Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

செய்வினைகள் செயலிழக்கும்... மதுரகாளியம்மன் மகிமை!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

செய்வினைகள் செயலிழக்கும்... மதுரகாளியம்மன் மகிமை!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

 பக்தர்கள் வேண்டியது எதுவாயினும், கருணையுடன் அருள்பாலித்து அதைக் கிடைக்கச் செய்வாள், அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பாள்... சிறுவாச்சூர் மதுரகாளியம்மன். பில்லி, சூனியம், மாந்திரிகத்தைத் தீர்க்கும் மதுரகாளியம்மன் வீற்றிருக்கும் சிறுவாச்சூர், பெரம்பலூர் அருகில் இருக்கிறது.

தலவரலாற்றை மெய்சிலிர்ப்போடு சொல்லத் தொடங்கினார் பூசாரி கிருஷ்ணன். ‘‘சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி, மதுரையை எரித்த பின், மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து மதுர(ரை) காளியம்மனாக அமைதிகொண்டார் என்பது புராணம். சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம், செல்லியம்மன். ஒரு மந்திரவாதி, தனது மந்திரவலிமையால் அம்மனைக் கட்டுப்படுத்தி தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுரகாளியம்மன் இத்தலத்தில் தங்க இடம் கேட்க, அதற்கு செல்லியம்மனோ, தன்னை மந்திர வலிமையால் மந்திரவாதி கட்டுப்படுத்தி வைத்துள்ளதைக் கூறினாள். தான் அதற்கு தக்க வழிசெய்வதாக கூறி, அன்றிரவு அங்கு தங்கிய மதுரகாளி, மந்திரவாதியை அழித்து வதம் செய்தாள்.

அவள் ஆற்றல் கண்ட செல்லியம்மன், அவளை சிறுவாச்சூர் ஆலயத்திலேயே தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டினாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரகாளியம்மன், பக்தர்களுக்கு ஆலயத்தில் திங்கட்கிழமை காட்சி தந்தாள். எனவே, திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும்.

மந்திரவாதியை மதுரகாளியம்மன் இத்தலத்தில் வதம் செய்ததால் பில்லி, சூனியம், மாந்திரிகத்தை தீர்க்கும் தலமாக விளங்குகிறது சிறுவாச்சூர். இக்கோயிலின் சிறப்புப் பிரார்த்தனை, மாவிளக்கு. செய்வினையைப் போக்க மதுரகாளியம்மனை உடுக்கை அடித்து அழைத்து, பக்தர்கள் தங்கள் குறைகளை சொல்வார்கள். பிறகு குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி காசு, மஞ்சள், குங்குமம் வைத்து சூலத்தில் முடிந்து வைப்பார்கள். மாவிளக்கு போட்டு பிரார்த்திப்பார்கள். கோயில் மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று, 20 நாட்கள் அம்மனை தொடர்ந்து வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் சூனியம் விலகும்’’ என்று பரவசத்துடன் சொன்னார் பூசாரி.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைப்பேறு தரும் சோலை கன்னியம்மன்!

மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரில், குழந்தைப்பேறு வேண்டி வருபவர்களுக்கு அருள்புரியும் சோலை கன்னியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. கன்னியம்மனுக்குப் பிடித்த மாவிளக்குப் படைத்து, புடவையின் முந்தானையில் சிறு பகுதியைக் கிழித்து, அதில் எலுமிச்சைப் பழம், மஞ்சள், குங்குமம் வைத்து முடிந்து, அதை சூலத்தில் கட்டிவிடச் சொல்கிறார்கள். பிறகு, அம்மன் காலடியில் வைத்த ஐந்து எலுமிச்சைப் பழங்களை அந்தப் பெண்களுக்குக் கொடுக்கிறார்கள். ஐந்து நாட்கள், ஒவ்வொரு நாளும் ஆறு, குளம் எனக் குளித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு எலுமிச்சைப் பழத்தை வைத்துவிட்டு வர, அவர்களது தோஷம் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தங்கள் வீட்டில் தொட்டில் ஆட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் இங்கு வருகிறார்கள் பலர்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சென்னையில் இருந்து வந்திருந்தார்கள், ராமசந்திரன் - ரேவதி தம்பதி.  ‘‘மதுரகாளியம்மன் எங்களோட குலதெய்வம். பிறந்த நாள், திருமணநாள்னு எல்லா விசேஷ தினங்களுக்கும் இந்தக் கோயிலுக்கு வந்துருவேன். நான் ஒரு டான்ஸர். ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த நேரத்துல, என்னோட திருமணநாள் வந்தது. அன்னிக்கு மதுர காளியம்மன் கோயிலுக்குப் போக முடியலையேனு வருத்தம். கனடாவிலிருக்கிற என் தோழி ஒருத்தவங்க, அன்னிக்கு அவங்க வீட்டுக்கு என்னை சாப்பிட வரச் சொன்னாங்க. அங்க போனப்போ, அவங்க வீட்டு பூஜை அறையில மதுரகாளியம்மன் படம் இருந்தது. ஒரு கணம் சிலிர்த்து கண்ணீரே வந்துடுச்சு எனக்கு. மெய்மறந்து வணங்கிட்டுப் போனேன். அங்க நான் கலந்துகிட்ட நடனப் போட்டியில எங்க டீம் ஜெயிச்சது. கடல் கடந்தும் வந்து பக்தனுக்கு காட்சிதர்ற, அருள்பாலிக்கிற அம்மனோட மகிமையே மகிமை. என் மகன் கல்யாணத்துக்கு ரொம்ப நாளா பொண்ணு தேடியும் எதுவும் அமையல. அப்புறம் அம்மன்கிட்ட வந்து அவன் கல்யாணத்தை ஒப்படைச்சுட்டோம். நல்ல பெண்ணா கிடைச்சு, இப்போ குழந்தையோட சந்தோஷமா வாழறாங்க’’ என்றார் ரேவதி நிறைவுடன்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சேலத்தில் இருந்து வந்திருந்த சுந்தரம் -  ஜெயமணி தம்பதி, ‘‘கல்யாணமாகி அஞ்சு வருஷமா எங்களுக்குக் குழந்தை இல்ல. அம்மன்கிட்ட வந்து எங்க மனக்குமுறல்களைக் கொட்டி, சோலை கன்னியம்மன் கோயில்ல குழந்தை வேண்டி மாவிளக்குப் போட்டுட்டுப் போனோம். அடுத்த வருஷமே அழகான பெண் குழந்தை பிறந்தது’’ என்றார் முகமலர்ச்சியோடு.

-  எம்.திலீபன்

எப்படிச் செல்வது?

பெரம்பலூரிலிருந்து தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். திருச்சியில் இருந்து வரும் எல்லா பேருந்துகளும் இவ்வூரில் நின்று செல்லும்.

திங்கள், வெள்ளிக்கிழமைகள், பிரதி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மதுரகாளியம்மன் கோயில் திறந்திருக்கும் (சோலை கன்னியம்மன் கோயில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்).

நேரம்: காலை 6.30 - இரவு 9.00 மணி.

தொடர்புக்கு: 04328-225333, 04328-291375.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism