Published:Updated:

காஞ்சி திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயிலில் ஜயந்தி கொண்டாட்டம்! - மகாவீரர் ஜயந்தி சிறப்புப் பகிர்வு! #MahavirJayanti

காஞ்சி திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயிலில் ஜயந்தி கொண்டாட்டம்! - மகாவீரர் ஜயந்தி சிறப்புப் பகிர்வு! #MahavirJayanti
காஞ்சி திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயிலில் ஜயந்தி கொண்டாட்டம்! - மகாவீரர் ஜயந்தி சிறப்புப் பகிர்வு! #MahavirJayanti

சமண மதத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான `வர்த்தமான மகாவீரர்' பிறந்த தினம் சமணர்களால் 'மகாவீரர் ஜயந்தி' எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

பின்னாளில் `மகாவீரர்’ என்று போற்றி வணங்கப்போகும் குழந்தையைத் தன் திருவயிற்றில் சுமந்திருக்கிறோம் என்பதை, அவருடைய தாய் திரிசாலா தான் கண்ட கனவுகளின் மூலம் உணர்ந்துகொண்டாள். அவர் கருத்தரித்திருக்கும்போதே அரசருக்கும் ஆட்சிக்கும் பல நன்மைகளும், பல துறைகளில் வளர்ச்சியும் ஏற்பட்டன. அவர் கருவுற்றிருந்த தருணத்தில், இயற்கை செழித்து வளர்ந்தது. மலர்களின் மலர்ச்சி எங்கும் மணம் பரப்பியது. அதன் காரணமாகவே, குழந்தை பிறந்ததும் அவருக்கு `வளர்ப்பவர்' என்ற பொருள் தரும் `வர்த்தமானன்' என்று பெயர் சூட்டினார்கள்.

சித்தார்த்தனின் மகனாக, ஓர் இளவரசனுக்கே உரிய அத்தனை சுகங்களைப் பெற்றிருந்தாலும், சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டிருந்தார். எப்போதும் தியானத்திலும் தன்னை அறிவதிலும் ஈடுபடுத்திக்கொண்டதுடன், உலக இன்பங்களிலிருந்து விலகவும் தொடங்கினார்.

தனது 30-வது வயதில் அரசாட்சியையும் குடும்பத்தையும் துறந்து துறவறம் பூண்டார். 12 ஆண்டுகள் காடு, மலை என அலைந்து திரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஆன்மிகத் தேடலில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியதுடன், மனிதர்கள் மட்டுமல்லாமல், பிற உயிர்களான தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் என்று அனைத்து ஜீவராசிகளையும் நேசித்ததுடன், அவற்றுக்கு எந்தத் துன்பமும் நேராமல் பாதுகாத்தார். 12 ஆண்டுகால தவ வாழ்க்கைக்குப் பிறகு, தாம் அறிந்த ஆன்மிக உண்மைகளான வன்முறை தவிர்த்தல் (அகிம்சை), வாய்மை (சத்தியம்), திருடாமை (அஸ்தேயம்) பாலுறவுத் துறவு (பிரமசர்யம்), பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) என மக்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். அவரது ஆன்மிகக் கருத்துகள் `ஜைனம்’ என்றும் `சமணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்தியா முழுவதும் பரவிய ஜைன மதம், தமிழகத்தில் `சமணம்’ என்றும் `ஆருகதம்’ என்றும் பரவியது. ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் செல்வாக்குச் செலுத்திய ஆருகதம், பின்னாளில் அதன் கடுமையான வாழ்வியல் மற்றும் தவ முறைகளால் செல்வாக்கை இழந்தது. சமணம், காஞ்சியில் செல்வாக்குப் பெற்று விளங்கியதற்கு அடையாளமாக இன்றும் காஞ்சியின் மேற்கே இருக்கும் பகுதி 'ஜைன காஞ்சி' என்று அழைக்கப்படுகிறது. பல்லவ மன்னர்கள் பலர் சமண காஞ்சியில் இருக்கும் சமண ஆலயங்கள் பலவற்றுக்கும் நிவந்தம் அளித்திருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் காஞ்சி மாநகரம் சமணக் கோயில்களாலும் சமணத் துறவிகளாலும் நிறைந்திருந்ததன் அடையாளமாக ஜைன காஞ்சியின் ஒரு பகுதியான  திருப்பருத்திக்குன்றத்தில் `திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி' கோயில் மற்றும் `சந்திரபிரபர் தீர்த்தங்கரர்' கோயில் மட்டும் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன; வழிபாடுகள் நடக்கின்றன.

மகாவீரர் ஜயந்தி விரதம்

சமண மதத்தைச் சார்ந்தவர்கள் மகாவீரர் ஜயந்தியை முன்னிட்டு விரதமிருப்பது வழக்கம். சமணர்களின் புனித நூலாகக் கருதப்படுவது `தத்துவார்த்த சூத்திரம்' எனப்படும் `மோட்ச சூத்திரம்' இது பத்துப் பதிகங்களைக் கொண்டது. மகாவீரரை வழிபட்டு விரதமிருப்பவர்கள், ஒருநாளைக்குக் காலை ஒருவேளை மட்டுமே உணவருந்தி, பின்னர் தண்ணீர்கூடப் பருகாமல் விரதமிருப்பார்கள். வாரத்துக்கு ஒரு பதிகம் வீதம் மோட்ச சூத்திரத்தைப் பாராயணம் செய்வார்கள். பத்து வாரங்களுக்கு, பத்துப் பதிகங்களைப் பாராயணம் செய்து, மகாவீரர் ஜயந்தியன்று விரதத்தை நிறைவு செய்வார்கள்.

சமண மதத்தின் முதன்மைத் தத்துவம் அகிம்சை. அதாவது பிற உயிர்களுக்குத் துன்பமிழைக்காமல் இருப்பது. ஆதலால், இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்குக்கூட தாவரங்களுக்குத் துன்பமிழைக்காமல் மண்ணுக்கு மேலே விளைந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.  விரதமிருக்கும் பத்து வாரமும் தீர்த்தங்கரருக்கு மண்ணுக்கு மேலே கிடைக்கும் நீர், சந்தனம், அரிசி, மலர், கொப்பரைத் தேங்காய், தீபம், தூபம், பழம் ஆகியவற்றால் தினமும் அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யப்படும் பொருள்கள் மீண்டும் முளைக்காதவையாகவும் இருத்தல் வேண்டும். பிறகு நீர், பால், சந்தனம் ஆகியவற்றால் மகாவீரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, கோயிலில் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள். திருப்பருத்திக்குன்றத்திலுள்ள திரைலோக்கியநாதர் ஜீனசுவாமி கோயிலில் மகாவீரர் ஜயந்தி மேற்கண்டபடி விமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

இந்தக் கோயில் பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணுவால் கி.பி 556-ம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது இந்தக் கோயில் `வர்த்தமானீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் செங்கல் கோயிலாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டது. பின்னர், விஜய நகரப் பேரரசு காலத்தில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. மகாவீரர், புஷ்பதந்தர், தருமதேவி ஆகியோரது கருவறைகள் கொண்ட கட்டட அமைப்பு சமணத்தில் `திரைலோக்கியநாதர் கோயில்' எனப்படுகிறது. இந்த மூன்று கருவறைகளுள் மகாவீரர் கருவறை காலத்தால் முந்தையது. இந்தக் கோயிலில் சாஸ்தாவுக்கும் தனிச் சந்நிதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள கருவறை வட்ட வடிவப் பின்புறத்தைக் கொண்ட `தூங்கானை மாடம்' எனும் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. வர்த்தமான தீர்த்தங்கரர் கருவறைக்கு வடக்கிலுள்ள புஷ்பதந்த தீர்த்தங்கரர் கருவறையும் வட்ட வடிவமாகக் காணப்படுகிறது. தென்புறத்தில் சிறிய அளவில் தரும தேவியின் கருவறை காணப்படுகிறது. முன் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களுடன் அமைந்திருக்கிறது.
இந்த மண்டபத்தில் விஜயநகர கால ஓவியங்கள் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் முக்கியமாக சமண தீர்த்தங்கரர்களாகிய ரிஷபநாதர், வர்த்தமான மகாவீரர், நேமிநாதர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் உள்ளன. இவை மட்டுமல்லாமல் யக்ஷியின் வாழ்க்கையை விளக்கும் ஓவியங்களும் இங்கு தீட்டப்பட்டிருக்கின்றன.

மகாவீரர் ஜயந்தியான இன்று, அவர் போதித்த அகிம்சையை மனதில் கொள்வோம்; அதன் அடியொற்றி வாழ்வோம்!