மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 20

சிவமகுடம்  - 20
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 20

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 20

பாண்டியர்  குடிசை!

நாளை நடக்கப்போவதை யார் அறிவார்? நாளை என்பது இருக்கட்டும்... அடுத்த கணம் என்ன நிகழும் என்பதையாவது இந்த மானுடர்களால் அனுமானிக்க முடியுமா? நிச்சயமாக முடியாதுதான்! ஆனாலும், அவர்கள் ஆடும் சதிராட்டங்கள்தான் எத்தனை? எல்லைகள் இல்லாத உலகில் ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு, அதைக் காக்க அவர்கள் நடத்தும் போராட்டங்கள்தான் எத்தனை எத்தனை? நிமிடப்பொழுதில் அழிந்துவிடும் தேகத்தை வைத்துக்கொண்டு, ஏதோ நித்தியத்துவம் பெற்றுவிட்டதைப் போல், இவர்கள் நடந்துகொள்ளும் விதம் கண்டு, அழுவதா சிரிப்பதா எனப் புரியாமல் குழம்பித் தவித்தது போலும் இயற்கை.

ஆகவேதான், நடுநிசியில் சோழதேசத்தின் அந்த வனப்பகுதியில் அழுகையின் வெளிப் பாடாய் பெருமழையைக் கொட்டி தீர்த்ததோடு, இடையிடையே பேரிடியாய் முழங்கி சிரிப்பாய் சிரிக்கவும் செய்து, ஒருவித விநோதச் சூழலை சிருஷ்டித்துவிட்டிருந்தது!

இயற்கையின் இந்த விநோத விளையாட்டின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்த காட்டாற் றில் சிக்கித்தவித்த அந்தப் படகு, வலு நிறைந்த நம்பியின் துடுப்பு விசையால், மெள்ள மெள்ள சிக்கல்கள் யாவற்றிலும் இருந்து ஒருவாறு விடுபட்டு, விளக்கொளி வந்த கரையை நோக்கி நீந்தத் துவங்கியது.

‘விளக்கொளி வரும் இடம் ஏதேனும் குடிசை யாக இருக்கலாம். அங்கு சென்றால் ஏதேனும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையுடன் கரை சேர்ந்த நம்பிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்! கரையில் இருந்து கூப்பிடும் தொலைவில் குடிசை இருக்கும் என்று கணித்திருந்தான் நம்பி. ஆனால் அவன் கணிப்பு பொய்த்துப்போனது.

விடாமல் தூறிக்கொண்டிருந்த மழையைப் பொருட்படுத்தாமல் படகைவிட்டு இறங்கி, இயன்றவரையிலும் ஆடையை இறுகப் பிழிந்து ஓரளவு ஈரத்தைக் களைந்தபிறகு, இடைக் கச்சையை சரிசெய்து இறுகக் கட்டிக் கொண்டவன், அதில் தனது பெரும் வாளையும் பிணைத்துக் கொண்டான். பின்னர் பொங்கியைத் தோளில் தூக்கிக்கொண்டவன், மீண்டும் ஒருமுறை ஒளி வந்த திசையைக் கவனித்தான். தண்ணீரில் படகில் வரும்போது எவ்வளவு தூரத்தில் ஒளி பளிச்சிட்டதோ, அதே அளவு தூரம் இப்போதும் இருப்பதாகப்பட்டது அவனுக்கு. ஆனாலும் அவன் மலைக்கவில்லை. விறுவிறுவென அந்த திசையை நோக்கி நடக்கத் துவங்கினான்.

தூறல் இப்போது மட்டுப்பட்டிருந்தது. மழை மேகங்கள் வானில் திட்டுத் திட்டாக விலகிச்செல்ல, வானில் ஆங்காங்கே சில தாரகைகள் தலை காட்டினாலும், அவையும் ஒளிமங்கியே திகழ்ந்தன.
எனினும், அந்த இரவுப்பொழுது முழுவதும் அவன் கண்கள் இருட்டுக்குப் பழகி விட்டிருந்த படியால், முன்னேறுவதில் தடங்கல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு.

வழியின் ஊடே ஆங்காங்கே குறுக்கிட்ட புதர்களையும், தாழ்ந்து கிடந்த விருட்சங்களின் கிளைகளையும் வாளால் வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்டு வேகத்தை துரிதப்படுத்தினான் நம்பி. நல்லவேளையாக பொங்கியின் உடல் நடுக்கமும் சற்றுக் குறைந்திருப்பதுபோல் தோன்றவே, அவன் மனதுக்குள் ஓரளவு நிம்மதியும் எழுந்தது. அதனால் உண்டான திருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மேலும் கீழுமாய் தலையசைத்தபடி நடந்துகொண்டிருந்தவன், சட்டென்று சூழலில் ஒரு வேறுபாட்டைக் கவனித்தான்.

சற்றுத் தொலைவில், குடிசை அமைந்திருந்த திசையில், விருட்சங்களில் இருந்து பட்சியினங்கள் சிறகடித்து சலனப்பட்டதையும், அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் விண்ணை நோக்கி மெல்லியதாக புகை எழுவதையும் கண்டான்.

‘எனில், குடிசைவாசி எவராக இருப்பினும் அவர் இப்போது குடிசைக்குள் அடங்காமல், வெளியே நடமாடுகிறார். அல்லது வேற்று நபர்கள் எவரோ அங்கே பிரவேசித்திருக்கிறார்கள். இல்லையென்றால், பட்சியினங்கள் இவ்வாறு சலனப்பட அவசியம் இல்லையே’ என்று யோசித்தான். நடையை இன்னும் வேகப்படுத்தி, அடுத்த அரை நாழிகைப் பொழுதுக்குள் குடிசை இருந்த இடத்தின் எல்லையை அடைந்தவனுக்கு, பட்சியினங்களைச் சலனப்படுத்திய காரணம் புலப்பட்டது. அந்தக் காரணக் காட்சியை அவன் கண்டதும் உறைந்துபோனான்!

குடிசைக்குள் பந்தம் ஒன்று வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருக்க, குடிசையின் வெளிப் புறத்திலும் புதிய வெளிச்சத்துக்காகவும், அங்கு பரவியிருந்த குளிரை அகற்றவும் நெருப்பு மூட்ட முனைந்துகொண்டிருந்தார்கள் வீரர்கள் நான்கு பேர். அவர்களைக் கண்டு வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி நம்பி உறைந்துபோய் நின்றுவிட்டான் என்றால், அதற்குக் காரணம் இருக்கவே செய்தது.

ஆம்! அவர்கள் மூட்டிவிட்டிருந்த நெருப்பின் வெளிச்சத்தில், அந்த வீரர்கள் அணிந்திருந்த கவசங்களில் பளபளத்த கயற் சின்னங்களே, அவனைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாண்டிய வீரர்கள் இந்த அடர்ந்த வனத்துக் குள் ஊடுறுவியது எப்படி, பகைவர்கள் இங்கு உறைகிறார்கள் எனில் அவர்களின் பாசறையா இந்தக் குடிசை, இதுபோன்று இன்னும் எத்தனைக் குடிசைகள்... இல்லையில்லை பகைவரின் பாசறைகள் இந்த வனத்தில் உள்ளன, எல்லையில் பகைவர்கள் சூழ்கிறார்கள் என்றால் அது வழக்கம்தான். ஆனால், உறையூர் கோட்டைக்குள்ளும் சோழ தேசத்துக்குள் இருக்கும் இந்த அடர்ந்த வனத்திலும் பகைவர்கள் வெகு சாதாரணமாக உலாவுகிறார்கள் என்றால், சோழதேசத்தின் கதிதான் என்ன?
 
அடுத்தடுத்து அவன் மனதில் எழுந்த கேள்விகள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்த அதேவேளையில், பகைவர்கள் பெரிதாய் சிரித்த சிரிப்பும், அவர்களில் ஒருவன் எழுந்து நின்று தன் கைகளில் இருந்த ஓர் ஓலையைச் சுட்டிக் காட்டியபடி ஏதோ சொல்லி கொக்கரிக்க, உடன் இருந்தவர்களும் பெரும் கூச்சலுடன் ஆரவாரித்ததும் நம்பியின்  கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அந்த ஓலையில் ஏதோ முக்கியச் செய்தி இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன், எப்படியேனும் அதைக் கைப்பற்றிவிடுவதென தீர்மானித்தான். அத்துடன், பொங்கி இருக்கும் நிலையில், அவளைக் குடிசைக்குள் கொண்டு செல்வது அவசியம் என்பதையும் உணர்ந்தான்.இவர்களை இங்கிருந்து விரட்டினால்தான் அது சாத்தியமாகும். அப்படி, விரட்டியடிப்பதுடன் அந்த ஓலையையும் கைப்பற்ற வேண்டும்.

தனியொருவனாக அவர்களை எதிர்ப்பது உசிதம் இல்லைதான் என்றாலும், வேறு வழி தெரியவில்லை நம்பிக்கு.

சிவமகுடம்  - 20

`என்ன செய்யலாம்?' என்று யோசித்தவாறு சுற்றுமுற்றும் நோட்டமிட்டவன், அருகில் இருந்த பெரிய ஆலவிருட்சத்தைக் கண்டான். அரவம் எழாதபடி மெள்ள நகர்ந்து, அந்த மரத்தின் அண்டை சென்று, அதன் அடியில் பொங்கியை பூப்போன்று கிடத்தினான். இப்போது அவள் தேகத்தில் குளிர் நடுக்கம் முற்றிலும் இல்லை. அவள் நிம்மதியாக உறங்குவதாகவேபட்டது அவனுக்கு. சற்று திருப்தியுடன் அந்த இடத்தில் இருந்து சற்றே அகன்று, அங்கே தரையில் கிடந்த சிறு கல்லொன்றை எடுத்து, எதிர் திசை நோக்கி  வீசியெறிந்தான். அந்தக் கல்லானது ஏதோ விருட்சத்தின் இலைதழைகளில் பட்டு சலனத்தை ஏற்படுத்த, அங்கிருந்த பட்சியினங்கள் விழித்துக் கொண்டு, ஒருவித பயத்துடன் ஒலியெழுப்பின!

இப்படியான விளைவுகள் பகைவரின் கவனத் தையும் ஈர்த்திருக்கவேண்டும். அவர்களில் இருவர்  சட்டென்று ஆயுதங்களுடன் எழுந்து, குறிப்பிட்ட விருட்சத்தை நோக்கி ஓடினர். தனது திட்டம் அற்புதமாக பலித்ததைக் கண்டு மகிழ்ந்த நம்பி, சற்றும் தாமதிக்கவில்லை. தனது பெரிய வாளை உயர்த்தியபடி, நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவர் மீதும் பாய்ந்துவிட்டான்.
அவர்களும் போர்க்கலையில் சளைத்தவர்களாக இல்லை. சடுதியில் சுதாரித்துக்கொண்டு நம்பி யுடன் மோதினார்கள். வாளுடன் வாட்கள் மோதின. சிலபல சுழற்றலில் இருவரில் ஒருவன் நம்பியின் வாளால் பெரிதாய் காயப்பட்டு, அலறியபடி சாய்ந்தான். இனி, ஒருவன் மட்டுமே.

அவனை எளிதில் சமாளித்துவிடலாம் என்ற நிலையில், விருட்சத்தில் விளைந்த சத்தத்தை சோதிக்கச் சென்ற மறவர்கள் திரும்பி விட்டிருந் தார்கள். இவ்வளவு சீக்கிரம் அவர்கள் திரும்பு வார்கள் என்று நம்பி எதிர்பார்க்கவில்லை.

இருவரை வீழ்த்திவிட்டால், எதிரிகளின் பலம் குறையும். சற்று நேரம் கழித்து திரும்பி வரும் மீதம் இருவரையும் மறைந்திருந்து தாக்கி அழித்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தான் நம்பி. ஆனால், சூழல் அவனுக்கு விரோதமாக திரும்பி விட்டது. இப்போது. ஒரே நேரத்தில் மூவரைச் சமாளிக்க வேண்டிய நிலை. அதன் பொருட்டு அவன் மிக ஆவேசத்துடன் பாய்ந்த நிலையில், எதிரிகளில் ஒருவன் வீசிய வாளின் நுனி, நம்பி யின் முகத்தை காயப்படுத்தியது. அதனால் அவன் தடுமாறிய கணப்பொழுதில், மூவருமாய் சேர்ந்து அவனை மடக்கினார்கள். அப்போதுதான் நம்பியே எதிர்பாராதவிதமாக,  அவனுக்காக ஓர் உதவிக்கரம் நீண்டது.
 
அதுவரையிலும் குடிசைக்குள் சுடர்விட்டுக் கொண்டிருந்த பந்தத்தை, இப்போது தன் பிடியில் வைத்திருந்த அந்தக் கரம், பெரிதாகச் சுழன்று பகைவர்களைத் தாக்கத் துவங்கியது. அந்தக் கைக்குச் சொந்தக்காரர் யாரென்று உற்றுநோக்கிய நம்பி, மலைத்துப்போனான். தீப்பந்தத்தைச் சுழற்றி, எதிரிகளை திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தாள் பொங்கி! சற்று நேரத்துக்கு முன்புவரையிலும் மயங்கிக் கிடந்தவள் எங்ஙனம் விழித்தாள், சண்டையிடும் அளவுக்கு அவளுக்கு தெம்பு வந்தது எப்படி என்று எண்ணி வியந்து போனான் நம்பி.

ஆனாலும் அதுபற்றி மேலும் யோசிக்க அவகாசம் இல்லை ஆகையால், தானும் அவளுக்கு உதவியாகச் சேர்ந்துகொண்டான். மேனியில் ஆங்காங்கே தீக் காயத்தை வாங்கிக்கொண்ட எதிரிகள் மூவரும் வெவ்வேறு திசையில் தப்பித்து ஓடினார்கள்.மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, சிறுபுன்னகையோடு நம்பியை நோக்கினாள் பொங்கி.

``எப்போது விழித்தாய்? குடிசைக்குள் எங்ஙனம் சென்றாய். உள்ளே வேறு எவரேனும் இருக்கிறார் களா?'' - நம்பியின் இந்தக் கேள்விகளுக்கு வெகு நிதானமாகப் பதில் சொன்னாள் பொங்கி: ``ஆட்கள் இல்லை. ஆனால் *எரிசிரல் போன்ற ஆயுதங்கள் நிரம்ப உள்ளன''

இந்தப் பதிலைக்கேட்டதும் வெகு சத்தமாகவே கூவினான் நம்பி, ``என்ன அந்தக் கண்கொத்திப் பாம்புகளா?'' என்று!

அச்சத்துடன் அவன் கூவியதில் ஆச்சரியம் இல்லைதான். ஏனெனில், அந்த ஆயுதங்கள் சர்ப்பங்களைக் காட்டிலும் ஆபத்தானவை!

- மகுடம் சூடுவோம்...

* எரிசிரல், சகடப்பொறி போன்றன பழந்தமிழர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் (அபிதான சிந்தாமணி- ஆயுதப்பொது).