Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பிராது கொடுத்தால் பிரச்னை தீரும்! - கொளஞ்சியப்பர் திருவருள்...

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பிராது கொடுத்தால் பிரச்னை தீரும்! - கொளஞ்சியப்பர் திருவருள்...

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கொளஞ்சியப்பரை தரிசித்து ஒரு பிராது மனு கொடுத்தால்... எந்தக் கஷ்டமாக இருந்தாலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி வேண்டுதல்களோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார், விருத்தாசலம் ஸ்ரீகொளஞ்சியப்பர்.

பண்டைய காலத்தில் சோழநாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் நடுவில் அமைந்ததால் ‘நடுநாடு’ என்று அழைக்கப்படுகிறது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம். அதிலிருந்து மேற்கே சேலம் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். ‘பிராது கடவுள்’ என்று இங்கு போற்றப்படும் கொளஞ்சியப்பரான முருகன், தமிழகத்திலேயே அருவுருவமாகக் காட்சியளிக்கும் தலம் இதுதான் என்பது இதன் தனிச்சிறப்பு.

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் ‘திருமுதுகுன்றம்’ என்று அழைக்கப்படும் விருத்தாசலத்துக்கு ஒருமுறை வந்தார். அப்போது, ‘இதுவோ முதுகுன்றம்! பழமலை! அம்மையோ

முதுமையான விருத்தாம்பிகை, இறைவனோ பழமலைநாதர். ஊரும் கிழம், இறைவன் - இறைவியும் கிழம். இக்கிழங்களை பாடாவிட்டால் என்ன?’ என்று அலட்சியப்படுத்திவிட்டு போய்விட்டார். இதற்காக வருந்திய இறைவன், முருகனிடம் முறையிட்டார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

தன் தந்தையை அலட்சியப்படுத்திய சுந்தரருக்கு பாடம் கற்பிக்க எண்ணினார் முருகன். பழமலைநாதர் ஆலயத்தின் எல்லையை சுந்தரர் தாண்டக் கூடாது என்று, தெற்கே வேடப்பர், மேற்கே கொளஞ்சியப்பர், வடக்கே வெண் மலையப்பர், கிழக்கே கரும்பாயிரப்பர் என்று, நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாகத் தோன்றினார். அப்போது வேட்டுவக் குமரனாக வந்த கொளஞ்சியப்பர், சுந்தரரை வழிமறித்து பொன்னையும், பொருளையும் பறித்துக்கொண்டு, ‘பழமலைநாதரைப் பாடிவிட்டு உன் பொருட்களைப் பெற்றுக்கொள்’ என்று கூறிவிட்டார். சுந்தரர் தன் பிழைக்கு வருந்தி திருமுதுகுன்றம் சென்று பழமலைநாதரைப் பாடினார்.

பழங்காலத்தில் கொளஞ்சி மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதி இது. இங்கு மேய்ச்சலுக்கு நிறைய ஆடு, மாடுகள் வரும். அதில் ஒரு பசுமாடு மட்டும் மந்தையைவிட்டு விலகி தினந்தோறும் ஒரு புதருக்குள் சென்று ஆடாமல், அசையாமல் சிறிதுநேரம் நின்றுவிட்டு வரும். இதைக் கவனித்த மாடு மேய்ப்பவர்கள், ஒருநாள் அந்தப் பசுமாட்டை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, புதருக்குள் சென்ற பசுமாடு ஒரு கருங்கல் பீடத்துக்கு தானாகவே பால் சொரிந்து பாலாபிஷேகம் செய்தது. இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த அவர்கள், அவ்விடத்தில் ஓர் ஆலயத்தை எழுப்பினார்கள். இப்படி தானாகவே சுயம்பு வடிவில் தோன்றியவர்தான் இந்த கொளஞ்சியப்பர். இத்திருத்தலம் தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கோயிலின் சிவாச்சாரியார் மணிகண்டன், இந்த ஆலயத்தின் சிறப்பான `பிராது’ பற்றிச் சொன்னார்... ‘‘திருமணத் தடை நீங்க, பிள்ளைப்பேறு வேண்டி, தீராத வழக்குகள், தீராத நோய்கள், வீடுகட்ட, தொழில் தொடங்க... இப்படி எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை இந்தச் சந்நிதியில் கொடுக்கும் விண்ணப்பத்தில் பக்தர்கள் மனுவாக எழுதிக் கையொப்பம் இட்டு, அதை கொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து, பிராது கொடுப்பவர் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு பிராதுப் படிவத்தை குறுக்கும், நெடுக்குமாக மடித்து நூலினால் கட்டி முனியப்பர் திருப்பாதத்தில் வைத்து பூஜித்து, அவர் சந்நிதி எதிரில் உள்ள வேலில் கட்டிவிட வேண்டும்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

பிராது கொடுத்த 3 மணி நேரத்தில் அல்லது 3 நாட்களில் அல்லது 3 வாரங்களில் அல்லது 3 மாதங்களில் அந்த பக்தரின் குறைகளை நிவர்த்தி செய்துவிடுவார் கொளஞ்சியப்பர். அப்படிக் குறை தீர்க்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்துக்கு மீண்டும் வந்து வெள்ளைத் தாளில் வாபஸ் மனு எழுதி கொளஞ்சியப்பர் பாதத்தில் வைத்து வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும்'' என்றார்.

நாள்தோறும் ஆகம விதிமுறைப் படி இந்த ஆலயத்தில் நான்குகால பூஜைகள் செய்யப்படுகின்றன. கொளஞ்சியப்பருக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். அதோடு, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி, பௌர்ணமி நாட்களும் உகந்தவை.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

அருப்புக்கோட்டையிலிருந்து குடும்பத்தோடு கோயிலுக்கு வந்திருந்த செந்தில்குமார், ‘‘என் மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு இங்க வந்து பிராது கட்டிட்டுப் போனேன். மூணே மாசத்துக்குள்ள கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இப்போ பேரனும் பிறந்திருக்கான். அதோட என் சம்பந்திக்கு நீண்ட நாட்களா இழுத்துகிட்டு இருந்த நில வழக்கு ஒண்ணையும் தீர்த்துத்தரும்படி கொளஞ்சியப்பர்கிட்ட வேண்ட, அதுவும் எங்களுக்கு சாதகமாவே முடிஞ்சிடுச்சு. அந்தப் பிராது மனுவை வாபஸ் வாங்க வந்திருக்கோம்’’ என்றார் சந்தோஷமாக.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

‘‘சொந்த ஊர் சென்னை. என் மகளுக்கு ரொம்ப நாளா திருமணம் தள்ளிப் போயிட்டே இருந்தது. எங்க பக்கத்து வீட்டுக்காரர் சொல்லக் கேட்டு, இந்தக் கோயிலுக்கு பிராது மனு கட்ட வந்திருக்கேன். இந்த கொளஞ்சியப்பர், இங்க நிரம்பி வழியும் பிராது மனு, வாபஸ் வாங்க வரும் பக்தர் களையெல்லாம் பார்த்த பிறகு, எனக்கு முழு நம்பிக்கை வந்திருச்சு’’ என்கிறார் சேஷாத்ரி.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் தேன்மொழி. ‘‘பெருமழை வந்தப்போ நெலத்துல பயிரெல்லாம் மூழ்கி நாசமாகிப்போச்சு. அதனால எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். அடுத்த முறை பயிர் நல்லா விளையணும்னும், உடம்பு சுகமில்லாமப் போன என் குழந்தைக்கு சீக்கிரம் குணமாகணும்னும் இங்க வந்து பிராது மனு கட்டிட்டுப் போனோம். நாங்க பிராது கொடுத்த மாதிரியே பயிரும் நல்லா விளைஞ்சிருக்கு, என் மகளுக்கு உடம்பும் சரியாகிடுச்சு. பிராது மனுவை வாபஸ் வாங்கிட்டு, அன்னதானம் செய்றோம்’’ என்றார் பக்தியுடன்.

க.பூபாலன்   எஸ்.தேவராஜன்

எப்படிச் செல்வது?

விருத்தாசலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு நோக்கி சேலம் செல்லும் ரோட்டில் மணவாளநல்லூரில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. வேப்பூர் செல்லும் பஸ்கள் எல்லாம் கோயில் அருகில் நின்று செல்லும். ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.

தொடர்பு எண்: மணிகண்டன் சிவாச்சாரியார்  93621 51949