Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

Published:Updated:
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29

47 - அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே?

குகன் இராமன் முகத்தைப் பார்க்கிறான். மண்ணாள வேண்டிய அண்ணல் தனது குடிலில் தர்ப்பைப் பாயில் பிராட்டியுடன் படுத்துக் கிடந்ததைக் காண நேரிட்ட துக்கம் குகன் முகத்தில் தெரிகிறது.
“ என்ன வேண்டும்?“ என்கிறான் இராமன்.

“ நல்ல தேன் இருக்கிறது. திணை மாவு இருக்கிறது. தேவர்களும் விரும்பும் நல்ல கறியுணவு உள்ளது. உங்களுக்கு அடிமைத் தொண்டு செய்ய நாய் போல நாங்கள் இருக்கிறோம். வேறு என்ன வேண்டும்? விளையாட கானும், புனலாட கங்கையும் உள்ளன என் உயிர் உள்ளவரையில், எங்களுடன் இங்கேயே இருங்கள் அண்ணலே" என்கிறான்.

“ நெடுங்காலம் நான் கானகத்தில் அவதியுறுவேன் என்று கவலைப்படுகிறாயா குகா? வெறும் பதின்நான்கு வருடங்கள்தான். எங்களை கங்கையின் தென்கரையில் கொண்டு சேர்ப்பாய். நாங்கள் அங்கிருக்கும் கானகத்தில் முனிவர்களுடன் ஒரு புனிதவாழ்வை மேற்கொண்டு விரைவில் வந்து விடுகிறோம். நீ ஓடத்தைக் கொண்டு வா” என்கிறான்.

குஹன் மறுப்பேதும் சொல்லாமல் ஸ்ரீராமனையும் மற்ற இருவரையும் நாவாயில் ஏற்றி அக்கரையில் கொண்டு விடுகிறான்.

அப்போதும் குகனுக்கு ஆறவில்லை. உடன் துணைக்கு வருவதாகக் கூறுகிறான். அவன் அப்படி கூறியதால்தான் கம்பரிடமிருந்து மிக அருமையான செய்யுள் ஒன்று பிறக்கின்றது.

துன்பு உளது எனின் அன்றே சுகம் உளது ; அது அன்றிப்
பின்பு உளது இடைமன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளேம்ஒரு நால்வோம், முடிவு உளது என உன்னா
அன்புஉள இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்.


தனது உடன்பிறப்பு குகன் என்று ஸ்ரீராமன் வாயினால் சொல்ல கேட்கும் பாக்கியம் முதலில் குகனுக்கு அல்லவோ கிடைத்தது?

ஓடத்தில் ஸ்ரீராமனை அக்கரைக்கு ஏற்றி விட்டு அப்படி ஒரு ஏற்றம் பெற்ற குகனைப் போல எங்கள் வைத்தநிதிப்பெருமானுக்கு நான் எதுவும் செய்யவில்லையே? எனவே நான் திருக்கோளூரை விட்டுக் கிளம்பிச் செல்கிறேன் என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

48-அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே?

பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்கள் நடுவில் தவ வாழ்க்கையை மேற்கொள்ளும் ஸ்ரீராமன் அதன் பின்னர் அகத்தியரின் குடிலை நோக்கி பயணிக்கிறான். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தன் பயணத்தைத் தொடரும் நேரத்தில் ஜடாயுவை சந்திக்கிறான். ஜடாயு தசரதனின் நண்பன். எனவே வயதில் மூத்தவர். கம்பர் ஜடாயுவின் கல்வி அறிவையும் துணிவையும், நேர்மையையும் தனது சொற்களால் விளக்குகிறார்.

தூய்மையன் இருங்கலை தணிந்த கேள்வியன்
வாய்மையின் மறுஇலன் மதியின் கூர்மையன்.


ஜடாயு தன் வரலாற்றைக் கூறுகிறார். தான் அருணனின் புதல்வன் என்றும், கழுகுகளுக்கெல்லாம் அரசன் என்றும், சம்பாதியின் தம்பி போன்ற தகவல்களைக் கூறுகிறார்.

ஜடாயு சீதையைப் பார்த்து யார் என்று வினவ இருவருக்கும் இடையில் ஒரு அறிமுகப்படலத்தை மிக நுணுக்கமாக கம்பர் நிகழ்த்தி விடுகிறார்.

முதல் சந்திப்பின் முடிவில் கம்பர் அழகாக ஒரு காட்சியை நமக்கு சித்திரம் தீட்டிக் காட்டுகிறார்.

“ *******************அவர் திண்சிறை
விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்”


அதாவது அண்ணலும் மற்ற இருவரும் காட்டில் வெயிலில் நடந்து செல்லும்போது தனது பெரிய சிறகுகளை விரித்து குடை போல சென்றதாகக் கம்பர் கூறுகிறார்.

ஜடாயு மீண்டும் வருவது சீதையை இராவணன் பர்ணசாலையுடன் தூக்கி செல்லும்போது. மேரு எனும் பொன்குன்றம் வானின் வருவதே போன்றும் என்பான் கம்பன்.

வாக்குவாதம், சண்டை என இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். ‘அவன் தோள் வலி சொல்லவல்லார் யார் உளார் ?’ என்று கம்பரே வியக்கும் அளவுக்கு ஆரம்பத்தில் சடாயு போரிடுகிறார். இறுதியில் இராவணன் தனது வாளால் ஜடாயுவை வெட்டி வீழ்த்துகின்றான். ஜடாயு இராம இலக்குவண் வருகைக்காக குற்றுயிரும் குளயுயிருமாகக் கிடக்கிறார். சீதையை தொலைத்த இருவரும் ஜடாயுவைக் கண்டு வருந்துகின்றனர். இராவணன் கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு ஜடாயு உயிர் மூச்சை விடுகிறார்.

**************************************
அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க
ஊட்டிய நல்நீர் அய்யன் உண்டநீர் ஒத்தது அன்றே.


ஜடாயுவிற்கு நீர்க்கடன் செய்து ஸ்ரீராமன் உண்ட நீர் இந்த உலகத்து உயிர்களுக்கு ஊட்டியது போல் இருந்ததாம். இவ்வாறு கம்பர் சொல்கிறார். இதைவிட ஜடாயுவிற்கு வேறு பாக்கியம் வேண்டுமா என்ன?

அப்படிப்பட்ட ஜடாயுவைப் போல திருக்கோளூர் திவ்யதேசத்து பிராட்டிக்கு நான் எந்தக் கைங்கரியமும் செய்யவில்லையே பின் எதற்காக இந்த திருக்கோளூரில் இருக்க வேண்டும்? என்று  அந்தப் பெண்பிள்ளை கிளம்புகிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!