Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

க்னத்துக்கு (பிறந்தவேளை) உடையவன் கேந்திரத்தில் (1, 4, 7, 10 ஆகிய வீடுகளில்) இருக்கவேண்டும் அல்லது த்ரிகோணத்தில் (1, 5, 9 ஆகிய வீடுகளில்) இருக்கவேண்டும். லக்னாதிபதிக்கு அங்கு 1, 4, 5, 7, 9, 10 வீடுகளில் உச்சம், ஸ்வக்ஷேத்ரம் போன்ற தகுதியும் கிடைத்திருக்க வேண்டும். அதேவேளையில் 8-க்கு உடையவன், கேந்திரத்தில் (1, 4, 7, 10 வீடுகளில்) இல்லாமல் இருக்கவேண்டும். 

இப்படியான அமைப்பு ஜாதகத்தின் தென்பட்டால், அவன் நீண்ட ஆயுள், பொருளாதாரத்தில் நிறைவு, புகழ், சமுதாய அங்கீகாரம், அழகான உடலமைப்பு, திடமான உடல் வலிமை, பயப்படாத மனம். ஈவு - இரக்கம் உடைய இயல்பு, பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்க்கும் நற்குணங்கள் ஆகிய அனைத்தையும் பெற்று, பிறர் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குவான் என்கிறது ஜோதிடம். இங்கு வீட்டுக்கு உடையவனின் இருக்கும் இடம், அவனது பலம், சுப கிரகங் களின் ஒத்துழைப்பு, விபரீத கிரகங்களின் இடையூறு இல்லாமை ஆகிய அத்தனையும் ஒன்றுசேரும்போது, அவனது பெருமை நடைமுறையில் பலனளிக்கும்.

அறுசுவை உணவு தரமாக இருக்க வேண்டும்.

அதை உட்கொள்பவனின் உடல் ஆரோக் கியமும், உள்ளத் தூய்மையும், ஆர்வமும், அறுசுவையை அனுபவிக்கும் பாங்கும் இருந்தால் மட்டுமே, அறுசுவையை சுவைத்த அனுபவத்தை அவனால் உணர இயலும்.இளமைக்கு உகந்த துடிப்பும், எண்ணங்களை உகந்த முறையில் சுவைக்கும் திறனும், மனைவியின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே தாம்பத்தியம் இனிக்கும். சுவைப்பவன், சுவை - இந்த இரண்டும் அதற்கு உகந்த தகுதியில் பலன் உண்டு. இரண்டில் ஒன்று எதிரிடையானால் பலன் இருக்காது. அந்த இரண்டும் ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் பலனை இறுதி செய்யும். மகிழ்ச்சியை உணர நாம் மற்றொன்றுடன் இணையவேண்டும்.

தனிமனிதனுக்கு சுக உணர்வு தென்படாது (ஏதாகீஹரமாத). உணர்பவன் அவன்தான். உணரவேண்டிய பொருளின் இணைப்பில் அவன் அதை உணர்வான். அவனுக்கு உணரும் தகுதி வேண்டும். அவனோடு இணைந்த பொருளுக்கும் உணர்வை ஊட்டும் தகுதியிருக்க வேண்டும். அப்போதுதான் அவனிடம் உணர்வு உருவாகும்.

ஆன்மிகவாதிகள் தனிமை இன்பமளிக்கும் என்று கூறுவார்கள். உலகவியலில் ஈடுபட்ட வனுக்கு தனிமை துயரத்தை அளிக்கும். முற்றும் துறந்த துறவி சிந்தனையில் உயர்ந்து, உப்புசப்பு இல்லாத உலகவியலை உதறித்தள்ளி, அறிவு முதிர்ச்சியில் ஒன்றும் அறியாத அப்பாவி பாமரர்களுக்கு, அதுவும் உலகவியலில் ஊறிய வனுக்கு தனது அனுபவத்தைப் பகிந்தளிப் பான். பாமரனுக்கு ஒன்றும் விளங்காது. ‘தனிமை உனக்குப் பேரின்பத்தை அளிக்கும்’ என்று விளக்குவார்கள். அந்த விளக்கம் அவனுக்குப் பிடிக்காது; கசக்கும். நாம் இயற்கைச் செல்வங்களைச் சுவைத்து மகிழ்ந்து வாழப் பிறந்திருக்கிறோம். அதற்கு உகந்த நல்லுரைதான் வேண்டும். பிறந்தவுடனேயே பற்றற்று ஆன்மிகத்தில் இணைவதைவிட பிறக்காது இருப்பது மேல். பற்றைவிடுவதும் ஆன்மிகத்தில் நுழைவதும்தான் பிறப்பின் பயன் என்றால், இயற்கை தந்த வளங்கள் அத்தனையும் வீணாகிவிடும். ஆண் - பெண் என்கிற மாறுபட்ட படைப்பும் வீணாகும். இயற்கை வளங்களை உண்டு மகிழ்ந்து, பலரோடு இணைந்து இன்பத்தைச் சுவைத்து திருப்தி ஏற்பட்டு, ‘இனி சுவைப்பதற்கு ஒன்றும் இல்லை’ என்று தெளிவுபெற்று, பற்றை விட்டு விலகி ஆன்மிகம் ஏற்பதுதான் சிறப்பு.

ஆன்மிகவாதிகளுக்கு ஜோதிடம் உதவாது. ஆன்மிகம் ஜோதிடத்துக்கு எதிரிடையாக விளங்கும். உலகவியலில் சுவைத்து மகிழ ஜோதிடம் தேவை. உபதேசத்தில் வருவதல்ல ஆன்மிகம்; சிறந்த சிந்தனையில் உண்டாகும் உணர்வு அது. பிறப்பின் லட்சியம் என்பது மிகைப்படுத்திக் கூறும் சொல். இன்றைய ஆன்மிகவாதிகள் பலரும் பெரும்பாலும் உலகவியலுடன் இணைந்துதான் வாழ்க்கையை நடத்துகிறார்கள். நம்மோடு ஒருவராகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டை விட்டு காட்டில் ஒதுங்கி வாழ்வதில்லை. நம்மைப் போல் விஞ்ஞான சுகபோகங்கள் அவர்களுக்கும் உண்டு. அவர்களும் ஜோதிடம் சொல்கிறார்கள், குறி சொல்கிறார்கள், நமது உலகவியல் தேவைகளை அடைய வழிகாட்டுகிறார்கள். ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

பண்டைய ஆன்மிகவாதிகள் ஆச்சரியங்களை யும் அதிசயங்களையும் நிகழ்த்தி பெருமைப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். அவை அத்தனையும் பொய்யான விளக்கங்கள் என்று நமக்கு உணர்த்து வார்கள். அவர்கள் சொல்லும் விளக்கங்களை உள்ளது உள்ளபடியே வாங்கும் திறமை நம்மில் வளர்ந்த பிறகு, அவர்களை அணுகினால் பலன் உண்டு. தற்காலச் சூழல் அவர்களை எட்டாதூரத்தில் வைத்திருக்கிறது. நம்மிடமும் அவர்களை நெருங்கும் அளவுக்கு சிந்தனை வளம் பெருகவில்லை. காலதேசவர்த்தமானங்களைக் கண்ணுற்று, உலகவியலை அளவோடு சுவைத்து, சுக வாழ்க்கையைப் பெற்று, கடைசியில் சிந்தனை வளத்தால் உயர்வை எட்ட ஜோதிடம் உதவும்.

மனதைக் கட்டுப்படுத்தவும், அதேநேரம் வாழ்க்கையில் இன்னலை அகற்றி மகிழ்ச்சியை எட்டவும் ஜோதிடம் உதவும். சுவையை கசப்பாக உணரும் வேளையில், ஆன்மிகத்தில் நுழைவது சிறந்தது. பாங்காகப் பழுத்தால்தான் பழம் இனிக்கும். பழுக்க வைத்தால் பழம் இனிக்காது. உலகவியலிலும் ஆன்மிகத்திலும் இணையும் வேளையையும், அவை இரண்டையும் நன்கு உணரும் திறனையும் ஜோதிடம் நமக்கு ஊட்டும். பண்டைய ஆன்மிகப் பழமைவாதி கள் பெண்ணினம் ஆன்மிகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், பண்டைய ஜோதிடம் பெண்ணினமும் ஆன்மிக அறிவில் தலைசிறந்தவர்களாக விளங்குவார்கள் (ப்ரம்ம வாதின்யபி) என்று சொல்லும்.

சேர்ந்து வாழ்ந்து சிறப்புற்று விளங்கவைக்கும் ஜோதிடம். பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் ஆன்மிகவாதியாகவும் இருந்தார்கள், உலகவிய லிலும் ஈடுபட்டார்கள். மனைவியோடு கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தார்கள். அரசர்களுக்கு அரசாட்சி சிறக்க வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்கள். அந்த முனிவர்கள் பரம்பரைதான் ஜோதிடத்தை அறிமுகம் செய்தது. பராசரரும், கர்கரும், ஜைமினியும் ஜோதிடக்கலையை வளர்த்து செழிப்புற்று விளங்கவைத்தார்கள். பிற்பாடு வந்த வராஹமிஹிரர் போன்ற மகான்கள் அவர் களது வழித்தடத்தில் முன்னேறி, ஜோதிடத்தை மெருகேற்றி அணையா விளக்காக மாற்றியிருக் கிறார்கள். சிந்தனை வளம் பெறாத சிலரது சலசலப்பால் ஜோதிடத்தை ஒன்றும் செய்ய இயலாது. ‘மூன்று உலகுக்கும் வெளிச்சம் வீசும் விளக்கு’ என்று ஜோதிடத்தை சுட்டிக்காட்டினார் வராஹமிஹிரர் (த்ரைலோக்ய தீபோ ரவி:).

விஞ்ஞான வழியில் ஜோதிடத்தை எளிய முறையில் செப்பனிட்டு, ஒரு நொடியில் கணினி வாயிலாக வெளியிடும் தகுதி இன்று தென்படு கிறது. ஆனால், அது ஜோதிடத்தின் வளர்ச்சியல்ல. அதன் தரத்தின் பாதுகாப்பும் அல்ல. வீக்கத்தை உடம்பின் வளர்ச்சியாக ஏற்கமுடியாது.

ஏறக்குறைய 5 நாழிகை இடைவெளியில், அதாவது 2 மணி நேரம் இடைவெளியில் பிறந்தவர்களுக்கு, ஒரே லக்னமாக இருக்க  இடம் உண்டு. ஒரு ராசிக்கு இருக்கும் 30 பாகைகளில், அந்த லக்னத்தில் பிறந்தவர்களுடைய வேளை மாறியிருக்கும். அந்த மாறுதலை அறிந்த பிறகுதான், லக்னத்தின் பாவத்தை இறுதி செய்த பிறகுதான், பலனுக்கு ஆதாரமான லக்னத்தை வெளியிட இயலும். பாவத்தை வைத்து பலன் சொல்ல வேண்டும். பாவ சந்தியில் இருக்கும் கிரகம் பலனளிக்காது என்று ஜோதிடம் கூறும் (பாவ ப்ரவ்ருத்தௌஹிபலப்ரவ்ருத்தி:... பாவ ஸந்தௌ விபலோ க்ரஹேத்த்ர:). லக்னத்தில் அதாவது ராசியில் தென்படும் முப்பது பாகைகளில், பாகை மாற்றங்களோடு ஆயிரக்கணக்கானவர்கள் பிறந்திருப்பார்கள். ஒரே பாகையில் பிறந்தவர்களும் நிறைய இருப்பார்கள், மாறுபட்ட பாகையில் பிறந்தவர்களும் போதுமான அளவு இருப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தவர்களுக்கு, பாகையைக் கவனித்து, பாவத்தைக் கணித்து லக்னத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பார்வைக்கு ஒரே லக்னத்தில் பிறந்தவர்களாகக் காட்டினாலும், பாகைகளின் மாற்றத்தால் பாவம் மாறிவிடும். பாவம் அறிந்து பலனை இறுதி செய்யவேண்டும்.

லக்ன சந்தியில் அல்லது ராசி சந்தியில் கிரகம் இருந்தால், அது அளிக்கும் பலன் நல்லதானாலும் கெட்டதானாலும் நடைமுறைக்கு வராது. முன்னும் பின்னும் பதினைந்து-பதினைந்து பாகைகளோடு நடுப்பகுதியில் ஒருவன் பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 28-வது பாகையில் பிறந்தவனுக்கும், முதல் இரண்டு பாகையில் பிறந்தவனுக்கும் பாவம் ஒன்றாக இருக்காது. பலனும் மாறுபட்டு இருக்கும். ராசியில் அவன் தோன்றும் பாகைக்கு முன்னும்பின்னும் 15 பாகைகள் வரை லக்னம் வியாபித்து இருக்கும். அதில் முன்பின் ராசியின் பகுதியையும் எடுத்துக்கொண்டு லக்னம் மாறியிருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜூன் 30-ம் தேதி ஒருவன் வேலைக்கு அமர்ந்தான். ஜூன் 3-ம் தேதியே ஒருவன் வேலையில் சேர்ந்துவிட்டான். இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி இருவருக்கும் ஒரே அளவில் ஊதியம் வழங்க மாட்டார்கள். இருவரும் ஜூன் மாதத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தார்கள் என்பது உண்மையானாலும், ஊதியத்தில் மாறுபாடு இருக்கும். லக்னத்தில் 25 பாகைக்கு மேல் பிறந்தவர்களுக்கு, லக்ன பாவம் அதற்கு அடுத்த ராசியிலும் தென்படும். 3 பாகையில் பிறந்தவர் களுக்கு, முன் ராசியின் பகுதியும் லக்னத்தில் (பாவத்தில்) இணைந்துவிடும் லக்ன பாவத்தை வைத்து பார்க்கும்போது 4-ல் (கேந்திரம்). ஐந்திலும் இருப்பது உண்டு. சிலநேரம் மூன்றிலும் வரலாம். ஆகவே, நொடியில் வெளியிடும் பலன்களும் நம்பகத்தன்மை குறைய வாய்ப்பு உண்டு. ராசியையும் அம்சகத்தையும் கண்ணுற்று, லக்னம் விழுந்த பாகையை அதாவது பிறந்த வேளையை உறுதி செய்து, லக்னத்தின் பாவத்தை கணக்கிட்டு பலன் சொல்வதற்கு, ஒரு நொடி போதுமானதாக இருக்காது! அதே நேரம் பாவத்தை கவனிக்காமல் தோராயமாக வைத்து 10-ல் இருக்கும் கிரகத்தை 9-ல் இருப்பதாக வரையறுத்துச் சொல்வதும் ஜோதிடத்துக்கு இழுக்காகும்.

இங்கு லக்னாதிபதி சுயபலம் பெற்று கேந்திரம் அல்லது த்ரிகோணத்தில் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். பாவத்தை வைத்து கேந்திரத்தையும், த்ரிகோணத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். லக்னத்தை முழுமையாக வைத்து நிர்ணயம் செய்தால், பாவம் மாறியிருப்பதால் கேந்திரம் மாறி விடும். த்ரிகோணமும் மாற இடம் உண்டு. பாவப்படி லக்னத்தை நிர்ணயம் செய்த பிறகு, கேந்திரங்களையும் த்ரிகோணங்களையும் ஆராய வேண்டும். அதேபோல் 8-க்கு உடையவன் கேந்திரத்திலும் த்ரிகோணத்திலும் இருக்கக் கூடாது என்று சொல்லும். அங்கு 8-க்கு உடைய வனின் பாவத்தை நிர்ணயம் செய்து கேந்திரத்தில் அல்லது த்ரிகோணத்தில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் சுப கிரகங்களின் பார்வையில், பாவ நிர்ணயப்படி ஆராயவேண்டும். அப்போது பலன் சொல்வது எளிதாகிவிடும்.

தற்போது, கணினி பாவத்தைக் கணித்து உதவுகிறது. இருந்தாலும் ஆராய அவகாசம் இல்லாமல், ஒரு நொடியில் முடிவெடுத்துக் கூறுவது ஜோதிடத்தின் தரத்தை கொச்சைப் படுத்தும். பாமரர்களுக்கு அவரது விளக்கம் திருப்தி அளித்தாலும் ஜோதிடத்துக்கு அது பெருமையாகாது. லக்னாதிபதி செழிப்பாக இருந் தால் மட்டும் போதாது. அல்பாயுர்யோகம், மத்யாயுர்யோகம் ஆகியவை இருக்கக் கூடாது. கேமத்ருமம் போன்ற தரித்ர யோகங்கள் இருக்கக் கூடாது. தனாதிபதி பலமிழந்து இருப்பதும், ஐந்தாம் பாவாதிபதி பாப யோகத்தோடு இருப்ப தும் லக்னாதிபதி பலனை பாதித்துவிடும். அதை யும் கவனத்தில் வைத்து பலனை வெளியிட வேண்டும்.

அந்தந்த பாவாதிபதி அசுப கிரகமானாலும், அந்தந்த பாவத்துக்கு நன்மையைச் செய்வான் என்று இருப்பதால், அதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சுப கிரகத்தின் பார்வை மட்டும் போதாது. பலமிழந்த சுபகிரக பார்வை பலன் அளிக்காது. ஆகையால், கிரக அமைப்பில் உருவாகிய யோகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனாதிபதி பலமாக இருந்தால் மட்டுமே தனம் கிடைக்கும். கர்மாதிபதி பலமாக இருந்தால் புகழ் இருக்கும். அவன் அடைய வேண்டிய பலன்களை அளிக்கும் கிரகங்களையும் ஆராய வேண்டும். இப்படி ஆராய்ந்து பதில் கூற போதமான நேரம் வேண்டும். நொடிப்பொழுதில் மொத்தமும் மனதில் பளிச்சிடும் ஜோதிடன் இன்று வரை உருவாகவில்லை. அது கடவுளுக்கு மட்டும் இருக்கும். நாம் பெரும் முயற்சி எடுத்து நன்கு ஆராயந்துதான் சொல்லவேண்டும்.

(தொடரும்)