Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ளம் வயது தோழரான ரங்கன் மீது, பகவான் ஸ்ரீரமணர் மிகவும் பிரியத்தோடு இருந்தார். நன்கு தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல; ரங்கனின் அவஸ்தைகள், ஒரு குடும்பியின் அவஸ்தைகள். அதே நேரம் ரங்கன், ஸ்ரீரமண மகரிஷியின் தொடர்பு மூலம் மேன்மையான நிலைக்கு வரப் பரிதவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாமா, குடும்பப் பாரம் சுமக்கலாமா என்று அல்லாடினார். உலகில் பல பேர் ரங்கனைப் போல பல குழந்தைகள் பெற்று, அவர்களைக் கரையேற்ற வேண்டுமே என்கிற கவலையோடு இருக்கிறவர் கள். அவர்களின் நிலை பகவானுக்கு நன்கு தெரிந்திருந்தது. குடும்பத்தில் உள்ளவர்களைப் பக்குவப்படுத்துவதுதான், ஒரு துறவியின் கடமை என்பதாய் கூறுவது உண்டு.

##~##
'மாட்டிக் கொண்டாயல்லவா... அழிந்து போ’ என்று கோபிப்பதில்லை. 'உதறிவிட்டு வா! அவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என்று வலியுறுத்துவதில்லை. 'ஏற்றுக் கொண்ட பொறுப்பைச் செவ்வனே செய்’ என்பதே அவர் அறிவுறுத்தல். அங்கிருந்தபடியே ஆன்மிகத்தில் முன்னேறலாம் என்றும் சொல்வது உண்டு.

குடும்பிக்கு மட்டும்தான் கஷ்டங்களா? சந்நியாசிக்கும் தடைகளும் சிரமங்களும் வருவது உண்டு. உணவுக்கான தட்டுப்பாடும் சுகக்கேடும் விபத்துகளும் அவர்களையும் வேதனை செய்யும் என்று உதாரணங்களுடன் விளக்கியிருக் கிறார் பகவான். குடும்பப் பாரம் சுமப்பவருக்கும் ஆன்மிக வளர்ச்சி உண்டு என்பார். ரங்கனிடம் பகவான் இது தொடர்பாக, ஒரு கதை கூறினார்.

வீரம் மிகுந்த ஓர் அரசன், எவராலும் வெல்ல முடியாத படி வாழ்ந்து வந்தான். திடீரென ஒரு நாள், தன்னை வெல்ல முயன்ற அடுத்த தேசத்து அரசனிடம் தன் நாட்டை ஒப்படைத்து விட்டு காட்டுக்குச் சென்று தவமியற்றத் தொடங்கினான். தன் அகங்காரத்தை அழித்தான். தன் தேசத்துக்குப் போய்ப் பிச்சையெடுத்தான். அப்படி எடுக்கும்போது, வேறு ஒரு நாட்டின் அரசன் மக்கட்பேறு இல்லாமல் இறந்து, அந்த நாட்டு பட்டத்து யானையால் மாலை சூடப்பெற்று, அதை மறுக்காமல் ஏற்று, அந்த நாட்டை ஆளத்துவங்கினான்.

சிறிது நாட்கள் கழித்து, அவனது சொந்த நாட்டு அரசனும் இறக்க, இவனே மீண்டும் சொந்த நாட்டுக்கும் அரசனானான். ஆனால், அவனது முந்தைய அரசாட்சிக்கும் இப்போ தைய அரசாட்சிக்கும் பெரிய வேற் றுமை இருந்தது. முன்பு, தானே எல்லாம் செய்வதாக நினைத்தான். இப்போது, தான் இறைவனின் கருவி என்ற தெளிவுடன்  நல்லாட்சி நடத்தினான். அவனின் இரு நாடுகளும் வளத்துடன் விளங்கின. இந்தப் பக்குவம்தான் குடும்பிக்கு வர வேண்டும் என்கிற கருத்தில் பகவான் இதைச் சொன்னார்.

ஒரு பெண்மணி, தனது மனம் பல திசைகளில் செல்கிறது என்றார். அதற்கு பகவான், 'மனத்தை ஒரே திசையில் திருப்பு’ என்றார். 'இதை அடைந்தால் அவர் ஞானியல்லவா’ என்று ரங்கன் வியந்தார்.

அதற்கு பகவான், 'இங்கு வந்ததும் ஞானமடைய வேண்டும் என்கிறார் கள். ஞானம் கிடைப்பது எளிது என நினைக்கிறார்கள். வழியில் பல இடையூறுகள் இருப்பதை அவர்கள் கவனிப்பதில்லை’ என்றார். தவம் செய்து மறுபடி அரசனானால், நல்லாட்சி தர முடியும்தான். ஆனால், தவம் எளிதா? அதற்கும் இடையூறுகள் பல உண்டே.

ஸ்ரீரமண மகரிஷி

பண்டரிபுரம் சென்று வந்த பக்தர் குழு, பகவானுக்கும் அவர் அன்பர் களுக்கும் விருந்தளித்து, உணவுக்குப் பிறகு, பஜனைப் பாடல்கள் பாடி, பகவானைத் தழுவிவிட்டுச் சென்றனர். ரங்கன் தழுவப்போன போது, பகவானின் உடம்பு சிவந்து கன்றிப் போயிருந்தது. இது பற்றி பகவானிடம் ரங்கன் கேட்டார். 'பண்டரிபுரத்தில் உள்ள கடவுளை இவர்கள் தழுவுவார்கள். அதுவோ கல். இது உடம்பு. ஆனாலும், அவர்கள் வழக் கத்தை விடவில்லை’ என்று பகவான் பதில் சொன்னார்.

பகவான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு கதை சொன்னார்.

ஒரு மனிதன் கடும்தவம் புரிந்தான். சிவன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் அதற்கு, ஏழ்மையும் இன்னல்களும் என்றும் வேண்டும் என்றான் அவன். சிவன் வியந்தார். செல்வம் கேட்கவில்லையே இவன்? ஏன்? காரணம் கேட்டார். அதற்கு அவன், 'செல்வந்தனாக இருந்தால், என் கண்கள் எதைக் காண வேண்டுமோ அதைக் காணாது. எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்காது. நான் உலக பந்தங்களில் மூழ்கி, பல பிறப்பு கள் எடுத்தபடி கிடப்பேன். என் இன்னல்கள் உன்னையே நினைக்க வைக்கும்’ என்றான்.

அப்படியானால் செல்வந்தனாக இருந்தால், ஞானம் கிடைக்காதா?

செல்வந்தனுக்குச் செல்வத்தின் மீதே ஈடுபாடு அதிகம் இருக்கும்; ஞான நாட்டம் மிகக் கடின மாக இருக்கும் என்றார் பகவான்.

இன்னொரு தருணம் பகவான், 'சில பேர் என்னை நமஸ்கரிப்பது, என்னை அடிப்பது போல் இருக்கும்’ என்றார், ரங்கனிடம். மற்றவர்களுக்குக் கொடுமை செய்பவர்கள் வணங்குவதைத்தான் பகவான் இப்படிச் சொல்கிறார் என்பதாக ரங்கன் புரிந்து கொண்டார்.

பகவானுடைய ஈறுகள் மிகவும் கரைந்திருப் பதைக் கண்டு, ரங்கன் காரணம் கேட்டார்.

'ஒரு மனிதர் என்னைச் சோதிப்பதற்காக விஷத்தைக் கொடுத்தார். நான் அதைச் சாப்பிட் டேன். விஷம், என் உயிரைக் குடிக்கவில்லை. ஆனால், ஈறுகளைத் தின்றுவிட்டது. சிவனுக்கு விஷம் இறங்காமல் தடுக்க, உமை இருக்கிறாள். எனக்கு யார் இருக்கிறார்கள்?’ என்றார்.

ஸ்ரீரமண மகரிஷி

ஒரு முறை, ஆஸ்ரமத்து நிர்வாகி என்று சொல்லிக்கொண்டிருந்த ஒருவர், பகவான் பத்தியத்தில் இருக்கிறார் என்று சொல்லி, அன்பர்கள் கொண்டு வரும் விஷம் போன்ற உணவுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி விடுவார். ரங்கன் கொண்டு வந்த மலை வாழைப் பழங்களும் ஏற்கப்படவில்லை. ரங்கன் ஏமாற்றத் துடன் பகவானிடம் இதுபற்றிக் கேட்க, 'நீ வழக்கம் போல பரிமாறு’ என்றார். ரங்கன் எல்லோர் இலையிலும் வாழைப் பழம் வைத்தார்.

அந்த நபர் ஓடி வந்து, 'பகவானின் பத்தியத்தைக் கெடுத்துவிட்டாயே!’ என்று கூவினார். பகவான் அவரைப் பார்த்து, 'எனக்கு என்ன வியாதி? எதற்கு எனக்குப் பத்தியம்?’ என்று கேட்டார். 'உங்களை என்ன விலைக்கு அந்த மனிதர் வாங்கியிருக்கிறார்?’ என்று கேலியாக ஒருவர் பகவானைக் கேட்க, பகவான் 'ஐயாயிரம் ரூபாய்க்கு’ என்றார், சிரித்துக்கொண்டே!

'ஒருவன் எந்தக் காரியம் செய்வதற்காக இங்கு வந்தானோ, அதுவரை இங்கிருப்பான்; அதற்குப் பின் இங்கிருக்க மாட்டான்’ என்று பகவான் சொல்ல, ஒரே வாரத்தில் அந்த மனிதரை ஆஸ்ரமம் விட்டு விரட்டி விட்டார்கள். பகவான் சிரித்தார்.

'ஒரு மனிதன் என்னைக் காண வரும் முதல் நாள், தூரத்திலிருந்து தரிசனம் செய்வான். அடுத்த நாள், அருகே வருவான். நாட்கள் போகப் போக, மிக அருகே வந்துவிடுவான் பிறகு, கழியை எடுத்துக்கொண்டு 'அங்கே போ, இங்கே போகாதே’ என்று அதட்டுவான். பிறகு, தன்னைத்தானே ஆஸ்ரமத்தின் சர்வாதிகாரி போன்று நினைத்துக் கொள்வான்’ என்று விளக்கினார். எல்லா மனித குணங்களும் பகவானுக்குத் தெளிவாய்த் தெரிந்திருந்தன.

பகவானுடைய தலை எப்போதும் ஆடிக் கொண்டேயிருக்கும். இது மூப்பினால் வந்ததல்ல. திருவண்ணாமலைக்கு வந்த நாட்களிலேயே இது இருந்தது. இதுபற்றிக் கேட்க, 'ஒரு சிறு குடிசையில் யானையைக் கட்டுவித்தால் என்ன நடக்கும்? குடிசை ஆட்டமெடுக்காதா? அதுபோலத்தான் இங்கேயும்’ என்றார். கைத்தடி இல்லாமல், பகவானால் நேராக, நிற்கவோ நடக்கவோ முடியாது.

'நடனானந்தர்’ என்று பிற்பாடு அழைக்கப் பட்ட நடராஜ முதலியார் ஒரு தமிழாசிரியர். அவர் பகவானை கந்தாஸ்ரமத்தில் சந்தித்து, அருள் வேண்டினார். உபதேசமாக எதாவது சொல்லும்படி கேட்டார்.

பகவான் அவர் கனவில் வந்தார். 'இரண்டு கண்களின் பார்வையையும் ஏகப்படுத்தி, புறத்திலும் லட்சியம் வைக்காமல், திருஷ்டியை சமப்படுத்திக் கொண்டு அப்பியசி’ என்றார்.

பார்க்கும் பொருளில் மனம் பதியாது, எதனால் பார்க்கப்படுகிறது என்று யோசித்து, கண்களி லேயே கவனம் வைக்க, மனம் கண்களிலிருந்து நழுவி உள்ளே தன்னையே பார்க்கும் வித்தை இது. இப்படிச் செய்து வர, மனம் செய்யும் சேட்டைகள் படிப்படியாகக் குறையும்.

பகவானின் கருணை வேண்டும் என்று நடனானந்தர் இறைஞ்சியபோது, பகவான் அவரிடம் பேசினார்.

'என் முன்னே இருக்கிற நடேசரின் உடம்பா என் கருணையைக் கேட்கிறது; அல்லது, அதனுள் இருக்கும் விழிப்பு உணர்வா? கேள்வி கேட்பது உணர்வு எனின், அது தன்னுடைய உண்மையான நிலையை அறியட்டும்; பிறகு, தானாகக் கடவுள் பற்றிப் புரியும். இந்த உடம்பு என் கருணையை அடைய ஆசைப்படுவதில்லை. எனவே, உள்ளே இருக்கும் உணர்வுதான் 'நீயாக’ ஒளிர்கின்றது.

இப்படி நீயாக இருக்கிற அந்த உணர்வு, நல்ல உறக்கத்தில் உடம்போடும் அதன் பொறி களோடும் மனத்தோடும் தொடர்பு கொள்வது இல்லை. விழித்து எழுந்தவுடன், உன்னை அறியாது அந்த உணர்வுடன் தொடர்பு வந்து விடுகிறது. இதுவே மனிதர் அனுபவம்.

இப்போது செய்ய வேண்டியதெல்லாம் விழிப்பு. கனவு நிலையில் மனம் உடம்போடு எந்தத் தொடர்பும் இல்லாமல் உறக்கத்தில் எப்படியிருந்தாயோ அப்படி இருப்பதுதான்.

உண்மையில், உன் உணர்வுக்கும் மற்றவற் றுக்கும் எந்தத் தொடர்புமில்லை. உறக்கத்தில் எந்த பந்தமும் உருவமும் இல்லாது இருப்பதை, நீ உணர்வதில்லை. எழுந்த பின் தோன்றும் மனநிலையையே உறக்கத்திலும் இருந்ததாக நினைக்கிறாய்.

நீ எந்த பந்தமும் அற்றவன் என்று உறக்கத் திலும் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். தொடர்ந்த நீண்ட நாள் பயிற்சியில், இந்த அனுபவம் கைகூடும். இந்த அனுபவம் கை கூடினால், உன் நிலை கடவுள் நிலை.

திரும்பத் திரும்ப பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் படிக்க, இந்த ஆன்ம அனுபவத்தில் நிச்சயம் முன்னேற முடியும்.

- தரிசிப்போம்...