Published:Updated:

குரு பலம் அருளும் திருலோக்கி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குரு பலம் அருளும் திருலோக்கி
குரு பலம் அருளும் திருலோக்கி

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

பிரீமியம் ஸ்டோரி
குரு பலம் அருளும் திருலோக்கி

‘ஏமம்’ என்ற சொல்லுக்கு ‘பொன்’ என்றொரு பொருளும் உண்டு. நவகிரகங்களில் ‘குருபகவான்’ என்றழைக்கப்படும். ‘பிரஹஸ்பதிக்கு’ பொன்னவன் என்று பெயர். அப்படி குரு வழிபட்டு அருள் பெற்றதால் அவ்வூருக்கு ‘ஏமநல்லூர்’ என்ற பெயர் உண்டாயிற்று.

காவிரியின் வடகரையில் அமைந்த இந்த ஏமநல்லூரில் அருளாட்சி புரியும் சுந்தரேசப் பெருமானது லிங்கத் திருமேனிக்கு குருபகவான் விசேஷமாக வழிபாடு செய்தார். பசுநெய்யால் விளக்கேற்றினார். கொன்றை மாலை அணிவித்து முல்லைப்பூவால் அர்ச்சனை செய்தார்.

தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார். அவரது அன்பான பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அனுக்கிரஹம் செய்தார். “ப்ரஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குருபலம்’ பெற்று இனிய இல்லறம் அமைய உமது பலம் பெருகட்டும்” என்று அருள்புரிந்தார். குரு இப்படி சுந்தரேச் வரப் பெருமானிடம் அனுக்கிரஹம் பெற்ற இனிய நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். குருபகவான் சிவனருளால் ‘குருபலம்’ பெற்ற அற்புதமான திருத்தலமே ஏமநல்லூர்.

குரு பலம் அருளும் திருலோக்கி
குரு பலம் அருளும் திருலோக்கி

அப்பர் தமது திருத்தாண்டகப் பாடலில் இத்தலத்தை வைப்புத்தலமாகப் போற்றுவார். இன்று இத்தலத்தின் பெயர் ‘திருலோக்கி’ என்பதாகும். தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனது அருமை மகன் கங்கை கொண்ட சோழனாகிய ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றில் இத்தலம் ‘இராஜேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கி மாதேவி சதுர்வேதிமங்கலம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ராஜராஜ சோழனது பட்டத்து அரசிகளில் ஒருத்தி ‘திரைலோக்கிய மாதேவி’ என்ற பெயர் உடையவள். அவளது பெயரில் வேதம் பயில வல்லார்க்கு ராஜேந்திர சோழன் இவ்வூரைத் தானமாக வழங்கினான்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கிலோ மீட்டரில் திருலோக்கி அமைந்துள்ளது. சூரியனார் கோயில், துகிலி வழியாகவும் இத்தலத்தை அடையலாம். இங்குள்ள அகிலாண்டேச்வரி சமேத சுந்தரேச்வரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேச்வர வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதி! சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. ஆனால், இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிப்பது அவர் பெற்ற பேரானந்தத்தின் விளைவுதானே! இது மட்டுமா! இந்தப் பீடத்தின் பின்புறம் சிவலிங்க வடிவைக் காணும் போது நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. குரு சிவலிங்க வடிவை பூஜை செய்ததன் பலனாக, பெருமான் அதிலிருந்து ரிஷபவாகனத்தில் உமா மகேச்வரராகத் தோன்றி அம்பிகையை ஆலிங்கனம் செய்த அழகு வடிவில் காட்சி கொடுத்தான் என்பதைக் கண்டு மெய்சிலிர்க்கிறோம். குரு பூஜித்து பேறு பெற்று குருபலம் அருளும் ஒப்பற்ற தலம் திருலோக்கி மட்டுமே என்பதில் ஐயம் உண்டோ?

குரு பலம் அருளும் திருலோக்கி

இந்த தெய்விக வடிவைக் கண்டு இன்புற்ற கருவூர்த்தேவர் சுந்தரன் சுந்தரியுடன் விளங்கும் திரைலோக்கிய சுந்தரனை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவில் பாடி மகிழ்கிறார். இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று நல்லறங்கள் பல புரிந்து  இன்புறுவர் என்று கருவூர்த்தேவர் இப் பதிகத்தில் போற்றுகிறார். இவரது திருவுருவத்தை இக்கோயிலின் வெளிமண்டபத்தூணில் கண்டு இன்புற முடிகிறது.

குருபகவான் காட்சிபெற்ற உமாமகேச்வரருக்கு எதிரில் ஓர் அழகு தம்பதி எழிலுடன் நிற்கின்றனர். அவர்கள் வேறு யாருமல்ல! ரதி - மன்மதன் இருவருமே! அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். திருவாசி(பிரபை)யுடன் ஐந்தடி உயரத்தில் மிருதுவான கல்லில் நேர்த்தியாக வடிக்கப்பட்ட தெய்விக காதலர் சிலை ஹொய்சாலர் காலத்து கலைக்கருவூலம். பேலூர், ஹளபேடு கோயில்களை இது நினைவுபடுத்துகிறது.

குரு பலம் அருளும் திருலோக்கி

மூலஸ்தானத்தில் சுந்தரேச்வர பெருமானை தரிசித்து வெளிமண்டபத்தில் அகிலாண்டேச்வரி அம்பிகையை வழிபட்டு வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான், விச்வநாதர், பைரவர், சண்டிகேச்வரரையும் வணங்கி மகிழலாம். தலவரலாற்றுப்படி பிருகு முனிவர் வழிபட்டதும், தருமன் என்பவனது ஊமைத் தன்மை நீங்கப்பெற்ற பெருமையுடையுமான இத்திருக்கோயில் கணித சக்ரவர்த்தியால் கட்டப் பெற்ற பெருமையுடையது.

கருவூரார் அறக்கட்டளையின் பெரும் முயற்சியாலும் தி.மு. ராஜமாணிக்கம் என்னும் உள்ளூர் அன்பரின் பேரார்வத்தாலும் ஒத்துழைப்பாலும் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பெற்று சென்ற ஆண்டு 26.10.2015 அன்று மகாகும்பாபிஷேகம் நிறைவு பெற்றுள்ளது. வருகிற ஆடி 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை 2.8.16 அன்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருலோக்கியில் குருப்ரீதிஹோமம், விசேஷ அபிஷேகம் அலங்காரத்துடன் சிறப்பு அர்ச்சனையும் வழிபாடும் நடைபெற உள்ளது. இதனை திருப்பூர் குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

குரு பலம் அருளும் திருலோக்கி

குருபலம் பூரணமாக அமைய கல்யாணத்துக்குக் காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் அன்றைய தினம் திருலோக்கி தலத்துக்கு வந்து, உமாமகேச்வரப் பெருமானையும், குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையப் பெற்று இன்பமடையலாம். திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்களும் தரிசித்து தீர்வு பெறலாம்.

குரு பகவான் வழிபட்டு அருள்பெற்ற திருலோக்கி திருக்கோயிலில் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி ஹோமம் மற்றும் பூஜைகளில் சக்தி விகடன் வாசகர்களுக்காகவும் சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப இருக்கிறோம். விரும்பும் அன்பர்கள் கீழே உள்ள இமேஜ் லிங்க்கை க்ளிக் செய்து குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை பிரார்த்தனை கூப்பனை பூர்த்தி செய்யவும். கட்டணம் எதுவும் கிடையாது.

 படத்தை க்ளிக் செய்யவும்

குரு பலம் அருளும் திருலோக்கி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு