Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்

பேசாதே... பேசாதே!யுவா, ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம்

பேசாதே... பேசாதே!யுவா, ஓவியம்: மகேஸ்

Published:Updated:
கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம்
கலகல கடைசி பக்கம்

“அம்மா, ரக்‌ஷிதா போன் பண்ணினா நான் இல்லேன்னு சொல்லிடு!” - பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாக, அம்மாவிடம் சொல்லிக்கொண்டே அறைக்குள் சென்றாள் சுரேகா.
“ஏன்? என்ன ஆச்சு?” எனக் கேட்டபடியே பின்தொடர்ந்தாள் அம்மா.

“இன்னிக்கு என்னை ரொம்பவே கிண்டல் பண்ணிட்டா அவ. இனிமே அவளோடு பேசறதாயில்லை!”

சுரேகா ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளது நெருங்கிய தோழிதான் ரக்‌ஷிதா. கலகலப்பாகப் பேசுவாள். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என யாரையும் விட்டுவைக்காமல் ஜாலியாகக் கேலி செய்வாள். பள்ளியிலும் அப்படித்தான் என்று சுரேகா சொல்லியிருக்கிறாள். இன்று இவளே சிக்கிவிட்டாள்போல.

செல்போன் ஒலிக்க, எடுத்துப் பேசினாள் அம்மா. சில நிமிடங்களில் ஹாலுக்கு வந்த சுரேகா, “யாரும்மா... அந்த ரக்‌ஷிதாதானே?” எனக் கேட்டாள்.

“இல்லடி, என் ஃப்ரெண்ட். அதிருக்கட்டும், ரக்‌ஷிதா உன்னைக் கேட்டால் என்ன சொல்றது?”

“ஒன்பது மணிக்குள்ளே கேட்டால், பக்கத்துல கடைக்குப் போயிருக்கிறதா சொல்லு. ஒன்பது மணிக்கு மேலே கேட்டால், தூங்கிட்டதா சொல்லிடு!”

“அடேங்கப்பா... உங்க சண்டையினாலே நான் இத்தனை பொய்களைச் சொல்லணுமா?”

“சொன்னா என்னவாம்... அப்பாகிட்டே எவ்வளவு பொய் சொல்றே!” எனக் கிண்டலாகச் சொல்லிவிட்டுப் படிக்கப் போய்விட்டாள் சுரேகா. அதன்பின், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, “போன் வந்துச்சாம்மா?” எனக் கேட்டுக்கொண்டிருந்தாள். இரவு சாப்பிட்டுவிட்டுப் படுத்ததும், “பார்த்தியாம்மா, போன் பண்ணி ஒரு ஸாரிகூட கேட்கலை, அவ!” என்று பொருமினாள்.

“இப்ப நீ என்னதான் சொல்ல வரே? அவ போன் பண்ணியிருக்கணும்கிறியா? அப்படிப் போன் பண்ணியி ருந்தாலும் நீதான் பேசியிருக்க மாட்டியே?” என்று அம்மா சிரிக்க, “போம்மா” எனக் கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள் சுரேகா. காலையில் பள்ளிக்குத் தயாராகி, சாப்பிட அமரும்போது, வாசல் மணி ஒலித்தது. “சுரேகா, யாருன்னு போய்ப் பாரு” என்றாள் அம்மா.

கதவைத் திறந்தால், ஒரு கையில் டிபன் பாக்ஸும், இன்னொரு கையில் ரோஜாப்பூவுமாக உள்ளே நுழைந்தாள் ரக்‌ஷிதா. “ஹாய் சுரேகா, உனக்கு ரொம்பவும் பிடிச்ச ரோஜாப்பூவும், பூரி ப்ளஸ் வேர்க்கடலைச் சட்னியும் கொண்டு வந்திருக்கேன்” என்று இரண்டையும் சுரேகாவிடம் நீட்டினாள்.

சுரேகா தலையைத் திருப்பிக்கொண்டு பேசாமல் இருக்க, அருகில் வந்தாள் அம்மா. “சுரேகா, நேத்து வந்த போன் கால் என் ஃப்ரெண்டோடது இல்லை. ரக்‌ஷிதாதான் பண்ணினா! ‘ஆன்ட்டி, சுரேகாவுக்கு என்மேல பயங்கர கோபம். நான் பேசறேன்னு சொன்னாக்கூட அவ என் போன் காலை அட்டெண்ட் பண்ண மாட்டா. அதனால, நாளைக் காலையில நானே நேரில் வந்து ஸாரி சொல்லி, அவளை கூல் பண்றேன்’னு சொன்னா. இதோ பார் சுரேகா, நமக்கு யார் மேலே அன்பு அதிகம் இருக்கோ, அவங்களைத்தான் உரிமையா கிண்டல் பண்ணுவோம்; நேத்து நீ என்னை கிண்டல் பண்ணலையா, அது மாதிரி! ரக்‌ஷிதா அன்போடு கொடுக்கிறதை வாங்கிக்கோ!” என்றார் அம்மா.

ரக்‌ஷிதாவைப் பொய்யாக முறைத்த சுரேகா, “சரி, காலை டிபனுக்கு இந்த பூரியை நான் எடுத்துக்கறேன். நேத்து என்னை நீ கிண்டல் பண்ணினதுக்கு தண்டனையா, என் அம்மா செஞ்சிருக்கிற உப்புமாவை நீ தின்னுத்தான் ஆகணும்!” என்று வம்படியாக அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளுக்கு இழுத்துச் சென்றாள்.

“அடிக் கழுதை! பாரேன் இவளை... நான் பண்ணின உப்புமாவைத் திங்கிறது தண்டனையாமில்லே?” என்று அம்மா முறைக்க, மூவருமே சேர்ந்து சிரித்தார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism