மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 19

சிவமகுடம்  - 19
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 19

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 19

ஆற்றங்கரை ஆபத்து!

மேகத்திரை கிழித்து கொட்டித் தீர்த்தது பெருமழை. அதன் நீர்த்துளிகள் ஆங்காங்கே சிறு ஓடைகளில் ஒன்றுகூட, ஓடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் அந்தக் காட்டாற்றுடன் சங்கமித்து பெருவெள்ளமாய் பரிணமித்து, ஆற்றின் ஆக்ரோஷத்தை மேலும் அதிகப்படுத்தின!

இங்ஙனம் ஆர்ப்பரித்துப் பாயும் ஆற்றுவெள்ளத்தின் ஆரவார ஒலியோ, அத்துடன் இணைந்து ‘ஹோ’வென சுழன்றடித்த சூறைக் காற்றின் பேரிரைச்சலோ, செவி பிளக்க ஒலித்த பேரிடியின் பெரும் சத்தமோ நம்பியைச் சலனப்படுத்தியதாகத் தெரியவில்லை.

இயற்கையின் இந்த இடர்ப்பாடுகளையும், அருகில் நெருங்கி விட்டிருந்த பெரும் நீர்ச்சுழல் ஒன்றின் அதீத விசையையும் எதிர்த்து, துடுப்பு வலித்துக் கொண்டிருந்த நம்பிக்கு, அவனது படகின் முனைப்பகுதியையொட்டி கிடத்தப்பட்டிருந்த பொங்கியின் முனகல் சத்தமே பெரிதும் சஞ்சலத்தை உண்டுபண்ணியது.

மின்னலின் ஒளியில் அவன் அவளைக் கவனித்தபோது, அவளின் உடல் நடுக்கம் முன்பைவிட அதிகரித்திருப்பதை அறிய முடிந்தது. எப்பாடு பட்டாவது சுழலைக் கடந்துவிடவேண்டும் அதன் பிறகு அதிக சிரமம் இல்லை. ஆற்றின் போக்கும் வேகமும் சேரவேண்டிய இடத்துக்கு வெகுசீக்கிரம் தங்களைக் கொண்டு சேர்த்துவிடும் என்று முடிவெடுத்தவன், துடுப்பை இயக்குவதில் அதீத வேகம் காட்டினான். படகும் மெள்ள மெள்ள சுழலின் விசையில் இருந்து விலகத் துவங்கியிருந்தது. ஆனால், அரை மயக்கத்தில் கிடந்த பொங்கியின் முனகல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தது!

‘துறவி... மூங்கில்காடு... தவக்குடில்... சிவதரிசனம்’

- அவள் முனகலில் இருந்து இந்த வார்த்தைகளை மட்டுமே தெளிவாகப் புரியமுடிந்தது நம்பிக்கு. ஆனால் அவற்றுக்கான உட்பொருளோ, அந்த வார்த்தைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்தோ அவனுக்கு  எதுவும் புலப்படவில்லை.

‘எத்தகைய ஆபத்தில் மாட்டிக்கொண்டாள் இந்தப் பெண். நான் மட்டும் தக்க தருணத் தில் வரவில்லை என்றால், இவள் கதி என்னவாகியிருக்கும்?’- நினைத்துப் பார்க்கவே குலைநடுங்கியது நம்பிக்கு!
உறையூர் சிறுபோர் வெற்றியில் முடிந்தது என்றாலும், புயலெனப் பாய்ந்து வந்த சோழ தூதன், இளவரசி மானியாரிடம் பகிர்ந்துகொண்ட தகவல் எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டது. எல்லையில் பகைப் படைகள் எரிபரந்தழித்தலை துவங்கி விட்டதை அவன் உரைத்தபோதும் கலங்காத இளவரசியாரே, புலியூருக்குப் புறப்பட்ட பொங்கி, இன்னும் அங்குவந்துசேரவில்லை என்ற தகவலைச் சொன்னதும் ஒருகணம் ஆடித்தான் போனார்.

ஆனாலும் அதுவும் சில விநாடிகள்தான்.சட்டென்று தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டவர், அடுத்தடுத்து ஆணைகளைப் பிறப்பித் ததையும், எல்லைப்புறத்தில் நிலவரத்தை இன்னும் தெளிவாக அறிந்துவரும்படி கோச்செங்கணை சிறுபடையுடன் அனுப்பிய இளவரசி, பொங்கியை மீட்டெடுக்க தனக்கு உத்தரவிட்டதையும் எண்ணிப் பார்த்தான். அப்போது அவர் முகத்தில்தான் எவ்வளவு ஆவேசம்.  இக்கட்டான சூழலிலும் அவர் காட்டும் இந்த வேகமும் உறுதி யுமே சோழவீரர்களுக்கு பல தருணங்களில் வெற்றிக்கான உத்வேகத்தை அளித்திருக்கின்றன.

‘சாதாரண மனிதன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிக்கத் துடிக்கத் துடிக்கும் மனிதனோ ஆபத்துகளில்  உள்ள வாய்ப்பைப் பார்க்கிறான்’ என்று அடிக்கடி தன் வீரர்களுக்கு உபதேசிப்பார் பட்டர்பிரான். இளவரசியார் இரண்டாம் வகை; சூழ்ந்திருக்கும் ஆபத்துகளிலும் வெற்றிக்கான வாய்ப்பைத் தேடுபவர். அவரின் அணுக்கத் தோழியான இந்தப் பெண்ணும் அவர் வகைதான் போலும். அதனால்தான் ‘புலியூருக்குப் புறப்படு’ என்று மானியார் உத்தரவிட்டதும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனித்தே புறப்பட்டு வந்து, இதோ இப்போது ஏறக்குறைய உயிர் ஆபத்தில் இருக்கிறாள்!

சிவமகுடம்  - 19

ஒருபுறம் பொங்கியின் நிலை கண்டு உள்ளம் பரிதவித்தாலும், மறுபுறம் அவளின் வீரத்தை நினைத்து பெருமிதம் கொண்டான் நம்பி.

அவளைத் தேடி புலியூர் பாதையில் விரைந்த தருணத்தில், வழியில் வனப்பகுதியில் அவளுடைய புரவியைக் கண்டான். அது நின்றிருந்த இடத்துக்கு அருகிலிருந்து பிரிந்து சென்ற ஒற்றையடிப் பாதையில் சில காலடித் தடங்களையும் கவனித்தான். ஒருவேளை இந்த கானகத்துக்குள் பொங்கிக்கு ஏதேனும் ஆபத்து விளைந்திருக்கலாம் என்று உள்ளுணர்வு உணர்த்த, அந்தக் கால் தடங்களைத் தொடர்ந்து ஒற்றையடிப் பாதையிலேயே பயணித்தான். அங்ஙனம் அவன் வனத்தின் மையத்திடலை அடைவதற்குள் பெருமழை பிடித்துக்கொண்டது. வனத்தில் பொங்கியைக் காண்பதற்கான வேறு  எந்த அடையாளங்களையும் காண முடியாமல் அவன் ஏமாற்றத்துடன் திரும்பியபோது, வழியில் காட்டாறு குறுக்கிட்டது. முதலில் இவ்வழியே அவன் வரும்போது முழங்கால் அளவே நீர் ஓடிய ஆற்றில், திடுமென பெய்த பெரு மழையின் விளைவாக பெருவெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது.

வெள்ளத்தின் சீற்றம் அதிகம் இருந்தபடியால், புரவியோடு ஆற்றில் இறங்க முடியாது என்று தீர்மானித்தவன், புரவியில் இருந்து கீழே குதித்து, அதை கடிவாளத்துடன் சேர்த்துப் பிடித்தபடி வெகு கவனத்துடன் வெள்ள நீரில் கால்பதிக்கவும், ஏதோவொன்று நீரின் வேகத்தில் பாய்ந்து வந்து அவன் கால்களில் மோதவும் சரியாக இருந்தது. தன் காலில் மோதியது மனித உடல் என்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. நீரின் இழுப்பு அதிகமாக இருந்ததால், அடுத்த கணமே அவன் கால் ஏற்படுத்திய தடையில் இருந்து விலகி அந்த தேகம் நகர ஆரம்பித்த நிலையில், சட்டென்று மின்னல் பளிச்சிட, அந்த வெளிச்சத்தில், நீரில் மிதந்து செல்லும் தேகத்தின் முகத்தைக் கண்டவன் பெரிதாக அதிர்ந்தான். அவன் யாரைத் தேடி வந்தானோ, அந்த பொங்கிதான் நீரில் மிதந்து சென்றாள்.

சற்றும் தாமதிக்காது நீரில் பாய்ந்து, கடும் பிரயத்தனத்துடன் அவளை இழுத்து வந்து கரைசேர்த்தான் நம்பி. அத்துடன், தனக்குத் தெரிந்த சிகிச்சைகளைக் கையாண்டு ஓரளவு அவளின் மயக்க நிலையை தெளிவித்தான் என்றாலும், முழுமையான இயல்பு நிலைக்கு அவளைத் திருப்ப இயலவில்லை. அடுத்து அவன் எடுத்த முடிவுதான்   அவர்கள் இருவருக்குமே வினையாகிப் போனது!
காரிருளில் வனத்தில் வழித்தடம் அறிந்து வெளியேறுவது கடினம் என்று முடிவு செய்தவன், பொங்கியை தனது புரவியில் ஏற்றிக்கொண்டு ஆற்றின் கரையோரமாகவே நடக்கத் துவங்கினான். சிறிது தூரத்திலேயே, ஆற்றின் கரையோரம் சிறு படகு ஒன்று விருட்சத்தில் பிணைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு குதூகலம் அடைந்தான்.

இப்போதுள்ள நிலையில் தரையில் பயணிப்பதை விட நீரில் பயணிப்பது எளிதென எண்ணினான். ஆற்று வெள்ளத்தில் படகில் இறங்கினால், அதன் வேகம் தான் சேர நினைக்கும் இடத்துக்கு எளிதில் கொண்டு சேர்த்துவிடும் என்பது அவன் திட்டம். ஆனால், தொடர்ந்து பெய்த பெருமழையும், ஆங்காங்கே காட்டாற்றின் சுழல்களும் அவனைப் பெரிதும் அலைக்கழித்துவிட்டன!
ஒருவழியாக அவை எல்லாவற்றையும் சமாளித்துவிட்டான் என்றாலும், இந்த இருளில் இன்னும் என்னென்ன ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ எனும் கவலை மேலோங்க படகைச் செலுத்திக்கொண்டிருந்தவனின் கவனத்தை திசை திருப்பியது, பொங்கியின் உடல் அசைவு! உடலைக் குறுக்கி வலப்புறமாக படுத்துக்கிடந்தவள் சற்றே நிமிர்ந்து படுத்தாள். ‘ஹூம்ம்ம்...’ என்று விநோதமாய் பெருமூச்சொன் றும் வெளிப்பட்டது அவளிடம். தொடர்ந்து ஒரு குலுங்கு குலுங்கியது அவளின் தேகம்.

‘குளிர்ச்சுரம் கண்டுவிட்டதோ என்னவோ’ - நம்பியின் கவலை  இன்னும் அதிகரிக்க, பதற்றத்துடன் சேரவேண்டிய இடம் வந்துவிட்டதா என்பதை அறியும் முனைப்புடன் இருபுறமும் நோக்கி கரைகளைக் கவனித்தான். அது அவன் எதிர்பார்த்த இடம் இல்லை என்றாலும், சற்று தூரத்தில் தெரிந்த விளக்கொளி, அவன் மனதில் பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் விதைத்தது. விளக்கொளி வரும் இடம் ஏதேனும் குடிசையாக இருக்கலாம். அங்கு சென்றால் உதவி கிடைக்கும் எனும் எண்ணத்தோடு வேகவேகமாய் படகைச் செலுத்தி அந்த இடத்தை நெருங்கினான்.
அங்கேயோ, உதவிக்குப் பதில் சில மனிதர்களின் உருவில் பேராபத்து காத்திருந்தது அவர்களுக்கு!

அந்த மனிதர்கள் மட்டும் அங்கே வராமல் இருந் திருந்தால், சரித்திரம் வேறுவிதமாக மாறியிருக்கும்.

* ‘புரிசை மாமதிற் புலியூர் அப்பகல் நாழிகை யிறவாமல் கோழியுள் வென்றுகொண்டும்...’ என்றெல்லாம், பிற்காலத்தில் பட்டயக் குறிப்புகள் கூன்பாண்டியனைப் போற்றிப் புகழ்வதற்கு ஒரு வாய்ப்பும் கிட்டியிருக்காது!

இங்கு நிலைமை இப்படியிருக்க, சோழத்தின் எல்லைப்புறமோ... ஆதவன் தன் உடற்பாகங்களை உதிர்த்ததுபோன்று பரவிக்கிடந்த தீக்கனல்களால் தகித்துக் கொண்டிருந்தது, பாண்டியரின் எரியூட்டலில்!

- மகுடம் சூடுவோம்...