
அருட்களஞ்சியம்
கோதை கண்ட கனவு!
‘திருவாடிப் பூரத்தில் ஜகத்துதித்தாள் வாழியே’ என்று கொண்டாடப்படும் ஆண்டாள், கண்ணபிரானையே மணாளனாக அடையவேண்டி தவமாய் தவமிருந் தவள். கண்ணபிரானை மணம் முடிக்கும் நாள் என்று வருமோ என்று ஏங்கித் தவித்த ஆண்டாள் ஒரு கனவு காண்கிறாள். அந்தக் கனவில் கண்ணபிரான் தோன்றி அவளை மணம் செய்துகொள்கிறார். அந்தக் காட்சியை ஆண்டாள் தன்னுடைய வாரணமாயிரம் பகுதியில் அழகாக படம் பிடித்துக் காட்டுகிறாள்.
அற்புதமான அந்த பாசுரங்களில் சில, அழகு ஓவியங்களுடன் 1944-ம் வருடம் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியானது. அந்தப் பாடல்களும் படங்களும் இங்கே உங்களுக்காக! இந்தப் பாசுரங்களை பாராயணம் செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.
ஓவியங்கள்: ரவி





லட்சுமண கோபம்
‘‘ராமன்தான் காட்டுக்குப் போகிறான்; பரதன்தான் ஆளப் போகிறானா? அராஜகம் ஏற்பட்டு, எல்லாம் பாழாய்ப் போக வேண்டியது தான்!” என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள்:
‘ஆளான் பரதன் அர(சு)’ என்பார், ‘ஐயன் இனி
மீளான்; நமக்கு விதிகொடிது காண்!’ என்பார்.
இவர்கள் குணக்கடலும் வைராக்கிய புருஷனுமான பரதனை நன்கு அறிந்தவர் கள். ‘ஆளான் பரதன் அரசு!’ என்று, முன்கூட்டியே பரதன் கிரீடத்தை மறுத்து விடுவான் என்பதைக் குறிசொல்வது போலச் சொல்லி விடுகிறார்கள். எனினும், நகர மாந்தர்களில் பரதனை இகழ்ந்து பேசுகிறவர்களும் உண்டு. இவர்கள், பரதனை ‘வஞ்சித்த பேதை சிறுவன்’ - அதாவது வஞ்சித்த கைகேயியின் பிள்ளை என்று குறிப்பிடுகிறார்கள்.

‘‘அந்த வஞ்சனைக்காரி மீதுதான் கிழச் சக்ரவர்த்திக்கு என்ன மோகம்! அதனால்தான் மதிமயங்கி ராஜ்யத்தை அவளுக்கும் அவள் மகனுக்கும் கொடுத்திருக்க வேண்டும்” என்று சக்ரவர்த்தியைப் பழிக்கிறார்கள் சில நகரவாசிகள்.
‘ஆதி அரசன் அருங்கே
கயன்மகள்மேல்
காதல் முதிரக் கருத்தழிந்தா
னாம்’ என்பார்.
‘‘நம் கிழட்டுச் சக்ரவர்த்திக்கு மீசை நரைத்தும் ஆசை நரைக்கவில்லையே! வயது முதிரக் காமமும் முதிர்ந்து அறிவைக் கொன்று விட்டதே!” என்று பரிகாசமாய்ப் பேசுகிறார்கள்.
கைகேயி, ராஜ்யத்தை வரத்தினால் கவர்ந்து கொண்டதையும், அண்ணனுக்கு வனவாசம் விதித்ததையும் கேள்விப்பட்டான் லட்சுமணன். ஊழித்தீயைப்போல ஜொலிக்கிறது லட்சுமண கோபம். வாளையும் வில்லையும் அம்பறாத் தூணியையும் தரித்து ஒரே கோபாவேசமாய்க் குமுறுகிறான், ‘‘பூமிதேவிக்குப் பாரம் அதிகமாய்ப் போய்விட்டது, அதைத் தீர்க்க வேண்டாமா?” என்று.
புவிப்பாவை பரங்கெடப், போர் உவந்
தோரை யெல்லாம்
அவிப்பானும், அவித்(து) அவர் ஆக்கையை
அண்டம் முற்றக்
குவிப்பானும், எனக்(கு) ஒரு கோவினைக்
கொற்ற மௌலி
கவிப்பானும், நின்றேன்; இது காக்குநர்
காமின்!’ என்றான்.
மிக்க வருத்தத்தோடு ராமனிடம் பேசுகிறான்: ‘‘உன்னிடத்தில் அன்பில்லாதவர்கள், இரக்கமில்லாதவர்கள், உன்னை வனத்துக்கு அனுப்பிவிட்டார்கள். எந்தத் கண்களால் உனக்கு ராஜ்யம் கொடுத்ததைக் கண்டேனோ, அதே கண்களால் ஈந்து வைத்து இல்லையென்றதையும் காண்கிறேன். நான் இதையும் பார்த்துக் கொண்டு அந்த மன்னவன் போல உடலையும் உயிரையும் ஒருங்கே பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருப்பேனா?!”
இப்படி, லட்சுமணன் புண்பட்ட உள்ளத்துடன் பேச, ராமன் உள்ளம் பெரிதும் புண்பட்டுவிட்டது. தந்தையைப் பற்றித் தம்பி எவ்வளவு இழிவாகப் பேசிவிட்டான்! சிறிய தாயையோ பெரிய சூழ்ச்சிக்காரியென்றே நினைத்துவிட்டான்! தொலை தூரத்தில் மாமன் வீட்டிலே போயிருக்கும் பரதனையும் சதியாலோசனையிலே கலந்துகொண்ட பகைவனாகவே கருதிவிட்டான் போலும்!
இப்படியெல்லாம் எண்ணியெண்ணிப் புண்ணான ராமன் உள்ளம், மிக்க உணர்ச்சியுடன் லட்சுமணனின் உள்ளத்தைச் சாந்தப்படுத்த முயல்கிறது. நதியை உபமானமாகக் கொண்டு விதியைக் குறித்துப் பேசி, லட்சுமணனைச் சமாதானப்படுத்தப் பார்க்கிறான் கருணை மேகமான ராமன்.
நதியும் விதியும்
நதியில் தண்ணீர் வரவேண்டுமென்றால் மலையில் மழை பெய்ய வேண்டும். அதற்குக் காற்று, மேகங்களை மலைப் பக்கமாக அடித்துக்கொண்டு வரவேண்டும். மேகங்கள் அப்படி வருவதற்கு அனுகூலமான காற்று வீசவேண்டும். பிரதிகூலமான காற்று மேகங்களை வேறு எங்கேயாவது கொண்டு போய்விடும். மேலும், கடல்நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகப் பரிணமித்து, அந்த நீராவி மேகம் ஆகவேண்டும். இத்தகைய காரணங்களால், மலையிலே மழை பெய்யும்போது அவ்வளவு நீரையும் கொண்டு வந்து கொடுக்க ஆறு தயாராகத்தானே இருக்கிறது? இத்தகைய இயற்கைக் காரணங்கள் ஏற்படாவிட்டால், நதியில் தண்ணீர் இல்லாமல்தானே போகும்?

“அது போலவே உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணங்கள் உண்டு” என்கிறான் ராமன். தான் முடி துறந்து காடு செல்வதற்கும் பல காரணங்கள் இருக்கவேண்டும் என்கிறான். காரணம் இல்லாமல் காரியம் ஏது? இந்தக் காரண காரிய முறையை விதி என்பர் அறிஞர். ‘‘குழந்தாய்! விதியின் விளைவைக் குறித்து நீ கோபித்துக்கொள்வதில் யாது பயன்?” என்று லட்சுமணனை ராமன் சமாதானப்படுத்த முயலுகிறான்.
நல்ல தண்ணீர் கொடாமல் இருப்பது நதியின் பிழையாக ஏற்படாததுபோல், தன்னைக் காட்டுக்கு அனுப்புவதும் சக்ரவர்த்தி முதலானவர்களின் பிழையன்று என்கிறான். விதியை உருவாக்கும் காரண காரியம் என்ற சங்கிலித் தொடரால் கட்டப்பெற்றிருக்கிறார்களாம் தசரதன் கைகேயி முதலானவர்களெல்லாம்.
‘நதியின் பிழைஅன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழைஅன்று, பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழைஅன்று, மகன்பிழை அன்று, மைந்த!
விதியின் பிழை, ஈ இதற்(கு) என்னை வெகுண்ட(து)?’ என்றான்.
அப்படியே கைகேயி அம்மாளின் மதியிலும் பிழை இல்லை என்று கூறும் ராமன், அவளை சிற்றன்னையாகவோ, அன்னையின் சக்களத்தியாகவோ எண்ணிவிடாமல், தங்களைப் பெற்று வளர்த்த தாயாகவே - கோசலை வேறு, கைகேயி வேறு என்ற வேற்றுமையில்லாமல் - நினைக்கவேண்டும் என்கிறான். அப்படி நினைத்துவிட்டால் அந்த மதியில் அப்படிப் பிழை காண முடியாது என்பது ராமன் கருத்து.
ராமன் கொள்கையைத் தற்கால உலகம் உள்ளபடி உணர்ந்து கொள்ளுமானால், நமது வாழ்க்கையே புரட்சிகரமான மாறுதல் அடையக்கூடுமல்லவா?
** 15.12.46, 22.12.46, 29.12.46 மற்றும் 5.1.47
ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...