
மைனஸ்... பிளஸ் !யுவா, ஓவியம்: மகேஸ்

‘‘வணக்கம், நாங்க பக்கத்து ஃப்ளாட்டுக்கு புதுசா வந்திருக்கோம்” எனப் புன்னகைத்தவாறு இனிப்பு இருந்த கிண்ணத்தை அம்மாவிடம் நீட்டினார் அந்த ஆன்ட்டி. ஸ்வீட்டை எடுத்துக்கொண்ட அம்மா, ‘‘ரொம்ப சந்தோஷம். எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க” என்றார்.
அடுத்து, ஹாலில் உட்கார்ந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்த தினேஷைப் பார்த்து, “ஹாய், என்னப்பா படிக்கிற?” என அந்த ஆன்ட்டி கேட்டார். அவன் ‘‘எய்த் ஆன்ட்டி’’ என்று பதில் சொல்ல, “என் பையனும் எய்த் ஸ்டாண்டர்டுதான். என் ஃப்ளாட்டுக்கு வா. அவனோடு விளையாடலாம். நீங்களும் வாங்க” என தினேஷுக்கும் அம்மாவுக்கும் அழைப்புவிடுத்துவிட்டுச் சென்றார் அந்த ஆன்ட்டி.
ஆனால் அவரின் அந்த அழைப்பை தினேஷின் அம்மா சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்தடுத்த நாட்களில் ஒன்றுக்கு இரண்டு முறையாக அந்த ஆன்ட்டி அழைப்புவிடுத்தபிறகே, தினேஷை அழைத்துக்கொண்டு அவர் ஃப்ளாட்டுக்குச் சென்றார்.
அவர்கள் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் நிறைய இருந்தன. ரஞ்சித் அறையில் வீடியோ கேம்ஸ், கிரிக்கெட் செட், ஃபுட்பால், ஷட்டில் காக், செஸ் போர்டு என ஒரு ஸ்போர்ட்ஸ் ஷாப்பில் இருக்கும் அத்தனையும் இருந்தன. ‘‘ரஞ்சித்துக்கு ஸ்போர்ட்ஸ்னா அவ்வளவு இன்ட்ரஸ்ட். ஆனா, படிப்புல சுமார்தான்’’ என்று ரஞ்சித்தின் அம்மா சொல்ல, பதிலுக்கு ‘‘என் பையன் க்ளாஸ் ஃபர்ஸ்ட்” எனப் பெருமையுடன் சொன்னார் தினேஷின் அம்மா.
‘‘வெரிகுட். ரஞ்சித்துக்கு சொல்லிக் கொடுக்கறியா தினேஷ்?” என ரஞ்சித்தின் அம்மா கேட்க, தலையாட்டினான் தினேஷ். பிறகு அம்மாக்கள் இருவரும் உரையாடலில் லயித்துப்போக, தினேஷை தன் அறைக்கு அழைத்துச் சென்றான் ரஞ்சித். ஒவ்வொரு விளையாட்டைப் பற்றியும் அவ்வளவு நுணுக்கமாகப் பேசினான்.
வீட்டுக்குத் திரும்பியதும், ‘‘தினேஷ், அந்தப் பையனோடு அதிகம் பேச்சு வெச்சுக்காதே. ஓவர் செல்லம். கேட்டதெல்லாம் வாங்கித் தருவாங்க போல. ரூம் ஃபுல்லா விளையாட்டு சாமான்தான் இருக்கு. அவனோடு சேர்ந்து நீயும் படிப்பை கோட்டை விட்டுறப்போற” என்றார் தினேஷின் அம்மா.
உடனே தினேஷ் ‘‘ஏன்மா, அப்படி நினைக்கிறீங்க? ரஞ்சித் தனக்கு மேத்ஸும் சயின்ஸும் சொல்லித்தரச் சொல்லி என்னிடம் கேட்டான். நான் அவனிடம் செஸ், ஃபுட்பால் விளையாட்டை கத்துத்தரச் சொல்லி கேட்டிருக்கேன். ஒருத்தர்கிட்டே இருக்கிற மைனஸ் நமக்கு வந்துடும்னு ஏன் நினைக்கணும்? நாங்க ரெண்டு பேரும் எங்ககிட்டே இருக்கிற பிளஸ்ஸை ஷேர் பண்ணிக்கிறோம்” என்றான் தினேஷ்.
தன் மகனின் மனதிலும் பேச்சிலும் இருந்த தெளிவைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தார், தினேஷின் அம்மா.