மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

நடராஜர்

 - தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்

ல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமான் ஆட, பிரபஞ்சமே ஆடுகின்றது என்று தத்துவ தரிசனம் கண்ட பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

‘வேதங்க ளாட மிகு ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிள ரண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந் தக் கூத்தே'


என்றார் திருமூலர். ஆனந்தமான அரங்கத்திலே ஆனந்தமயமான கீத வாத்திய கோஷங்களோடு அகில லோகமும் ஆனந்தம் அடையும்படி இறைவன் ஆனந்த நடனம் ஆடுகின்றான்; ஆனந்தக் கூத்தனின் ஆனந்த நாடகமே பிரபஞ்ச நாடகமாகின்றது; ஆனந்தக் கூத்தால் உலகமே ஆனந்தம் அடைகின்றது என்பது தத்துவ ஞானிகள் கொள்கை.

இந்தத் தத்துவமெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஆனந்தத் தாண்டவம், கவிஞனின் உள்ளத்தை எவ்வாறு கொள்ளை கொண்டிருக்கிறது என்று பார்ப்போம்.

காலை நேரம், கீழ்த்திசையிலே இன்னும் கதிரவன் தோன்றவில்லை. அவனது வரவை நோக்கி வேத கோஷம் எழுகின்றது. கின்னரர்கள் இன்னிசை பாடுகின்றார்கள். தேவர்களும் முனிவர்களும் கைகளைக் குவித்து வணங்குகின்றார்கள். நீலக் கடலாகிய மத்தளம் அதிர்கின்றது. ‘‘தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ’’ என, பொற்கதிர் விரித்து பால சூரியன் கீழ்த் திசையாகிய வானரங்கத்திலே தோன்றுகின்றான். சூரிய வட்டம், கடல் அலைகளிலே மிதந்து வருவது நடம்புரிவது போலவேயிருக்கிறது.

இதையெல்லாம் தூரத்தே இருந்து பார்க்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். மறைகளோடு கின்னரர் இசை பாட, விண்ணும் மண்ணும் கைகுவித்து ஏத்த, சிதாகாசத்திலே ஆனந்த நர்த்தனமிடும் நடராஜ
மூர்த்தியே, கீழ்வானமாகிய அரங்கத்தில் இன்ப ஒளித் திரளான இளஞ் சூரியனாய் உதயஞ் செய்துவிட்டார் என்று நினைக்கின்றார். இந்த எண்ணமெல்லாம் அவர் உள்ளத்தைப் பீறிக் கொண்டு கவிதா ரூபத்தில் வெளியே வருகின்றது.

‘எண்ணரிய மறையினோடு கின்னரர்கள்
    இசைபாட, உலகம் ஏத்த,
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்
    கரங்குவிப்ப, வேலையென்னும்
மண்ணுமணி முழவதிர, வானரங்கில்
    நடம்புரிவான் இரவியான
கண்ணுதல் வானவன் கனகச் சடைவிரிந்தால்
    எனவிரிந்த கதிர்களெல்லாம்!’


என்ன அழகான ஜீவ சித்திரம்! சூரிய உதயத்தை இதைவிட அழகாக யாரால்தான் வர்ணிக்க முடியும்? கம்பராலேயே முடியுமா என்பது சந்தேகம்தான். நடன ராஜனது ஆனந்தக் கூத்து கவிஞன் உள்ளத்தை அப்படியே வசீகரித்து அந்த வசீகரமெல்லாம் உணர்ச்சி வேகத்துடன் பொங்கி வருவதைக் காட்டுவ தல்லவா இந்தப் பாட்டு?

தத்துவ ஞானிகளும் கவிஞர்களும் ஒருபுறமிருக்க, சிற்பக்கலை நுணுக்கம் தெரிந்த பெரியோர் பலர், இந்த அழியா அழகுடைய ஆனந்தக் கூத்தைக் கல்லிலும் செம்பிலும் பொறித்து வைக்க ஆரம்பித்தார்கள். கோயில்கள்தோறும் நடராஜரது சிலைகள் எழுந்தன. ஆனந்தத் தாண்டவம், ஊர்த்துவ நடனமெல்லாம் உயிர்ப் பெற்றன.

கல்லிலும் செம்பிலும் கண்ணுதலைக் காட்டிய அந்தப்  பெரியவர்களுக்கு நாம் எவ்வளவு கடமைப் பட்டுள்ளோம் என்று சொல்ல வேண்டுமா?

இத்தகைய நடராஜனது திருவுருவங்களைக் கண்டு கண்டு இன்பம் பெரிதும் அனுபவித்தவர் அப்பர் என்று சொன்னால் மிகையாகாது.

‘இந்த ஆனந்த நடனத்தைப் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்’ என்ற உறுதி மட்டும் இருந்தால், எவ்வளவோ துன்பம் நிறைந்த இந்த மனிதப் பிறவியை இன்னும் எத்தனை தரம் வேண்டுமானா லும் எடுக்கலாம் என்று முடிவு கட்டி விடுகிறார்.

‘குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில்
    குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில்
    பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
    காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த
    மானிலத்தே.’


அப்பர் பாட்டுக்கு ஒரேயொரு திருத்தம். மனிதப் பிறவி மட்டும் போதுமா? பனியுறையும் நியூஸிலாந்திலும் கிரீன்லாந்திலும் மனிதனாய்ப் பிறந்து என்ன பயன்?

ஆனந்தக் கூத்தனின் அழகிய நடனத்தையும், அந்த நடனச் சிறப்பைக் கண்டு போற்றும் அப்பர் கவியையும் அனுபவிக்கத் தமிழனாகவும் பிறக்க வேண்டாமா?

ஒருநாள் நானும் நண்பர் ஒருவரும் பசுவந்தணை என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் சென்றோம். அந்தக் கோயில் உள்ளே சுவாமி தரிசனத்துக்காகச் சென்ற இருவரும், அங்கே அருள்புரிந்த நடராஜரது செப்பு விக்கிரகத்தின் முன்னிலையில் சில நிமிஷ நேரம் நின்று தொழுதோம்.

வெளியே வந்தவுடன் என் நண்பரைப் பார்த்து நான், ‘‘நண்பரே! அந்தச் சிலையில் காணும் சிற்பியின் கைத்திறனையும் நுணுக்க வேலைப் பாட்டையும் பார்த்தீரா?’’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘‘நான் சிலையையும் பார்க்கவில்லை. அதன் வேலைத் திறனையும் பார்க்கவில்லை. இறைவன் சந்நிதானத்தின் முன் நின்ற உணர்ச்சியை யல்லவா பெற்றேன்?’’ என்றார். இதைக் கேட்டவுடனே ‘‘கடவுளைக் காண்பதற்குரிய சுருக்கமான வழி கலைதான்’’ என்று கவி ரவீந்திரநாத் தாகூர் சொன்ன வாக்கியத்தின் உண்மையை அறிந்தேன்.

சாஸ்திரம், சமயம், கலை எல்லாம் ஒன்று கூடும் இடம் நடராஜரது திருவுருவம் என்பதும், அத்தகைய சிறந்த தத்துவம் ஒன்றை உலகுக்கு கொடுத்தது தமிழ்நாடு என்பதும், தமிழராகிய நமக்கு எவ்வளவு பெருமை கொடுக்கிறது!

** 1940 ஆனந்த விகடன் தீபாவளி மலரிலிருந்து....

அருட்களஞ்சியம்

தாயின் துயரம்

தான் காட்டுக்குப் போகவேண்டியிருப்பதை உடனே வெளியிட்டுவிடாமல், அதற்கு ஒரு முன்னுரையாக, ‘‘சக்ரவர்த்தி என்னை நன்னெறியில் செலுத்து வதற்கு நியமித்திருக்கும் கட்டளை ஒன்றுண்டு’’ என்று ராமன் சொல்லியதும், ‘‘அந்தக் கட்டளை யாது?’’ என்று கோசலை வினாவுகிறாள்.

அப்பொழுதும் ராமன் அதை அப்படியே வெளியிட்டுவிடாமல், அதன் கொடுமையை மட்டுப் படுத்தி, ‘‘ஏழொடு ஏழு ஆண்டுகள் ஞான மூர்த்திகளான மகரிஷிகளோடு காட்டிலே தங்கிப் பிறகு நீ திரும்பி வரவேண்டும் என்பது சக்ரவர்த்தி யின் கட்டளை’’ என்று தெரிவிக்கிறான்.

இவ்வளவு சாமர்த்தியமாக ராமன் இந்தச் செய்தியைத் தெரிவித்த போதிலும், ‘‘மீண்டும் நீ வரல் வேண்டும் என்றார் சக்ரவர்த்தி’’ என்பதை அழுத்திச் சொல்லியபோதிலும் தாயுள்ளம் தாங்க முடியவில்லை. ராமனுக்கு முடி சூட்டுவதற்கு பதிலாக பரதனுக்குப் பட்டம் கட்டுகிறார்கள் என்பதை அமைதியாக ஏற்றுக்கொண்டவள், இப்போது கடைசியாக ராமன் சொன்ன தைப் பொறுக்க முடியவில்லை. அரசாங்கமும் அதிகார ஆடம்பரங்களும் இவள் பொருட்படுத்தும் காரியங்களல்ல. ஆனால், இத்தகைய மனப்பண்பு வாய்த்தவளும் தாய்மைப் பண்பு வாய்த்தவள்தானே?
அந்தத் தாயின் நிலைகொள்ளாத நிலையை இதோ கவிஞன் காட்டக் காண்போம்.

ஆங்(கு) அவ் வாசகம் என்னும்அ னல், குழை
தூங்கு தன்செவியில் தொட ராமுனம்
ஏங்கினாள், இளைத் தாள் திகைத்தாள், மனம்
வீங்கினாள், விம்மினாள், விழுந்தாளரோ!


தான் காட்டுக்குப் போகவேண்டும் என்று மகன் சொன்ன வாசகம் காதைச் சுட்டுவிட்டதாம். அது காதில் விழுந்ததோ இல்லையோ, தாய் கீழே விழுந்து விட்டாள். அப்படி அவள் விழுவதற்கு முன் அவள் ஏங்கிப்போவதும், சோர்ந்து போவதும், ஒன்றும் செய்யத் தெரியாமல் திகைத்துப் போவதும், மனம் வீங்கி வெடித்துப் போகும் நிலையில் இதயம் விம்முவதும் நம் மனக் கண் முன் அப்படியே நிகழ்கின்றன. அவள் அப்படியே தரையில் சோர்ந்து விழுவதையும், விழுந்துவிடுவதையும் பார்த்துவிடுகிறோம்.

அருட்களஞ்சியம்

‘தர்மமே ஜயம்’ என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்த கோசலைக்கு இப்போது எல்லாம் பயனற்றதாய்த் தோன்றுகிறது. அவள் கலங்கி அப்படியே தரையில் விழுந்து கிடக்கிறாள். சாதாரணப் பிள்ளையாக இருந்தால் நிலை கலங்கிப் போயிருப்பான், தாயின் நிலையைக் கண்டதும். ஆனால், ராமன் என்ன செய்கிறான் பாருங்கள்:

இத் திறத்தின் இடர்உறு வாள்தனைக்
கைத்த லத்தின் எடுத்(து), ‘அருங் கற்பினோய்!
பொய்த்தி றத்தினன் ஆக்குதி யோ, புகல்,
மெய்த்தி றத்துநம் வேந்தனை நீ?’ என்றான்.


ராமன் தன் தாயைத் தரையிலிருந்து கையால் தூக்கி உட்கார வைத்து, ‘‘அம்மா! சத்தியமே ஜயம் என்று வாழ்க்கை நடத்தும் நம்முடைய சக்ரவர்த்தியைப் பொய்யன் என்று பிறர் வசை சொல்லும்படி செய்யலாமா? நீயே சொல்லு அம்மா!’’ என்று மெள்ளக் கேட்கிறான்.

மேலும், ‘‘என்றுமில்லாத பாக்கியம் இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது என்றே நான் எண்ணுகிறேன். இதற்கு நீ வருந்தலாமா?’’ என்கிறான். உண்மையில், மூன்று பாக்கியங்கள் கிடைத்திருக்கின்றனவாம். ராமன் வாயிலாகவே தெரிந்துகொள்வோம்:

சிறந்த தம்பி
   திருவுற, எந்தையை
மறந்தும் பொய்யிலன்
   ஆக்கி, வனத்திடை
உறைந்து தீரும்
   உறுதிபெற் றேன்: இதின்
பிறந்து யான்பெறும்
   பேறுஎன்ப(து) யாவதே?


சிறந்த தம்பியாகிய பரதன் ராஜ்யத்தை அடைவது ஒரு பாக்கியம். தந்தையை, மறந்தும் பொய் சொல்லமாட்டார் என்ற புகழுக்கு உரியவராக்குவது இரண்டாவது பாக்கியம். இந்த இரண்டு பாக்கியங்களுடன், வன வாசத்தையும் மூன்றாவது பாக்கியமாகக் குறிப்பிடும் மனநிலையை என்னென்பது?

வனத்திலே பேரறிஞர் களான முனிவர்களுடன் வசித்து, அதனால் கிடைக்கக்கூடிய பாக்கியத்தையும் தான் பெற்றுத் திரும்பக் கூடும் என்பது குறிப்பு. ‘‘பிறவி எடுத்ததற்கு இந்த மூன்று பாக்கியங்களைக் காட்டிலும் வேறு என்ன பாக்கியம் தான் கிடைக்கப் போகிறதோ?’’ என்கிறான். இம்மூன்று பாக்கியங்களுக்கும் காரணம் தனது வனவாசமாகையால், இதைக் காட்டிலும் வேறு என்ன பேறு வாய்க்கப் போகிறது? - என்கிறான். வனவாசம் பாக்கியமென்றால் அந்தப் பாக்கியம் தனக்கும் கிடைக்கட்டும் என்று கோசலை சொல்ல, ராமன் ‘அவள் தர்மம் வேறு’ என்பதை ஞாபகப்படுத்துகிறான்.

‘என்னை நீங்கி
   இடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை
   வற்புறுத் தா(து), உடன்
துன்னு கானம்
   தொடரத் துணிவதோ?
அன்னை யே! அறம்
   பார்க்கிலை யாம்’ என்றான்.


‘‘அம்மா! நீ தர்மம் பார்த்துப் பேசவில்லையே! என்னைப் பிரிந்து துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கும் சக்ரவர்த்திக்கு அருகிலிருந்து தைரியம் சொல்லித் தேற்றுவதல்லவோ உன் கடமை, உன் தர்மம்? அப்படியிருக்க, நீ என்னுடன் காட்டுக்கு வரத் துணியலாமோ?’’ என்று ராமன் சொல்லுகிறான்.

தந்தையின் துயரம்

சக்ரவர்த்தியைத் தேடிக் கோசலை கைகேயியின் அரண்மனையை அடைகிறாள். அங்கே அரசர் மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்டு, தானும் மூர்ச்சித்து விழுகிறாள். பிறகு சிறிது தேறிக் கோசலை பலவாறு புலம்பிக் கதறுகிறாள். அக்கதறலைக் கேட்டுப் பட்டாபிஷேகத்துக்குக் காத்திருந்த மன்னர் முதலியோர் வேண்டிக் கொண்டபடி வசிஷ்ட முனிவர் அங்கே வந்து சக்ரவர்த்தியின் நிலையைப் பார்த்தார்.

அந்த நிலைமைக்குக் காரணத்தை வினாவ, கைகேயி நிகழ்ந்ததை எல்லாம் விவரமாக நாக்குக் கூசாமல் சொன்னாள். செய்தி அறிந்ததும் வசிஷ்டர் தமது இன்னுரையாலும் சைத்யோபசாரத்தாலும் மூர்ச்சையாகக் கிடக்கும் சக்ரவர்த்தியைத் தேற்றுகிறார்.

சக்ரவர்த்தி மீது பனி நீர் தெளித்து, விசிறிக் கொண்டு மென்காற்றுத் தவழும்படி மெல்ல வீசுகிறார் முனிவர். போதம் (அறிவு) தோன்றியதும் தோன்றாததுமாக இருக்கையில், அரசரைக் குளிர்ந்த இனிய சொற்களால் உத்ஸாகப்படுத்துகிறார். விஷம் தலைக்கேறி இறந்து கொண்டிருந்தவன் ஒருவாறு விஷம் தணிய உயிர் காண்பது போல், மூர்ச்சித்திருந்தவர் அந்தச் சைத்யோபசாரத்தால் ‘ராமா!’ என்று தமது காதற்புதல்வன் பெயரைச் சொல்லிக்கொண்டே மூர்ச்சை தெளிந்து உணர்வு பெறுகிறார்.

தம்மைத் தேற்றிய குருவை நோக்கி, ‘‘ஐயா! நான் சாகும் காலத்தில், ராமனைக் காட்டை நினையாதபடி செய்து என் வாக்கையும் காப்பாற்ற வேண்டும்’’ என்று பரிதாபம் முதிர்ந்த குரலில் வேண்டிக்கொள்கிறார். உடனே முனிவர் காரிய சித்தி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் கைகேயி முகத்தைப் பார்த்து, ‘‘இனி நீ உன் மகனுக்கு (ராமனுக்கு) அரசையும், உன் கணவருக்கு உயிரையும் கொடுக்க வேண்டும்’’ என்று சாதுரியமாக இரந்து வேண்டுகிறார்.

அவளோ விம்மி அழுதுகொண்டே பெண் குலத்துக்கு உரிய ஆயுதங்களால் தன் பிடிவாதத்தை அரண் செய்யத் துணிந்து விடுகிறாள். பிறகு, முனிவரும் சக்கரவர்த்தியும் நம்பிக்கையை முழுக்க முழுக்க இழந்துவிடுகிறார்கள்.

அருட்களஞ்சியம்

பிரத்தியட்ச யமனைப் போல் தம் முன் நின்று உயிரை வாங்கும் கைகேயி மேல் பெருங்கோபம் கொண்ட சக்கரவர்த்தி, ‘‘இவள் என் தாரமல்ல, துறந்தேன்’’ என்று விவாக விலக்குச் செய்கிறார், வசிஷ்டரையே சாட்சியாக்கி!

மேலும், ஒரு குற்றமும் அறியாத இவள் மகனிடத்தும் மனங் கசந்து, ‘‘அவனும் என் மகனல்லன்!’’ என்று துறந்துவிடுகிறார்.

‘‘மன்னே ஆவான் வருமப்
    பரதன் தனையும் மகனென்(று)
உன்னேன் முனிவா! அவனும்
    ஆகான் உரிமைக்(கு)’’ என்றான்

இங்கே, உரிமை என்று குறிப்பிடுவது அந்திமக் கிரியை செய்யும் உரிமையை!

ராமனுக்காகவும் சத்தியத்துக்காகவும் தசரதர் செய்யும் தியாகம், பரதன் செய்யப்போகும் மகத்தான தியாகத்தை எப்படி எடுத்துக் காட்டுகிறது பாருங்கள்!

சாபமா? அனுக்கிரகமா?

பிறகு சக்ரவர்த்தி திடீரென்று தெளிந்து, முன்னே தமக்கு நேர்ந்த சாபம் ஒன்றின் வரலாற்றை வெளியிடத் தொடங்குகிறார். ‘‘வேட்டையாட விரும்பி ஒரு சமயம் நான் வில்லும் கையுமாய்க் கானகம் சென்று, பல மிருகங்களும் தண்ணீர் பருகுவதற்கு வரும் ஒரு நதியின் கரையில் மறைந்திருந்தேன். அப்போது ஒரு முனிகுமாரன் அக்காட்டில் தவஞ் செய்து கொண்டிருந்த குருடர்களாகிய தன் தாய் தந்தையர்களுக்குத் தண்ணீர் கொண்டு போக வேண்டுமென்று அந் நதிக்கு வந்து நீரை மொண்டு கொண்டான். அந்த ஒலியை யானை நீர் பருகும் ஒலியென்று கருதி, அந்த இடத்தை இலக்காக வைத்து ஓர் அம்பு எய்துவிட்டேன்.

உடனே மனிதக் குரலில் ஓர் அலறல் என்னைத் திடுக்கிடச் செய்தது. முனிகுமாரன் கீழே விழுந்து உருண்டு புரண்டு அலறிக் கொண்டிருந்தான். நான் ஓடிப் போய், ‘ஐயா! நீ யார்?’ என்று கேட்டேன். அவன் நடந்ததைச் சொல்லி, ‘இது ஊழ்வினைப் பயன்; நீ துயரப்படுவதில் பயனில்லை. யானை என்று எண்ணித்தானே அம்பு போட்டாய்? என் பெற்றோருக்குத் தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்து, என் மரணத்தைத் தெரிவித்து, நான் சாகும்போது அவர்களைத் தொழுததாகவும் சொல்லு’’ என்று கூறி மரணம் அடைந்தான்.

நானும் அப்படியே அவர்களிடம் சென்று, நடந்ததைச் சொல்லி அவர்கள் காலில் விழுந்து பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டேன்.

உடனே, அவர்கள் இருவரும் கீழே விழுந்து புரண்டு துயரக் கடலில் ஆழ்ந்து, ‘இன்றே நாங்கள் கண்ணிழந்தோம்!’ என்று புலம்பினார்கள். முனிவரோ ஆறாத வயிற்றெரிச்சலுடன், ‘நீயும் எங்களைப்போல் மகனைப் பிரிந்து மரணம் அடைவாய்!’ என்று சாபம் கொடுத்தார். பிறகு அவர்கள் இருவரும் புத்திர சோகத்தால் உயிரை விட்டார்கள். அச்சாபம் எனக்கு அச்சமயம் துன்பந் தரவில்லை, இன்பமாகவே இருந்தது. எனக்குப் புதல்வன் உண்டென்று அவர் அருள் செய்ததாகவே மகிழ்ந்து போனேன். ஆனால் இப்போதோ... என்று ஏங்கிப் பெருமூச்சு விடுகிறார் சக்ரவர்த்தி.

** 3.11.46, 10.11.46, 17.11.46 மற்றும் 24.11.46 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...