பிரீமியம் ஸ்டோரி
கண்ணா... மணிவண்ணா!

கவான் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் பூர்ண அவதார மாகச் சொல்லப்படுவது கிருஷ்ணாவதாரம். எல்லோரும் கொண்டாடும் அவதாரம் கிருஷ்ணாவதாரம். இறைவனை குழந்தையாகக் கொண்டாடுவதில் உள்ள சுகமே அற்புதமான அனுபவம். அதனால்தான்  பலரும் இறைவனைத் தங்கள் குழந்தையாக நினைத்து, கொண்டாடி பாடி இருக்கின்றனர். அப்படிப்பட்ட பாடல்கள் பிள்ளைத் தமிழ் பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிள்ளைத்தமிழ் பாடல்களுக்கு முன்னோடியாக பெரியாழ்வாரை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆண்டாளை வளர்த்து பெருமாளுக்கே மணம் செய்துகொடுத்த பாக்கியசாலியான பெரியாழ்வார், கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு ஒரு தாயின் அன்பைப் போன்றது. தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு அவர் பாடிய பாடல்கள் அத்தனையுமே படிக்கப் படிக்க நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்திவிடும்.

தன்னை கோபிகையரில் ஒருத்தியாகவும், யசோதையாகவும்  நினைத்துக் கொண்ட பெரியாழ்வார், அழகே வடிவமாகக் கண்ணன் பிறந்துவிட்டதைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியப் படுத்துகிறார். தன் செல்லக் கண்ணனின் அழகை வந்து காணும்படி அவர் கோகுலத்து கோபியர்களை எல்லாம் அழைக்கிறார். ஆனாலும் கண்ணன் தேவகிக்கு பிறந்தவன் என்பதையும் பெரியாழ்வார் மறக்கவில்லை. அதனால்தான்,

சீதக்கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவளவாயீர்! வந்து காணீரே!


இந்தப் பாடலில் கண்ணன் ஆலிலையில் படுத்தபடி தன் கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சுவைக்கும் அற்புதமான காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார் பெரியாழ்வார்.
கண்ணனின் அவதாரம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மட்டும் நிகழவில்லை. பலருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காகவும் ஏற்பட்டது. அதற்கு உதாரணமாக ஒரு கதையைச் சொல்கிறது கீழ்க்காணும் பாடல்.

பெருமா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப்பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே,
சேயிழையீர்! வந்து காணீரே


நளகூபரன் மற்றும் மணிக்கிரீவன் ஆகிய இருவரும் குபேரனின் மைந்தர்கள். அவர்கள் இருவரும் ஒருமுறை தேவமகளிருடன் ஜலக்கிரீடை செய்துகொண்டு இருந்தபோது, நாரத ரிஷி அங்கு வந்தார்.  மகரிஷி அவ்விடத்துக்கு வந்ததைக் கண்ட தேவமகளிர் உடனே தங்கள் ஆடைகளை அணிந்துகொண்டனர். ஆனால், நளகூபரன் மற்றும் மணிக்கிரீவன் இருவரும் மதுமயக்கத்தில் தங்கள் ஆடைகளை அணிந்துகொள்ள மறந்து, மரம் போல் நின்றனர். அதைக் கண்டு சினம் கொண்ட நாரதர், “மரங்களைப் போல் நின்று கொண்டிருக்கும் நீங்கள் மருத மரங்களாக மாறுவீர்கள்’’ என்று சபித்துவிட்டார்.
மகரிஷியின் சாபத்தைக் கேட்டு தங்கள் சுயநினைவுக்கு வந்தவர்கள் நாரத ரிஷியிடம் சாப விமோசனம் கேட்டனர்.

“நீங்கள் இருவரும் கோகுலத்தில் மருத மரங்களாக நிற்பீர்கள். பகவான் கிருஷ்ணராக அவதாரம் செய்யும்போது அவரால் நீங்கள் சாப விமோசனம் பெறுவீர்கள்’’ என்று கூறினார்.

அதன்படியே அவர்கள் இருவரும் மருதமரங்களாக நின்றிருந்த வேளையில், பகவான் கோகுலத்தில் யசோதையின் மகனாக வந்து சேர்ந்தான். கண்ணன் எப்போது பார்த்தாலும் சேட்டைகள் செய்து கொண்டிருக்கவே யசோதை அவனை ஓர் உரலில் கட்டிப் போட்டாள். யசோதைக்குக் கட்டுப்பட்டதுபோல் கண்ணனும் உரலில் கட்டுப்பட்டான். யசோதை அப்படி நகர்ந்ததும் கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றான். அங்கே இரண்டு மரங்கள் பக்கத்து பக்கத்தில் இருப்பதைக் கண்ட கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு அந்த மரங்களுக்கு நடுவில் நுழைந்து சென்றான். அப்போது அந்த மரங்களுக்கு இடையில் உரல் செல்ல முடியவில்லை. கண்ணன் உரலை பலமாக இழுக்க இரண்டு மரங்களும் சாய்ந்து விட்டன. உடனே நளகூபரனும் மணிக்கிரீவனும் தங்கள் சுயவடிவம் பெற்றனர். கண்ணனை வணங்கி விடைபெற்றுச் சென்றனர். அப்படி தன்னுடைய லீலையால் நளகூபரனுக்கும் மணிக்கிரீவனுக்கும் சாப விமோசனம் அருளிய கண்ணனின் நீல நிற மணி மார்பின் அழகினைக் காண வாருங்கள் என்று பரவசத்துடன் அழைக்கிறார்.

கண்ணா, காப்பிடவாராய்!

தன் பிள்ளையின் லீலா விநோதங்களை எல்லாம் காணும் அன்னை யசோதை, தன் அழகு மகனுக்கு எங்கே திருஷ்டி பட்டுவிடப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவள் அந்தி சாயும் வேளையில் தன் செல்லக்கண்ணனுக்கு திருஷ்டி சுற்றிப் போட அழைக்கிறாள்.

தன்னை யசோதையாக நினைத்துக் கொண்டு பெரியாழ்வார் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றிப்போட அவனை அழைக்கும் அழகைப் பார்க்கலாமா?

கள்ளச் சகடும் மருதும்
கலக்கழிய உதை செய்த
பிள்ளையரசே! நீ பேயைப்
பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன்;
ஒளிவுடை வெள்ளறை நின்றாய்!
பள்ளிகொள்போது இதுவாகும்
பரமனே காப்பிட வாராய்


கண்ணன் சிறு பிள்ளையாக தொட்டிலில் படுத்திருக்கும்போது, கம்சனால் அனுப்பப்பட்ட சகடாசுரன் கண்ணனை அழிக்க வந்தான். அவனைத் தன் பிஞ்சுக் கால்களால்  வதம் செய்ததையும், முன்பே பார்த்ததுபோல் நளகூபரன் மணிக்கிரீவன் ஆகியோருக்கு சாப விமோசனம் தந்ததையும் குறிப்பிடும் பெரியாழ்வார், பாலூட்ட வந்த பூதனையைக் கொன்றதையும் குறிப்பிட்டு, இப்படியெல்லாம் நீ செய்வதால் எங்கே உனக்கு தீமை விளையுமோ என்று நான் பயப்படுகிறேன். உறங்கச் செல்லப்போகும் இந்த நேரத்தில் நான் உனக்கு திருக்காப்பிட  எனக்கு அருகில் வருவாயாக என்று அழைக்கிறார்.

இமயவர்க்கு என்றும் அரியாய்!

மற்றொரு பாடலில் கண்ணன் கம்சனை வதம் செய்ததையும், அதற்கு முன்பு கம்சனால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றதையும் குறிப்பிடுகிறார்.

இன்பம் அதனை உயர்த்தாய்
இமையவர்க்கு என்றும் அரியாய்!
கும்பக்களிறு அட்ட கோவே!
கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!
செம்பொன் மதில் வெள்ளறையாய்!
செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்கு
கடிது ஓடிக் காப்பிட வாராய்


என்று கண்ணனுக்கு திருஷ்டி சுற்றிப் போட அழைக்கிறார். குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றவனும், கம்சனுக்கு கூற்றுவன் போல் இருப்பவனும், செல்வத் திருவை உடையவனும், தேவர்களுக்கு அரியவனுமாகிய என் கண்ணனே, அதோ பார் மற்றவர்களைப் பயப்படுத்தும் கபாலி வருகிறான். யசோதையாகிய எனக்குப் பேரின்பத்தைக் கொடுப்பவனே, உடனே என்னிடம் ஓடி வந்துவிடு. உனக்கு நான் திருஷ்டி சுற்றிப்போடவேண்டும் என்று அழைக்கிறார்.

கண்ணா... மணிவண்ணா!

கண்ணனைத் தன் குழந்தையாக நினைத்துக் கொண்டு பெரியாழ்வார் இப்படியெல்லாம் பாடி மகிழ்ந்திருப்பது போல், ஒரு பாடலில் கண்ணனை தன் மாப்பிள்ளையாகவும் பாடி இருக்கிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால்தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி  வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறம் செய்யுங்கொல்லோ


‘நான் ஈடும் இணையும் இல்லாத ஒரு பெண்பிள்ளையைப் பெற்றேன். உலக மக்கள் எல்லோரும் போற்றும்படியாக அவளை திருமகள் போல் வளர்த்தேன். ஆனால், என்ன சொல் வேன், செந்நிறமான கண்களை உடைய திருமால் அவளைக் கொண்டு போய்விட்டானே. தேடிச் செல்லாமல் தானாக வந்தவள் தானே இவள் என்று யசோதை நினைத்து, என் பெண்ணுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளைச் செய்யாமல் போய் விடுவாளோ’ என்று அச்சப்படுகிறார்!

பெரியாழ்வாரின் கிருஷ்ண பக்தியை என்ன வென்பது? தன் குழந்தையாக கண்ணனைக் கருதி அவர் கொஞ்சிக் கூத்தாடும் இந்தப் பாடல்களை, ஜென்மாஷ்டமியில் மட்டுமல்ல அனு தினமும் படித்து வாருங்கள்; பகவான் உங்களிடம் வருவார். அவரை அலைமகள் தனியே விட்டுவிடுவாளா? அவளும் சேர்ந்தே வருவாள். அப்புறம், உங்கள் இல்லத்தில் சுபிட்சங்களுக்குக் குறையேது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு