Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

Published:Updated:
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30

49 - இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே ?

ஸ்ரீராமன் இருந்தது கரையில். விபீடணின் இருப்பிடமோ இராவணன் இருக்கும் அந்தக்கரை. பொதுவாக ஒருகரையிலிருந்து எதிர்கரைக்கு செல்பவர்களுக்கு எதிர்கரை எப்போது அக்கரைதான். ஆனால் இந்த 49-வது வாசகமோ இக்கரைக்கே சென்றேனோ என்று இருக்கிறது. இது கொஞ்சம் குழப்புவது போல இருந்தாலும் இதற்கு விளக்கம் பெரியாழ்வாரின் ஒரு பாசுரத்தில் உள்ளது.

அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய்
சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்


இங்கும் ஆழ்வார் சம்சாரம் என்பதை அக்கரை என்றும் எம்பெருமானின் திருவடி இக்கரை என்றும் மிகவும் அனுபவித்துக் கூறுகிறார். நமக்கு மிகவும் அனுகூலமான ஒன்றை நாம் என்றும் அருகில் வைத்துக்கொள்வது வழக்கம். இது என்னுடையது என்று கூறுவது நமது மனதுக்கு உகந்த பொருள்களையே. இந்த அர்த்தத்தில்தான் பெரியாழ்வார் அவர் என்றும் விரும்பும் வைகுந்தத்தை இக்கரை என்றும் துன்பத்தில் ஆழ்த்தும் சம்சாரக் கடலை அக்கரை என்றும் கூறுகிறார்.

அதனைப் போலத்தான் எம்பருமான் ஸ்ரீராமன் இருக்கும் இடம்தான் தன்னை கரைசேர்க்கும் என்பதை உணர்ந்தவன் விபீடணன். அவனுக்கு அது அக்கரையாகத் தோன்றவில்லை. இக்கரையாகவே தோன்றியதால்தான் அவரிடம் அடைக்கலம் புகுந்தான்.

அப்படிப்பட்ட விபீடனனைப் போல சரணாகதி தத்துவத்திற்கு ஒரு விளக்கமாகாமல் இருக்கும் என்னால் இந்த திருக்கோளூரில் இருந்து என்ன பயன்? எனவே நான் கிளம்புகிறேன் என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்பினாள்.

50 - இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே ?

சபரியைப் போல காத்திருந்தவர்களைப் பார்க்க முடியாது. சபரி வேட்டுவக் குலத்தைச் சார்ந்தவள். மதங்க மாமுனிவரின் சிஷ்யை. மதன்கருக்கு மோட்ச காலம் நெருங்கும்போது சபரிக்கும் ஒரு சலனம். தனக்கும் மோட்சம் வேண்டும் என்று குருவை வேண்டுகிறாள். மதங்கர் இதே காட்டின் வழியாக அண்ணல் ஸ்ரீராமபிரான் வருவார். அவர் வரும்வரை காத்திருந்து அவருக்குக் கைங்கரியம் பண்ணிவிட்டு பிறகு மோட்சம் ஆடை என்று கூறிவிட்டு செல்கிறாள். அந்தத் தள்ளாத வயதிலும் சபரி இராமன் நாளை வருவான் நாளை வருவான் என்று நெடுங்காலம் காத்துக் கிடக்கிறாள். கம்பர் இதனை அவள் வாயால் கூறுவது போல கூறுகிறார்.

‘ “ஈசனும் கமலத் தோனும், இமையவர் யாரும், எந்தை
வாசவன் தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி
ஆசுஅறு தவத்திற்கு எல்லை அணுகியது; இராமற்கு ஆய
பூசனை விரும்பி எம்பால் போதுதி” என்றார். ‘


அருந்தவசி என்கிறார் கம்பர் சபரியை. எந்த இடத்திலும் சபரியைக் குறித்து பொதுவாக கூறப்படும் கதையை இங்கே கம்பன் காட்டவே இல்லை. சபரி தான் உண்ட பழங்களை சுவையறிந்து ஸ்ரீராமனுக்கு எடுத்து கொடுத்தாள் என்று கூறப்படும் கதை. செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற திருக்குறளை தனது துணைக்கு அழைத்துக்கொள்கிறான் கம்பன்.

வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆகக் காட்டுறும் அறிஞர் என்ன, அன்னவள் கழறிற்று எல்லாம் கேட்டனன் என்ப மன்னோ - கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்.

வீடு பேற்றிற்கு உரிய மெய்நெறிகளை முற்றும் அறிந்தவர்கள் கூறுவதுபோல சபரி கூறியவற்றை ஸ்ரீராமன் கேட்டான் என்பதை என்னவென்று சொல்வது? வேதங்களை செவிவழிகேட்டி செவிகள் துளைக்கப்பெற்ற ஞானிகள் தங்கள் தவநிலையில் பருகும் அமுது போன்ற இராமன் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான். இதைவிட சபரிக்கு வேறு என்ன பேறு வேண்டும்?

இதைத்தான் இனியது என்று வைத்தேனோ சபரியைப் போல என்கிறார் கம்பர்.