Published:Updated:

அன்னையை சரணடைவோம்!

சொல்லின் செல்வர் பி.என்.பரசுராமன்

பிரீமியம் ஸ்டோரி
அன்னையை சரணடைவோம்!

அன்னையை சரணடைவோம்!

ஆடி என்றாலே ‘அம்மன் மாதம்’ என்று சிறப்பிக்கும் அளவுக்கு, அம்பிகைக்கு கொண்டாட்டங்கள் மிகுந்த மாதம் அது. ஒரு சில மாதங்களுக்கு தனிப்பெருமை உண்டு. அவற்றில் ஆடி மாதமும் ஒன்று.
ஆடி முதல் மார்கழி வரையிலும் தட்சிணாயனம், தை முதல் ஆனி வரையிலும் உத்தராயனம். இவற்றில் முதலாவது மழைக்கால துவக்கத்தையும், இரண்டாவது கோடை கால துவக்கத்தையும் குறிப்பிடுகின்றன.

அன்னையை சரணடைவோம்!

அதேபோன்று தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவாகவும், உத்தராயனம் பகலாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகை யில், தட்சிணாயனத்தின் துவக்கமான ஆடி மாதம் தேவர்களுக்கு மாலை காலம்.  மாலை அந்திசாயும் நேரத்தில் கன்று தாயைத் தேடும்; குஞ்சுகள் தாய்ப்பறவையைத் தேடும். அப்படித்தான்  உலகின் அனைத்து ஜீவராசிகளும் ஜகன் மாதாவை தேடிச் சரணடையும் மாதமாகத் திகழ்கிறது ஆடி. இந்த மாதத்தில் பல்வேறு பிரார்த்தனைகளுடன் அம்மனைத் தொழுது, ‘அம்மையே வருக, அடைமழையென அருள் மழை பொழிக’ என அவள் திருவருளை வேண்டுவது அவசியம்.

‘முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளைப் போல மழையே, நீ பொழிவாய்’ என்று திருவெம்பாவையிலும் இந்த வேண்டுதல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, நாமும் அற்புதங்கள் நிறைந்த இந்த ஆடிமாதத்தின் அம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைவோம். அதற்கு உதவியாக அம்மன் துதிப்பாடல்கள், அவளின் அருள் சுரக்கும் திருநாமங்கள், அவளின் மகிமையைச் சொல்லும் திருக்கதைகள்-திருத்தலங்கள் ஆகியவை, இந்த இணைப்பில் உங்களுக்காக! படித்து பலன் பெறுங்கள்.

அன்னையை சரணடைவோம்!

பதினாறும் அருள்வாள் அபிராமி!

‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள் பெரியோர்கள். அதென்ன பதினாறு பேறுகள்? இந்தக் கேள்விக்கு மிக அழகாக பதில் அளிக்கிறது அபிராமி அம்மை பதிகம்.

பதினாறு பேறுகளைப் பட்டியலிடுவதுடன், அவற்றை அருளி ரட்சிக்க வேண்டும் என்று அபிராமியம்மையைத் தொழுது வேண்டுகிறது கீழ்க்காணும் பாடல்.

கலையாதகல்வியும் குறையாதவயதும் ஓர்
   கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
   கழுபிணி இலாதஉடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்

தாழாத கீா்த்தியும் மாறாத வார்த்தையும்
   தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாதகோலும்
   ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி
   பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது
   தங்கையே! ஆதிக்கடவூாின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
   அருள்வாமி அபிராமியே!


இதேபோன்று மற்றொரு பாடலும் உண்டு. அதுவும், பதினாறு பேறுகளைச் சொல்லி, “அன்னையே! பதினாறு பேறுகளையும் தந்து அருள்க!” என நமக்காக அம்பாளை வேண்டுகிறது. வாருங்கள் நாமும் அந்தப் பாடலைப்பாடி அன்னையை வணங்குவோம்.

சகல செல்வங்களும் தரும் இமயகிாி ராஜ
தனயே! மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகலமதில் நோயின்மை, கல்வி,
                   தன, தானியம்,
அழகு, புகழ், பெருமை, இளமை,
அறிவு, சந்தானம், வலி, துணிவு,
 வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வு அளிப்பாய்!
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி!
திாிசூலி! மங்கள விசாலி!
மகவு நான் நீ தாய்! அளிக்கொணாதோ?
மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ் நாமி!
சிவசாமி மகிழ் வாமி!
அபிராமி! உமையே!


அன்னையின் அருளை முழுமையாகப் பெற்றுத் தரும் இந்த இரண்டு பாடல்களையும் தினந்தோறும் தவறாமல் சொல்லி, அம்பாளை மனமுருகி வழிபட்டு வந்தால், எந்த வித துன்பங்களும் நம்மை அணுகாது. குறைகளால் நாம் ஆடிப்போகாமல் இருக்க, ஆடி மாதத்திலாவது தினந்தோறும் இப்பாடல்களைப் பாராயணம் செய்வோம்! பேறுகள் பதினாறையும் அருள்வாள் பராசக்தி!

அன்னையை சரணடைவோம்!

கஷ்டங்களை நீக்கும் அஷ்ட தேவியர்!

அம்பிகையின் ஸ்ரீசக்கரத்தில் ஒன்பது சுற்றுக்கள் (நவ ஆவரணங்கள்) உள்ளன. அவற்றின் உள் சுற்றின் நடுவில் - பிந்து மண்டலத்தில், அம்பிகை அமர்ந்திருக்கிறாள். அம்பிகையைச் சுற்றியுள்ள மற்ற எட்டு ஆவரணங்களிலும், அஷ்ட சரஸ்வதிகள் வீற்றிருக்கிறாா்கள்.

வசினி, காமேஸ்வாி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, ஸர்வேஸ்வாி, கௌலினி ஆகிய இந்த எட்டு தேவதைகளே அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களையும் பாடினாா்கள். அவை லலிதா சகஸ்ரநாமத்தில் அடங்கியுள்ளன. ஆடி மாதத்தில் இந்த எட்டு தேவியரின் திருநாமங்களையும் சொல்லி மலர்கள் தூவி வழிபடுவோம். அறியாமையால் விளையும் கஷ்டங்களை தீர்க்குமாறு வேண்டிக்கொண்டு, வாட்டங்கள் நீங்கப் பெறுவோம்.

அன்னையை சரணடைவோம்!

ஆதிசங்கரர் போற்றிய அம்பிகை!

வேலூர் - திருப்பத்தூர் பேருந்து மார்க்கத்தில் உள்ள திருத்தலம் வெட்டுவானம். தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி பரசுராமன் தன் தாயின் தலையை வெட்டிய தலம் இது. இங்கே அன்னை சிவ பெருமானிடம் இருந்து சூலம், மகாவிஷ்ணுவிடம் இருந்து சக்கரம், பிரம்மதேவாிடமிருந்து வேதங்கள், யமதேவனிடமிருந்து பாசம் ஆகியவற்றைப் பெற்று எழுந்தருளி இருக்கிறாள். ஆதிசங்கரர் இந்த அன்னையை பூஜித்து உக்கிரம் தணித்து, இங்கே ஸ்ரீசக்கரமும் பாண லிங்கமும் பதித்திருக்கிறாா். இங்கு ஆலயத்தில் அளிக்கப்படும் விபூதி, பசுஞ்சாணம் கொண்டு தயாாிக்கப்பட்டது அல்ல; அருகிலுள்ள விபூதிமலை மண்ணே பிரசாதமாகத் தரப்படுகிறது!

அன்னையை சரணடைவோம்!

புன்னைவனத்தில் - புற்று வடிவில்... புன்னைநல்லூர் மாரி!

ஆங்கிலேய ஆட்சியின்போது நடந்த சம்பவம் இது. வில்சன் என்பவர் தஞ்சை பகுதியில் வரி வசூல் செய்யும் கலெக்டராக இருந்தார். இவர் ஒருமுறை, திருவிழாவின்போது, பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதைக் கண்டு கேலி செய்தார். தன்னை இகழ்ந் தாலும் பொறுத்துக் கொள்ளும் அம்பிகை, தன் அடியார்களை இகழ்ந் தால் பொறுத்துக் கொள்ளமாட்டாள் அல்லவா? எனவே,  அந்த அதிகாரிக்கு தக்க பாடம் புகட்ட திருவுளம் கொண்டாள்.

வீட்டுக்குச் சென்ற அதிகாரியின் பார்வை பறிபோனது. அவர் உடலெங்கும் அம்மைக் கொப்புளங்கள் பாரமாக இறங்கின. விபரீதம் நிகழ்ந்ததும் கலெக்டருக்கு, தான் செய்த தவறு புரிந்தது. அதன்பிறகு அழுது, தொழுது அம்மனை வேண்டினார்.  மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டவருக்கு அருள்புரிந்தாள். உடனேயே கலெக்டருக்குப் பார்வை திரும்பியது. அவர் உடலில் இருந்த அம்மைக் கொப் புளங்களும் இறங்கின. அம்மன் அருளை உணர்ந்த அவர், அன்று முதல் அம்பிகையின் அடியவரானார்.

அயல்நாட்டுக்காரருக்கு அருள்புரிந்த அம்மன் அந்தக் கோயிலில் குடிகொண்ட கதையும் அற்புதமானதுதான்!

மராட்டிய ஆட்சியை தஞ்சையில் நிலை நாட்டியவர் வெங்கோஜி மகாராஜா சத்ரபதி. இவர் கி.பி. 1676 முதல் 1683 வரை அங்கு ஆட்சி செய்தார்.

கி.பி.1680-ஆம் ஆண்டு தீர்த்த யாத்திரை கிளம்பிய மகாராஜா, திருச்சிக்கு அருகே உள்ள சமயபுர அம்மனை தரிசித்துவிட்டு, அங்கு தங்கினார். இரவு நேரம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் மகாராஜா. அவரது கனவில் தோன்றிய அன்னை மாரியம்மன், ‘‘மன்னா! மாரியான நான் புன்னை வனத்தில், புற்று வடிவில் அருவமாக இருக்கிறேன். தஞ்சாவூருக்கு அருகில் (சுமார் 5 கி.மீ. தொலைவில்) இருக்கும் என்னை வந்து தரிசனம் செய். உனக்கு நலம் உண்டாகும்!’’ என்று அருளினாள். மறுநாள் படைகளுடன் தனது இருப்பிடத்தை அடைந்த மகாராஜா, அம்மன் சொன்ன வார்த்தைகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்னையை சரணடைவோம்!

‘அன்னை சொன்னபடி அவளை தரிசனம் செய்ய வேண்டும்!’ என்று தீர்மானித்த மன்னர், சில நாட்களில் புன்னை வனத்தை அடைந்தார். அங்கே புற்று வடிவாகக் காட்டில் மறைந்திருந்த அன்னையை வெளிப்படுத்தி, அனைவரும் தரிசிக்கும்படி செய்தார். காட்டை அழித்துப் பாதைகள் அமைத்தார். மழை, வெயில் இவற்றில் இருந்து பாதுகாக்க அன்னைக்குச்  சிறிய கூரை அமைத்து, புன்னைநல்லூர் என்ற பகுதியையும் அன்னைக்கு அர்ப்பணித்தார். மகாராஜாவிடம் சொல்லி, தன்னை வெளிப்படுத்திய அந்த அம்மன்தான், தஞ்சை- புன்னைநல்லூர் ஸ்ரீமகா மாரியம்மன். வெங்கோஜி மகாராஜாவால் அமைக்கப்பட்ட கூரைக் கொட்டகையில் இருந்த அம்மன், அவர் மகன் துளஜ ராஜா காலத்தில், கோயிலுக்கு மாறினாள். எப்படி?

துளஜ ராஜாவின் மகள் அழகி. சுறுசுறுப்பானவள். அவளுக்கு அம்மை நோய் கண்டு, கண் பார்வை குறையத் தொடங்கியது. இதனால், கடுந்துயரில் மூழ்கினார் மன்னர். செய்வதறியாமல் தவித்த மன்னரின் கனவில் ஓர் அந்தணச் சிறுமியாகத் தோன்றினாள் மாரி. ‘‘துளஜ மன்னா... புன்னை நல்லூரில் இருக்கும் என் சந்நிதியை உன் மகளுடன் வந்து தரிசனம் செய். உன் மனத்துயர் தீரும்!’’ என்று அருளினாள். மன்னர், மறுநாளே மகளுடன் மாரியம்மன் சந்நிதிக்கு விரைந்தார். உள்ளம் உருகத் துதித்து வேண்டினார். குருக்கள் தீபாராதனை காட்டிக் கொண்டிருந்த நேரம், மன்னர் மகளின் கண்களில் இருந்து ஏதோ கருகிப் போய்க் கீழே விழுந்தது. அதே நொடியில், ‘‘அப்பா... கண் தெரிகிறது! கண் தெரிகிறது!’’ என மகிழ்ச்சியில் கூக்குரலிட்டாள் அவள்.

சந்தோஷத்தில் சின்னக் குழந்தை போலத் துள்ளிக் குதித்தார் மன்னர். அம்மனின் அருளை முழுமையாகப் புரிந்துகொண்டார். தனது பக்தியின் வெளிப்பாடாக கூரைக் கொட்டகையை நீக்கி, அழகிய சிறு கோயில் ஒன்றைக் கட்டினார். மன்னருக்கு மேலும் ஒரு விருப்பம் இருந்தது. ‘புற்று வடிவில் அருள்புரியும் இந்த அம்பிகைக்கு, புது வடிவம் கொடுக்க வேண்டும்!’ என எண்ணினார் அவர். அப்போது அம்பிகையே அனுப்பி வைத்ததைப் போல, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் அங்கு வந்தார். அந்த மகா ஞானி, மன்னரின் விருப்பத்தை உணர்ந்து புற்று மண்ணைக் கொண்டே மகா மாரியம்மனின் திருவடிவத்தை அமைத்தார் (கி.பி.1735). அத்துடன் சத்குரு சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.

வியாதிகள், விரோதிகளால் உண்டாகும் பயம் ஆகியவற்றைப் போக்கி, நம்மைக் கட்டிக் காக்கும் இந்த புன்னைநல்லூர் மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் இரண்டாவது வாரம் தொடங்கி, புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் வரை பெருவிழா நடை பெறும். கள்ளம் கபடம் இல்லாத அடியார்களின் கூட்டம் அங்கே திரளும். அவர்களில் நாமும் ஒருவராக இணைந்து அம்மனை தரிசித்தால், துன்பங்கள் விலகிப் போகும்.

அன்னையை சரணடைவோம்!

கடம்பவனத்து அரசி கடும்பாடியம்மன்!

சியாமளா தேவிக்கு ‘ராஜமாதங்கி’,  ‘மந்த்ாிணி’ எனும் திருநாமங்கள் உண்டு. அந்த அன்னை மதங்கர் எனும் முனிவருக்கு மகளாக அவதாித்ததால், மாதங்கி எனும் திருநாமம் உண்டானது. ‘மாதங்க கன்யாம் மனசா ஸ்மராமி’ என்று காளிதாச மகாகவி குறிப்பிடுவது இந்த அன்னையையே. அவ்வாறு மாதங்கியாகத் தோன்றிய அன்னை, கடம்பவனத்தில் உலாவினாள்.

‘கடம்பாடவியிடை பண்களிக்கும் குரல்வீணையும் பயோதரமும் கொண்டு... மதங்கர் குலப்பெண்களில் தோன்றிய எம் பெருமாட்டி’ என அபிராமி அந்தாதியும் இதைக் குறிப்பிடுகின்றது.

மதுரை மீனாக்ஷியை ‘ராஜமாதங்கி’ எனும் ‘சியாமளாதேவி’யின் அம்சமாகவே குறிப்பிடுவர். அன்னை மீனாக்ஷி எழுந்தருளியிருக்கும் மதுரைக்குக் கடம்பவனம் எனும் பெயரும் உண்டு. ஞானச் செல்வத்தை அள்ளி வழங்கும் அந்த அன்னையை ‘கடம்பா அடவி அம்மன்’ என்றும் வழிபட்டார்கள். கடம்பா அடவி அம்மன்- என்பது மருவி, கடும்பாடியம்மன் என மாறிப்போனது. கடம்பாடவியம்மன் ஞானச்செல்வத்தை வாாிவழங்கும் தெய்வம். அஞ்ஞானத்தைநீக்கி ஞானத்தை வழங்கும்படி அன்னையிடம் வேண்டுவோம்!

அதேபோன்று துளுக்காணத் தம்மன் எனும் பெயருக்கும் ஒரு காரணம் உண்டு. சோலைகள் நிறைந்தபகுதிகளில் கோயில் கொண்டு எழுந்தருளிய அம்மனை ‘துளிர் கா வனத்து அம்மன்’ என அழைத்தார்கள். இந்தப் பெயரே காலப்போக்கில் ‘துலுக்காணத் தம்மனாக’ மாறிவிட்டது. பசுமை தழைக்க அருள் புாிபவள் துளிர் காவனத்தம்மன். மழைக் காலம் தொடங்கும் ஆடி மாதத்தில், இந்த அம்மனை வழிபட்டு பசுமை தழைக்க அருள்பெறுவோம்.

படித்துறை பேச்சியம்மன்!

மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பேச்சியம்மன் படித்துறை. இங்கே, வைகை ஆற்றுக்கு அருகில் அமர்ந்தபடி அருளாட்சி நடத்துகிறாள், பேச்சியம்மன். அசுரன் ஒருவனை அழித்த சரஸ்வதிதேவியே இங்கே பேச்சியம்மனாக அருள்பாலிக் கிறாள் என்கின்றனர் பக்தர்கள். இந்த அம்மனை கண்ணாரத் தரிசித்து வழிபட்டால், சகல பிணிகளும் தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். வாய் பேச இயலாதவர்கள், பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் பேச்சுத் திறன் கூடும்; பேச்சுக் குறைபாடுகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

அன்னையை சரணடைவோம்!

அல்லல்கள் தீர்ப்பாள் ஆலங்காட்டு காளி!

கெட்டது, கிளை விட்டு நூறு ஆயிரமாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகிவிடும். கெட்டதன் ஆற்றல் அப்படி. ‘அவற்றை நான் அழித்துவிடுகிறேன் பார்!’ என்று நாம் தீவிரமாக முனைந்தால், அவை முன்னிலும் வேகமாக கிளர்ந்தெழும். அவற்றை அழிக்க ஒரே வழி அன்னையைச் சரணடைவதுதான்.

தேவர்களெல்லாம் சும்பன் என்ற அசுரனின் கொடுமை தாளாமல் அம்பிகையிடம் முறையிட்டாா்கள். அன்னை அந்த அசுரனுடன் போரிட முனைந்தாள். முன்னதாக அவளுடன் மோதியது ரத்தபீஜன். சும்பாசுரனின் சகோதாியான குரோதி என்பவளுக்குப் பிறந்தவன் இவன்.

அன்னையின் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்திகளில் ஐந்த்ரி என்பவள் ரத்தபீஜனை வெட்ட, அவன்உடம்பிலிருந்து சிந்திய ரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு ரத்தபீஜனாக மாறின. அனைவரும் திகைக்க, அம்பிகை தன்னிடம் இருந்து காளியை வெளிப்படுத்தி, ‘‘காளியே! ரத்த பீஜனுடன் நான் போர் செய்யும்போது, அவனுடைய ஒரு துளி ரத்தம்கூட பூமியில் விழாதபடி, நீ பருகிவிடு!” என்று ஆணையிட்டாள்.

அப்படியே நடத்தது. ரத்த பீஜன் வீழ்ந்தான். ஆனால் ரத்தபீஜனின் ரத்தத்தைப் பருகிய காளி, ஆவேசம் கொண்டு அலைந்தாள். தேவர்கள் எல்லாம் நடுங்கினார்கள். ஈசனிடம் சென்று முறையிட்டார்கள். சிவபெருமான் வந்து நடனமாட, காளியும் நடனமாடினாள். அந்தப் போட்டியில் காளியின் ஆவேசம் அடங்க, ஈசனின் வாக்குப்படி காளிதேவியானவள் போட்டி நிகழ்ந்த தலத்திலேயே கோயில் கொண்டாள். அங்கு தன்னை தேடிவந்து வழிபடும் பக்தர்களின் கிரகதோஷம் உட்பட அனைத்து தோஷங்களையும் நீக்கி, அருள்பாலிக்கத் துவங்கினாள்.

ஆடி அமாவாசை கழிந்து அடுத்த செவ்வாயன்று, காப்புக் கட்டித் திருவிழா நடைபெறும் இந்த பத்ரகாளி அம்மனுக்கு.கிரகதோஷங்களால் நம் வாழ்க்கை கீழான நிலைக்குச் சென்று விடாதபடி அருள்புரியும் இந்த அம்மன் குடியிருப்பது எங்கு தெரியுமா? திருவாலங்காடு தலத்தில்தான். ஆம்! இந்த ஆலங் காட்டாள், நம் அல்லல்களைத் தீர்ப்பாள்!

அன்னையை சரணடைவோம்!

அம்மன் கூழ் மகிமை!

ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் சமர்ப்பித்து வழிபடுவார்கள். ஆன்மிக மகத்துவத்துடன், மருத்துவ மகத்துவமும் நிறைந்தது, ஆடிக் கூழ்!

வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். பஞ்சத்தைப் போக்குவதோடு, வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள். கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயமும் மருத்துவ பலன்கள் அதிகம் கொண்டது.

அதேபோல், கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்த் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களைத் தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும் கஞ்சியும். எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்திருக் கிறார்கள் நம் முன்னோர்கள்!

அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை அரைகுறையாகத் தட்டியெடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேக வைத்து, துணியில் கட்டிய மருந்தை அதில் 15 நிமிடம் போட்டுவிட வேண்டும். பின்னர் இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. ஆடி மாதத்துக் குளிரிலும் காற்றிலும் வர வாய்ப்புள்ள நோய்களான இருமல், தொற்று நோய் ஆகியவை வராது.

மங்கள கெளரி விரதம்!

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் மங்கள கௌரி விரதம் கொண்டாடப் படுகிறது. மணமான பெண்கள் புகுந்த வீட்டிலும், மணமாகாத பெண்கள் பிறந்த வீட்டிலும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தன்று அதிகாலையில் நீராடி, நெற்றிக்குத் திலகமிட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். அம்மன் படத்தின் முன் சந்தனம் - குங்குமம் இட்ட எலுமிச்சம் கனியைப் படைத்து, சக்தி கவசம், துர்கா சகஸ்ர நாம பாராயணம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் தவறாமல் இதைக் கடைப்பிடிப்பதன் மூலம் திருமண பாக்கியம், மாங்கல்ய பலம் ஆகியவை கிடைப்பதுடன், வாழ்வில் வளம் கொழிக்கும்.

அன்னையை சரணடைவோம்!

புலவருக்குப் பொற்காசு அளித்ததில்லை சிவகாமி!

அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்-என்பார்கள். அதன்படி, தில்லை அருள்மிகு நடராஜ பெருமான் ஆலயத்தில் நடந்த மிக அற்புதமான வரலாறு இது.

பெரும் புலவர் ஒருவர் ஊரெங்கும் சுற்றித்திாிந்து, அறக்கருத்துக்களைச் சொல்லி வந்தார். வழக்கப்படி, அவருடைய கருத்துகளைச் செவிமடுத்து  அவற்றைக் கடைபிடித்தவர்களைவிட, கேலி செய்தவா்கள்தான் அதிகமாக இருந்தாா்கள்.

அதனால் மனம் வருந்திய புலவர், தெய்வத்திடமே முறையிடலாம் என்று எண்ணி, சிதம்பரம் திருத்தலத்துக்குச் சென்றாா். அங்கே நடராஜப்பெருமானிடம் தனது குறைகளைக் கொட்டி பிரார்த்தனை செய்தார்.

“பொல்லாத மூர்க்கருக்கு எத்தனைதான் புத்தி போதிக்கினும், நல்லார்க்கு உண்டான குணம் வருமோ? நடுராத்திாியில் சல்லாப் புடவை குளிர் தாங்குமோ? நடுச்சந்தைதன்னில் செல்லாப் பணம் செல்லுமோ? தில்லை வாழும் சிதம்பரனே!” என்று முறையிட்டார்.

அத்துடன் நிற்கவில்லை அவர். அன்னை சிவகாமியின் பக்கம் திரும்பி, அவளிடமும் முறையிட்டார்.“தாயே! சிவகாமி! முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்தாய். உன் திருமணத்தின் போது அம்மியின் மீது வைப்பதற்காக உன் கணவாிடம் உன் காலைக் கொடுத்தாய். திருஞானசம்பந்தக் குழந்தைக்கு, சீர்காழிக் குளக்கரையில் பால் கொடுத்தாய். எல்லோரையும் ஆட்டிப்படைப்பதற்காக, மன்மதனுக்குச் செங்கோல் கொடுத்தாய். இவ்வளவு செய்த நீ, எனக்கு எதுவும் கொடுக்க வில்லையே!” எனப் பாடலாகப் பாடினாா். அதே விநாடியில், அங்கே இருந்த பஞ்சாட்சரப் படிகளில் கலீர்கலீர்் என்ற ஓசையோடு, ஐந்து  பொற்காசுகள் விழுந்தன!

இங்ஙனம், பஞ்சாட்சரப் படிகளில் பொற்காசுகள் பெற்ற புலவர், அன்றுமுதல் படிக்காசுப் புலவர்’ என அழைக்கப்பட்டார்.

நாமும் தில்லையம்பதிக்குச் சென்று நடராஜபெருமானையும், சிவகாமி அம்மையையும் சிந்தை மகிழ தரிசித்து வழிபடுவோம். புலவருக்கு அருளிய அந்த சிவகாமியம்மை, நமது வறுமையையும் அகற்றி வளமுடன் வாழ வரம் தருவாள்.

அன்னையை சரணடைவோம்!

குதிரைகள் நின்றன...

திருக்கோயில்   எழுந்தது!


மராட்டிய மன்னர் சரபோஜி, தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை படை-பரிவாரங்களுடன் ராமேஸ்வரத்துக்குப் போய்க்கொண்டு இருந்தார் மன்னர். ஓரிடத்தில், தீைய மிதித்ததைப் போன்று திடீரென நின்றுவிட்டன அவர்களின் குதிரைகள். என்ன முயற்சித்தும் அதற்குமேல் குதிரைகளை ஓரடி கூட நகர்த்த முடியவில்லை.

அமைச்சர் பார்வையை அப்படியே சுழலவிட்டார். சற்று தூரத்தில் விளக்கு ஒன்று தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. உடனே குதிரையில் இருந்து இறங்கிய அமைச்சர் அந்த விளக்கொளி இருந்த இடத்தை நோக்கிச் சென்றார். சற்று நேரம் கழித்து, முதியவர் ஒருவரை தன்னுடன் அழைத்து வந்தார் அமைச்சர். அருகில் நெருங்கியதும், ‘‘மன்னா! அருகில் இருக்கும் கோயிலின் பூசாரி இவர்’’ என்று அறிமுகப்படுத்திவைக்க, பூசாரி பேசத் துவங்கினார்.

“மன்னா! அந்த விளக்கொியும் குடிசையில்தான், எங்கள் தாய் குடிகொண்டிருக்கிறாள். குதிரை மீதேறி உலகையே வலம் வரும் அவள் திருமுன்னால், நீங்களும் குதிரையில் ஏறி வந்ததால்தான் உங்களுக்கு இப்படியொரு தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சிறிது தூரம் குதிரையில் ஏறாமல் நடந்தே செல்லுங்கள்.

அம்மனின் ஆலய எல்லையைத் தாண்டியதும், குதிரைகள் மீண்டும் பாயத் தயாராகிவிடும்’’ என்றார்.

மன்னருக்கு மெய்சிலிர்த்தது; ஆலயத்துக்கு நேரில் சென்று அன்னையை வணங்கினார். அன்னையின் மடியில் இருக்கும் குழந்தையைப் போன்று, சற்று நேரம் அவள் சந்நிதியிலேயே தங்கியிருந்து விட்டு, பிறகு புறப்பட்டுச் சென்றார். பூசாரி சொன்னது போலவே கோயில் எல்லையைத் தாண்டியதும் குதிரைகள் தயாராகிவிட்டன. அப்போதே மனதுக்குள் நினைத்துக்கொண்டார், இந்த அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று. அதன்படியே அழகான ஓர் ஆலயத்தையும் நிர்மாணித்தார்.

நாடி வருபவர்களின் நாடி பிடித்துப் பார்க்காமலேயே, உடல் நோய்களுடன் உள்ளத்து நோய்களையும் நீக்கும் அந்த அன்னையே, அருள்மிகு நாடியம்மன் எனும் திருநாமத்துடன் பட்டுக்கோட்டை யில் எழுந்தருளியிருக்கிறாள். தஞ்சையி லிருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு. ஆடி மாதத்தில் நாடியம்மனை நாடிச் சென்று வழிபடுவோம்; நல்லன எல்லாம் வந்துசேரும்.

அன்னையை சரணடைவோம்!

பிணி தீர்க்கும் பிரார்த்தனை!

“தெய்வமே! உன்திருவடிகளில் வந்து விழுந்திருக்கிறேன். என்னைக் கா (காப்பாற்று)” என்று பக்தர்கள் சுமந்து வந்து செலுத்தும் பிரார்த்தனைதான் ‘காவடி’. காவடிகளில் பலவிதங்கள் உண்டு. ஆனால் விசித்திரமாகப் ‘பாடைக்காவடி’ நடக்கும் திருத்தலம் வலங்கைமான். வழக்கப்படி இடது திருக்கரத்தில் மானை ஏந்திய சிவ ஸ்வரூபம் இங்கே, வலது திருக்கரத்தில் மானை ஏந்தியிருப்பதால், இத்திருத்தலம் வலங்கைமான் எனப்பட்டது. இங்குதான் அபூர்வப் பிரார்த்தனையை ஏற்கும் அன்னை சிவமாாியாக, சீதளாதேவியாக, மகாமாாியாக எழுந்தருளியிருக்கிறாள்.கும்பகோணத்திலிருந்தும் தஞ்சையி லிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

தீராத வியாதி கொண்டவர்கள், மருத்துவர்களால் கைவிடப் பட்டவர்கள், மிகுந்த கஷ்டத்துடன் வாழ்க்கை நடத்தும் அன்பர்கள் தங்களின் இன்னல்கள் நீங்க வேண்டும் என்று இங்கு கோயில் கொண்டிருக்கும் அம்பிகையை வேண்டிக் கொள்கிறார்கள். அதன் விளைவாக அம்மன் அருளால் குறைகள் நீங்கப் பெற்றவர்கள், பாடைக்காவடி பிரார்த்தனை செலுத்தி வழிபடுகிறார்கள்.
பிரார்த்தனையின்போில் பாடை கட்டி, பிரார்த்தித்த நபரை அதில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவார்கள். வழியெங்கும் சங்கு முழங்க சேகண்டி ஒலிக்கும். ஆலயத்தை அடைந்ததும் பூஜாாி வந்து, பாடையில் படுத்திருப்பவர் மீது விபூதியும் மஞ்சள் நீரும் தெளித்து எழுப்புவார். அன்னையின் சந்நிதியில் நிகழும் அபூர்வப் பிரார்த்தனை இது.

ஆடிவெள்ளி...கனகப்பொடி!

ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் கனகப்பொடி சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.

உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து, அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப் பொடி. உலர்ந்த தவிட்டில் வைட்டமின்-பி  ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதுவே, கனகப்பொடியின் சிறப்பு! இதை அம்பாளுக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டுச் சாப்பிடலாம்.

அன்னையை சரணடைவோம்!

விஷம் அறுத்து வினை தீா்க்கும் மாரியம்மன் சந்நிதி!

நோய்கள், அதுவும் விஷ உபாதைகள் மிகக் கொடுமையானவை. நாய் கடித்துவிட்டாலோ, கொடூரமான துயரங்களை அனுபவிக்கவேண்டிவரும். அப்படிப்பட்ட துயரத்திலிருந்து நம்மைக் காப்பவள், திருவாலங்காட்டில் அருளும் மகாமாரியம்மன். இந்த அன்னையின் திருக்கோவிலில் கொடிமரம் கிடையாது. அதைத் தனியாக வைத்திருக்கிறார்கள்.

திருவிழாக் காலங்களில் கொடிமரத்தை நட்டுக் கொடி ஏற்றுவாா்கள். திருவிழா முடிந்ததும், கொடிமரத்தை எடுத்துப் பழையபடியே, தனியாக வைத்துவிடுவார்கள். கொடி மரமில்லா இக்கோயிலில் மற்றொரு விசித்திரம்... இங்கு மட்டுமே, வேறெந்த மாாியம்மன் சந்நிதியிலும் இல்லாதபடி, நாய்க்கடிக்கு மந்திரம் சொல்லிக் குணப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகி றது. நாய்க்கடிக்கு மந்திாிப்பதற்காகச் சீட்டு வாங்க வேண்டும். கோயிலைச் சாராத வெளியார் ஒருவர் வருவார். அவர்தான் மந்திாிப்பார். அம்மனின் திருநாமத்தைச் சொல்லி, கோயில் வாசலில் ஒரு தேங்காய் உடைக்கப்படும்.மந்திாிக்க வந்தவா், அன்னை மாாியம்மனின் எதிாில் அமர்ந்து, மாாியம்மனின் திருநாமத்தையே மந்திரமாக உச்சாிப்பார். நாய்க்கடி பட்டவர்கள், அன்னையின் அருளால் குணமடைவார்கள். இந்த விசித்திர அருளாடல் இன்றும் நடைபெறுகிறது.மற்றொரு விசித்திரம்... மாாியம்மன் கோயில்களில் பிரார்த்தனை என்ற பெயாில், நோய் நிவர்த்திக்காக கை-கால் வடிவங்கள், கண்மலர் என்றெல்லாம் சமர்ப்பணம் செய்வாா்கள். அவை அம்மனின் திருமுன்னர்தான் சமர்ப்பிக்கப்படும். ஆனால் இங்கோ, மாாியம்மனிடம் பிரார்த்தனைசெய்து விட்டு, அதற்கான சமர்ப்பணங்களை, மாாியம்மன் திரு முன்னால் சமர்ப்பிக்கமாட்டார்கள். பொிய ஆச்சி, பேச்சி ஆச்சி, காட்டோி எனும் உக்கிர தேவதைகளின் திரு முன்னர் தான் சமர்ப்பிப்பார்கள்.

இப்படி, விஷம் தீர்த்து வினை தீர்க்கும் திருவாலங்காட்டு மகா மாாியம்மன் அருளோச்சும் திருக்கோயில், மாயூரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழித்தடத்தில், சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. நாமும் ஒருமுறை அன்னையின் சந்நிதிக்குச் சென்று, விஷ நீக்கம் செய்யும் அன்னை, விஷமயமான எண்ணங்களையும் நீக்க வேண்டுவோம்.

அன்னையை சரணடைவோம்!

இடுக்கன் களையும் இருக்கன்குடி மாரி!

அந்தி சாயும் நேரம். மேய்ச்சலை முடித்த பசுக் குலம் திரும்பத் தொடங்கியது. அவற்றின் சாணத்தை எடுத்துக் கூடையில் போட்டு, சுமந்து கொண்டு பின்தொடர்ந்தனர் சில பெண்கள். அவர்களுள் ஒருத்திக்கு அசதி ஏற்பட்டது. எனவே, சுமந்து வந்த கூடையைக் கீழே இறக்கி வைத்த அவள், சற்று ஓய்வு எடுத்தாள்.

களைப்பு நீங்கியதும் எழுந்தவள், கூடையை மீண்டும் தூக்க முயற்சித்தாள். அது, இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவள், முழு பலத்துடன் கூடையைத் தூக்க முயற்சித்தும் பலன் இல்லை. அவள் பயந்தாள். வேகமாக ஓடிப் போய், முன்னால் சென்று கொண்டிருந்த தோழிகளிடம் நடந்ததை விவரித்து, அவர்களை கூடை இருந்த இடத்துக்கு அழைத்து வந்தாள். அவள் சொன்னதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் எல்லோரும் சேர்ந்து கூடையைத் தூக்க முயற்சித்தனர். அப்போதும் தோல்வியே மிஞ்சியது.

அவர்களையும் பயம் ஆட்கொண்டது. உடனே ஊருக்குள் ஓடி தகவல் சொன்னார்கள். ஆச்சரியப்பட்ட அனைவரும் திரண்டு வந்து, கூடையை எடுக்க முயன்றனர். அவர்களுக்கும் தோல்வியே ஏற்பட்டது. அதற்குள் பொழுதும் இருட்டிவிட்டது. ‘சரி... நாளை வந்து பார்த்துக் கொள்ளலாம்!’ என்று அனைவரும் வீடு திரும்பினர்.

இரவில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். வயது முதிர்ந்த பெண் ஒருத்தியின் கனவில் அன்னை மாரியம்மன் தோன்றினாள்.

‘‘கூடை இருக்கும் இடத்தில், பூமிக்கு அடியில் நான் இருக்கி றேன். வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்களது அக்கிரமங்களுக்கு பயந்து, உங்கள் முன்னோர்களில் ஒருவர் என்னை அங்கே புதைத்து வைத்தார். அந்த இடத்தை அடையாளம் காட்டவே, கூடையை அங்கே அசையாதபடி இருக்கச் செய்தேன். விடிந்தவுடன் ஊர்ப் பெரியவர்களுடன் போ. கூடையை எடுத்துவிட்டு அந்த இடத்தைத் தோண்டி, என்னை வெளியில் எடுத்துக் கோயில் கட்டி பூஜை செய்யச் சொல். உங்களது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன்!’’ என்று அருளி மறைந்தாள்.

கனவு கலைந்த முதியவள், அம்மனின் அருளை எண்ணி வியந்தாள். விடிந்ததும் ஊர்ப் பெரியவர்களிடம்  தனது கனவை விவரித்தாள். ஊரே வியப்பு அடைந்தது.

அன்னையை சரணடைவோம்!

அம்மனின் அருள் வாக்கை அலட்சியப்படுத்தாமல் அனைவரும் போய் கூடையைத் தூக்கியதும் அது சுலபமாக நகர்ந்தது. அந்த இடத்தைத் தோண்டினர். உள்ளே, மண்ணுக்குள் இருந்தாலும் தங்கம் போல, விக்கிரக வடிவில் மகா மாரியம்மன் ஒளி வீசினாள். ஊரார் கோயில் கட்டி அவளை வழிபட்டார்கள். தான் சொன்னதைச் செய்தவர்களுக்கு மகா மாரியம்மனும் அருள் மாரி பொழிந்தாள். அந்த அருள் மாரி, இன்றும் பொழிந்து கொண்டிருக்கிறது. அவளது அருள் மாரியில் அனைத்துத் துயரங்களும் நீங்கிப் போகும்.

ஆனந்தத்தை அருளும் அருள் மாரி, தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்ட அந்த ஊர் இருக்கன்குடி. விருதுநகர் மாவட்டம் - சாத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தத் திருத்தலம். நாமும் அந்த மகா மாரியை தரிசிக்கலாம்.

கருணை ததும்பும் விழிகள். முழு நிலவைப் பழிக்கும் திருமுகம். புன்முறுவல் பூக்கும் உதடுகள். சர்ப்பம் சுற்றி இருக்கும் தமருகம் (உடுக்கை). சூலம் தாங்கிய வலக் கரங்கள். பாசம், மதுக் கிண்ணம் ஏந்திய இடக் கரங்கள். வலக் காலை மடித்து வைத்து, இடக்கால் திருப்பாதம் பூமியைத் தீண்டியபடி இருக்கும் திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் மாரியம்மன்.

எப்போதும் சிங்க வாகனத்தில் காட்சி அளிக்கும் அன்னை, இங்கு ரிஷப வாகினியாக தரிசனம் அளிக்கிறாள். பொதுவாக அம்மன் கோயில்களில் அம்மனுக்கு முன்னால் சிங்க வாகனம் இருக்கும். ஆனால், இங்கு  நந்தி வாகனம் இருக்கிறது. திருவிழாவின்போது மகா மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வலம் வருகிறாள்.

நோய், கை - கால் செயலற்றுப் போவது, பார்வைக் குறைவு, குழந்தையின்மை, திருமணத் தடை ஆகிய அனைத்துத் துயரங்களுக்கும் மருந்தாகத் திகழ்கிறாள் இருக்கன்குடி மாரியம்மன். இன்றும் அவள் வேண்டுபவர்களின் குறை தீர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதற்கு அவள் திருக்கோயிலில், வேண்டுதல் நிறைவேறியவர்கள் பக்தியுடன் செலுத்தும் பிரார்த்தனைக் காணிக்கைகளே கண்கண்ட சாட்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு