Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

Published:Updated:
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31

51. இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே ?

எம்பெருமானின் லீலைகளில் பிரகலாதனும் ஒன்று. தேவர்களை அடியோடு ஒடுக்கி தனது தவ வலிமையினால் அனைத்து தேவர்களையும் தன் காலடியில் பணிய வைத்த அசுரன் இரணியனுக்கு சகல பிரபஞ்சமும் அந்த மகாவிஷ்ணுவின் சொரூபம் என்று நம்பி வாழும் பிரகலாதன் மகனாகப் பிறக்க வைப்பானா?  ‘ நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன்: மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான்.....” என்று கம்பன் அவன் மரணத்தின் தன்மை குறித்துப் பெரிய பட்டியலிடுகிறார்.பட்டியல் தொடர்கிறது. ‘ உள்ளில் சாகிலன்: புறத்தினும் உலக்கிலன்;..........தெய்வ வான் படைக்கலன் யாவையும் கொல்லா...’ என்கிறார் கம்பன். அப்படிப்பட்ட அரக்கன் தனது மகன் என்றும் பாராமல் எட்டெழுத்து மந்திரம் தவிர பிறிதொரு மந்திரம் ஓதமட்டேன் என்றதால் பல வழிகளில் கொல்ல முயற்சிக்கிறான் என்று தெரிந்தும் பிரகலாதனுக்கு அந்த எட்டெழுத்து மந்திரத்தின் மீது எத்துனை பற்றுறுதி இருந்தால் மரணத்திற்கு அஞ்சாமல் இருந்திருப்பான்?

காடு பற்றியும் கனவரை பற்றியும், கலைத்தோல்
மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும் முறையால்
வீடு பெற்றவர் ‘ பெற்றதின் விழுமியது‘ என்று உரைக்கும்
மாடு பெற்றனென் மற்று இனிஎன் பெற வருந்தி?
‘ என்கிறார் கம்பன்.
 
காட்டில் தவம் புரிபவர்களும், மலைகளில் தவம் புரிபவர்களும் ஜடாமுடி வளர்த்தும், சிகையை முற்றும் மழித்தும் தவம் செய்தவர்கள் பெற்ற அனைத்தையும் விட சிறந்த ஒன்றான ஓம் நமோ நாராயணாய நமஹ என்ற திருமந்திரத்தை பெற்ற எனக்கு வேறு என்ன செல்வம் வேண்டும் என்று பிரகலாதன் கேட்கிறான்.

இதனை பொறுக்காத இரணியன் அந்த மகாவிஷ்ணு எங்கிருக்கிறான் என்று கேட்கிறான்.

‘ சாணினும் உளன்; ஓர்தன்மை, அணுவினை சதகூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்..................’
என்கிறார் கம்பர். பிரிக்க முடியாத அணுவைப் பிளந்ததாலும் அதனுள்ளும் இருப்பவன் அந்த எம்பெருமான் என்பது பிரகலாதன் கூற்று.

அதன்பிறகு தூணிலிருந்து நரசிம்ஹமாக எம்பெருமான் வெளிப்பட்டதும் இரணியனை வதம் செய்து தேவர்களை ரக்ஷித்ததும் தனிப் புராணம்.

அப்படிப்பட்ட பிரகலாதனைப் போல தூணைக் காண்பித்து இங்கும் என்னுடைய ஸ்ரீமன் நாராயணன் உண்டு என்று கூறியதைப் போல தான் கூறாததால் அந்தத் திருக்கோளூரை விட்டு அகல்வதாக அந்தப் பெண்பிள்ளை கூறினாள்.

52 - இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே?

கண்ணனின் அன்பிற்கு பாத்திரமானவன் இந்த ததிபாண்டன். பொதுவாகவே நமக்கு யாரிடம் பிரியம் அதிகமோ அவரை சீண்டி பார்ப்பது நாம் எடுத்துக் கொள்ளும் உரிமை சலுகை எல்லாம். ததிபாண்டன் ஆயர்பாடியில் தயிர்விற்கும் ஒரு இடையர்குலத்தைச் சேர்ந்தவன். கண்ணன் இவனிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பது வழக்கம். கன்றுகள் பாலை அளவுக்கு அதிகமாக குடித்து உடம்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவற்றின் வாயை ஆயர்கள் கட்டி வைத்திருப்பார்கள். ததிபாண்டனை காவலுக்கு வைத்திருப்பார்கள். கண்ணன் தின்பண்டத்தை காட்டி மயக்கி ததிபாண்டனை அப்புறப்படுத்தி கன்றுகள் வாயினில் கட்டிய தடைகளை அகற்றி வயிறுமுட்ட பாலை குடிக்க வைத்து ததிபாண்டனை மாட்டி விடுவான்.இதற்கெல்லாம் பழிவாங்க ததிபாண்டன் காத்திருந்தான்.

ஒருமுறை கோபியர்கள் கண்ணனை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக புகார் கொடுக்காது பொறுக்காத யசோதை அவனை விளாச ஒரு நீளகுச்சியை எடுத்துக்கொண்டு துரத்தி வருகிறாள். கண்ணன் அங்கே இங்கே என்று போக்கு காட்டிவிட்டு ததிபாண்டனின் இல்லத்திற்குள் நுழைகிறான். ததிபாண்டனின் வீட்டில் பெரிய பெரிய தாழிகளில் தயிர் ஊற்றிவைக்கப்பட்டிருப்பது கண்ணனுக்குத் தெரியும். எனவே அப்படி ஒரு பெரிய காலியான தயிர் தாழிக்குள் அதன் மூடியைத்திறந்து தன்னை மறைத்துக்கொள்ள பானையின் உள்ளே நுழைகிறான். இதனை ததிபாண்டன் பார்த்துவிடுகிறான்.

“காட்டிக் கொடுத்துவிடாதே கெஞ்சுகிறேன்“ என்கிறான் கண்ணன். ததிபாண்டன் அந்த தாழியை மூடி அதன்மேல் அவன் அமர்ந்து கொள்கிறான். ஓடிவந்த  யசோதை கண்ணனை எல்லா இடத்திலும் தேடுகிறாள். கையில் குச்சி. உக்கர ஆவேச முகம். மாட்டினால் கண்ணன் தீர்ந்தான் என்று ததிபாண்டன் நினைக்கிறான். ததிபாண்டனைக் கேட்கிறாள்.

“கண்ணன் இங்கே வந்தானா? “

“ இல்லையே தாயே “ என்கிறான் ததிபாண்டன் கூசாமல். நன்மை பயக்கும் பொய் அது.

யசோதை போய்விடுகிறாள். அவள் போனபின்பும் அவன் தாழியின் மேலிருந்து இறங்கவில்லை. உள்ளே கிருஷ்ணனுக்கு மூச்சு முட்டுகிறது. தனது புல்லாங்குழலால் தட் தட் என்ற பானை மூடியில் தட்டி மூடியை திறக்க சொல்லுகிறான்.

“ மூடியைத் திறந்து உன்னை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை” என்கிறான் ததிபாண்டன்.

“ என்ன நிபந்தனை ? “

“ நீ எனக்கு மோட்சம் கொடுக்க வேண்டும்”

இது ஏதடா வம்பாக போயிற்று என்று ஸ்ரீகிருஷ்ணர் சிரிக்கிறார்.

“ நான் ஏதோ அறியாத பையன். ஆடு மாடு மேய்ப்பேன்.குழலூதுவேன். அன்னையரிடமும் கொபியரிடமும் கொஞ்சம் கலாட்டா பண்ணுவேன் . வேறு எனக்கு என்ன தெரியும்? “ என்கிறான்.
“ பூதனையைக் கொன்றவன் நீ. சடகாசுரனைக் கொன்றவன் நீ. கேசியை சம்ஹாரம் செய்தவன் நீ. காளிங்க நர்த்தனம் ஆடி கோவர்தனத்தைக் குடையாக பிடித்தவன். உன்னை நான் அறிவேன் கண்ணா ! மோட்சம் கொடுப்பேன் என்று உறுதியளித்தால்தான்  வெளியில் விடுவேன். “ என்கிறான் ததிபாண்டன் உறுதியாக.

கண்ணனை அறிதல் என்பது மிக முக்கியமல்லவா?

கண்ணன் உடனே நிஷ்டையில் ஆழ்ந்தான். வைகுந்தத்திலிருந்து தேரும் தேவரும் வந்தனர். ததிபாண்டனை மட்டுமல்ல கண்ணன் ஒளிந்த தாழியையும் சேர்த்து வைகுந்தம் கொண்டு போனார்கள். வைகுண்டம் போனால் இப்போதும் அந்தப் பானையையும் பார்க்கலாம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை.

அன்று ஆனைக்கு மோட்சம் அளித்தான். இன்று பானைக்கு மோட்சம் அளித்தான். ஆனைக்கும் பானைக்கும் சரி என்பது இதுதானோ?

இவ்வாறு கண்ணனை தாழிக்குள் மறைத்து அவனுடைய நன்மைக்காக இங்கு இல்லை என்று கூறிய ததிபாண்டனைப் போல நான் கூறவில்லையே எனவே நான் இந்தத் திருக்கோளூரில் இருக்க தகுதியற்றவள் என்பதால் கிளம்புகிறேன் என்று அந்தப்பெண் வெளியேறுகிறாள்.