Published:Updated:

விஜயகாந்த் வழிபட்ட திருக்கோலக்கா கோயில் `பாடல் பெற்ற தலம்’ மட்டுமல்ல... `ஓசை பெற்ற தலம்’!

தனக்கு நன்றாகப் பேச்சு வர வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்த் அங்கே சென்று அம்பிகையை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. ஓசைநாயகியை வழிபட்டால் பேச்சு நன்றாக வருமா... அதன் வரலாறு என்ன

விஜயகாந்த் வழிபட்ட திருக்கோலக்கா கோயில் `பாடல் பெற்ற தலம்’ மட்டுமல்ல... `ஓசை பெற்ற தலம்’!
விஜயகாந்த் வழிபட்ட திருக்கோலக்கா கோயில் `பாடல் பெற்ற தலம்’ மட்டுமல்ல... `ஓசை பெற்ற தலம்’!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தன் மகன் சண்முக பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா கோயிலுக்குச் சென்று, அம்பிகையை வழிபட்டார். தனக்கு நன்றாகப் பேச்சு வர வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்த் அங்கே சென்று அம்பிகையை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. ஓசைநாயகியை வழிபட்டால் பேச்சு நன்றாக வருமா... அந்தக் கோயிலின் தனிச் சிறப்புதான் என்ன. அதற்கு நாம் திருஞானசம்பந்தர் காலத்துக்குச் செல்ல வேண்டும்.

`உயர்வானவற்றை உயர்ந்த இடத்தில்தான் வைக்க வேண்டும்’ என்பார்கள். சிங்கத்தின் பாலை தங்கப் பாத்திரத்தில்தான் வைக்க வேண்டும். ஒளிமிக்க வைரத்தை தகரத்திலா பதிப்பார்கள். அப்படித்தான் தன்னைப் பாடி மகிழ்வித்த ஞானசம்பந்தருக்கு, அவருடைய உயர்வுக்கு ஏற்ப ஓர் உயர்ந்த பொருளை பரிசளித்து, அம்மையப்பனாகிய ஈசனும் சக்தியும் மகிழ்ந்த இடம் திருக்கோலக்கா. அதுமட்டுமல்ல, இந்தத் தலத்து இறைவனை திருமகள் வழிபட்டு, திருமாலை மணந்துகொண்ட கோலத்தில் காட்சி தந்ததால், இந்தத் தலத்துக்கு, 'திருக்கோலக்கா' என்ற பெயர் ஏற்பட்டது.

ஞானக்குழந்தையாம் திருஞானசம்பந்தர், ஆலயம்தோறும் சென்று ஈசனை மகிழ்விக்கப் பாடி வந்தார். இசை லயத்தோடு அவர் பாடும்போது கைகள் சிவக்க தாளமிடுவதைக் கண்ட ஈசனும் அம்பிகையும் தவித்துப்போனார்கள். என்ன இருந்தாலும் தாய்மை உள்ளம் கொண்ட ரூபம் அல்லவா அம்மையும் அப்பனும் இணைந்த கோலம்! தான் ஞானப்பால் கொடுத்த குழந்தையின் கைகள் சிவந்து வலிக்காத வண்ணம், தாளம் கொடுக்கத் திருவுள்ளம் கொண்டாள் சக்தி. சக்தியின் விருப்பத்தை ஈசன் நிறைவேற்றினார். பித்தளையோ தாமிரமோ கொடுத்தால் அது பெருமையாகுமா. தன் குழந்தைக்கு பொன்னால் ஆன தாளம் கொடுக்கத் தீர்மானித்தார் ஈசன். உலோகங்களில் உயர்ந்ததான பொன், பெரிதாகச் சத்தமிடாது. பொன்னை, பொன் கொண்டு தட்டினாலும் மெல்லிய சத்தமே கேட்கும். தாமிரம், வெண்கலம், பித்தளையைப்போல தங்கத் தாளத்தின் சத்தம் பெரிதாக வராது. இருந்தால் என்ன. தாளம் கொடுப்பது சிவசக்தியர் அல்லவா. பொற்றாளத்தில் ஓசை எழவே செய்தது. ஆம். பொன் தாளத்துக்கு ஓசை கொடுத்தாள் அம்பிகை. அந்தத் தலம்தான் திருக்கோலக்கா திருத்தலம். 


காவிரிக்கரைத் திருத்தலங்களுள் ஒன்றான கோலக்கா, சீர்காழிக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவிலிருக்கிறது. `நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற ஆடகப் பொன்னால் ஆன தாளத்தை சீர்காழிப்பிள்ளைக்கு ஈசன் கொடுக்க, அந்தத் தாளத்துக்கு அன்னை சக்தி ஓசை கொடுத்தாள். அதனால் ஈசன் 'திருத்தாளமுடையார்' அல்லது 'சப்தபுரீஸ்வரர்' என்றும், இறைவி 'ஓசை கொடுத்த நாயகி' என்றும் வணங்கப்படுகிறார்கள். 2,000 ஆண்டுகள் பழைமையான திருக்கோலக்கா கோயில், சம்பந்தரால் பாடப்பெற்றது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள, தேவாரப் பாடல்பெற்ற 15 வது தலம் இது.


திருக்கோலக்கா, `பாடல் பெற்ற தலம்’ என்பதைத் தாண்டி, `ஓசை பெற்ற தலம்’ என்றும் புகழப்படுகிறது. இதனால் சரிவர பேச்சு வராத பலரும் இங்கு வந்து வழிபட்டுத் தெளிவாகப் பேசும் திறனைப் பெறுகிறார்கள். விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்கை, முருகன், மகாலட்சுமி, சோமாஸ்கந்தர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் நவகிரக சந்நிதிகளும் திருக்கோலக்கா ஆலயத்தில் அமைந்துள்ளன. கையில் தாளத்துடன் காட்சிதரும் ஞானசம்பந்தரின் வடிவமும் இங்கிருக்கிறது. இந்தக் கோயிலிலுள்ள கொன்றை மரம் மூன்றாகப் பிரிந்து, மும்மூர்த்தியர் வடிவில் பக்தர்களை ஆசீர்வதிக்கிறது. சீர்காழியில் சித்திரைப் பெருவிழாவின் இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும்போது, திருக்கோலக்காவில், பொற்றாளம் கொடுக்கிற திருவிழா நடைபெறும். திருஞானசம்பந்தருக்கு ஈசன் தாளம் கொடுத்த திருவருளைப் பற்றி சுந்தரரும் தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார்.


இனிய குரல் வேண்டும் பாடகர்கள் இங்கு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், நல்ல குரல் வளம் பெறுவார்கள். அம்பிகைக்குத் தேன் அபிஷேகம் செய்து அந்தத் தேனை நாவில் எழுதிக்கொண்டால் நல்ல பேச்சு வரும் என்பது நம்பிக்கை. `இங்கு வந்து பலன் பெற்ற கர்னாடக சங்கீத வித்வான்கள் அநேகம் பேர்’ என்கிறார்கள் இங்குள்ளவர்கள். செவித்திறன் குறைந்தவர்களும் இங்கு வந்து வழிபட்டு நல்ல பலனைப் பெற்றிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தெளிவான பேச்சைப் பெற்றிருக்கிறார்கள் என்று திருக்கோயிலிலுள்ள ஆவணத்தில் குறிப்பு உள்ளதாம். பொன்னுக்கே ஓசை கொடுத்த இந்த ஆலயத்து நாயகி நாவுக்கு ஓசை கொடுக்க மாட்டாளா என்ன. நம்பி வரும் அத்தனை பேருக்கும் அருள்செய்பவள் ஓசை கொடுத்த நாயகி. திக்கித் திணறிப் பேசும் பல குழந்தைகளின் குறையைத் தீர்த்து அருள்செய்த நாயகி இவள். `நன்றாகப் பேசும் திறமையும், இசைநயத்துடன் பாடும் திறமையும் வேண்டுபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து அருள்மிகு சப்தபுரீஸ்வரரையும் அருள்மிகு ஓசைநாயகியையும் வழிபட்டு, பேசும் திறனும் நன்றாகப் பாடும் திறனும் பெறலாம்’ என்பது தொன்றுதொட்டு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.