Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

தப்பளாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்

ஆலயம் தேடுவோம்!

தப்பளாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிழகத்தில், ஊரின் பெயரில் 'புலியூர்’ என்றிருந்தால், அந்த ஊரில் வியாக்ரபாத முனிவர் தவம் செய்திருக்கிறார் என்று அர்த்தம் என்கின்றன சைவ நூல்கள். வியாக்ரபாதர் என்றால், புலியின் கால்களைக் கொண்டவர் என்று பொருள். எனவே, அந்த முனிவர் ஒரு குறிப்பிட்ட தலத்துக்குச் சென்று, அங்கே இருக்கிற சிவலிங்க மூர்த்தத்தை வழிபட்டு, தவம் செய்திருக்கிறார்; அல்லது, அந்தத் தலத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, நெடுங்காலம் தங்கி தவம் மேற்கொண்டிருக்கிறார் என்றால், அந்த ஊரின் பெயரில் 'புலியூர்’ என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கும் என விளக்குகின்றன, அந்த நூல்கள்.

வியாக்ரபாதர் வணங்கி வழிபட்ட தலங்களை அறிந்த மன்னர் பெருமக்கள், அந்தத் தலத்தில் அழகிய சிவாலயங்களை எழுப்பினார்கள்; அந்தக் கோயிலில் நித்தியப்படி பூஜைகள் நடைபெறுவதற்காகவும், நைவேத்தியம் குறையற நடப்பதற்காகவும் நிலங்களை தானமாக எழுதிக் கொடுத்தார்கள்; விளக்கேற்றுவதற்காகவும், ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதற்காகவும் மாடுகளை வழங்கினார்கள். தவிர, வியாக்ரபாத முனிவரின் பெருமையைப் போற்றும் வகையில், அந்த ஊரின் பெயருடன் 'புலியூர்’ என்பதை இணைத்து அறிவித்ததனால், காலங்கள் கடந்தும்கூட, அந்த ஊர்கள் இன்றைக்கும் பெருமைபடப் பேசப்படுகின்றன; அந்தத் தலத்து இறைவனையும் இறைவியையும் மக்கள் மனதார வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆலயம் தேடுவோம்!

'பிறக்க முக்தி நிச்சயம்’ எனப் பெருமையுடன் சொல்லப்படும் திருத்தலம் திருவாரூர். அந்த ஊருக்கு அருகில் உள்ள வனப்பகுதியில், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அங்கேயே தங்கி வழிபட்டார் வியாக்ரபாத முனிவர். அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவனார், ரிஷபாரூடராக அன்னை உமையவளுடன், அவருக்கு அங்கே திருக்காட்சி தந்தருளினார்.

காலங்கள் ஓடின. சோழ சாம்ராஜ்ஜியத் தின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழனைப் போலவே, அடுத்தடுத்து வந்த மன்னர்களும் இறை நம்பிக்கையிலும் ஆலயங்கள் கட்டுவதிலும் சிறந்து விளங்கினார்கள். மக்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து, அவர்களுக்கும் அந்த ஊர்களுக்கும் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்தனர். அப்படி, மாமன்னன் ராஜராஜ சோழனின் கொள்ளுப்பேரனான விக்கிரமச் சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, திறம்பட நல்லாட்சி நடத்தி வந்தான்.

ஒருநாள், ஆரூர் தலத்துக்கு அருகில், வியாக்ரபாதர் வழிபட்ட அந்தத் திருவிடத்துக்கு வந்தவனை, மக்கள் ஒன்று கூடி வரவேற்றனர். மன்னனிடம், வியாக்ரபாதரின் பெருமைகளையும் அந்தத் தலத்து மகிமையையும் எடுத்துச் சொன்னார்கள். இதில் நெகிழ்ந்து வியந்த விக்கிரமச் சோழ மன்னன், வியாக்ரபாதர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனியை மூலவராகக் கொண்டு, அங்கே கருவறை அமைத்தான். பிறகு, அதைச் சுற்றி அற்புதமான கோயிலைக் கட்டினான். அந்த ஊர் செழித்தது. அடுத்தடுத்து வந்த மன்னர்களும், அந்தத் தலத்தின் பெருமையில் சிலிர்த்து, ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளனர் என்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

ஆலயம் தேடுவோம்!

இத்தனை பெருமைகள் கொண்ட, திருவாரூருக்கு அருகில் அமைந்துள்ள அந்த ஊரின் பெயர், தப்பளாம்புலியூர். இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீநித்தியகல்யாணி அம்பிகை.

ஆலயம் தேடுவோம்!

சுமார் ஆயிரம் வருடத்து ஆலயம் இது! வியாக்ரபாதருக்கு அருளிய சிவனார் குடி கொண்டிருக்கும் திருத்தலம்; இந்தத் தலத்துக்கு வந்து வணங்குவோர்க்கு, திருமண வரத்தையும் மாங்கல்ய பலத்தையும் தந்தருளும் ஸ்ரீநித்திய கல்யாணி அம்பிகை அருளாட்சி செய்யும் அற்புதமான இடம்; கிரக தோஷங்களை நீக்கு வதற்காக, சூரிய பகவானும் ஸ்ரீசனீஸ்வரரும் தனிச் சந்நிதிகளில் அருள் வழங்கும், கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்; சிவ சந்நிதிக்கு அருகிலேயே ஸ்ரீசனீஸ்வரரும் சந்நிதி கொண்டிருக்கிறார் என்கிற சிறப்பு பெற்ற கோயில்; சிவனார் சந்நிதியின் கோஷ்டத்தில் சங்கு- சக்கரம் ஏந்தியபடி நம் எதிரிகளைத் துரத்தி, நம்மை எந்தத் தீவினைகளும் அண்டாமல் காக்கின்ற ஸ்ரீவிஷ்ணு துர்கை வாசம் செய்யும் அருமையான திருவிடம்... என்று தப்பளாம்புலியூர் திருத் தலத்துக்குத்தான் எத்தனை எத்தனைப் பெருமைகள்?

ஆனாலும் என்ன... பல வருடங்களாக, வழிபாடுகளும் திருப்பணிகளும் இன்றி வெறிச்சோடி இருந்த கோயில் இது. கோயிலில் திருவிழாக்களை விமரிசையாகக் கொண்டாடவும், கோயிலைப் புனரமைக்கவும் நிதி ஆதாரம் இல்லாமல், களையிழந்து காணப்படுகிற ஆலயம். இந்த நிலையில், ஸ்ரீநித்தியகல்யாணி அம்மன் சேவா சமிதியினர், கோயில் திருப்பணியில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர் என்பதுதான் தப்பளாம்புலியூர் மக்கள் ஆறுதலாகச் சொல்கிற சேதி!

ஆலயம் தேடுவோம்!

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு... தமிழக ஆலயங்களில் அரிதான தரிசனமாக, ஸ்ரீஏகபாத ருத்ரமூர்த்தியின் சந்நிதியையும், அவரின் திருக்காட்சியையும் கண்டு சிலிர்த்துப் போனோம். வியாக்ரபாத முனிவருக்கு தில்லையம்பதியில் திருநடனத் திருக்கோலம் காட்டி அருளியது போல், ஒருவேளை இந்தத் தப்பளாம்புலியூரில்... ஏகபாத ருத்ரமூர்த்தியாகவும் தரிசனம் தந்தாரோ என்னவோ?

அருமையான ஆலயம், அழகின்றி இருக்கலாமா? சிறப்புகள் பல கொண்ட கோயில், சீரமைக்கப்பட வேண்டாமா? விசேஷ அமைப்புகள் கொண்ட இந்தத் தலத்தில், விழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடந்தேற வேண்டாமா?

ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும். சிவனடியார்களும் சேவை செய்யும் மனம் படைத்த செல்வந்தர்களும் மனம் வைத்தால்தான் சீரமைக்க முடியும், இந்தத் திருத்தலத்தை!

தப்பளாம்புலியூர் திருத்தலத்தின் மகிமையை அறிந்து, அங்கே சென்று ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர், ஸ்ரீநித்தியகல்யாணி அம்பாள், ஸ்ரீஏகபாத ருத்ரமூர்த்தி, ஸ்ரீசூரியனார், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோரை கண்ணாரத் தரிசனம் செய்து, உங்கள் கரங்களால் திருப்பணிக்கு உதவுங்கள். தப்பளாம்புலியூர் கோயிலில் தப்பாமல் கும்பாபிஷேகம் நடைபெறும் நாள், வெகு தொலைவில் இல்லை... பாருங்களேன்!

படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism