அக்டோபர் 2-ம் தேதி பகல்  12 மணிக்கு சூரிய ஒளி படுவது இம்மண்டபத்தின் தனிச்சிறப்பாகும்.

•   இத்தலத்தில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது சுசீந்திரம். இங்கு அருளும் அனுமன் பதினெட்டுஅடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இங்கு ராமர், வாலியை  வதம் பண்ணுகின்ற சிற்பம் இருக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் ராமர் இருக்கிற தூணி லிருந்து ராமரின் அம்பில் கண் வைத்துப் பார்த்தால் வாலி மட்டுமே கண்ணுக்குத் தெரிவார்.

சுக்ரீவன் தெரியமாட்டார். சற்று தள்ளி நின்று பார்த்தால், வாலியும் சுக்ரீவனும் சண்டை யிடுவது போன்று தெரிவது இதன் சிறப்பு.

•   கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் என்ற இடத்தின் அருகில் ‘திப்பிறமலையில்’ கிருஷ்ணன்கோயில் ஒன்று அமைந்துள்ளது.  இந்த பிரசித்திபெற்ற மலைக்கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் 13 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார்.

•   குமரி மாவட்டத்தில் உள்ள பத்மாநாப புரம் எனனும் ஊர், பழங்காலத்தில் கல்குளம் என்று அழைக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் அரசர்கள் பத்மாநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். இவ்வூர் மலையரண், காட்டரண், நீர் அரண், மதில் அரண் ஆகிய  4 அரண்களையும் கொண்டு திகழ்ந்த ஊராக இருந்திருக்கிறது.

•   பத்மநாபபுரம் அருகில் ‘கேரளபுரம்’ எனும் ஊரில் ஆலமரத்தடியில் ஒரு விநாயகர் இருக் கிறார். இவர் சந்திரகாந்தக் கல்லால் ஆனவர். இவர் ஆவணி மாதம் முதல் தை மாதம் வரை வெண்மையாகவும், மாசி முதல் ஆடி மாதம் முடிய கறுப்பாகவும் காட்சியளிக்கிறார்.

படங்கள்: ரா.ராம்குமார்

தொகுப்பு: ஐ.பெருமாள் , குலசேகரபுரம் - 629 473, த.சிவக்குமார், திருச்சி. - எஸ்.நிரஞ்சனி, சென்னை-125. - எஸ்.ராமச்சந்திரன் ,சென்னை-600004. - டி.எம். இரத்தினவேல், சத்தியமங்கலம். - ஆர் . சந்திரிகா - சத்தியமங்கலம். - மீ. சினிவாசன், பரமக்குடி. - ஆர்.பார்த்திபன், வயலூர். - எஸ்.மாரிமுத்து, சென்னை -64.

ஊர்வலம்! - கன்னியாகுமரி