தொடர்கள்
Published:Updated:

தீர்த்த திருவிழாவும் தீபப் பெருவிழாவும்!

தீர்த்த திருவிழாவும்  தீபப் பெருவிழாவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
தீர்த்த திருவிழாவும் தீபப் பெருவிழாவும்!

சங்குதீர்த்த புஷ்கரமேளாபா.ஜெயவேல்

தீர்த்த திருவிழாவும்  தீபப் பெருவிழாவும்!

வேதங்களே மலை வடிவம் கொண்டதால் வேதகிரி. வாழை மரம் நிறைந்த பகுதியானதால் கதலி வனம். நான்கு யுகங்களிலும் கழுகுகள் பூஜை செய்வதால் கழுக்குன்றம். கல்வெட்டுத் தகவல்களின்படி உலகளந்த சோழபுரம், இந்திரபுரி, நாராயணபுரி, பிரம்மபுரி, முனிக்கணபுரி, தினகரபுரி, ருத்திரகோடி என்று இன்னும் பல திருப்பெயர்களுடன் திகழும் திருத்தலம் திருக்கழுக்குன்றம்.

திருக்கயிலையிலிருந்து மூன்று சிகரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, நந்திதேவரால் தென் திசைக்குக் கொண்டுவரப்பட்டனவாம். திருப்பருப்பதம், திருக்காளஹஸ்தி மற்றும் திருக்கழுக்குன்றத்தில் முறையே அவை மூன்றும் சேர்க்கப்பட்டன. எனவே, இது தென் கயிலாயம் ஆகும். இங்கு தர்மம் செய்தால், அது கோடி மடங்கு பலன் தரும். எனவே, இது தர்மகோடித்தலம் ஆகும் என்றும் போற்றுகிறார்கள்.

திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு ஆகிய பறவைகளும், துவாபர யுகத்தில் சம்புகுத்தன் மற்றும் மாகுத்தன் ஆகிய அடியவர்களும், கலி யுகத்தில் பூடா, விருத்தா எனும் முனிவர்களும் வழிபட்ட தலம் இது. இறைவன் அருள்மிகு வேதகிரீஸ்வரர் என்று திருநாமம் கொண்டு, அம்மை திரிபுரசுந்தரியுடன் அருள்பாலிக்கும் இந்தத் தலம், செங்கல்பட்டு - மாமல்லபுரம் சாலையில், செங்கல்பட்டில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பன, சங்குதீர்த்தமும், 12 ஆண்டுகளுக்கு அதில் நடைபெறும் புஷ்கரமேளா பெருவிழாவும் ஆகும்.

இந்த சங்கு தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்தால், தீராத நோயெல்லாம் தீரும். மலையடிவாரக் கோயிலின் எதிரில் அமைந்திருக்கும் தெருவின் கோடியில் இருக்கும் குளமே, சங்கு தீர்த்தம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தீர்த்தத்தில் சங்கு (குறிப்பாக, வலம்புரிச் சங்கு) தோன்றுவதால் இந்தப் பெயர். பெரிய குளமாக விளங்கும் சங்கு தீர்த்தத்தைச் சுற்றிலும் படிகள் உள்ளன. நடுவில் நீராழி மண்டபமும் நீராடுவதற்கு வசதியாகப் படித்துறை மண்டபமும் உள்ளன.

மார்க்கண்டேயன் தவம் இயற்றி, சிவபெரு மானை வழிபட்டான். வழிபாடு செய்ய தீர்த் தத்தை எடுக்கப் பாத்திரம் இல்லை. என்ன செய்வதென்று அறியாமல் இறைவனை இறைஞ்ச, அவனுக்காக சங்கு தோன்றும்படி செய்தாராம் இறைவன். எனவே, சங்கில் நீரெடுத்து அவன் வழிபட்டான்.  இப்படி, சங்கு பிறந்த பொய்கையே, சங்கு தீர்த்தமாயிற்று. மார்க்கண்டேயனுக்காக சங்கு தோன்றிய இடமல்லவா! இங்கு நீராடினால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் கூடும்.

திருக்கழுக்குன்றத்தின் சங்குதீர்த்த புஷ்கர மேளாவும் லட்சதீபப் பெருவிழாவும் பிரசித்த மானவை. குரு பகவான், பன்னிரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் நேரத்தில், கங்கை முதல் அனைத்து நதிகளும் புண்ணிய தீர்த்தங்களும் சங்கு தீர்த்தத்தில் வந்து தாங்களே புனித நீராடுகின்றன. இதுவே சங்கு தீர்த்த புஷ்கரமேளா என்று கொண்டாடப் படுகிறது. அன்று, சங்கு தீர்த்தத்தில் நீராட லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.  மாலையில் லட்சதீபப் பெருவிழா நடைபெறும். கோயிலிலும், சங்குதீர்த்தத்திலும், ஊரெங்கும் தீபம் ஏற்றிக்கொண்டாடுவது வழக்கம்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி திருக்கழுக்குன்றத்தில் சங்கு தீர்த்த புஷ்கரமேளா கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள இருக்கும் சங்கு தீர்த்த புஷ்கரமேளாவில் கலந்துகொண்டு சங்கு தீர்த்தத்தில் புனித நீராடி வாழ்வில் சங்கடம் நீங்கி சந்தோஷம் காணலாம்.

 படங்கள்: ரா.ஹரிபிரசாத்

விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள்...

விழாவுக்கு வரும் பக்தர்களுக்குச் செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல் பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். அவர் அளித்த விவரம்:

‘‘1-ம் தேதி 4 மணியிலிருந்து 2-ம் தேதி இரவு 12 மணிவரை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 5 முதல் 8 லட்சம் வரையிலும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
பக்தர்கள் எக்காரணம் கொண்டும் சங்கு தீர்த்தக் குளத்தில் இறங்கக் கூடாது. குளக்கரை மேலே உள்ள ஸ்ப்ரே மூலமாக பக்தர்களுக்கு குளத்து நீர் தெளிக்கப்படும். இதற்காக குளத்தைச் சுற்றி 16 ஸ்ப்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளன. குளத்தைச் சுற்றி உடைமாற்றும் அறைகள் ஐந்து அமைக்கப்பட்டுள்ளன.

ஊரின் நுழைவுப் பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான வழிகாட்டி பேனர்கள் வைத்துள்ளோம். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரும் அங்கே உதவிக்குத் தயாராக இருப்பர். முக்கிய அதிகாரி களின் செல்போன் எண்கள் ஆங்காங்கே டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ளன.

அன்னதானம் செய்ய விரும்புவோர்கள் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும். மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்பு அதிகாரி உணவை பரிசோதித்த பின்னரே பக்தர்களுக்கு வழங்க அனுமதிக்கப்படும். அன்னதானம் செய்யும் இடத் துக்கு பக்கத்தில் குப்பைதொட்டிகளில் மட்டுமே குப்பையை போடவேண்டும்.

தீர்த்த திருவிழாவும்  தீபப் பெருவிழாவும்!

பிளாஸ்டிக் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாட்டர் பாக்கெட்டுகள் விற்பனையும் தடை செய்யப் பட்டுள்ளது. இங்கு வழங்கப்படும் நீர் தரமானது என்பதால், பக்தர்கள் தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

கிரிவலப்பாதை, பார்க்கிங் பகுதி, சங்குதீர்த்த குளம், சாலை ஓரங்கள் என மக்கள் கூடும் இடங்களில் கழிவறைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இலவச கழிவறையைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

குளத்தைச் சுற்றி நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருவார்கள். குளத்துக்குள் நான்கு படகுகளில் 40 பேர் அடங்கிய மீட்புக்குழுவினர்  ரோந்துப் பணியில் இருப்பார்கள்.

வயதானவர்கள், நடக்க முடியாதவர் கள் போன்றவர்கள் கோயிலுக்குச் செல்வதற்காக சிறப்பு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு துணையாக ஒருவரை அழைத்துக் கொள்ளலாம்.

வயதானவர்கள் தங்குவதற்காக இங்குள்ள பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் பண்பாட்டு துறை மூலமாக கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1500 காவலர்கள், ஆறு இடங்களில் மெடிக்கல் கேம்ப், 50 சிசிடிவி கேமராக்கள் என பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.