Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

ந்தாம் வீட்டின் அதிபதி 7-ல் அமர்ந்திருக்கிறான். 7-க்கு உடையவன், பாப கிரகத்துடன் இணைந்திருக்கிறான். சுக்கிரன் பலமிழந்து இருக்கிறான். ஆண் ஜாதகத்தில் இப்படியான அமைப்பு இருந்தால், அவனுடைய மனைவி கர்ப்பவதியாகவே உயிர் துறப்பாள் என்கிறது ஜோதிடம்.

ஐந்துக்கு உடையவன் குழந்தைச் செல்வத்தை அளிப்பவன். அவன் 7-ல் அமர்ந்த நிலையில், விபரீத பலனை அளிப்பவனாக மாறுகிறான். ஐந்தை லக்னமாக வைத்தால், 7-பாவம் மூன்றாம் வீடாக மாறிவிடும். மூன்று விபத்தைக் குறிப்பதால், குழந்தையை அளிக்கவேண்டியவன் அழிவுக்குக் காரணமாகிவிடுகிறான். 5-க்கு உடையவனின் குறையானது, குழந்தையை தந்தும் அனுபவத்துக்கு இல்லாமல் செய்துவிட்டது. 7-க்கு உடையவன் பாப கிரகத்துடன் இணைந்திருப்பதால், 7-ஐ அவளது லக்னமாக ஆராயும்போது, லக்னத்துக்கு உடையவன் - ஆயுளைத் தர வேண்டியவன் பாப கிரகத்தின் சேர்க்கையில் விபரீத பலனை ஏற்கவைக்கிறான்.

சுக்கிரன் களத்ரகாரகன். அதாவது களத்ரத்தை-மனைவியை இணைத்து வைப்பதோடு நில்லாமல், அவளிடம் இருந்து மகிழ்ச்சியையும் தரவல்லவன். அவன் பலமிழந்த நிலையில், விபரீத பலனை ஏற்கவைக்கிறான். களத்ரத்தை (மனைவியை) சேர்த்து வைத்து குழந்தை உருவான நிலையிலும், அதை அடைந்து அனுபவிக்க இடமில்லாமல், மனைவியின் (தாயின்) உயிரைப் பறித்து வாழ்க்கையை சூன்யமாக்குகிறான்.

ஐந்துக்கு உடையவன் தவறான இடத்தில் அமர்ந்துவிட (அதாவது 7-ம் வீடு அவனுக்கு மூன்றாம் வீடு), அது விபத்தை ஏற்படுத்தக் காரணமாயிற்று. 7-க்கு உடையவன் பாபியோடு இணைந்து, தனது தகுதியை இழப்பதால், மனைவி இழப்புக்குக் காரணமாகிறான். விவாஹகாரக கிரகமான சுக்கிரன், தனது செயல்பாட்டை நடைமுறைப்படுத்தியும், பலமிழந்த நிலையில் இருப்பதால் களத்திரத்தை இழக்கவைக்கிறான்.

பாவாதிபதி பலம் பொருந்தியிருந்தால் மட்டுமே பாவ பலன் அனுபவத்துக்கு வரும். 7-க்கு உடையவன் பாப கிரகத்தின் இணைப்பின் மூலம் பலம் குன்றியவனாக மாறிவிடுகிறான். சுக்கிரன் விவாஹ காரகனாக இருந்தும் தனது வலிமை இழக்கப் பட்டதால், விபரீத பலனை அளித்துவிடுகிறான். ஐந்துக்கு உடையவன் தவறான இடத்தில் (ஐந்துக்கு 7 மூன்றாவது வீடு)வந்தபடியால் தனது தகுதியை இழந்தான். அதனால்,  குழந்தையை அளித்தும் அதை தக்கவைக்க முடியாமல் செய்ததுடன், அடுத்தக் குழந்தையை ஈன்றெடுக்க இடமளிக்காமல் தாயையும் (மனைவியை) இழக்கச் செய்துவிடுகிறான்.

இங்கு புத்ர ஸ்தானாதிபதி (ஐந்துக்கு உடையவன்), களத்ர ஸ்தானாதிபதி (7-க்கு உடையவன்), விவாஹ காரகனான சுக்கிரன் (திருமணத்தை மகிழ்ச்சிகரமாக மாற்றி நடைமுறைபடுத்துபவன்)  ஆகிய மூவரும் தகுதி இழந்தவர்களாக மாறிவிட்டார்கள். இந்த மூவரின் கூட்டு முயற்சியில், மனைவி குழந்தையோடு மரணத்தைத் தழுவினாள் என்று விளக்கமளிக்கும் ஜோதிடம்.

ஐந்திலோ, ஏழிலோ அமைந்த பாப கிரகங்கள் அல்லது சுப கிரகங்கள் - இவர்களின் செயல்பாட்டைவிடவும் முன்னுரிமை பெற்று விடுவார்கள், அந்தந்த வீட்டின் அதிபதிகள் என்பதை சொல்லாமல் சொல்லும் ஜோதிடம்.

திருமணத்துக்கு 7-ம் வீட்டை அலசி ஆராய்வது, குழந்தைக்கு ஐந்தாம் வீட்டை அலசி ஆராய்வது என்பதை மட்டும் செய்து முடிவெடுப்பது தகாது என்று ஜோதிடம் வலியுறுத்தும். அந்தந்த வீட்டுக்கு உடையவனின் தரத்தை ஆராய்ந்த பிறகுதான் இறுதி முடிவை எட்ட வேண்டும் என்ற தகவலை இந்த செய்யுள் விளக்குகிறது: ஸுதேசே தாரபம்யாதே ததீசே பாபஸம்யுதே.சுக்ரேபலவிஹீனேச.

பெண் ஜாதகத்தில் 8-ல் செவ்வாய். அவளுக்குக் கணவன் இழப்பு உண்டு. ஆண் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய். அவனுக்கு மனைவி இழப்பு உண்டு. இரண்டு இழப்பும் இல்லாமல்போய் தாம்பத்தியம் சிறக்கும் என்று ஜோதிட பிரபலங்கள் சிலர், ஜாதகத்தை இணைத்துவைக்கிறார்கள். அத்துடன் நிற்காமல், தோஷத்துக்கு தோஷம் இருப்பதால் தோஷ ஸாம்யம் உண்டு என்று சொல்கிறார்கள். இருவரது ஆயுளையும் நிர்ணயிப்பது செவ்வாய் அல்ல. இருவருடைய 8-ம் பாவத்தின் அதிபதிக்கும் பங்கு உண்டு. இருவரது ஜாதகங்களிலும் நீண்ட ஆயுள் இருந்தால், இருவரும் மடியமாட்டார்கள். அப்படியிருக்க, செவ்வாயை வைத்து இருவரது இழப்பைச் சொல்வதும், இணைத்தால் இருவரும் மரணத்திலிருந்து தப்பி தாம்பத்தியத்தில் செழிப்பார்கள் என்று விளக்கம் அளிப்பதும் ஜோதிட பிரபலங்களுக்கு பெருமையல்ல.

எந்த சட்டதிட்டத்துக்கும் பொருந்தாத ஒரு நடைமுறையைப் பின்பற்றி, சான்றில்லாத தகவலை வைத்து இணையைச் சேர்ப்பதில் முடிவெடுப்பது அதர்மமாகும். இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது. இருவரும் தன்னிச்சையாக இணைந்தார்கள். இருவரில் ஒருவரும் மறையவில்லை. மாறாக செழிப்பான தாம்பத்தியத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இருவரது நீண்ட ஆயுளும், இருவருக்கும் 7-க்கு உடையவனின் பலம் பெற்ற அமைப்பும் காரணம். இந்த ஜாதகங்களை நமது பிரபலங்கள் சேர்க்கமாட்டார்கள். ஒன்றில் செவ்வாய் இருக்கிறது மற்றொன்றில் இல்லை என்று சொல்லி, தோஷ ஸாம்யம்  இல்லை என்று சுட்டிக்காட்டி, சேர்க்கவிடாமல் தடுப்பார்கள். இப்படி, அடிப்படை ஜோதிட தகவல்களை அலட்சியப்படுத்தி தன்னிச்சையாக முடிவெடுக் கும் ஜோதிட பிரபலங்கள் தோன்றக் கூடாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள் சொன்னார்கள்

பெண் ஜாதகத்தில் 5-ல் பாப கிரகம் இருக்கிறது. ஆண் ஜாதகத்திலும் 5-ல் பாப கிரகம் இருக்கிறது. இரண்டுக்கும் தோஷ ஸாம்யம் உண்டு, குழந்தைகள் உண்டு என்று பிரபலங்கள் சொல்வதில்லை. இரண்டிலும் செவ்வாய் தோஷம் இருந்தால் தாம்பத்தியம் செழிக்கும் என்ற கோட்பாடு, இரண்டிலும் 5-ல் இருக்கும் குழந்தையின்மை எனும் நிலை இருப்பதால், அது குழந்தையைக் கொடுக்கும் என்று ஏன் சொல்வதில்லை?

5-ல் தோஷமிருந்தால் குழந்தை இருக்காது என்று இணையைச் சேர்ப்பதில்லை. இரு ஜாதகங்களிலும் 5-ல் தோஷமிருந்தால் குழந்தையின்மை வலுப்பெற்று விட்டதாகவே முடிவெடுப்பார்கள். 7-ல் செவ்வாய் தோஷத்துக்குப் பயன்படுத்தும் நடைமுறையை ஏன் இங்கு ஏற்பதில்லை? இப்படியான இருவிதமான சிந்தனை, பிரபலங்களின் மனப்போராட்டத்தை வெளியிடுகிறதே தவிர, ஜோதிடத்தில் இருக்கும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்தவில்லை.

‘இரண்டு மைனஸ் - ஒரு ப்ளஸ்’ என்று செவ்வாய் தோஷத்தின் இரு மைனஸ்கள் ப்ளஸ் ஆகிவிடுகிறது என்ற புது விஞ்ஞான விளக்கம். இங்கு பொருந்தும் என்பதற்கு சான்று இல்லை. அந்த நடைமுறையானது, இரண்டு ஜாதகங்களிலும் 5-ல்பாப கிரகங்கள் தென்படும் நிலையில், ‘இரண்டு மைனஸ் ஒரு ப்ளஸ்’ என்கிற விஞ்ஞான விளக்கத்தை அளித்து ஏற்க முற்படுவது இல்லை. இங்கு அது பொருந்தாது என்பதற்கும் சான்று இல்லை. இப்படி சான்றில்லாத தகவலை வைத்து பலன் சொல்லும் ஜோதிட பிரபலங்கள் உருவாகக்கூடாது.

திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். வாரிசு இல்லாதவனுக்கு இவ்வுலகமும் இல்லை மறு உலகமுமில்லை என்றும் சொல்வர். இவை இரண்டையும் ஈட்டித் தரும் திறமை இருப்பதை நினைத்து, ஜோதிட பிரபலங்களை அணுகுகிறார்கள் மக்கள். அவர்கள் மனதில் இந்த ஜோதிட பிரபலங்கள் கடவுளாகவே தென்படுகிறார்கள். அதற்கு உகந்த வகையில் மக்களுக்குச் சேவை செய்யும் திறன் ஜோதிட பிரபலங்களுக்கு இருக்கவேண்டும். வாழ்க்கையில் நெருக்கடியான நிலையில் கைகொடுத்த ஜோதிடக் கலையை துர்உபயோகம் செய்யும் எண்ணம் பிரபலங்களுக்கு வரக்கூடாது.

7-க்கு உடையவன் உச்சம், வக்கிரம் போன்ற நிலையை அடைந்து வலுப்பெற்று, லக்னத்தில் இருந்தால், ஒன்றுக்கு மேல் மனைவியை அடைந்து மகிழ்ச்சியோடு வாழ்வான். அதேபோல் 7-க்கு உடையவன் உச்சம், வக்கிரம் என்கிற நிலையைப் பெற்றிருந்தாலும் போதும்; அவன் லக்னத்தில் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. இப்படியான நிலை இருந்தாலும் எண்ணிக்கையில் அதிகமான மனைவிகளோடு இணைந்து, சுமுகமான சூழலில் மகிழ்ச்சி பொங்க தாம்பத்தியத்தில் திளைப்பான் என்கிறது ஜோதிடம்.

களத்ரேசே பஹூகுணெ துங்க வக்ராதி ஹேதுபி: பஹூபார்யாம் நாம் வித்யாத் உதயர்ஷகாதபிவா... இந்தச் செய்யுளில் பாவாதிபதி பலம் பெற்றால் பாவம் செழிக்கும் என்பதை அறுதியிட்டு விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டுக்கும் செவ்வாய் தோஷத்துக்கு தோஷ ஸாம்யம் மட்டும் போதாது. 7-க்கு உடையவன் உச்சன், வக்ரம் போன்ற பெருமை பெற்றவனாகத் திகழ வேண்டும். 7-க்கு உடையவன் பலம் பெற்று இருந்தால் மட்டுமே செவ்வாய் தோஷம் செயலிழக்கும். இப்படி ஆழமான ஆராய்ச்சியில் இறங்காமல், கட்டத்தில் செவ்வாயைப் பார்த்தவுடன் முடிவை அறிவித்து பரிந்துரைப்பது நல்ல நடைமுறை அல்ல.

12, 1, 2, 4, 7, 8 - இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று குறிப்பிடுவது, ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. 7, 8 ஆகிய கட்டங்களில் தென்படும் செவ்வாய்க்கு மட்டும்தான் தோஷம் சொல்ல முடியும். அவை இரண்டுக்கும்தான் கணவனையும் மனைவியையும் உயிரிழக்கச் செய்ய தகுதி உண்டு. 12, 1, 2, 4 ஆகியவற்றில் இருக்கும் செவ்வாய் 7-யும், 8-யும் பார்க்கிறார்களே தவிர, அந்த பாவத்தை (7-ம் வீட்டின் தகுதியை) மாற்றியமைக்கும் தகுதி உடையவர்களாக மாற மாட்டார்கள். அவர்களது பார்வையில் விளைந்த பலன், அவளை அழிக்க முற்படாது. பஞ்சாங்கத்தில் தென்படும் அட்டவனையை வைத்து, எதையும் ஆராயாமல் முடிவை அறிவிப்பது தகாது.

லக்னாதிபதியின் வலுவில் நீண்ட ஆயுளும், 7-ம் பாவதிபதியின் பெருமையில் நீண்ட தாம்பத்தியமும் தென்படும் ஜாதகங்களில், இரண்டு ஜாதகத்திலும் தென்படும் செவ்வாய் தோஷம் வலுவிழந்து விடும். நீண்ட ஆயுள், 7-ம் பாவாதிபதியின் சிறப்பு - இந்த இரண்டு ப்ளஸ் இரண்டு ஜாதகத்தில் தென்படும் செவ்வாயின் தோஷ ஸாம்யம் (அதாவது இரண்டு மைனஸ்) வலுவிழந்து, ப்ளஸ் ஆக மாறிவிடும் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். சிந்தனை வளம் பெற்றவன் பிறரது பரிந்துரையை ஆராயாமல் ஏற்கமாட்டான். சிந்தனை வளம் பெறாதவன் பரிந்துரையை ஏற்பான்; எடுப்பார் கைப்பிள்ளையாக மாறுவான். இரண்டாவது தரத்தில் ஜோதிட பிரபலங்கள் நுழையக்கூடாது.

குடும்பாதிபன் (இரண்டுக்கு உடையவன்), 7-க்கு உடையவன் தனது வீட்டில் (ஸ்வக்ஷேத்ரம்) அமைந்தால், கைப்பிடித்த மனைவியோடு தாம்பத்தியம் செழிப்பாக முடிவடையும். அவர்களோடு எத்தனை கிரகங்கள் சேர்ந்திருக்கின்றனவோ, அந்த எண்ணிக்கையில் மனைவி எண்ணிக்கை இருக்கும். ஸ்வக்ஷேத்திர பலவானாக அமைந்த இரண்டாம் பாவாதிபதியும் (குடும்பாதிபதியும்), 7-ம் பாவாதிபதியும், தன்னோடு இணைந்த கிரகங்களை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். சேர்ந்த கிரகங்கள் இவர்களின் இயல்பை மாற்றியமைத்து, மாறுபட்ட பலனை ஏற்படுத்துவதில்லை; மாறாக இவர்களின் தகுதிக்கு உடையவர்களாகவே, மனைவிமார்களை இணைத்து விடுகின்றனர். பலமான கிரகங்கள், பலம் குன்றிய கிரகத்தின் இணைப்பில் அவற்றை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் (ஸ்வர்ஷேகுடும்பாதிபதௌ...).

முன்னோர்கள் சொன்னார்கள்

லக்னாதிபதியும், 7-க்கு உடையவனும் பலம் பொருந்திய நிலையில், லக்னத்திலோ ஏழிலோ இனைந்திருக்கும் கிரகங்களை தன் வசப்படுத்தி, தனது பலனோடு இணைத்துக் கொண்டு விடுவர். 7-ல் தென்படும் செவ்வாயின் இடையூறை... ஏழுக்கு உடையவனின் பலம் பொருந்திய நிலை, அவனை வசப்படுத்தி, தனது பலனுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் மாற்றிவிடும்.

செவ்வாய் உச்சனாக இருந்தால் தோஷம் இல்லை. ஸ்வக்ஷேத்ரனாக இருந்தால் தோஷம் இல்லை (தனது வீட்டில் இருந்தால் தோஷமில்லை), சுப கிரகத்துடன் இணைந்தால் தோஷம் இல்லை, குரு பார்த்தால் தோஷம் இல்லை என்ற பட்டியலை அடுக்கும் ஜோதிட பிரபலங்களும் உண்டு. இதிலிருந்து செவ்வாய் எடுப்பார் கைப்பிள்ளை என்று தெரிகிறது. இணைந்த கிரகமும், பார்க்கும் கிரகமும் கிரகங்களின் தாக்கத்தைத் தணியவைத்து தன்னிச்சையாக செயல்படும் திறன் இல்லை என்ற நிலையில், செவ்வாய் மனைவியை அல்லது கணவனை அழித்துவிடுவான் என்ற முடிவு எடுப்பது எப்படி பொருந்தும்?

செவ்வாயை கிரகங்களில் ‘வில்லனாக’ சித்திரிப்பது ஜோதிடத்தில் போதுமான அறிவின்மையையே வெளிப்படுத்துகிறது. ஆராய்ந்து பலன் சொல்ல முற்பட்டால், ஜோதிடம் வரப் பிரசாதமாக மாறும்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism