Published:Updated:

ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே திறந்திருக்கும் `பொம்மை சத்திரம்’ என்கிற கலைப்பொக்கிஷக் கூடம்!

சென்னையின்... இல்லையில்லை, தமிழகத்தின் அற்புதமான கலைப்பொக்கிஷக் கூடங்களில் ஒன்று பொம்மை சத்திரம். எங்கு திரும்பினாலும் 150 ஆண்டுகளைக் கடந்த ஓவியங்கள்!

ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே திறந்திருக்கும் `பொம்மை சத்திரம்’ என்கிற கலைப்பொக்கிஷக் கூடம்!
ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே திறந்திருக்கும் `பொம்மை சத்திரம்’ என்கிற கலைப்பொக்கிஷக் கூடம்!

சென்னை மயிலாப்பூரிலிருக்கிறது `பொம்மை சத்திரம்' எனப்படும் சித்திரச் சத்திரம். அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி, பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைத்திருந்தார்கள். அது, வெறும் சத்திரமல்ல, ஓவியங்களும் சிற்பங்களும் அணிவகுத்திருக்கும் கலைக்கூடம். நாம் உள்ளே நுழைந்தபோது, ஓரிடத்தில் பழைமையான சில ஓவியங்களை குழந்தைகள் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். `கருட புராண’த்தில் மனிதர்கள் செய்யும் பாவத்துக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் என விவரித்திருப்பதையெல்லாம் ஓவியமாக வரைந்துவைத்திருந்தார்கள். ``தப்பு பண்ணினா சாமிதானே தண்டனை கொடுக்கும்னு சொன்னீங்க... இங்கே பூச்சாண்டி யாரோ இப்படி இம்சை படுத்துறாங்களே தாத்தா’’ என்று ஒரு குழந்தை கேட்டுக்கொண்டிருந்தது. அவரும் ``நாம என்ன தப்பு பண்ணினாலும், அதை எல்லாம் சித்திரகுப்தன்னு ஒருத்தர் கணக்குவெச்சிருப்பார். நரகத்துல அதுக்கு ஏற்ற தண்டனை கொடுப்பார். அதைத்தான் இந்தப் படம் சொல்லுது...’’ என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்.

சென்னையின்... இல்லையில்லை, தமிழகத்தின் அற்புதமான கலைப்பொக்கிஷக் கூடங்களில் ஒன்று பொம்மை சத்திரம். மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் குளத்துக்கு எதிரே 166 ஆண்டுகளாக அமைந்திருக்கிறது இந்த ஓவியக் கலைக்கூடம். நுழைவுக் கட்டணம் இல்லை. மிக எளிமையாக, அதே நேரத்தில் படுசுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது இந்தக் கூடம். எங்கு திரும்பினாலும் 150 ஆண்டுகளைக் கடந்த ஓவியங்கள்! உள்ளே சென்றதும், பொம்மை சத்திரத்தை நிறுவிய வியாசர்பாடி விநாயக முதலியாரின் உருவச்சிலை வலதுபுறம் காணப்படுகிறது. அதற்கு எதிரே பொம்மைகளின் அலங்கார கொலுவைக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி இடதுபுறம் சென்றால், திரும்பும் திசையெல்லாம் ஓவியங்கள். சுவரின் மேற்புறத்தில் `ஹரிச்சந்திரன் வரலாறு’, `ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்க்கைச் சரிதம்’, `தசாவதாரக் கதைகள்’, `ஆழ்வார்கள்’, `மயிலைத் தல வரலாறு’, `பஞ்ச பூதத்தலங்கள்’ என ஓவியங்கள் கதைகளாக வரையப்பட்டிருக்கின்றன. 150 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் பொலிவோடும் புதிதாகவும் காட்சியளிக்கின்றன ஒவ்வொரு ஓவியமும். இடதுபுறம் திருவள்ளுவர் ஓவியம். அதைக் கடந்து சென்றால், சிறப்புமிக்க கருடபுராண ஓவியங்கள். அதையும் தாண்டினால், மற்றுமொரு அழகிய பொம்மைகளின் கொலு. கிருஷ்ணர் சாரதியாகத் தேரை ஓட்டும் அழகிய சிற்பமும் வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்புறம் 1868-ம் ஆண்டில் ராஜா ரவிவர்மா தனது 20-ம் வயதில் வரைந்த ஒரிஜினல் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. `இவை அனைத்துமே அசலான ஓவியங்கள்’ என்கிறார்கள் கலைப் பிரியர்கள்.

இவை தவிர, `கஜேந்திர மோட்சம்’, `காளிங்க நர்த்தனம்’, சரபோஜி, ஒளரங்கசீப், திப்புசுல்தான் உருவங்கள், பத்து நாள்கள் கபாலீஸ்வரர் திருவிழா உற்சவரின் திருக்காட்சிகள்... எனப் பல ஓவியங்கள் நெஞ்சை அள்ளும்விதமாகக் காட்சிதருகின்றன. சரபோஜி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தங்களிடமே இங்கிருக்கும் ஓவியங்களைப்போல இல்லையென்று இங்கே வந்து வியந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்களாம். தங்க இழைகளால் வேயப்பட்ட பல ஓவியங்கள் நம்மைக் கவர்கின்றன. பல லட்சம் பெறுமானமுள்ள ஓவியங்களும் சிற்பங்களும் நம் முன்னோர்களின் கலைத்திறமைக்கு சாட்சிகளாக பொம்மை சத்திரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.

பொம்மை சத்திரத்தை நிர்வகிக்கும் ட்ரஸ்டிகளில் ஒருவரான சதாசிவத்திடம் பேசினோம்... ``பல ஆண்டுகளைக் கடந்து இன்னமும் நமது பாரம்பர்யக் கலைகளை எடுத்துச் சொல்லும் இந்த சித்திரச் சத்திரம் அன்னதானம் செய்வதற்காக உருவானது. வயிறு நிறையச் சாப்பிடுபவர்களின் அறிவுப்பசியைப் போக்கவும், பல புராண, வரலாற்றுக் கதைகளை விவரிப்பதற்காகவும் இந்தச் சத்திரம் 1852-ம் ஆண்டில் அய்யா விநாயக முதலியாரால் உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த பொம்மை சத்திரத்தைப் பழைமை மாறாமல் நாங்களும் பாதுகாத்துவருகிறோம். இப்போது இந்தச் சத்திரத்தின் தலைவராக இருப்பவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். 2010-ம் ஆண்டில்தான் இந்தச் சத்திரத்தில் சில புணரமைப்புப் பணிகளைச் செய்து புதுப் பொலிவாக்கினோம். ஆண்டுக்கு எட்டு நாள்களுக்கு மட்டுமே இந்தச் சத்திரம் திறந்திருக்கும். அதாவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி தொடங்கி, 10-ம் நாள் திருக்கல்யாணத் திருவிழா வரை இந்தச் சத்திரத்தை திறந்துவைத்து, பொதுமக்கள் பாவையிட அனுமதிக்கிறோம். அந்தக் காலம்போல தினமும் அன்னதானம் செய்வதில்லை. என்றாலும் ஒவ்வொரு ஏகாதசியும் முடிந்த துவாதசி தினத்தில் அன்னதானம் செய்கிறோம். 200 பேர்கள் வரை அன்னதானம் பெற்றுச் செல்கிறார்கள். மற்றபடி மயிலைத் திருவிழாவின்போது பல ஆயிரம் மக்களுக்கு அன்னதானம் செய்கிறோம். விலைமதிக்க முடியாத இந்த அரியப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முக்கியப் பணியாக இருக்கிறது’’ என்றார்.

சத்திரத்தைப் பார்வையிட வந்திருந்த மயிலாப்பூர்வாசியான ஒரு முதியவரிடம் பேச்சுக் கொடுத்தோம்... ``என்னோட குழந்தைப் பருவத்துலருந்து இங்கே வந்துக்கிட்டிருக்கேன். எத்தனை தடவை இந்த ஓவியங்களைப் பார்த்தாலும் அலுப்பு தட்டுறதில்லை. அத்தனையும் கொள்ளை அழகு. இங்கே வர்றபோல்லாம் சாப்பாடு கிடைக்கும். இப்போ சாப்பாடு கிடைக்கிறதில்லை. ஆனா ரொம்ப நேர்த்தியா இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாத்துட்டு வர்றாங்க. அப்போல்லாம் சித்திரா பௌர்ணமி மாதிரியான விசேஷ நாள்கள்ல `சித்திரபுத்திர நயினார் கதை’ வாசிப்பாங்க. கதை ஆரம்பிக்கிறதுக்கு முந்தி இங்கே இருக்குற எம தண்டனை ஓவியங்களைப் பார்ப்போம். நம்மை பயத்தின் உச்சிக்கே கொண்டுபோயிடும் அந்த ஓவியங்கள். உபன்யாசம் பண்றவர், பாவங்கள் செய்த ஆன்மா எந்த மாதிரியான தண்டனைகளை அடையும்னு சொல்வார். கேட்க கேட்க திகிலா இருக்கும். சித்திர புத்திர நயினார் கதை, அமராவதி கதையெல்லாம் சொல்லி முடிஞ்சதும் தீபாராதனை காட்டி, எல்லாருக்கும் ஒரு சின்ன எள்ளுருண்டையும் எலுமிச்சைப் பழ பானகமும் கொடுப்பாங்க. அதுல சுக்கும் ஏலமும் கலந்து மணக்கும், கதைக்காக இல்லைன்னாலும், பானகத்துக்காகவாவது இங்கே நிறையப் பேர் வந்துட்டுப் போவாங்க. இப்படி பாவம், புண்ணியம் பத்தினக் கதைகளைக் கேட்டுக்கிட்டு இருந்தவரைக்கும் மனுஷன் கொஞ்சம் பயந்துக்கிட்டு ஒழுங்காத்தான் இருந்தான். இப்போ காலம் மாறிப்போச்சு, கலியும் முத்திப்போச்சு...’’ சொல்லிவிட்டுப் பெருமூச்சுவிடுகிறார் முதியவர்.

வெளியே வந்தோம், காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியின் ஓவியம் வாசலிலிருந்தது. எளிய மக்களால் `பொம்மை சத்திரம்’ என்று ரசிக்கப்படும் இந்த கலைப்பெட்டகமும் காலத்தை மீறி சாகாவரம் பெற்றதுதான். பல கோயில்களிலிருந்த ஓவியங்களெல்லாம் அழிந்துவிட்டன. இதுபோன்ற இடங்களில் மிச்சம் மீதியிருக்கும் ஓவியங்கள், சிற்பங்களையவது பாதுகாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, நம் கடமையும்கூட!