Published:Updated:

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!
பிரீமியம் ஸ்டோரி
சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

சுபா கண்ணன்

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

சுபா கண்ணன்

Published:Updated:
சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!
பிரீமியம் ஸ்டோரி
சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!
சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

வாழ்வில், மனிதருக்குத் தேவையான உயர்ந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தருளக்கூடியவள் ஸ்ரீமகாலட்சுமி தேவி. பாற்கடலில் தேவர் களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, மேரு மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தபோது, உயர்ந்த பல விஷயங்கள் உதித்தன. அந்தத் தருணத்தில் தோன்றியவளே ஸ்ரீமகாலட்சுமி. இங்ஙனம் அவள் அவதரித்த திருநாளே, வரங்கள் யாவற்றையும் பெற்றுத் தரும் வரலட்சுமி விரதத் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருடந்தோறும், ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி பூஜை கடைப்பிடிக்கப்படுகிறது. சில வருடங்களில் இந்த வெள்ளிக் கிழமையானது ஆடி மாதத்திலும் வரும்.

இந்த வருடம், 12.8.16 வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம். லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், ஸ்ரீலட்சுமிதேவியை இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால், இவை அனைத்தையுமே தந்து நம்மை மகிழச் செய்வாள், தேவி. நாமும் இந்நாளில், ஞானநூல்கள் கூறும் நியதிப்படி விரதம் இருந்து, உள்ளம் உருக அலைமகளை வழிபட்டு, நம் அல்லல்கள் யாவும் நீங்கப்பெறுவோம்.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

எந்தவொரு விரத வழிபாட்டைக் கடைப்பிடிக்கும்போதும், அதன் மகிமையை அறிந்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும். அதற்கேற்ப, நாமும் வரலட்சுமி விரதத்தின் மகிமையை முதலில் தெரிந்துகொள்வோம்.

வரலட்சுமி விரத மகிமைகள்

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

தேவலோகத்தில் சித்ரநேமி என்றொரு தேவதை இருந்தாள். இவள் தேவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதி. ஒருமுறை, இந்த தேவதை பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதன் காரணமாக அன்னை பார்வதிதேவியின் கோபத்துக்கு ஆளாகி, சாபம் பெற்றாள். அவள் தனது தவற்றை உணர்ந்து பார்வதிதேவியிடம் மன்னிப்புக் கோரியதுடன், தான் பெற்ற சாபத்துக்கான விமோசனத்தையும் கேட்டாள். அவளிடம், “வரலட்சுமி விரதம் இருந்து அலைமகளை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்” என்று உரைத்தார் பார்வதிதேவியார். அதன்படி, சித்ரநேமி ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து உரிய நியதிப்படி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்து சாபவிமோசனம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆக, பணியிலோ, குடும்பத்திலோ நடுநிலை தவறி அதனால் மன உளைச்சலில் இருப்பவர்கள், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து திருமகளை வழிபடுவதன் மூலம், மன பாரம் நீங்கப் பெறலாம் என்பது அனுபவ உண்மை.

பூலோகத்தில் பத்ரச்ரவஸ் என்ற மன்னன் இருந்தான். இவன் சிறந்த விஷ்ணு பக்தன். இவனுடைய செல்வமகளான சியாமபாலா, வரலட்சுமி விரதம் இருந்து, மங்கலமான வாழ்க்கையைப் பெற்றிருந்தாள். அத்துடன் தன் பெற்றோருக்கும் இந்த விரத மகிமையைக்கூறி அவர்களையும் வாழவைத்தாள். இந்தத் திருக்கதை இந்த இதழிலேயே விரிவாகத் தரப்பட் டுள்ளது. வரலட்சுமி விரத தினத்தில் இந்தக் கதையைப் படிப்பதும், கேட்பதும் விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும்.

வரலட்சுமி விரத நாளில் புண்ணிய நீராடுவது உயர்வான விஷயம். இதன் மூலம், வருடம் முழுவதும் ஏழு புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பர் பெரியோர்.

திருமணம் ஆகாத பெண்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டு மஞ்சள் சரடை கையில் கட்டிக்கொண்டால் மனதுக்குப் பிடித்த கணவன் அமைவான்; எதிர்காலம் வளமாக  அமையும். சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; மாங்கல்ய பலம்  அதிகரிக்கும்.

புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்ணானவள், கணவனின் உறவினர் களை தன் உறவினர்களாகப் பாவித்து போற்றுவதன் மூலம் வரலட்சுமி விரதம் இருந்த புண்ணிய பலன்களைப் பெறுவார்களாம். மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்ற பெண், தனது புகுந்த வீட்டினரைப் போற்றிச் சிறப்பித்து வரலட்சுமியின் அருட்கடாட்சத்தைப் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்த திருக்கதை உண்டு.

இனி, வரலட்சுமி விரத வழிபாட்டுமுறைகளை விரிவாக அறிந்துகொள்வோம்.

வரலட்சுமிதேவியை பூஜிப்பது எப்படி?

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

வணி மாதம் பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை விரிவாகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள், வியாழக்கிழமை அன்றே வழிபாட்டைத் துவக்கிவிடுவார்கள். முதலில் இந்த விரிவான பூஜைமுறையை தெரிந்துகொள்வோம்.

வியாழக்கிழமை அன்று...

இந்த தினத்திலேயே வீட்டைக் கழுவி சுத்தம் செய்து, மகாலட்சுமி தேவியை எழுந்தருளச் செய்ய வேண்டிய இடத்தில் மாக்கோலம் இட்டு, தோரணங்கள் முதலானவற்றைக் கட்டி, அலங்கார மேடை அமைப்பது ஆகியவற்றை யெல்லாம் நிறைவேற்றலாம்.

அதன்படி, வியாழனன்று வீட்டைக்கழுவி சுத்தம் செய்தவுடன், அன்னையை அமர வைப்பதற்கான மண்டபத்தை தயார் செய்யவேண்டும்.  வீட்டின் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தைத் தேர்வு செய்து மண்டபம் அமைக்கவேண்டும்.

மண்டபம் அமைப்பது எப்படி?

தற்போது, எல்லா இடங்களிலும் சிறியளவிலான ரெடிமேட் பூஜா மண்டபங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் மர ஸ்டூல் ஒன்றையே மண்டபமாக்கிவிடுவார்கள். இதன் நான்கு கால்களும் மாவிலை கட்டவும், மாலைகளை அழகாக அலங்கரித்து மகிழவும் மிக வசதியாக இருக்கும். மர ஸ்டூலை நன்றாகக் கழுவி காயவைத்து எடுத்து வந்து, தலைகீழாக திருப்பிப் போட்டுவிட்டால் மண்டபம் தயார். சற்றே பெரிய ஸ்டூலாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும். அதன் உள்ளே வாழை இலையைப் போட்டு, அதன் மீது பச்சரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளலாம். முனை உடையாமல் முழுதாக உள்ள அரிசி விசேஷம். (சில இடங்களில், இந்த அரிசியைக்கொண்டே, தொடர்ந்து வரும் கோகுலாஷ்டமிக்கு முறுக்கு, சீடை முதலியவற்றைச் செய்வர். அதனால், பற்றாக்குறை இல்லாத வகையில் அரிசியை கொட்டி நிரப்புவார்கள்.) அடுத்ததாக உரிய வகையில் அந்த மண்டபத்துக்கு மாவிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

அடுத்ததாக, பூரண கலசம் தயார் செய்யவேண்டும்.

கலசம் அல்லது சொம்பு ஒன்றை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு, சிறிதளவு சுண்ணாம்பை நீரில் குழைத்து அந்தச் சொம்பைச் சுற்றிப் பூசிவிட்டால், அது உலர்ந்ததும் வெள்ளையடித்ததுபோல் ஆகிவிடும். பிறகு, புதியதாக நூற்கண்டு வாங்கி வந்து கலசத்தின் மீது நூல் சுற்ற வேண்டும். தெரியவில்லை என்றால் பரவாயில்லை... நூல் சுற்றாமலும் கலசம் ஸ்தாபிக்கலாம். பக்திதான் பிரதானம்.

பின்னர், கலசத்தில் பாதியளவு அரிசி, கொம்பு மஞ்சள், ஒரு எலுமிச்சை, வெற்றிலைப் பாக்கு (இதை ஒரு நூலால் கட்டிவிட வேண்டும், பூஞ்சை தொற்றில் இருந்து தப்பிக்க), ஜாதிக்காய், மாசிக்காய், நாணயம் ஒன்று (தங்கம் அல்லது வெள்ளி நாணயங்கள் இருந்தால் அவற்றைப் போடலாம்.), பச்சைக் கற்பூரம் ஆகிய ஒன்பது வகைப் பொருட்களைப் போட வேண்டும் (வெற்றிலை + பாக்கு இரண்டு உருப்படி). சிலர், கண் மை டப்பியையும் போட்டு வைப்பார்கள். புதிதாகப் பிறந்த இளம் தளிர்களுக்கு இந்த மையைக் கொடுத்து திலகமிடச் செய்வது விசேஷம்.

அடுத்ததாக, கலசத்தின் வாய்ப் பாகத்தில் மாங்கொத்து சொருகி, மஞ்சள் பூசிய தேங்காயை அதன் குடுமி மேலேயிருக்கும் படி வண்ணம் வைக்க வேண்டும். தேங்காய்க்கு குங்குமப் பொட்டு  இட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு ரவிக்கைத் துணியை விசிறியாக மடித்து, கலசத்தின் தோளில் இடவேண்டும். காதோலை கருகமணி மிக முக்கியம். கலசத்தின் இரு பக்க மும் தொங்கும்படி மாட்டிவிட வேண்டும். வெள்ளிமுகம் இருப்பவர்கள் அதைக் கலசத்தில் பொருத்தலாம். இல்லையென்றால், கண் மையைக்  கொண்டு சுண்ணாம்பு பூசப்பட்ட கலசத்தில் திருமுகத்தை வரையலாம்.  பின்னர், கலசத்துக்கு பூச்சரம் அணிவிக்கவேண்டும்.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

இப்படியாக உருவாகும் கலசத்தை பூஜையறையில் வாய்ப்பான ஓர் இடத்தில் வைக்கலாம். மறுநாள்தான் கலச ஸ்தாபிதம். வியாழனன்று கலசத்தைத் தயார் செய்வது, வெள்ளியன்று வேலை சுலபமாவதற்காக. அதனால் கலசத்திற்கு தீபாராதனையோ, ஆரத்தியோ தேவையில்லை.

சிலர், மண்டபம் அமைக்காமல், பூஜை அறையை ஒட்டிய சுவரில் வெள்ளையடித்து, அதில் அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹனம் செய்கிறார்கள். அப்படியானவர்கள், சுவரில் கஜலட்சுமி திருவுருவை வரைவது விசேஷம்.

சிலர், வியாழன் அன்று மாலையில் அன்னைக்குப் புளகம் படைத்து அதையே சாப்பிடுவார்கள். புளகம் செய்வது எதற்காக? பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் முதலில் சாப்பிடக்கொடுப்பது புளகம். அன்னையானவள், வியாழனன்று நம் வீட்டுக்கு வருகிறாள் அல்லவா... அதனால் அவளுக்கு முதலில் படைப்பது புளகம். வெண்பொங்கலைப் போலவே பாசிப் பருப்புக்குப் பதில் துவரம் பருப்பு சேர்த்து செய்வது புளகம். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்துகொள்வது கட்டாயம்.

அத்துடன், மறுநாள் படைக்க வேண்டிய பதார்த்தங்களுக்கான முன்னேற்பாடுகளும் வியாழனன்றே நிகழும்! பச்சரிசி இட்லி, கொழுக்கட்டைக்கான பூரணம் தயாரித்தல் ஆகியவற்றை வியாழனன்றே மேற்கொண்டால் வசதியாக இருக்கும். பச்சரிசி இட்லிக்கு உளுந்தை கொஞ்சம் அதிகம் சேர்த்தால், மிருதுவாக இருக்கும்.

அத்துடன், வியாழக்கிழமையே நோன்புச்சரடுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் எத்தனை சுமங்கலிகள் மற்றும் கன்யா பெண்கள் இருக்கிறார்களோ, அத்தனை சரடுகள் + அம்மனுக்கு ஒன்று என நோன்புச் சரடுகளை  தயார் செய்துகொள்ளலாம்.

நோன்புச் சரட்டில் 9 முடிகள் இட வேண்டும். வியாழக்கிழமையன்று ஒவ்வொன்றிலும் 8 முடிச்சுகள் போட்டு வைத்துக்கொள்ளலாம். மறுநாள் காலையில், சிறிது பூவையும் சேர்த்துக் கட்டும்போது ஒன்பது முடிச்சுகள் கணக்காகிவிடும்.

வெள்ளிக்கிழமை அன்று...

வெள்ளிக்கிழமை காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து, பச்சரிசியால் கோலமிடுவது சிறப்பு. கிருஷ்ணாஷ்டமியில் செய்வது போல், வாசலில் இருந்து பூஜிக்கும் இடம் வரையிலும் பாதம் வரைபவர்களும் உண்டு.

பின்னர் குளித்துமுடித்து, நைவேத்திய பதார்த்தங்களை தயார் செய்யலாம். முதலில், ஊற வைக்கவேண்டிய வஸ்துக்களை ஊறவைத்துவிட வேண்டும். வடை வகையறாக்களில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு வடைகள் பிரசித்தம்.

அடுத்ததாக, கோசம்பரி இனிப்பு. கடலைப் பருப்பை ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டிவிட்டு, பின்னர் ஏலக்காய்த் தூள், சர்க்கரை அல்லது வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கி வைக்கவேண்டும். இதுவே கோசம்பரி இனிப்பு. சமைக்கும் அவசியம் இல்லை என்றாலும், பருப்பை நன்கு ஊறவைக்கவேண்டும். அடுத்ததாக கார கோசம்பரி. அதாவது, பச்சைப்பயிறை ஊறவைத்து தண்ணீரை இறுத்து, கேரட், வெள்ளரி, மாங்காய், கொஞ்சமே கொஞ்சம் பச்சைமிளகாய், (மிகச்சிறிய) துண்டுகள், உப்பு போட்டு கலந்து வைத்துக்கொண்டால் கார கோசம்பரி தயார். இது, லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமானது.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

முதல்நாளே பச்சரிசி இட்லிக்கு ஊறவைத்து மாவாக அரைத்து வைத்திருப்பதால் இட்லி வார்ப்பதும் எளிதாகிவிடும். அடுத்ததாக கொழுக்கட்டை. கொழுக்கட்டைக்கு ஈர அரிசியை உலரவைத்து... ஈரப்பதம் வேண்டும்; ஆனால் ஈரம் இருக்கக் கூடாது. அப்படியான பதத்தில் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளர் அரிசி மாவுக்கு, ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதை, அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பிட்டு, நன்கு கொதிக்கவைக்க வேண்டும். நன்கு குமிழ்கள் வரும்வரை கொதித்தவுடன்,  சலித்து எடுத்த மாவை நீரில் கொட்டி கிளறினால், பந்து போல வெள்ளையாக வரும். அதாவது, மோதகத்துக்கு சொப்பு அழகாக வரும். இதில் பூரணத்தை இட்டு பிடிக்கும்போது கொழுக்கட்டை பிசிறில்லாமல் முழுதாக வரும்.

இவை தவிர, சுத்த அன்னம், பருப்பிட்ட குழம்பு, ரசம், மோர்க் குழம்பு, துணைக்கறி வகைகள், வடை, சர்க்கரைப்பொங்கல், பாசிப்பருப்பு பாயசம், வெள்ளரி, தேங்காய், பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்த பச்சடி, எள்ளு பூரணம், காரக் கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்திய பதார்த்தங்களாகப் படைக்கவேண்டும். இட்லி, கொழுக்கட்டை போன்றவற்றை 9 என்ற எண்ணிக்கையில் படைக்கவேண்டும்.

பதார்த்தங்கள் தயார். இனி, பூஜைக்குத் தயாராவோமா?

முதலில் அம்மனை அதாவது லட்சுமிதேவியை மணையில் அமர்த்துதல் வேண்டும். வெள்ளியன்று காலை 9 - 10.30 நல்ல நேரமாதலால், அப்போதே லட்சுமிதேவிக்கு (இரவு ரெடி செய்த கலசத்துக்கு), வாழைப்பழம் நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்தி எடுத்து, இரண்டு சுமங்கலிகளாக கலசத்தை அலுங்காமல் குலுங்காமல் கவனமாக எடுத்து மண்டபத்தில் அமர்த்தவேண்டும். இரண்டு சுமங்கலிகள் இல்லாத பட்சத்தில் கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து எடுத்துவைக்கலாம். வீட்டில் சிறுமிகள் மிகச் சிறியவர்களாக இருந்தால், சாஸ்திரத்துக்கு கையை வைக்கச்சொல்லி, இல்லத்தரசியே கலசத்தை எடுத்து மண்டபத்தில் வைக்கலாம்.

மண்டபத்தில் வைத்தவுடன் திரும்பவும் ஆரத்தி எடுக்கவேண்டும். சிறு நைவேத்தியமாக பால் அல்லது ஏதேனும் பழம் படைக்கலாம். இப்படியான ஆரத்தியை வெள்ளி துவங்கி மறுநாள் சனிக்கிழமை வரையிலும் கலசத்துக்கு முன்போ பக்கவாட்டிலோ வைத்திருப்பார்கள். திருஷ்டி படாமல் இருப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சாதாரணமாக ஆரத்தியைச் சுண்ணாம்பு இட்டு கரைப்பர். ஆனால், நினைவில் கொள்ளுங்கள்... தெய்வத்துக்கு எடுக்கும் ஆரத்தியில் மஞ்சள் மற்றும் குங்குமம் மட்டுமே கலக்க வேண்டும். கொட்டும்போதும் வாசலிலோ மற்றவர் மிதிக்கும்படியான இடங்களிலோ இல்லாமல், ஏதாவது மரத்தினடியில் கொட்டுவது சிறப்பு. இது கோயில்களில் நடக்கும் திருக் கல்யாணங்களில் எடுக்கப்படும் ஆரத்திக்கும் பொருந்தும்.

அடுத்து, கீழ்க்காணும் முறைப்படி வழிபாடு நடத்தவேண்டும்.

விநாயக பூஜை
: மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அவருக்கும் குங்குமத் திலகம் இட்டு, பூச்சூட்டி, 'பிள்ளையாரப்பா! இந்த உன்னதமான பூஜை எந்தவித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக நடந்தேற அருள்புரியப்பா' என  முழுமுதற் கடவுளை வழிபட்டுவிட்டு பூஜையைத் துவங்கவேண்டும்.

சங்கல்பம்:
விநாயகரை வழிபட்டபிறகு சங்கல்பம் எடுத்துக் கொள்ளவேண்டும். “அம்மா தாயே! சர்வ மங்கலங்களுடனும் சுபிட்சத்துடனும் எங்களை வாழவைக்கவேண்டும். நல்ல எண்ணங்களையே கொடுத்து நல்லதையே செய்து நல்லதையே வரமாகப் பெறும் பாக்கியத்தை அருள வேண்டும். அதற்காக இந்த வழிபாட்டை மேற்கொள்கிறோம். எங்களை ரட்சித்து அனுக்கிரகிக்க வேண்டும், என்று சங்கல்பித்துக் கொள்ளல் வேண்டும். தொடர்ந்து, கலச பூஜை, கண்டா பூஜை (மணிக்கு செய்யப்படும் பூஜை), தியானம், ஆவாஹனமும் செய்யவேண்டும். இந்தப் பகுதியிலேயே கையில் கட்டிக்கொள்ளப்போகும் நோன்புச் சரடை புஷ்பம் முடித்து கலசத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.

அடுத்ததாக, ப்ராண ப்ரதிஷ்டை (கலசமோ, படமோ, ப்ரதிமையோ இதன் மூலம் அவை உயிர்பெறு கின்றன),  அங்க பூஜை (கலசத் திற்கு உயிர்கொடுத்தபின், அங்கங் களை உருவாக்கி பூஜிப்பது) செய்யவேண்டும்.

பின்னர், லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளிகளைக் கூறி, பூக்களாலும் அட்சதையாலும் அர்ச்சித்து வழிபடவேண்டும்.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

அடுத்தபடியாக, உத்தராங்க பூஜை, தூபம், தீபம், காட்டி பலவிதமான உணவுப்பொருட் களையும், பலவகையான பழங்களையும் நிவேதிக்கவேண்டும். அத்துடன், சர்க்கரைப் பொங்கல், பாயசம், உடைத்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்களுடன்  மகா நைவேத்தியம் செய்யவேண்டும். பின்னர், அடுத்துவரும் படிநிலைகளில் பூஜை தொடரும்.

ராஜோபசாரங்கள் - இதில் புது தென்னங்குச்சியில் பஞ்சை சுற்றிவைத்துக் கொள்ளவேண்டும், இதை கெட்டிவத்தி என்பர். இதை 9 ஆக செய்து, மொத்தமாக சிறிதளவு நெய்யில் தொட்டு நெருப்பில் காட்டி, ஆரத்திபோல சுற்றவேண்டும்.

தோரக்ரந்தி பூஜை - சரட்டில் உள்ள 9 முடிச்சுகளில் ஒவ்வொன்றையும் புஷ்பம், அட்சதை ஆகியவற்றால் பூஜிக்கவேண்டும்.  அப்போது சொல்ல வேண்டிய மந்திரம் இது....

கமலாயை நமஹ
    ப்ரதம க்ரந்திம் பூஜயாமி !
ரமாயை நமஹ
    த்விதீய க்ரந்திம் பூஜயாமி !!
லோகமாத்ரே நமஹ
    த்ருதீய க்ரந்திம் பூஜயாமி !!
விஷ்வ ஜனந்யை நமஹ

 சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி !!
மஹாலக்ஷ்மியை நமஹ
    பஞ்சம க்ரந்திம் பூஜயாமி !!
க்ஷீராப்தி தனயாயை நமஹ
     ஷஷ்டி க்ரந்திம் பூஜயாமி !!
விஷ்வ சாக்ஷிண்யை நமஹ
     ஸப்தம க்ரந்திம் பூஜயாமி !!
சந்த்ர சகோதர்யை நமஹ
     அஷ்டம க்ரந்திம் பூஜயாமி !!
ஹரிவல்லபாயை நமஹ நவம
      க்ரந்திம் பூஜயாமி !!


இதன் பின்பு நோன்புச் சரட்டை மூத்த சுமங்கலிகள் அல்லது  கணவன் மூலம் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

மணையில் கிழக்குப் பக்கமாக...  இரு கைகளில் வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம், நைவேத்தியத்துக்காக உடைத்த தேங்காயின் அடி மூடி, புது ரவிக்கைத் துணி ஆகியவற்றுடன் அமர்ந்துகொண்டு நோன்புச்சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடை கட்டிய பின் அம்மன், சரடை கையில் கட்டிய சுமங்கலி, (அல்லது கணவன்) இவர்களை சேர்த்தே விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்.

அர்க்ய ப்ரதானம் - தோரணம் கட்டிய பிறகு, பசும்பால் அர்க்யம் விடவேண்டும். ஏதாவது ஒரு பழம் வைத்து நிவேதிக்க வேண்டும். கொய்யாப் பழம் சமர்ப்பிப்பது சிறப்பு.

இப்படியான விரிவான பூஜையை, தகுந்த புரோகிதரை வரவழைத்து அவர் மூலம் செய்வது சிறப்பு. அர்க்யம் விட்டபிறகு அந்த புரோகிதருக்கு சம்பாவனை தருதல் வேண்டும். இப்போதும் குடும்பத்துடன் அவரை நமஸ்கரிக்கவேண்டும். மூன்று முறை பிரதட்சணம் செய்து அட்சதை, புஷ்பம் தூவி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

தொடர்ந்து, வரலட்சுமி விரத மகிமையைப் படிப்பதும், விரதக் கதையைக் கேட்பதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். இதைப் பெரியவர்கள் சொல்ல, குடும்ப சகிதமாக அமர்ந்து கேட்கவேண்டும். பின்னர், காக்கைக்கு வைத்த பின்பு அனைவரும் சாப்பிட வேண்டும்.

வெள்ளிக் கிழமை அன்று மாலையில் கொண்டைக்கடலை அல்லது கடலை பருப்பு சுண்டல் செய்து வருபவர்களுக்கு நவராத்திரிகளில் செய்வது போலவே தாம்பூலத்துடன் தரவேண்டும். அப்போது, பலவிதமான லட்சுமி துதிகளை, நலங்குப் பாடல்களைப் பாடுவார்கள்.

வீட்டுக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கும்போது தட்சணை வைத்தல் அவசியம். அதேபோல், பெண்களுக்கு முக்கியமாக சிறுமிகளுக்கு மணையில் அமர்த்தி கால்களுக்கு நலங்கிடுவது, சாட்சாத் அந்த அன்னைக்கே செய்வதற்குச் சமம். (மஞ்சள், சுண்ணாம்பு இரண்டையும் கலந்தால் கருஞ்சிவப்பு நிறம் உண்டாகும். இதைக்கொண்டு பாதங்களின் பக்கவாட்டில் மருதாணியைப்போல இடுவதே நலங்கு). வெள்ளி காலை, மாலை, சனிக்கிழமை காலை புனர்பூஜை, மாலை, இரவு அம்மனை அனுப்புவது இவை அனைத்துக்குமே முடிவில் ஆரத்தி எடுப்பது அவசியம். பூஜைக்கு மறுநாள் அரிசியுடன் கூடிய பூஜா கலசத்தை, வீட்டில் அரிசி வைக்கும் பாத்திரத்தில் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் உணவுப் பஞ்சமோ, ஆரோக்கிய பஞ்சமோ ஏற்படாது.

சுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்!

இந்தளவு விமரிசையாகச் செய்ய இயலாதவர்கள், ஐந்து வகையான பழங்களையும், ஐவகை மலர்களையும் சமர்ப்பித்து, லட்சுமிதேவியின் துதிப்பாடலைப் பாடி வழிபடலாம். பழங்களில் வாழை, கொய்யா, மாதுளம் விசேஷம். இவற்றுடன் வேறு இரு பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பூக்களில் தாழம்பூ, செம்பருத்தி, முல்லை, மாதுளம்பூ, தாமரை விசேஷம். நைவேத்தியங்களில் கோசம்பரி, கொழுக்கட்டை, வெல்லம் கலந்த இனிப்பு வகைகள், பாசிப்பருப்பு பாயசம், உளுந்துவடை
(மாஷான்ன ப்ரியே என லலிதா சஹஸ்ர நாமத்தில் குறிக்கப்படுகிறது. மாஷ என்றால் உளுந்து. உளுந்து வடை அம்மனுக்கு ப்ரீதி) ஆகியவற் றைப் படைத்து எளியமுறையில், அவரவர் குல வழக்கப்படி லட்சுமி தேவியை வழிபட்டு அருள்பெறலாம்.

வரலட்சுமி பூஜையையொட்டி, இந்த விரதத்தின் மகிமையைச் சொல்லும் திருக்கதையைப் படிப்பதும், கேட்பதும் விசேஷம் என்பதால், அந்தத் திருக்கதையைப் நாமும் இப்போது படிக்கலாமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism