Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

Published:Updated:
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 28

45- வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே ?

பரதந்திரியம் என்பது வைணவத்தின் மிக உன்னத கோட்பாடு. பேதம் நிதர்சனம் என்று இராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தை நிறுவியதற்கு இந்த பரதந்திரிய நிலை அடிப்படையானது. பரதந்திரியம் என்றால் சார்ந்திருத்தல் என்று பொருள். ஜீவர்கள் அனைவரும் சேஷி என அறியப்படும் இறைவன் என்ற உடைமைக்காரனுக்கு அடிமைகள் அதாவது உடைமைக்காரனை சார்ந்திருப்பவர்கள். மமகாரமும், அகங்காரமும் இருக்கும் வரையில் இந்த ஜீவர்கள் எம்பெருமானைச் சார்ந்து இருக்க மாட்டார்கள். சித்து எனப்படும் உயிர் உள்ள ஜீவாத்மாக்கள் எம்பெருமானோடு ஐக்கியப்பட வேண்டும் என்றால் அசித்து நிலையை அடைந்து நடப்பவையாவும் எம்பெருமானின் போக்கின்படியே என்ற நிலைக்கு வரவேண்டும். இதனை பரதனின் கதை நமக்கு தெளிவாக விவரிக்கின்றது. இதைக் கம்பனின் வரிகளில் காண்போம். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பும் முன் கைகேயி மிக சாமர்த்தியமாக அவனை தனது தந்தையின் நாடான கேகேயத்துக்கு அனுப்பி விடுகிறாள். மீண்டும் பரதன் வருவதற்குள் பெரிய பிரளயமே ஏற்பட்டு விடுகிறது. தனது தாயின் இழிசெயலால் மனம் நொந்துபோகும் பரதன் மீண்டும் இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வருவதற்குப் படையுடன் செல்கிறான். வழியில் அவனை எதிர்கொள்ளும் பாரத்வாஜ முனிவர் “நாட்டை ஆள்வதைவிடுத்து ஏன் இப்படி மரவுரி தரித்து வருகிறாய்?" என்கிறார்.

அதற்கு கம்பர் பரதன் நிலையை அவன் பதிலில் கூறுகிறார். ‘எனக்கு அடுத்த இயம்பிலை நீ என்தான்?" என்றவன் தொடர்கிறான்.

“முறையின் நீங்கி முதுநிலம் கொள்கிலேன்" என்கிறான். முறையுடன் பெறப்படும் அரசை ஆள்வேனே தவிர சதிச் செயல் மூலம் பெறப்படும் அரசு வேண்டாம் என்கிறான்.

பாரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் சித்திரக்கூடம் செல்கிறான். இலக்குவன் பரதனின் படையை பார்த்ததும் காட்டிலும் இராமனை விடாமல் துரத்த பரதன் வருகிறான் என்று தவறாகப் புரிந்துகொண்டு போர்க்கோலம் பூணுகிறான். இராமன் பரதனுடைய “தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்; அழுது அழி கண்ணினன்” கோலத்தைக் காட்டி இலக்குவனை சமாதானம் செய்கிறான். தந்தை இறந்த செய்தி கூறப்படுகிறது. இராமன் முதலில் கலங்கி பின்பு வசிட்டரால் தெளிந்து தந்தைக்கு நீர்க்கடன் செலுத்துகிறான். பிறகு அன்றிரவு பரதன் சித்திரக்கூடத்தில் தங்குகிறான்.

மறுநாள் அண்ணல் பரதனின் தவக்கோலத்தின் காரணம் கேட்கிறான். “பாவ காரியின் பிறந்த பாவியேன் சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன்" என்கிறான், பிறகு இராமனை மீண்டும் அயோத்தி வந்து பட்டம் ஏற்கச் சொல்கிறான். இராமன் தந்தையின் வாக்கு பொய்க்கலாகாது என்று மறுக்கிறான். பரதனை நாட்டை ஆளும்படி கேட்கிறான். பரதன் பிடிவாதமாக மறுக்கிறான். இராமன் மிகவும் நயந்து பலவாறு கூறிப் பார்க்கிறான். இறுதியில் ஒரே ஒரு சொல் சொல்கிறான். கம்பர் உளவியல் நோக்கில் இராமனை அணுகும் இடம் இது.

"அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்" ஒரே ஒரு வாக்கியம்தான். இது என் ஆணை பதினான்கு வருடம் நீ ஆள்கிறாய். பரதனிடம் மறு பேச்சு இல்லை. உடனே சம்மதிக்கிறான்.

இதுதான் நான் முதலில் சொன்ன அச்சித்து நிலை. சொன்ன சொல் மாறாத சகோதரர்களை பெற்றவன் இராமன். அப்படிப்பட்ட பரதனைப்போல வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே ? எனவே நான் இந்த ஊரில் இருக்க விரும்பவில்லை கிளம்புகிறேன் என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

46 - வழி அடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே?

இலக்குவனைக் குறித்து ஸ்ரீராமாநுஜர் குலசேகர ஆழ்வாரின் பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கும்போது மிக ஏற்றமாகக் கூறுகிறார். குலசேகரர் ஒரு பாசுரத்தில் சுற்றம் எல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே என்று பாடியுள்ளார். இதற்கு இராமனுடன் காட்டுக்கு சென்றது இலக்குவன் மட்டும்தானே பிறகு எதற்காக குலசேகரர் சுற்றம் எல்லாம் என்று ஒரு கூட்டமே பின்சென்றதாகக் கூறினார் ? இதற்கு உடையவர் கூறிய வியாக்கியானம் அற்புதமானது”. ஒரு கூட்டம் இருந்து செய்யவேண்டிய கைங்கரியத்தை இலக்குவன் ஒருவனே செய்து விட்டான்" என்று புதுமையான விளக்கம் அளித்தாரம். இலக்குவன் பேசுவதையும் பழகுவதையும் கேட்டால் அவன் அண்ணலின் சொல்லை கேட்காமல் இருப்பவன் போலத் தோன்றும். ஆனால் அவனைப் போல ஸ்ரீராமனின் குறிப்பறிந்து நடந்தவர்கள் எவரும் இல்லை. இதற்கு விளக்கம் சொல்வது போல தனது இராமகாதையில் வான்மீகி ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். பஞ்சவடி வந்ததும் அவர்கள் மூவரும் தங்குவதற்கு இலக்குவனன் ஒரு பர்ணசாலை அமைக்கிறான். இராமனுக்கு தானும் சீதையும் அந்தரங்கமாக பேசிக்கொள்ள ஒரு தனியறை இருந்தால் நல்லது என்று மனதில் நினைத்துக் கொள்கிறான். இலக்குவன் தனது வேலை முடிந்ததும் பர்ணசாலையை பார்வையிட இராமனை அழைக்கிறான். யாகம் நடத்த கூடம், கடவுள் அறை, சமையல் செய்ய ஒரு அறை என்று ஒவ்வொரு அறையையும் பார்வையிட்ட இராமன் ஒரு அறையைக் காட்டி, இது எதற்கு? என்று கேட்கிறான். இலக்குவன் "நீங்களும் சீதா பிராட்டியாரும் தாங்கும் அறை” என்கிறான். சிந்தையரிந்து செயல்படும் இளவலை மார்புறத் தழுவும் அண்ணல் "ஒரு தண்ணீர்ப் பந்தலைப்போல அல்லவோ தந்தை உன்னை எனக்குக் கொடுத்துள்ளார்?" என்று கூறுகிறான். இதிலிருந்து இலக்குவன் அவதாரம் எடுத்ததே ஸ்ரீராமனுக்கு கைங்கரியம் செய்யத்தான் என்பது தெளிவாகும். அப்படிப்பட்ட இலக்குவனைப் போல வழியடிமை நான் எதுவும் செய்யவில்லையே! எனவே நான் இங்கிருக்கப் பிரியப்படவில்லை கிளம்புகிறேன் என்று கூறியபடி அந்தப் பெண் திருக்கோளூரிலிருந்து கிளம்புகிறாள்.

- தொடரும்