Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!


திருகாட்கரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை
மருவிய மாயன்றன் மாயம் நினைதொறே...

- நம்மாழ்வார்

##~##
'வா
ழையடி வாழையாய்..! எவ்வளவு அற்புதமான சொற்றொடர். விதையின் துணையின்றி, விதைப்பவன் தேவையின்றி, சுயம்புவாய் தாயின் திருவடியில் முளைத்து நிற்கும் வாழைப்பிள்ளை... நிச்சயம் ஓர் இயற்கை அற்புதம்தான்! இன்னும் சொல்லப்போனால், பரம் பொருளின் வள்ளல்தன்மைக்கு ஓர் உருவகம் வாழை!

தண்டு, பூ, இலை, காய், கனி என எல்லாவற்றையும் ஈந்துவக்கும் தெய்வ விருட்சம் அல்லவா அது!

எனில், பரம்பரை பரம்பரையாக அறம் போற்றும் மரபினரின்... வாரி வழங்கும் குலத்தினரின் குணத்தை, வாழையடி வாழை எனும் சொற்றொடரோடு பொருத்திப் போற்றுவது சிலாக்கியம்தான்!’

- பெரியவர்கள் சிலாகித்த வாழையின் சிறப்பு களை மனதில் அசை போட்டபடி வரப்பின்மீது அமர்ந்திருந்தார் அவர். மேற்கு சூரியன்... மலைக்காற் றுக்கு அசைந்தாடும் வாழை இலைகளின் ஊடே மறைந்தும் வெளிப்பட்டும் கண்ணாமூச்சி ஆட... ரசிக்கத் தோன்றவில்லை அவருக்கு.

'வாழை விருட்சம் சிறப்பானதுதான்... ஆனாலும், அது குலைதள்ளவில்லை என்றால் என்ன பயன்?!’

ஆமாம்... வாழையடி வாழையாய் வாழையைப் பயிரிடும் குடும்பம் அவருடையது. இவரும் வாழை பயிரிட்டார்.

மலை நாட்டில் மழைக்கா பஞ்சம்?! மும்மாரி பெய்தது. நன்கு விளைந்தது. இவர் தோட்டத்திலும் செழித்து வளர்ந் தன வாழைகள். ஓர் ஆள் விரித்துப் படுக்கலாம்; அவ்வளவு பெரிய இலைகள். தண்டை நறுக்கினால்... ஒரு வாரத்துக்கு, துணைக் கறிக்கு வேறு காய்கள் தேட வேண்டாம்; அவ்வளவு பருமன். ஆனாலும் அவர் தோட்டத்து வாழைகள் மட்டும் பூக்கவில்லை; குலை தள்ளவும் இல்லை!

'என்ன குறையோ... யார் விட்ட சாபமோ?’ எனத் தன்னையே நொந்து கொண்டார்.

மெள்ள எழுந்தவருக்கு, முன்தினம் அம்மாவன் (தாய்மாமன்)  சொன்னது நினைவுக்கு வந்தது. ''சலனப்படாதே மகனே... காக்கரை அப்பனை மனசார வேண்டிக்க! எல்லாம் சரியாப் போகும்!''

மனையை நோக்கி நடக்க ஆரம் பித்தார். 'இந்தத் தடவையாவது என் வாழைகள் குலை தள்ளட்டும்; காக்கரை யப்பா... உமக்குப் பொன்னாலேயே வாழைக்குலை செய்து காணிக்கை யாக்குறேன்’ - அவர் மனம் ஆண்டவ னைச் சரணடைந்தது.

அவருடைய வேண்டுதல் வீண்போக வில்லை. காக்கரையப்பனின் கருணை மழையால் அருள் பெற்றது அவரது தோட்டம். இந்த முறை, அவர் தோட் டத்து வாழைகள் சூல்கொண்டன; பூ பூத்தன;  பெரிது பெரிதாய் குலைதள்ளி நின்றன!

வேண்டுதல் பலித்துவிட்ட மகிழ்ச்சி யில், அந்த அன்பர் ஸ்ரீகாக்கரையப்பனுக்கு பொன் வாழைக்குலை அர்ப்பணித்த தாகச் சொல்கிறது திருகாட்கரை தல புராணம்.

பிறகு, அந்த பொன் வாழைக்குலை காணாமல் போக, அவ்வூர் அரசன் தீர விசாரிக்காமல், யோகி ஒருவரை தண்டித் தான். பின்னர், அந்த பொன் வாழைக் குலை சந்நிதியிலேயே இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது; தொடர்ந்து  அவ்வூர் மக்கள் யோகியின் சாபத்துக்கு ஆளான தையும், பிறகு அவராலேயே நிவர்த்தி பெற்றதையும் கதை கதையாய் சொல்கிறார்கள்!

காக்கரையப்பனுக்கு நேர்ந்துகொண்டு, பலன் பெற்ற இந்தக் கதையையட்டியே, கேரளத்தில் விளையும் வாழையின் ஒருவகைக்கு, 'நேந்திரம் வாழை’ என்று பெயர் வந்ததாக சிலாகிக்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருகாட்கரை. பேச்சு வழக்கில் திருகாக்கரை என்று மருவியதாம். எர்ணா குளம் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோக்களும் செல்கின்றன (கட்டணம் 100 ரூபாய்). இங்கிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.

இந்த மலைநாட்டு திவ்வியதேசத்தை, மகாபலிக்கு அருளிய வாமனர் அவதரித்த க்ஷேத்திரமாகக் கொண்டாடுகிறார்கள் கேரள மக்கள். பரசுராமர் ஸ்தாபித்த ஆலயம் என்பது விசேஷம். கேரள தலம் என்றாலும், இங்கே பெருஞ்செல்வநாயகி என்று தூய தமிழ்ப் பெயருடன் தாயார் அருள்புரிவது சிறப்பு!

இயற்கை எழிலார்ந்த சூழலில் கேரளப் பாணியுடன் அமைந்திருக்கிறது கோயில். முகப்பிலேயே மரச் சிற்பமாய் ஸ்ரீவாமன மூர்த்தி. அடுத்து, அழகாய் ஒரு மண்டபம்; அதன் தென்புறம் யட்ச பிரதிஷ்டை. வடகிழக்கில் ஸ்ரீகோபால கிருஷ்ணன் சந்நிதி. தென் மேற்கில் நாகப் பிரதிஷ்டையையும் தரிசிக்கலாம்.

வெளிப் பிரகாரத்தின் தென்புறத்தில் மிகப்பெரிய அரச மரம், ஆலயத்துக்குப் புனிதம் கூட்டுவதாக அமைந்துள்ளது. தேவி பகவதி, சாஸ்தா ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். மகாபலி வழிபட்ட லிங்க மூர்த்தமும் இங்கு உண்டு.

கோயிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்ததாக ஐதீகம். இங்கே சிம்மாசனம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் இந்த இடத்தில் விளக்கேற்றி, மகாபலியை வழிபடுகின்றனர்.

கருவறையில் புஷ்கல விமானத்தின் கீழ், தெற்கே திருமுக மண்டலமாக... திருக்காக்கரையப்பன் என கேரள பக்தர்கள் மிக உரிமையோடு விழித்து வழிபடும் ஸ்ரீவாமன மூர்த்தி. சரதீப ஒளியில் அருள்கூட்டும் அந்த ஆண்டவனின் திருமுகத்தைத் தரிசித்து, மெய்யுருகி நிற்கிறோம்.

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்...

- எவ்வளவு அழகாய் பாடி வைத்திருக்கிறார் நம்மாழ்வார்! அண்டசராசரங்கள் அனைத்தும் தன்னுள் அடங்கி நிற்க, அந்தத் திருமாலும், அகலத்தின் ஒவ்வொரு அணுத் துகளிலும் வியாபித்திருக்கிறாராம்!

இதை நமக்கெல்லாம் உணர்த்தவே, சிறியனாய் வந்து பிறகு பெரியனாய் வளந்து நின்றான் போலும் எம்பெருமான்!

கண்ணீர் மல்க, வணங்கிப் பணிகிறோம். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவும், ஞானம் வேண்டியும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களி லிருந்தும் கூட்டம் கூட்டமாய் இங்கு வந்து திருகாக்கரையப்பனை வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், பால் பாயசம் சமர்ப்பித்து வழிபட்டு, அதையே பிரசாதமாக பக்தர்களுக்கும் விநியோகித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஆலயத்தை வலம் வந்து வணங்கினோம். மிகப் புராதனமான ஆலயம். இதன் வரலாற்று தகவல்களை விசாரித்தபோது, தமிழ் கல்வெட்டு கள் இங்கு உண்டு என்பதை அறிய முடிந்தது. கி.பி. 9 முதல் 12-ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்களும் இந்தத் தலத்தைச் சிறப்பித்துள்ளனர்.

காலை 5 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருவோண உற்சவம் (ஓணம் பண்டிகை) வெகு விமரிசையாக நடைபெறுமாம். ஒருகாலத் தில் 28 நாட்கள் இந்த விழாவைக் கொண்டாடியுள்ளனர். இப்போது, பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது என் கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

நீங்களும் திருக்காக்கரை சென்று வாருங்கள்; காக்கரை அப்பன் அருளால், வாழையடி வாழையாய் உங்கள் சந்ததி செழிக்கட்டும்!

- அவதாரம் தொடரும்...

வாமன க்ஷேத்திரம்... நம்பி கோயில்!

திருநெல்வேலியிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குறுங்குடி. நெல்லை- நாகர்கோவில் பாதையில் உள்ளது வள்ளியூர். இங்கிருந்து திருக்குறுங்குடிக்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. நெல்லையிலிருந்து (27 கி.மீ) நான்குநேரியை அடைந்து, அங்கிருந்தும் திருக்குறுங்குடிக்குச் செல்லலாம்.

ஸ்ரீஅழகிய நம்பி அருள்பாலிக்கும் தலம் இது. தாயார்- ஸ்ரீகுறுங்குடிவல்லி நாச்சியார். நம்பாடுவான் எனும் அடியவருக்காக கொடிமரத்தை நகரச் செய்து பெருமாள் அற்புதம் நிகழ்த்திய தலம் இது. சிவபெருமான் மற்றும் ஸ்ரீபைரவ மூர்த்திக்கும் இங்கு சந்நிதிகள் இருப்பது விசேஷம்.

இரண்டு அவதாரங்களுடன் தொடர்புபடுத்திச் சிறப்பிக்கிறார்கள் இந்தத் தலத்தை. திருமால், மிகப் பிரமாண்டமாக வராக அவதாரம் எடுத்து அசுர வதம் நிகழ்த்திய பிறகு, தன்னுடைய திருமேனியை குறுக்கிக் கொண்ட தலமாதலால் திருக்குறுங்குடி எனும் பெயர் பெற்றது என்கிறார்கள்.

அதேபோன்று... பகவான் திரிவிக்கிரமனாக விண்ணளந்து நின்றபோது, அவரின் திருப்பாதக் கமலத்தை, பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகித்தார்.  அந்த நீர், பகவானின் பாதச் சிலம்பில் பட்டு பூமியில் விழுந்து, இந்தத் தலத்தில் சிலம்பாறாக ஓடுகிறது என்கின்றன ஞானநூல்கள்!