மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 18

சிவமகுடம்  - 18
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 18

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 18

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்டமாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ...


ஊரிலே திருவிழா. அதற்குப் போக வேண்டும். அதுமட்டுமா?  மனைவியும் நிறைவயிறாக இருக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் பிரசவ வலி எடுக்கலாம். அவளுக்கு உதவியாக உடன் இருக்க வேண்டும். இதில், மாலைப்பொழுதில் பெய்யும் இந்த மழை வேறு இன்னும் பெரிதாகும்போலத் தெரிகிறது. இப்படியான மனவோட்டத்தில்- கட்டில் கட்டும் ஒருவனது கையில் இருக்கும் ஊசி, எவ்வளவு வேகத்தில் வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவில் நடந்துமுடிந்தது பெரும் போர் என்று வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.

சங்ககாலத்தில் சோழன் ஒருவனின் போர்த்திறன் குறித்து கவியொருவன் பாடிய *இப்பாடல், இளவரசி மானி முன்னின்று நிகழ்த்திய இந்தச் சிறு போருக்கும் மிகப் பொருந்தும். ஆம்! கண்மூடி
கண் திறப்பதற்குள் நிறைவுக்கு வந்துவிட்டது போர்! ஆனால், இது முடிவல்ல, வெகுவிரைவில் விளையப்போகிறது பெரும்போர் ஒன்று என்பதையும் அவள் அறியாமல் இல்லை.

பட்டர்பிரான் கொண்டுவந்த நறுக்கோலைக் குறித்து தந்தையுடன் விவாதிப்பதற்காக, அரண்மனை முகப்புத் திடலுக்கு வந்த இளவரசி மானி, அங்கே தந்தையை நோக்கி பெரும் யானை ஒன்று பாயத் தயாரானதையும், அதன் மீது அமர்ந்திருந்த அச்சுத முரடன், அந்த யானையை மதம்கொள்ளத் தூண்டிக் கொண்டிருந்ததையும் கண்ட மானி, வேல் வீசி அவனை வீழ்த்தி சிறைப்பிடித்துவிட்டாள் என்றாலும், அந்தச் சம்பவத்தை அவள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆபத்து வெகு அருகில் நெருங்கிவிட்டதை உணர்ந்தவள், தந்தையின் அனுமதியுடன் துரிதகதியில் செயலில் இறங் கினாள். வீரர்களுக்குச் சைகையால் ஆணையிட்டு காவல் முரசங்களை முழங்கச் செய்து, சோழ சைன்னியத்தை போருக்கு உசுப்பியவள், கோட்டைக் கதவுகளை மூட ஆணையிட்டாள்.

மறுகணம், கோட்டைக்குள் எங்கிருந்தெல்லாமோ இருந்து திடுமென தோன்றிய வீரர்கள், திடீர் தாக்குதலைத் துவக்கினார்கள். கோட்டைக் கதவுகளை மூடிவிடாதபடி தடுக்கும் எண்ணத்தில், அவற்றை இயக்கிக் கொண்டிருந்த வீரர்களை நோக்கி முன்னேறவும் செய்தார்கள்.

அவர்களில் சிலர் புரவிகளில் ஆரோகணித்து வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது மானிக்கு. கட்டுக்காவல் மிகுந்த உறையூர்க் கோட்டைக்குள், எதிரிகள் சகல முன்னேற்பாடுகளுடன் நுழைந்தது எப்படி என்று வியந்தாள் அவள். அதேநேரம் வேறொரு சிக்கலும் முளைத்தது!

வந்தவர்கள் சிறு அணிதான் என்றாலும், சோழ வீரர்களுடன் அவர்கள் கைகலந்தபிறகு... தாக்குவது யார், தாக்கப்படுவது யார் என்றே இனம் காணமுடியவில்லை மானிக்கும், மணி முடிச் சோழருக்கும்! ஏனென்றால் எதிரிகளும் சோழர் அடையாளத்துடனேயே திகழ்ந்தார்கள். புரவிகளில் வந்தவர்களை தனியே இனம் காணலாம் என்றால், அவர்களோ சிறிதும் தாமதிக்காமல், வந்த வேகத்தில் கோட்டைக்குள் அணி வகுத்திருந்த சோழர்களின் சிறிய புரவிப் படைக்குள் புகுந்துவிட்டார்கள்!

சோழர்களின் அந்தப் புரவிப்படை பயிற்சிப்படை ஆதலாலும், வீரர்கள் அனை வரும் முகக்கவசம் அணிந்திருந்ததாலும் தம்மைச் சார்ந்தவர் யார், எதிரி யார் என்பதை யூகிக்கமுடியாமல் திணறினார்கள்.இதையெல்லாம் கண்டு செய்வதறியாது ஸ்தம்பித்துவிட்டார் மணிமுடிச் சோழர். ஆனால், இளவரசியோ சடுதியில் சுதாரித்துக் கொண்டாள்.

சண்டையில் எஜமானனை இழந்து ஓடி வந்த ஒரு புரவியைப் பற்றியிழுத்து அதன் மீது பாய்ந்து ஏறியவள், போர் முன்னேற் பாடாக அந்தக் குதிரையின் சேணத்துடன் பிணைக்கப்பட்டிருந்த கேடயத்தை இடக்கையால் எடுத்துக்கொண்டாள். தொடர்ந்து, புரவியின் கடிவாளத்தை வாயில் கவ்விக் கொண்டவள், வலக் கரத்தால் உரையில் இருந்து வாளை உருவி, அதைக் கொண்டு கேடயத்தை தட்டி பெரிதாக ஒலியெழுப்பினாள். அதேநேரம், அவள் தனது வலது காலின் பெருவிரலால் புரவியின் கழுத்துப் பாகத்தில் கொடுத்த சிறு அழுத்தம், புரவிக்கு ஏதோ கட்டளையை உணர்த்தியிருக்க வேண்டும்; அது, முன்னங்கால்களை உயரத் தூக்கி மிக ஆக்ரோஷமாகக் கனைத்தது!

இளவரசி கேடயத்தை வாளால் தட்டி எழுப்பிய ஒலியும், குதிரையின் ஆக்ரோஷ கனைப்பும் ஒருகணப் பொழுது அனைவரது கவனத்தையும் மானியின் பக்கம் திருப்ப, அவள் சடுதியில் தனது கேடயத்தையும் வாளையும் ஆகாயத்தில் உயர வீசியெறிந்து, பிறகு மீண்டும் கைப்பற்றினாள். இப்போது வாளும் கேடயமும் இடம் மாறியிருந்தன. கேடயம் வலக்கரத்தில் இருக்க, வாளைப் பற்றிய இடக்கரத்தை உயரத் தூக்கி இருபுறமும் அசைத்து ஏதோ சைகை செய்தாள். அவளின் அந்தச் சைகையைப் புரிந்துகொண்டதுபோல், களத்தில் இருந்த வீரர்களில் பாதிபேர், தத்தமது வாளை இடக் கரத்துக்கு மாற்றிக்கொண்டார்கள்!

இப்போது, சோழ மறவர்களால் தங்கள் நண்பர்களை எளிதில் அடையாளம் காண முடிந்தது. எதிரிகளின் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்தார்கள். மானியும் தனது  குதிரையுடன் பாய்ந்தாள். அதற்குள்ளாக வெளிப்புறம் இருந்தும் சோழ படைப்பிரிவு ஒன்று கோட் டைக்குள் வந்துசேர, பகைவர் படை எளிதில் அடக்கப்பட்டது. அதன் தலைவனும் சிறைப் பிடிக்கப்பட்டான். நிலைமை கட்டுக்குள் வந்ததும், மளமளவென ஆணைகளைப் பிறப்பித்தாள் இளவரசி.

கோட்டை மதில்களில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. மதிலின் மீதிருந்த வில்லாளிகள் புதுவித வியூகத்தில் நிறுத்தப் பட்டார்கள். ஒருவன் வெளிப்புறத்தை குறி வைத்து நின்றிருந்தான் என்றால், அவனுக்கு அடுத்தவன் கோட்டையின் உட்புறத்தை நோக்கி நின்றிருந்தான். இப்படியே தொடர்ச்சி யாக நிறுத்தப்பட்டார்கள் சோழ வீரர்கள்.

இப்போது தாக்க வந்தது போன்று இன்னும் சில குழுக்கள் கோட்டைக்குள் இருக்கலாம் என்பது மானியின் யூகம். தாக்குதல் கோட் டைக்கு வெளியில் இருந்து வந்தாலும், உள்ளே நிகழ்ந்தாலும் சமாளிக்க வசதியாக, கோட்டையின் அகமும் புறமும் நோக்கி வீரர்களை நிறுத்தினாள் மானி. மதிலுக்கு மேல் மட்டுமின்றி, கோட்டைக்குள்ளும் பெரும் படையணி ஒன்று சிறு சிறு குழுக் களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் சிறு அர்த்தசந்திர அமைப்பில் மதிலையொட்டி நிறுத்தப்பட்டது. கோட்டைக்கு வெளியிலோ, அதன் ஒருபுறத்தை பொன்னி நதி தழுவிச் செல்ல,  மீதி பாகங்களில் கோட்டையைச் சுற்றி வளைத்து நின்றிருந்தது சோழ சைன்னியம்!

போர் முடிந்ததும் மந்திராலோசனை அறைக்குச் சென்று விட்டிருந்த சோழர்பிரானும், பட்டர்பிரானும் படைநகர்வுகளாலும்,   படைத் தலைவர்களின் கட்டளைக் கூவல்களாலும் எழுந்த அரவத்தால் ஈர்க்கப்பட்டு, அறையில் இருந்து வெளிப்பட்டு மாடத்துக்கு வந்தார்கள்.

மானியின் வியூகம் கண்டு உவகையடைந்தார் சோழர்பிரான். பரமேசுவரப்பட்டருக்கோ பெரும் திருப்தி. கோட்டைக்கு உள்ளும் புறமுமான இந்த அணிவகுப்பை, விண்ணில் உயரப் பறக்கும் ஒரு பறவையின் பார்வையில் பார்த்தால், பொன்னி நதி ஒரு கொடியின் தண்டு போலவும், உறையூர்க் கோட்டை அந்தத் தண்டின் இடையே பூத்திருக்கும் சிறு மலர் போன்றும் காட்சியளிக்கும் என்று எண்ணிக்கொண்டவர், மேலிருந்தபடியே கையசைத்ததுடன் ‘‘பலே மானி... பலே!’’ என்று உற்சாகத்துடன் கூவி, இளவரசியைப் பாராட்டவும் செய்தார்.

மேலும், மாடத்தின் தூண் ஒன்றில் வலக்கரத்தை ஊன்றுதலாக வைத்தபடியும், இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியபடியும் நின்றுகொண்டு, மானியின் செயல்பாடுகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தவருக்கு, வணிக வீதி கலகமும், தற்போது நடந்து முடிந்த சிறு போரும் எதிரிகளின் திட்டம் குறித்த ஓர் அனுமானத்தை அளித்திருந்தன.

ஏற்கெனவே சிறு படையணியை கோட் டைக்குள் செலுத்திவிட்டான் பாண்டியன். உள்ளே காத்திருக்கும் அவர்கள், அவ்வப்போது வெளிப்பட்டு சிறு சிறு கலகங்கள் செய்து கோட்டையின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும். உறையூர் மக்களோடு கலந்து விட்டிருப்பதால், அவர்களை அடையாளம் காண்பது கடினம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் சோழம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், திடுமென பெரும் படையுடன் பாய்வான் பாண்டியன். அதேநேரம், கோட்டைக்குள் இருப்பவர்களும் தாக்குவார்கள். இதைச் சமாளிக்க முடியாமல் சோழம் வீழும். இதுதான் எதிரிகளின் திட்டம்.

திட்டமெல்லாம் பெரியதுதான். ஆனால், அவனுடையது  எப்பேர்ப்பட்ட திட்டமாக இருந்தாலும் அதைத் தகர்க்கும் வல்லமை கொண்ட மானியைப் பற்றி பாண்டியன் சரிவர அறிந்திராதது, அவனது துரதிர்ஷ்டமே!

இவ்வாறான எண்ணங்கள் மனதில் அலைபாய, அவற்றின் வெளிப்பாடாக தலையை அசைத்தபடியும், புருவங்களை நெறித்தும், அவ்வப்போது இதழ்களில் புன்முறுவலைத் தவழவிட்டபடியும் நின்றிருந்த பட்டர்பிரான், கோட்டைக் கதவங்கள் மானியின் கட்டளைப் படி மூடுவதற்கு ஆயத்தமாவதையும், அதேநேரம் புயல் பாய்ச்சலுடன் புரவி வீரனொருவன் கோட்டைக்குள் நுழைவதையும் கண்டார்.

சிவமகுடம்  - 18

புரவியில் இருந்து தரையில் குதித்து ஓடோடி வந்து மானியை வணங்கியவன், பெரும் பதற்றத்துடன் பேசினான்.

‘‘தாயே! எல்லைப்புறத்தில் எரிபரந்து அழித்தல் துவங்கிவிட்டது. நமது விளைநிலங் களை எரியூட்டுகிறார்கள் எதிரிகள்!’’ என்றவன் வேறொரு தகவலையும் சொன்னான்: ‘‘பொங்கிதேவியார் இன்னும் புலியூருக்கு வந்து சேரவில்லை. வழியில் அவருக்கு ஆபத்து விளைந்திருக்கலாம் என்பது நம் ஒற்றர்களின் கணிப்பு!’’

இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்தாள் மானி! ஆனால், பொங்கியோ அந்தக் கானகத்தில் பெரும் அற்புதத்தைக் கண்டு மலைத்திருந்தாள்.

சைவத்துறவியிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்புவதாக அவருக்குப் போக்குக்காட்டியவள், அவர் அறியாதபடி அவரைப் பின்தொடர்ந்தாள். துறவியை முழுமையாக நம்பவில்லை அவள். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளை அறிந்து,  அதற்கேற்ப புலியூருக்கோ உறையூருக்கோ செல்வதென்று முடிவெடுத்தவள், அவரைப் பின்தொடர்ந்து கண்காணித்தாள்.

வனத்திடலுக்கு நேர் எதிர்திசையில் சிறிது தூரம் பயணப்பட்ட அந்தத் துறவி, மரங்களும் புதர்களும் நிறைந்த ஓரிடத்துக்கு வந்ததும் சிறிது தேங்கினார். சுற்றுமுற்றும் ஒருமுறைப் பார்த்துவிட்டு, எவரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அருகிலிருந்த மரத்தின் அருகில் சென்றார். அதன் விழுது போன்று தொங்கிக் கொண்டிருந்த ஒரு நீட்சியைப் பிடித்து அவர் இழுக்க, அந்த விழுதுடன் சேர்ந்து, மரக்கிளைகளில் பற்றிப் படர்ந்துகிடந்த செடி-கொடி தழைகள் ஒரு திரைபோன்று விலக, அந்த அற்புதத்தைத் தரிசித்தாள் மானி.

ஆம்! மிக பிரமாண்டமான சிவலிங்கத்தைத் தரிசித்தாள். அவளையும் அறியாமல் வாய் ஐந்தெழுத்து மந்திரத்தை முணுமுணுக்க, அதே மந்திரத்தை உரக்க உச்சரித்தபடி சிரம் மீது கரம் குவித்து சிவலிங்கத் திருமேனியை மெய் சிலிர்க்க வணங்கிக்கொண்டிருந்தார் துறவி!

பிற்காலத்தில் ஞானநூல்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட சிவனடியாரான அந்தத் துறவியின் செய்கை பெரும் கேள்வியை எழுப் பியது பொங்கியின் மனதில்!

உண்மையில் யார் இந்தத் துறவி?

- மகுடம் சூடுவோம்...

* சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியின் போர்த்திறன் குறித்து சாத்தந்தையார் எனும் புலவர் பாடியது (வாகைத்திணை).