Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்

புது சைக்கிள்!யுவா, ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம்

புது சைக்கிள்!யுவா, ஓவியம்: மகேஸ்

Published:Updated:
கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்
கலகல கடைசி பக்கம்

வேனில் இருந்து அலுங்காமல் குலுங்காமல் இறங்கியது புத்தம் புது சைக்கிள். டோர் டெலிவரி! ஏழாம் வகுப்பு சென்றிருக்கும் வினோத்துக்கு அப்பாவின் பரிசு!

“அப்பா, நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்” என உற்சாகமாக சைக்கிளில் ஏறினான் வினோத்.

“இருடா, கோயிலில் பூஜை போட்டுட்டு அப்புறம் எடுத்துட்டு போ!” என அவன் வேகத்துக்கு அணை போட்டார் அம்மா. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த பூஜை பொருட்களுடன் தெருமுனை பிள்ளையார் கோயிலுக்கு சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தார்கள்.

“அப்பா, தாத்தா உங்களுக்கு எப்போ சைக்கிள் வாங்கித் தந்தார்?” என்று கேட்டான் வினோத்.

“வாடகை சைக்கிள் ஓட்டக்கூட காசு இல்லை. என் மாமாவின் பெரிய சைக்கிளில்தான் குரங்கு பெடல் போட்டுக் கத்துக்கிட்டேன். பத்தாம் வகுப்புக்குப் போனதும் அந்த சைக்கிளை எனக்கே கொடுத்துட்டார் மாமா” என்று மலரும் நினைவில் மூழ்கினார் அப்பா.

“குரங்கு பெடலா... அப்படின்னா?” என்று கேட்டான் வினோத்.

“அது சரி... குழந்தையா இருக்கும்போது மூணு சக்கர சைக்கிள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப்போ குட்டி சைக்கிள், ஏழாவது படிக்கிறப்ப அதைவிட கொஞ்சம் பெரிய சைக்கிள்னு வளர்ந்தவன் நீ. அபார்ட்மென்ட் உள்ளேயே எந்தச் சிரமமும் இல்லாமல் ஓட்டிப் பழகினவன். குரங்கு பெடல், மண்ணில் விழுந்து முட்டியில் அடிபடறது பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதுதான்” என்று சிரித்தார் அப்பா.

“வாயை வெச்சுக்கிட்டுச் சும்மா இருங்க. சந்தோஷமான நேரத்துல இது என்ன பேச்சு?” என்று சிடுசிடுத்தாள் அம்மா.

“அது இல்லே, எந்தச் சிரமமும் இல்லாமல் ஒரு பொருள் கிடைக்கும்போது, அதன் முக்கியத்துவம் புரியாமல் வீணாக்கிடக் கூடாது இல்லையா, அதுக்காகச் சொன்னேன். சைக்கிளை ஜாக்கிரதையா பார்த்துக்க. வாரம் வாரம் க்ளீனா துடைச்சு வைக்கணும். என்ன..?” என்றார் அப்பா.

தன் காலத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் தனது தலைமுறை சந்தித்த சிரமங்கள் இன்றைய தலைமுறைக்கு இல்லை; அதனால், பொருள்களின் மதிப்பு புரியவில்லை; நவீன மயம், யூஸ் அண்ட் த்ரோ கலாசாரத்தை எல்லோரிடமும் உருவாக்கிவிட்டது என்பது அப்பாவின் எண்ணம். கோயில் வாசலில் வைத்துப் பூஜை முடித்ததும், சைக்கிளில் ஏறி ராக்கெட் வேகத்தில் பறந்தான் வினோத். அப்பாவும் அம்மாவும் பின்னால் நிதானமாகப் பேசிக்கொண்டே அபார்ட்மென்ட்டை அடைவதற்குள், “அப்பாஆஆஆ” என்ற உற்சாகமான குரல் பின்னால் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்.

வினோத், சைக்கிளை ஓட்டிக்கொண்டுவர, சைக்கிளின் கேரியரில் அமர்ந்தபடி யாரோ ஒரு சிறுவன் எட்டிப் பார்த்தான். “இவன் பக்கத்து தெரு ஹவுஸிங் போர்டுல இருக்கிற பையனாச்சே?” என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே இருவரும் அருகே வந்து நின்றார்கள்.

“அப்பா, இவன் என்னோட ஃப்ரெண்ட் ஹரீஷ். என் ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருக்கிற கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறான். இவனை தினமும் சைக்கிளில் கூட்டிட்டுப் போகப்போறேன்” என்றான் வினோத்.
“தாராளமா போ! ஆனா, இவ்வளவு வேகம் கூடாது. மெதுவாகப் போகணும்” என்று சொல்லி, மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார் அப்பா.

“சரிப்பா” என்றபடி வினோத் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு செல்ல, சிறு வயதிலேயே மகனின் உதவும் மனப்பான்மையைக் கண்டு பெருமிதத்துடன் புன்னகைத்த அப்பா சொன்னார்.

“பரவாயில்லை, இதுக்காகவே வருஷத்துக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரலாம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!