Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இறையருளைத் தேடி..!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இறையருளைத் தேடி..!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'குரு பார்க்க கோடி நன்மை’ என்று சொல்லுவார்கள். இது சத்தியமான வார்த்தை. தமது ஒரு பார்வையால் நம்முடைய அத்தனை மாசுகளையும் விரட்டி, நம் மனத்தைத் தெளிவுறச் செய்துவிடுவார், குரு.

அம்மாவின் அன்பு இல்லாமல் வளர்ந்தாலும், தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் போனாலும், நல்ல குருநாதர் மட்டும் கிடைத்து விட்டால், அந்த குருநாதரே கதியென்று அவரின் திருவடியைப் பற்றிக் கொண்டுவிட்டால், அதைவிடப் பாக்கியம் இந்த உலகில் வேறில்லை. ஆனால், நல்லதொரு குருநாதர் கிடைப்பது என்பது பூர்வஜென்ம புண்ணியம்; இறை வழங்குகிற கொடை!

தேடிக் கிடைப்பதே பொக்கிஷம். தேடல் இல்லாதவர்களுக்குப் பொக்கிஷம் கிடைப்ப தில்லை. குருநாதர் என்பவரைத் தேடவேண்டும்; 'அவர் வேண்டுமே, வேண்டுமே...’ என்று ஏக்கத்துடன் அவரை நாடித் தேடி அடைய வேண்டும். 'இவர்தான் நம் குருவோ?’ என்று பார்க்கிறவர்களையெல்லாம் குருவாகப் பாவிக்கிற பக்குவம் வந்துவிட்டால், உள்ளே அமைதி வந்துவிடும். அமைதியான மனம், எதையும் தெளிவுறச் சிந்திக்கும்; அப்படிச் சிந்தனை யில் தெளிவு இருப்பின், செயலிலும் தெளிவு இருக்கும். இந்தச் சிந்தனை தெளிவுக்கும் செயல் தெளிவுக்கும் குருநாதரின் அருள் அவசியம்; அவரின் அருட்பார்வை மிக மிக அவசியம். திருப்பிடவூர் என்கிற திருப்பட்டூர் திருத்தலம், குருவின் பரிபூரண அருள் கொட்டிக் கிடக்கிற அற்புதத் தலம்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

குருர் பிரம்மா குருர்விஷ்ணு
குருர்தேவோ மகேஸ்வரஹ;
குருஸ்சாட்சாத் பரப்பிரம்ம:
தஸ்மை ஸ்ரீகுரவே நமஹ!

எனும் ஸ்லோகத்துக்கு ஏற்ப அமைந் துள்ள ஒப்பற்ற திருத்தலம். இங்கு, ஸ்ரீபிரம்மா தனிச்சந்நிதியில், கம்பீரமாகக் காட்சி தருகிறார். அவரையடுத்து, ஸ்ரீகுரு தட்சிணா மூர்த்தியின் தரிசனம்; அடுத்து, கோஷ்டத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு தரிசனம் தர... உள்ளே கருவறையில், பிரம்மாவுக்கு அருட்கடாட்சம் வழங்கிய வள்ளலான, தன் அடியார்கள் நலமுடன் வாழ அருட்காட்சி தருகிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்.

பொதுவாக, அம்பாளையும் ஸ்வாமியையும் தரிசிக்கும்போது, அவர்களின் திருவிக்கிரகங்களுக்கு நேராக நிற்காமல், சற்று ஒதுங்கி நின்றபடி, தரிசிக்கவேண்டும். அதாவது, இறைவன் மற்றும் அம்பாளின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே, நம் பாவமெல் லாம் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

அதேபோல், குருநாதரைத் தரிசிக்கும்போது, அவருக்கு எதிரில் நின்றுகொள்ள வேண்டும். அதாவது அவருடைய திருப்பார்வை நம் மீது நேராக விழவேண்டும். அதாவது, குருவுக்கு இருக்குமிடம் முக்கியமில்லை; அவர் பார்க்கிற இடமே முக்கியம்; அந்த இடமே சுபிட்சம் பெறும். ஆகவே, இங்கு ஸ்ரீபிரம்மாவை, அவருக்கு நேராக நின்று, பவ்யமாக, எந்தக் கர்வமும் அலட்ட லுமின்றி, 'இந்த இப்பிறவியில் செய்த என் தவறுகளையும் பாபங்களையும் போக்கி, என் தலையெழுத்தைத் திருத்தி எழுதி அருளுங்கள்’ என பிரார்த்தனை செய்யுங்கள். இங்கே, இன்னொரு சிறப்பு... ஸ்ரீபிரம்மாவை வணங்கும்போதே ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம் (எதிரில் சின்னதொரு சிற்ப வடிவில் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி). அதையடுத்து, கோஷ்டத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு.

அதுமட்டுமா? இந்தத் தலத்தில் வேறெங்கும் இல்லாதபடி, ஸ்ரீபதஞ்சலி முனிவரின் திருச்சமாதி இருப்பதை ஏற்கெனவே அறிந்தோம், அல்லவா? ஸ்ரீபிரம்மாவின் சந்நிதிக்கு அடுத் துள்ள திருச்சுற்று மாளிகைப் பகுதியில், பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. தற்போது, திருச்சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. எனவே, பதஞ்சலி முனிவரின் சமாதிக்கு அருகில் அமர்ந்தபடி, தியானம் செய்வதற்கு ஏற்றதாக இது அமைந்துள்ளது எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

வியாழக்கிழமை, குருவுக்கு உகந்த நாள். அன்றைய நாளில், நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானையும், குரு ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும்,  ஸ்ரீபிரம்மாவையும் தரிசிப்பது, நம் விதியைத் திருத்தி எழுதி, சீரும் சிறப்புமாக நம்மை வாழவைக்கும். குரு பகவானுக்கு அதிதேவதையான ஸ்ரீபிரம்மா தனிச் சந்நிதியுடன் திகழ்கிற தலம் இது. ஆகவே, சக்தியும் சாந்நித்தியமும் அதிகம் திருப்பட்டூருக்கு! குறிப்பாக, ஸ்ரீபதஞ்சலி யோக சூத்திரத்தை அருளிய ஸ்ரீபதஞ்சலி முனிவரின் சமாதிக்கு அருகில், சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்து தியானம் செய்வது, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைத் தரும். முனிவரின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

ஸ்ரீபிரம்மாவை வியாழக்கிழமை மற்றும் உங்களின் நட்சத்திர நாளில் வந்து தரிசித்து வணங்குவது மிகுந்த பலனைத் தரும். அவருக்கு மஞ்சள் காப்பு செய்தும் பிரார்த்தனை செய்யலாம்; அல்லது வஸ்திரம் சார்த்தியும் வணங்கலாம்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில், பதஞ்சலி முனிவரின் சமாதியை வணங்கினால், நமக்கு ஞானத்தை அள்ளி வழங்குவார், பதஞ்சலி முனிவர். புத்தியில் தெளிவு ஏற்படும்; பேராசையும் நயவஞ்சக குணமும் அடியோடு களைந்து காணாமல் போய்விடும்.

ஆக, நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான்; ஸ்ரீபிரம்மா; ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபதஞ்சலி முனிவர் ஆகியோரை மனதாரத் தரிசியுங்கள். முக்கியமாக, ஸ்ரீபிரம்மாவுக்கு அருள் புரிந்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை கண்ணாரத் தரிசித்து வழிபடுங்கள்; வளம் பெறுவீர்கள்!

அந்தக் காலத்தில், திருப்பிடவூர் என்ற திருநாமத் துடன் திகழ்ந்த ஊருக்கு,  திருப்படையூர் என்றும் ஒரு திருநாமம் இருந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அதென்ன திருப்படையூர்?!

சூரனை அழிக்க, படை திரட்டிச் சென்று, வென்றார் அல்லவா முருகப் பெருமான். அப்படிப் படை திரட்டிச் சென்றவர், தன் வீரர்களுடன் தங்கிச் சென்ற திருத்தலம் என்கிற பெருமை, இந்தத் திருப்பட்டூருக்கு உண்டு.

இங்கேயுள்ள ஸ்ரீசுப்ரமணியர் கொள்ளை அழகு! சூரசம்ஹாரம் செய்த திருநாளில், கந்த சஷ்டி வந்திருக்கிற இந்த வேளையில், திருப்பட்டூர் தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்ரமணியரைத் தரிசிப்போமா?

- பரவசம் தொடரும்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism