
சூப்பர் பரிசு!யுவா, ஓவியம்: மகேஸ்

‘‘நித்யா! விஷயம் தெரியுமா? நம்ம நர்மதா மிஸ்ஸை கூப்பிட்டு கரஸ்பாண்டென்ட் திட்டினாங்களாம்” என மதிய உணவு இடைவேளையில் லஞ்ச் பாக்ஸைப் பிரிக்கும்போது, மெல்லிய குரலில் சொன்னாள் ராகவி. அவர்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்கள்.
‘‘ஏன்டீ?” எனக் கேட்டாள் நித்யா.
‘‘மிஸ், நம்ம எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தாங்களே அதுக்குத்தான். ‘வேலையை விட்டுப் போறவங்க சைலன்ட்டா போகணும். ஏன் இதெல்லாம் செய்யறீங்க?’னு திட்டினாராம். ரெஸ்ட் ரூம் போனப்ப ரெண்டு மிஸ்ஸுங்க பேசிக்கிட்டதை கேட்டேன்” என்றாள் ராகவி.
அது தனியார் பள்ளி. ஆசிரியர்கள், வேறு இடத்தில் வேலை கிடைத்து திடீரென செல்வதும், அவருக்கு பதில் இவர் என ஸ்லைடு போடாத குறையாக இன்னொருவரை கொண்டு வந்து நிறுத்துவதும் அடிக்கடி நடக்கும்.
போகிற யாரும் மாணவர்களிடம் சொல்லிவிட்டுப் போக மாட்டார்கள். ஆனால், நர்மதா மிஸ் வித்தியாசமானவர். மாணவர்களிடம் ஒரு தோழியைப் போல பழகுபவர். கலகலப்புடன் பாடம் நடத்துபவர். இன்று காலையில் பெரிய சாக்லேட் டப்பாவுடன் வந்து நீட்டியபோது, ‘‘என்ன மிஸ் பர்த்டேவா?” எனக் கேட்டார்கள்.
‘‘எல்லோரும் சாக்லேட் எடுத்துக்கங்க. அப்புறம் சொல்றேன்” என்றார்.
எல்லோரும் எடுத்துகொண்ட பிறகு, ‘‘எனக்கு வேற ஸ்கூலில் வேலை கிடைச்சு இருக்கு. அங்கே போறேன்” என்றதும் பலருக்கும் வாயில் போட்ட சாக்லேட் கசப்பது போல இருந்தது.
‘‘ஏன் மிஸ்? வேணாம், இங்கேயே இருங்க மிஸ்” என்றார்கள்.
‘‘இங்கேவிட அங்கே சம்பளம் அதிகம். நான் எங்கே போனாலும் உங்களை மறக்கமாட்டேன். என் நம்பரை கொடுக்கறேன். எப்போ வேணும்னாலும் பேசலாம்” என்று சொன்னார். அவர் போகும் மற்ற வகுப்புகளுக்கும் இதேபோல சாக்லேட் கொடுத்திருக்கிறார்.
‘‘பாவம் மிஸ், கரஸ்பாண்டென்ட் திட்டினதும் அழுதுட்டாங்களாம்” என்றாள் ராகவி.
‘‘இதை சும்மா விடக் கூடாது. கரஸ்பாண்டென்ட் வெட்கப்படற மாதிரி செய்யணும்” என்றாள் நித்யா.
‘‘ஏன் திட்டினீங்கனு போய் கேட்கவா முடியும்? அப்படியே கேட்டாலும் நர்மதா மிஸ்ஸுக்குத் தான் பிரச்னை” என்றாள் ராகவி.
‘‘இல்லே வேற ஐடியா” என்று தன் திட்டத்தை சொன்ன நித்யா, வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு பள்ளியில் இருந்து வெளியில் சென்றாள். மணி அடிப்பதற்கு முன்பு வந்துவிட்டாள்.
பிறகு, வேறு வகுப்பில் இருந்த நர்மதா டீச்சரிடம் நான்கு பேர் சென்று, ‘‘மிஸ், ஒரு அஞ்சு நிமிஷம் எங்களோடு வாங்க” என்றார்கள்.
‘‘எங்கே? எதுக்கு?” என்றவரிடம் பதில் சொல்லாமல் அன்பாக இழுத்துச் சென்றார்கள். அதேநேரம், நித்யா தன் தோழிகள் நான்கு பேருடன் கரஸ்பாண்டென்ட் அறைக்குள் பிரவேசித்தாள்.
‘‘சார், ஒரு ஃபைவ் மினிட்ஸ் எங்களுக்காக ஒதுக்கணும்” என்றாள்.
‘‘ஷ்யூர், என்ன விஷயம்?” என்றபோது, நர்மதா மிஸ்ஸோடு தோழிகள் வந்துவிட்டார்கள். வேறு சில தோழிகள், வேறு சில டீச்சர்களையும் அழைத்து வந்தார்கள். நித்யா மறைத்து வைத்திருந்த அந்தப் பரிசுப் பார்சலை கரஸ்பாண்டென்ட் கையில் கொடுத்தாள்.
‘‘எங்க நர்மதா மிஸ்ஸுக்கு சின்ன கிஃப்ட். உங்க கையால கொடுத்துட்டு, அவங்களை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லுங்க சார்” என்றாள்.
முதலில் திகைத்துப் போன கரஸ்பாண்டென்ட், பிறகு சுதாரித்துக்கொண்டு, பரிசைக் கொடுத்தார். நர்மதா மிகச் சிறந்த ஆசிரியர் எனவும் பாராட்டினார்.
அனைவரும் கைகளைத் தட்ட, அன்று இதே அறையில் இரண்டாவது முறையாக கண்ணீர் சிந்தினார் நர்மதா மிஸ். ஆனால், இந்தக் கண்ணீர் வித்தியாசமானது.