மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 21

சிவமகுடம்  - 21
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 21

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 21

 ‘ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின் நெல்மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின், படு வண்டு ஆர்க்கும் பன் மலர்க் காவின்’ என்று பண்டைய பாடல் ஒன்று கூறிப்பிடுவது போன்று, வயல்களும், அழகிய தெருக்களில் நெல் மலிந்து கிடக்கும் இல்லங்களும், வண்டு ஒலிக்கும் நந்தவனங்களும் நிறைந்த தேசம்தான் சோழம்!

    ஆங்காங்கே மர நிழல்களில் தங்கி ஆனேறுகள் புல் மேய்ந்து அசைபோட்டவண்ணம் நிற்க, கோவலர்கள் முல்லைப்பூக்களைப் பறிப்பதற் காக எறிந்த குறுங்கோல்களுக்குப் பயந்து, குறுமுயல்கள் கழனிகளில் உகளும் வாளை மீன்களோடு மீன்களாய் பாய்ந்துவிட, அதனால் பெரும் சலனத்தையும் அதைக் காண்போர் மனதில் பெரும் குதூகலத்தையும் ஏற்படுத்தும்படியான வளப்பங்கள் நிறைந்த நாடுதான் என்றாலும், திடுமெனச் சூழ்ந்துவிட்ட போர் மேகங்களால், மேற்சொன்ன வனப்புகளை எல்லாம் அனுபவிக்க இயலாதபடி தனது சுயத்தை தொலைத்துவிட்ட சோழ தேசத்தைப் போன்று, அதன் அடிவானமும்... தனக்குக் கீழ் கார்மேகங்கள் திரண்டுவிட்டபடியால், அந்த வைகறை நேரத்தில், ஆதவனின் பொன் கிரணங்களால் உண்டாகும் தனது வழக்கமான தகதகப்பை தொலைத்து, கருஞ்சாம்பல் வண்ணத்தைப் பூசிக்கொண்டிருந்தது!

இப்படியாக சோழதேசத்தின் அடிவானத்தை ஆக்கிரமித்திருந்த கருமேகங்கள், அவ்வப்போது பன்னீர்த் தூவலாக மழைத் தூறிக் கொண்டிருக்க, அதனால் ஏற்பட்ட இடையூறைப்
பொருட்படுத்தாது, தன் முதுகில் குறுக்குவாகாக மயங்கிக்கிடக்கும் தன் எஜமானனைச் சுமந்தபடி, தனக்கு மிகப் பரிச்சயமான அந்த பாதையில், தலைநகரை நோக்கி புயல்வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது அந்தப் புரவி!

அந்த எஜமானன், தலைப்பாகையாகவும் தேவைப்பட்டால் ஒரு முகத்திரை போன்றும் பயன்படுத்தும் நீளமான வஸ்திரத் துணியையே கயிறாகக் கொண்டு, அந்தப் புரவியின் வயிற்றோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்ததால், புரவியின் வேகத்தால் அவன் கீழே விழுந்துவிடாதபடி வசதி ஏற்பட்டிருந்தது.

ஆங்காங்கே வளைந்தும் நெளிந்தும் சென்ற பாதையில் எந்தவித தடுமாற்றம் இல்லாமலும், வழியில் குறுக்கிட்ட சிற்றாறுகளையும், ஓடைகளையும் கடக்கும்போது மட்டும் ஏதோ ஆணைக்குக் கட்டுப்பட்டது போன்று சற்றே வேகத்தை மட்டுப்படுத்தி கட்டுக்கோப்புடனும், சமவெளிகளில் எதிர்க்காற்றையும் கிழித்தபடி வேகத்தைக் கூட்டிக்கொண்டும் பயணித்தது அந்தப் புரவி.

*அசுவ லக்ஷ்ணப்படி அந்தப் புரவியைக் கவனித்தோமானால், உயரம் நூறுவிரல் அளவு இருக்கலாம். எனில், மிக உத்தமமான புரவிதான்! மத்திம வகை புரவிகளுக்கு, உயரம் எண்பத்து நான்கு விரலளவு இருக்கும். அதற்கும் கீழாக, அறுபது விரல் அளவே உயரம் எனில், அவ்வகை  புரவிகள் அதம வகையாகும். அதிலும் இந்த வெண்புரவியின் கழுத்து பாகத் தில் அமைந்திருக்கும் அந்த வலஞ்சுழி... அதை, தெய்வமணிச் சுழி என்பார்கள். அதுவே, மார்பு புறத்தில் வெவ்வேறாக ஐந்துசுழிகள் இருந்தால், அதற்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்.

புரவிகளுக்குச் சுழி முக்கியம். சிரசில் இரண்டும், நாபியில் நான்கும், மார்பில் இரண்டும், நெற்றியில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக பத்து சுழிகள் இருந்தால், அது மிக உசத்தியான புரவி எனக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக நெற்றியில் இரண்டு அல்லது மூன்று சுழிகளாவது இருந்தால், மிக நல்லது!

மட்டுமின்றி, அசுவ லக்ஷண நூல் விளக்குவது போன்று பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி ஆகிய எண் வகை அசுவங்களில்... மலைகளையும், மலைமேற் கோட்டை தடைகளையும், அகழிகளையும் ஆறுகளையும் தாண்டவல்லதான ‘புரவி’ வகைக்கு உரிய அத்தனை லட்சணங்களையும் குறைவின்றி பெற்றிருந்தது இந்த வெண்புரவி.

அதனால்தான் தன் தலைவனை எந்தவொரு பங்கமும் ஏற்படாத வகையில் மிகப் பத்திரமாக, இதோ உறையூர் கோட்டை வாசலுக்கே அழைத்து வந்துவிட்டதே. அதன் தலைவன் அந்தப் புரவியை மிக நன்றாகப் பழக்கிவைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், கோட்டை மதில்களைக் கண்டதும், ஒரு கணம் நிதானித்து முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி, பெருங்குரலெடுத்துக் கனைத்து, கோட்டைக் காவலர்களுக்கு தன் வரவை அந்தப் புரவியால் அறிவிக்க முடியுமா என்ன?!

சிவமகுடம்  - 21

வெண்புரவியின் கனைப்பொலியைக் கேட்டதும்தான் தாமதம். அவ்வொலியை உள்வாங்கி எதிரொலிப்பதுபோல் உறையூர்க் கோட்டையின் முகப்பு வாயிலில் இருந்த பேரிகைகளும் பெரிதாக முழங்கின. அடுத்த கணம் கோட்டையின் அகழிப்பாலம் கீழிறங்க, திட்டிவாசலும் திறந்துகொள்ள... இந்த வெண்புரவிக்கு சற்றும் சளைத்ததல்ல என்பது போல், தன் தலைவியை சுமந்துகொண்டு வெகு லாகவமாக திட்டிவாசலைத் தாண்டிக் குதித்து வெளியேறியது அந்தக் கரும்புரவி. அதைத் தொடர்ந்து இன்னும்சில புரவிகளும் வெளிப் பட்டு, இந்த வெண்புரவியை எதிர்கொண்டன.

அவர்கள் அருகில் வந்ததும் கரும்புரவியின் தலைவியான இளவரசி மானி ஏதோ சைகைக் காட்ட, முன்னங்கால்களை மடக்கி தலையையும் தரைதாழ்த்திப் பணிந்தது வெண்புரவி. இப்படியான காட்சி தங்களுக்கு பழக்கமானது என்பதால், முகத்தில் எவ்வித பாவனையையும் வெளிப்படுத்தாமல் கடமையில் இறங்கினார்கள் மானியுடன் வந்த புரவி வீரர்கள். மளமளவென வெண்குதிரையின்  மீதிருந்த வீரனை தரையில் இறக்கிக் கிடத்தினார்கள். அவன் முகத்தில் குளிர்நீர் தெளிக்கப்பட்டது. அடுத்தடுத்த சிசுருஷைகள் துரிதகதியில் நடந்தேற, மெள்ள கண்விழித்தான் அந்த வீரன்.

‘‘உபதளபதியாரே! எப்படியிருக்கிறது இப் போது?’’ எனப் பரிவுடன் விசாரித்தாள் மானி.

இளவரசியாரின் திருமுகத்தைக் கண்டதும் புது உத்வேகம் பெற்றுவிட்ட கோச்செங்கண், முதற்கண் சிரம் தாழ்த்தி அவளை வணங்கிவிட்டு, ‘‘எனக்குப் பழுதொன்றும் இல்லை தாயே! எல்லையிலும் எரிபரந்தழித்தலை மேற்கொண்டு நீடிக்காமல் தடுத்துவிட்டோம்’’ என்று மேலும் பேச முயற்சித்தவனை, கரம் உயர்த்தி தடுத்த இளவரசி, ‘‘உப தளபதியாரே! முதலில் உமக்கு ஓய்வு தேவை. மற்ற விஷயங்களை  பிறகு பேசிக் கொள்ளலாம்’’ என்றவள், உடன் வந்த வீரர் களுக்குப் பார்வையால் குறிப்பு உணர்த்த, அவர்களும் கோச்செங்கணை கோட்டைக்குள் அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள்.

ஆனால், அவர்களைத் தடுத்துவிட்டவன், ‘‘தாயே! ஓய்வெடுப்பதற்கு நேரம் இல்லை. எல்லை நிலவரத்தை உங்களிடம் சொல்லியாக வேண்டும்...’’ எனத் துவங்கி விடாப்பிடியாக பேச ஆரம்பித்தான்.

‘‘பகைவர்கள் எல்லைப்புற கிராமங்களுக்கோ கால்நடைகளுக்கோ எவ்வித தீங்கையும் ஏற்படுத்தவில்லை. விளைச்சல் நிலங்களிலும்கூட காய்ந்த பதர்களையே தீயிட்டுக் கொளுத்தி யிருக்கிறார்கள். ஆனாலும் காற்றின் வேகத்தில் நெருப்பானது அருகிலிருக்கும் குடிசைகளுக்குப் பரவிடக்கூடாதே என்று கவலை ஏற்பட்டது நம் வீரர்களுக்கு.

ஆனால், அப்படியொரு ஆபத்து நிகழாதபடி அருள்செய்துவிட்டான், தில்லை அம்பலவாணன். ஆமாம் தாயே! மழை வந்து தீயைத் தணித்தது. எனினும், மழை விட்டுவிட்டுப் பெய்ததால் நெருப்பு பரவவில்லையே தவிர, பதர்களில் நெருப்பு கனன்றுகொண்டுதான் இருந்தது. நம் புரவிகள் அவற்றைத் தாண்டி எதிரிகளை அணுகமுடியாத நிலை. ஆனாலும் நம் வீரர்கள் தயங்கவில்லை. சட்டென்று பாய்ந்துவிட்டார் கள். எரிதனல் புதர்களைத் தாண்டி அப்புறம் சென்று தீரத்துடன் பகைவர்களை வெகுதூரம் வரையிலும் விரட்டியடித்தோம். ஆனால்...’’ என்று இழுத்த கோச்செங்கண், மேற்கொண்டு பேச்சைத் தொடராமல் சற்றே நிதானிக்க, ‘‘என்ன தயக்கம் கோச்செங்கண்ணரே?! எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்!’’ என்று ஊக்கப்படுத்தினாள் இளவரசி.

கோச்செங்கண் தொடர்ந்தான். ‘‘வெற்றிக் கோஷத்துடன் நாங்கள் திரும்புகையில், மிகச் சரியாக எரிதனல் பதர்களைக் கடந்து இப்புறம்  வர யத்தனித்த தருணத்தில், எங்கிருந்தெல்லாமோ பறந்துவந்து தாக்கிய எரியம்புகள் எங்களை நிலைகுலைய வைத்தன. தரையிலும் வானிலு மாக நெருப்புக்கு இடையே வசமாக சிக்கிக் கொண்டோம். எரியம்புகள் மட்டுமல்ல இளவரசியாரே, வேறுவகை விநோத வடிவிலான ஆயுதங்களும் எங்களை நோக்கி வந்தன. அவற்றில் ஒன்று என்னையும் தாக்கியதால் மயங்கியவன், இப்போது- இங்குதான் கண் விழித்தேன். என்னை, எனது புரவி சுமந்து வந்தது எப்படி, புரவியுடன் சேர்த்து என்னைப் பிணைத்து தப்பிக்கவைத்தது யார் என்று எதுவும் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது’’ ஒரு பெருமூச்செறிப்புடன் சொல்லி முடிக்க, அவனை ஆற்றுப்படுத்தும் விதமாக அடுத்துப் பேசினாள் இளவரசி.

‘‘வருந்தவேண்டாம் உபதளபதியாரே! உம்மைப்போலவே உமது படையணியைச் சேர்ந்த மற்ற மறவர்களுக்கும் உயிராபத்து இல்லை என்று ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துவிட்டது. களத்தில் நேரில் சந்திக்காமல், சோழர்களுக்கு விளையாட்டு காட்டுகிறார் கூன்பாண்டியர். அவர் வழியிலேயே நாமும் பதிலடி கொடுப்போம். ஆகவே, கவலையை விட்டொழியுங்கள்; களமாடத் தயாராவோம்’’ என்று தைரியமும் கொடுத்தாள்.

ஆனால், அவளே தீவிரமாகக் கவலைப்படும் படியான சந்திப்பும் சதியாலோசனையும் உறையூர்க் கோட்டையின் சிறைக் கொட்டடியில் நிகழ்ந்துகொண்டிருந்தது!

அதேநேரம், அங்கே காட்டாற்று தீரத்தில் - பாண்டியர்கள் ரகசிய பாசறையாய் பயன்படுத்திய குடிசைக்குள் புகுந்துவிட்டிருந்தார்கள், நம்பியும், பொங்கிதேவியும். அந்தக் குடிசையின் தரை தளமாய் மரப் பலகைகள் பதிக்கப்பட்டிருக்க, அவற்றில் ஒன்றை லாகவமாகப் பெயர்த்தெடுத் தாள் பொங்கி. பலகைகளுக்குக் கீழ், ஏற்கெனவே அவள் குறிப்பிட்டது போன்று விதவிதமாக ஆயுதங்கள்!

கண்ணைப் பிடுங்கி எறியும் கொடுமையான எரிசிரல், சங்கிலியில் பிணைத்து எறியப்பட்டு எதிரிகளின் சிரத்தைப் பதம் பார்க்கும் ஆண்டலையடுப்பு, சதக்னி, தள்ளிவெட்டி முதலாக அந்தக் குடிசைக் கிடங்கில் நிரம்பிக்கிடந்த ஆயுதங் களைக் கண்ணுற்றபோதும் அச்சம் கொள்ளாத பெரும் வீரனான நம்பி,  ஏதோ அரவம் கேட்டு வாசற்புறம் திரும்பினான். அங்கே, கையில் பெரும் வாளுடன் நின்றிருந்த அந்த மனிதரைக் கண்டு பெரும் பீதிக்கு ஆளானான்!

- மகுடம் சூடுவோம்...