Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

திருமாங்கல்யத்தில் குங்குமம் வைப்பது ஏன்?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

திருமாங்கல்யத்தில் குங்குமம் வைப்பது ஏன்?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

?ஏக நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? அப்படிச் செய்வது, தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார்களே, சரியா?

- வரலக்ஷ்மி, பெங்களூர்-2


ஏக நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம். தம்பதியின் ஒற்றுமைக்கும் நட்சத்திரத்துக்கும் சம்பந்தமில்லை. ஒற்றுமை என்பது மனம் சார்ந்த விஷயம். பண்டைய அரச பரம்பரை சுயம்வரங்களில் இணைந்த தம்பதியர் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் நட்சத்திரத்தை கவனிக்க வில்லை. ராமன்- சீதை, கிருஷ்ணன்- ருக்மிணி ஆகியோர் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் நட்சத்திரம் பார்த்து இணைந்தார்கள் என்ற தகவல் இல்லை.

கேள்வி - பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

?திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் அவசியம் பார்க்கவேண்டுமா?

- நாகராஜ், வேலூர்-1


பொருத்தம் என்று நீங்கள் குறிப்பிடுவது ஜோதிடத்தில் ஆனுகூல்யம் எனப்படுகிறது. அதை, ஆங்கிலத்தில் ‘சப்போர்ட்’ என்பார்கள். இந்த சப்போர்ட்டே எல்லாவற்றையும் சாதித்துக் கொடுத்துவிடாது. ஒருவனுக்கு முழுத் தகுதி இருந்தால் மட்டுமே சிபாரிசுக் கடிதத்தின் மூலம் வேலை கிடைக்கும். மற்றபடி, சிபாரிசுக் கடிதமே தகுதியைக் கொடுத்துவிடாது. எனவே, உங்களிடம் இருக்கவேண்டிய தகுதிகள் இருக்கின்றனவா என்று, ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு சப்போர்ட்தான் இந்தப் பொருத்தங்கள்.

தாய்-தந்தை வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, செயல்பாடுகள், எண்ணம், கலாசாரம் எல்லாமே வேறு வேறு! இத்தனை வேறுபாடுகளோடு கூடிய ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வது என்று வருகிறபோது, அது சரியானபடி வருமா? இத்தனை வேறுபாடுகளையும் மீறி தம்பதியின் வாழ்க்கை கடைசி வரை முழு அமைதியோடு அமையுமா? இதையெல்லாம் அளக்க விஞ்ஞானத்தில் எந்த ஒரு கருவியும் கிடையாது. அதனால் நீங்கள் நம்மூர் சிந்தனைக்குத்தான் வரவேண்டும். ஜாதகம் அதற்குப் பயன்படும்.

வாழ்க்கையில் அனைவருக்கும் தேவை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைக் கொடுப்பது மனம். அந்த மனம் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்கிற மாதிரி இருக்கிறதா? ஓர் இடையூறு வரும் சந்தர்ப்பத்தில் நீக்குப் போக்காகச் செயல்படும் நடைமுறை இருவர் மனதிலும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனம்தான் இரண்டு. ஆனால், செயல்பாடு ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்தான் வாழ்க்கையில் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் நன்மைகளை எட்ட முடியும். இந்த மாதிரி இருக்கிறதா என்று சொல்வதற்குத்தான் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். அது உங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்துக் கொள்வது உங்கள் விருப்பம்.

?திருமாங்கல்யத்தில் குங்குமம் வைப்பதன் தாத்பரியம் என்ன?

- ஸ்ரீபிரியா ரங்கராஜன், சென்னை-33


மஞ்சளில் தயாரிக்கப்படுவது குங்குமம். மஞ்சள் மங்களப் பொருட்களில் ஒன்று. அதற்கு மருத்துவ குணமும் உண்டு. தங்கமும் மங்களகரமான பொருளே!

இவை இரண்டையும் தரிப்பது, நித்ய மங்களத்தை அளிக்கும். மங்கை, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றும் மங்களத்தை அளிப்பவை. அம்பாளுக்கு ‘சர்வ மங்களா’ என்ற பெயர் உண்டு. ‘என்றும் மங்களம் எங்கும் பொங்குக!’ என்று நம்மவர்கள் வேண்டுவர். அதன் செயல் வடிவமே, திருமாங்கல்யத்தில் குங்குமத்தை வைத்தல். தாலி பாக்கியம் கணவனைக் காக்கும் என்பார்கள். அந்தத் தாலி, எப்போதும் மங்களத்துடன் மிளிர வேண்டும் என்ற எண்ணத்தில், குங்குமத்தை அதில் சேர்ப்பது சிறப்பு. வாழ்நாள் முழுவதும் கணவனுடன் இணைந்து மகிழ வேண்டும் என்பது அதன் தத்துவம்.

கேள்வி - பதில்

?ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யலாமா. இதுகுறித்து தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?

- ராமகிருஷ்ணன், சென்னை-92


ஒரே கோத்திரத்தில், அதாவது ஒரு குறிப்பிட்ட ரிஷி வம்சத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதை தர்ம சாஸ்திரம் ஏற்காது. அவர்களின் உறவை சகோதர உறவாகவே பார்க்கிறது அது. குறிப்பிட்ட ரிஷி வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு, அதே ரிஷி வம்சத்தில் பிறக்கும் பெண், சகோதரி ஆவாள். ஆகவே, அவன் மணக்கும் பெண், மாற்றுக் கோத்திரமாக இருக்க வேண்டும்.

இந்த நடைமுறை தோன்றியது எப்போது என்று நமக்குத் தெரியாது. ஆயினும், நம் முன்னோர் இவற்றை அலட்சியப்படுத்த முற்படவில்லை. இரு சகோதரிகளுக்குப் பிறந்த ஆணும் பெண்ணும் மணம் புரிந்து கொள்வதில்லை; ‘உடன்பிறப்பு’ என்ற எண்ணம், மன நெருடலை அளிக்கும். வம்ச பரம்பரை என்பது, ‘ஆண்’ வழி நிர்ணயிக்கப்படுகிறது.

தன் குடும்பத்தாருக்கும் பங்காளிகளுக்கும் கொடை அளிப்பதில் சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. ‘ஒருவன் கன்றோடு பசுவை கொடை அளிக்க விரும்புகிறான் எனில், அந்த தானத்தைப் பெறுபவன், மாற்று கோத்திரத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும்’ என்கிறது தர்ம சாஸ்திரம். அதுபோல், முன்னோர் ஆராதனையில் பங்கு பெறுபவனும், மாற்று கோத்திரத்தில் இருக்கவேண்டும். ‘தனது கோத்திரத்தைச் சார்ந்தவன் மரணமடைந்தால், அவனுக்காக ‘நீராடல் வேண்டும்’ என்கிறது தர்ம சாஸ்திரம்.

பெண்ணைக் கன்னிகாதானமாக ஏற்க வேண்டும். ஒரே கோத்திரத்தைச் சார்ந்தவன் தானம் பெறத் தகுதியற்றவன். எனவே, திருமணம் புரிய முடியாது. தவிர, எல்லா கோத்திரங்களும் செழித்து வளர, மாற்று கோத்திரத் திருமணம் கைகொடுக்கும். ஒரே கோத்திரத்தில் மணம் செய்யும் நடைமுறையை ஏற்றால், அந்தக் கோத்திரம் காலப்போக்கில் எண்ணிக்கையில் சிறுத்து, கடைசியில் மறைந்து போகவும் வாய்ப்பு உண்டு. கோத்திரங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து வளரவே இந்த ஏற்பாடு என்பதைக் கவனிக்க வேண்டும்.

மேலும், ஒரே கோத்திரத்தில் மணம் செய்வதை ஆயுர்வேதமும் ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து, ‘அதுல்ய கோத்திரா த்யாயம்’ எனும் தலைப்பில் விவரிக்கிறது ஆயுர்வேதம், மாமன் மகன், அத்தை மகன், மாமன் மகள், அத்தை மகள்... இவர்கள் திருமணத்தில் இணைவதையும் தர்ம சாஸ்திரம் ஏற்காது.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போது மருத்துவத்தின் பரிந்துரையை ஏற்று, உறவு முறையில் திருமணம் புரிவதைத் தவிர்க்கிறார் கள் இன்றைய இளைஞர்கள். ஒரே கோத்திரத் திருமணத்தையும் விஞ்ஞானம் தவிர்க்கச் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அறியாமல், ஒரே கோத்திரத்தில் திருமணம் நடந்துவிட்டால், ‘சாந்திராயணம்’ எனும் விரதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

திருமணத்தில், ‘சப்தபதி’ நிறைவு பெற்றால், தனது கோத்திரத்தில் இருந்து பிரிந்து, கணவனின் கோத்திரத்துடன் இணைந்துவிடுவாள் பெண்.

வெறும் உடலுறவை மட்டுமே இலக்காகக் கொண்டதல்ல திருமணம். அறத்தைச் செயல்படுத்த மனைவி வேண்டும். ஆகவே, ஆசைக்காக இல்லாமல் அறத்தைச் செயல்படுத் தும் கண்ணோட்டத்துடன் திருமணத்தை நிறைவேற்றுவது முக்கியம்.

?‘அக்காள் மகள்’ போன்ற நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்து கொள்ளலாமா? இதற்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது?

- வாசுகி கிருஷ்ணசாமி, கும்பகோணம்


அக்காள் மகளை மணம் புரிவதில் சாஸ்திரத் துக்கு உடன்பாடில்லை. சகோதரியின் மகளைத் தன் மகளாகவே பாவிக்கச் சொல்கிறது அது.

சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை என்று தெரிந்தும் தென்னாட்டில் வாழ்ந்த முன்னோர் கள் ‘தேசாசாரம்’ என்ற போர்வையில், அக்காள் மகளை மணப்பதை ஏற்றுக்கொண்டனர். தேசாசாரமாக ஏற்பதால், தென்னாட்டவருக்கு மட்டும் விதிவிலக்கு. வட நாட்டவர், இந்த உறவு முறை (சகோதரியின் மகளை மணப்பதை) திருமணத்தை கட்டாயம் விலக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திர நூல்களில் தகவல் உண்டு. தற்காலத்தில் மருத்துவமும், உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்கச் சொல்கிறது. எனவே, நாமும் இதைத் தவிர்ப்பது அல்லது.

உறவு முறை இல்லாத பெண்ணைத் திருமணம் செய்யும்போது, பிறக்கும் வாரிசுகள் சிறப்பாக இருக்கும்.

- பதில்கள் தொடரும்...

‘முன்னோர் ஆராதனை’

கேள்வி - பதில் தொடர்ச்சி’

?புதிதாக குழந்தை பிறக்கும் தருணத்திலும், அல்லது ஒருவர்  மறைந்தபிறகும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு கடைப்பிடிக்கிறோமே, எதற்காக? ‘தீட்டு’ என்பதை தீண்டாமை என்ற பொருளில் பார்க்கிறார்கள் சிலர். இதுகுறித்து விளக்குங்களேன்.

- கே.பரமசிவம், துவரங்குறிச்சி


தந்தையின் ஜீவாணுக்களில் தனயன் உருவாகிறான். தந்தையின் இழப்பில் அவரது ஜீவாணுக்கள் மடிந்துவிடுன்றன.அதே ஜீவாணுக்களின் பங்கு தனயனில் தங்கிவிடுகிறது. தந்தை மறைந்ததும் இழந்த ஜீவாணுக்கள், தனயனின் ஜீவாணுக்களைத் தீண்டியது. அது தீட்டாக மாறியது. இழந்த துயரம் இழக்காத ஜீவாணுக்களில் (தனயனில்) பரவியது. அதை நடைமுறையில் இறப்புத் தீட்டு என்கிறோம். 10 இரவுகள் தாண்டும்போது துயரம் தணிகிறது. அதனால் பத்து நாள் தீட்டு என்கிற நடைமுறை வந்தது. 11-ம் நாள் நீராடினால், தீட்டு அகன்றுவிடும். தீட்டு அகன்றதாக மனம் உணர்வதற்கு நீராடல் பயன்படுகிறது.

தந்தையின் ஜீவாணுக்களிலிருந்து தனயன் உருவாகிறான். ஜீவாணுக்கள் வளர்ந்து விரிவடை கின்றன. இங்கும் தந்தையின் ஜீவாணுக்களோடு தனயனின் ஜீவாணுக்களுக்குத் தொடர்பு உண்டு. இங்கும் தீட்டு உண்டு. அதை வளர்ந்த தீட்டு (விருத்தி)என்று குறிப்பிடுவது உண்டு. பழைய நூல்களில் ‘வாலாமை’ என்று சொல்லப்பட்டிருக்கும். பிறப்புத்தீட்டு என்றும் சொல்வார்கள். அதாவது அழிவில் ஏற்பட்ட தீட்டை இறப்புத் தீட்டு என்றும், வளர்ச்சியில் ஏற்பட்ட தீட்டை பிறப்புத் தீட்டு என்றும் சொல்வது உண்டு. இரண்டிலும் தந்தையின் ஜீவாணுக்களின் தொடர்பு தனயனில் இருக்கும்.

தனயனுக்குப் பிறந்த குழந்தையிடம் தாத்தாவின் ஜீவாணுக்களின் தொடர்பு அப்பா வழியில் இருக்கும். ஆனால், தனயனின் மனைவி வழி ஜீவாணுக்களின் தொடர்பில், அந்த தாத்தாவின் ஜீவாணுக்களின் தரம் பேரனிடம் குறைந்திருக்கும். இங்ஙனம், அடுத்தடுத்த தலைமுறைகளில் வேறு வேறு பரம்பரையில் இருந்து இந்தப் பரம்பரைக்கு வரும் பெண்களுடைய ஜீவாணுக்களின் கலப்பால், இந்த பரம்பரையின் ஏழாம் தலைமுறை வாரிசிடம், குலத் தலைவனின் ஜீவாணுக்கள் முற்றிலும் இழக்கப்படாவிட்டாலும், கலப்பட ஜீவாணுக்களின் தாக்கத்தால் தகுதி இழந்துவிடும். அப்போது, தீட்டு மூன்று நாட்களாகக் குறைந்துவிடும். ஏழு பரம்பரை முடிந்தால் தீட்டு அறவே அற்றுப்போகும். இறப்பிலும் இந்த நடைமுறை பொருந்தும்.

விதை - விளை நிலம் இரண்டும் இணையும்போது விளைநிலம், விதையின் தரத்தை விரிவாக்கி, செடி-கொடிகளாகவும் மரமாகவும் வளரச் செய்யும். அதில், விளைநிலத்தின் இயல்பு தென்படாது. விதையின் இயல்புதான் இருக்கும். விளை நிலத்துக்கு விரிவாக்கும் பங்குதான் இருக்கும். அப்படியே, பிறப்பு தீட்டு ஆண் வாரிசின் பரம்பரையில்தான் தென்படும். பெண் வாரிசின் பரம்பரையைத் தீண்டாது. ஏழு தலைமுறையிலும் ஆண் வாரிசு மட்டுமே பொருந்தும். ஆண்தான் (பீஜம், விதை) வளர்ச்சிக்கு முக்கிய பங்கு பெறுகிறான்.

இறப்பில் துயரமும் பிறப்பில் மகிழ்ச்சியும் அடைகி றோம். குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கும் ரத்த பந்தத்தின் நெருக்கத்தை வைத்து தீட்டு நாட்கள் குறைந்தும் வளர்ந்தும் இருக்கும்.

ரத்த பந்தத்துக்குக் காரணம் ஜீவாணுக்களின் தொடர்பு. ‘எப்படி இயற்கையில் பயிர்கள் வளர்ந்து மறைகிறதோ, அப்படியே மனிதனும் தோன்றி, வளர்ந்து, மலர்ந்து, பயன்பெற்று, வாடி, மறைகிறான்’ என்கிறது உபநிடதம். (ஸஸ்யமிவமர்த்ய:பச்யதேஸஸ்யமிவ ஆஜாயதேபுன:). மனிதன் தோன்றும்போது மகிழ்ச்சியும் மறையும்போது துயரமும் ரத்த பந்தத்தின் தொடர்பில் உணரப்படுகின்றன.

‘அதென்ன தீட்டு, கறுப்பா- வெளுப்பா, தீட்டு வந்ததும் என்னிடம் ஒட்டினதும் கண்ணுக்குப் புலப்பட வில்லையே? அத்தனையும் மூட நம்பிக்கை’ என்ற யுக்திவாதிகளின் கூற்று, அவர்களது அறியாமையின் அடையாளம். ‘இன்றைக்குச் செத்தால் நாளைக்குப் பால்’ என்று பகுத்தறிவாளி மறைந்தவனுக்கு பால் அளிக்கிறான். பகுத்தறிவுவாதியிடமே அதிகமான மூடநம்பிக்கை ஒட்டிக்கொண்டிருக்கிறது.  அவர்களும் இறந்தவர் சமாதிக்குப் பூ வைக்கிறார்கள். இறந்தவன் கண்ணுக்குப் புலப்பட மாட்டான், பூக்களை முகர்ந்துபார்க்கமாட்டான். ஆனாலும், இவர்கள் கட்டாந்தரையில் மலர்களைத் தூவி இறந்தவனை மகிழ்வித்ததாக எண்ணுவார்கள். ஆனால் இது அவர்களைப் பொறுத்தவரையிலும்  மூடநம்பிக்கை அல்ல. மரியாதை, பணிவிடை என்று சொல்வார்கள்.

ஒருசாரார் 10 நாள் தீட்டு என்றால், மற்றொரு சாரார் 16 நாள் தீட்டைத் தொடருவார்கள். அரசியல் தலைவனின் மறைவுக்கு ஏழு நாளைக்குப் பிறகு துயரம் தணியும். அவர்கள் 7 நாள் தீட்டை ஏற்கிறார்கள். அதிலும் சாதாரணத் தலைவனுக்கு மூன்று நாள் தீட்டு. எளிமையான தலைவனுக்கு ஒரு நாளுடன் முடியும். அது ‘தீட்டு’ என்பதற்கு அடையாளமாக அன்றாட அலுவல்களைத் தள்ளிப்போடுவார்கள். அத்துடன் நிற்காமல், பெரிய தலைவன் எனில், அவன் இழப்பில் நாடே தீட்டை நடைமுறைப்படுத்தும். ஊர் மக்களும் அன்று வேலை செய்யாமல் துயரத்தை வெளிப்படுத்தி மரியாதை செலுத்துவார்கள். ஆக, ஏதோ ஒரு விதத்தில் பண்டைய ‘தீட்டு’ சம்பிரதாயத்தை பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோன்று, தலைவர்களின் பிறந்தநாளில் அவரைக் கொண்டாட அலுவல்களை மறந்து பிறந்த தீட்டை கொண்டாடுவது உண்டு.

வெள்ளைக்காரரிடமிருந்து விடுதலை பெற்ற பாரதம் கொஞ்சம் கொஞ்சமாக தனது கலாசாரத்தை இழந்து வந்தது. இடைப்பட்ட நாளில் யுக்திவாதிகளின் சொல்திறனில் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, கலாசாரத்தை அறவே மறந்தார்கள். அதன் இழப்பில் தற்போது துயரத்தைச் சந்திக்கிறார்கள்.

வெளிநாடுகளில் அவர்களது கலாசாரம் மங்காமல் செழிப்புற்று விளங்குகிறது. அவற்றை மூடநம்பிக்கைக் கண்ணோடு பார்ப்பது இல்லை. ஆனால் இங்கே நமது பொக்கிஷங்களையும் நடைமுறைகளையும் மூட நம்பிக்கையாகச் சித்திரிக்கும் யுக்திவாதிகளின் அழகான பேச்சில் மக்கள் மயங்கிவிட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் ‘தீட்டு என்றால் என்ன?’ என்கிற கேள்வி. கடவுள் வழிபாட்டில் ஒருவன் இணைந்திருக்கிறான். அந்த வேளையில் ஒருவன் அவனைத் தீண்டினால் வழிபாடு முறிந்து பலன் அகன்றுவிடும். அப்போது, தீண்டின நினைவு தொடராமல் இருக்க நீராடிவிட்டு வருவான். இது, வழிபடுபவன் தன்னை வழிபாட்டில் மீண்டும் இணைத்துக்கொள்ளச் செய்யும் சடங்கு. இந்தத் தீட்டு தொட்டவனை (தீண்டியவனை) எப்படி அவமதிப்பதாகும்?

தீட்டு என்பது மனம் சார்ந்த விஷயம்; உடல் சார்ந்தது அல்ல. மனம் தீட்டை உணர்ந்தால், அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத்தான் நீராடலை ஏற்கிறான்.  மனதை ஒரு நிலைப்படுத்தி, ஒரு முயற்சியில் முனைப்போடு இருப்பவனை, ஒருவர் தீண்டும்போது அதில் ஏற்படும் சுணக்கத்தை மறையச் செய்வதற்கு நீராடல் ஒத்துழைக்கிறது.

எத்தனையோ நல்ல விஷயங்களை தப்பான விளக்கத்தில் புரிந்துகொண்டு நமது பண்பையும் கலாசாரத்தையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்துவிடு கிறோம். அதைத் தவிர்க்கவேண்டும். இறப்புத் தீட்டும் பிறப்புத் தீட்டும் நம் கலாசாரத்திற்கு ஒத்துழைக்கும்.

** சப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது எதற்காக?

** மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா?

** செவ்வாய் தோஷ பாதிப்பு எத்தனை காலம் நீடிக்கும்?

இதுபோன்று, திருமணம் குறித்த இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழிலும் தொடரும்.