மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

குழந்தையும் தெய்வமும்

சேங்காலிபுரம் எஸ்.அனந்தராம தீக்ஷிதர்

நமது பாரத மக்கள் முதுமொழிகளை நன்குணர்ந்து குழந்தைகளைத் தெய்வம் போல் கொண்டாடும் பண்பினை இன்றும் காண்கின்றோம். குழந்தைகளைக் காணும்போது பெரும்பாலும் கண்ணன் ஞாபகம் வருவது இயற்கை. கவிஞர் ஒருவர் பூஞ்சோலைகளைக் காணும்போது கண்ணன் நினைவு வருவதாகக் குறிப்பிடுகிறார். பசு முதலிய பிராணிகளை மேய்த்துப் பரிபாலிக்கும் மக்கள் ஆயர் எனப்பட்டனர்.

பசுக்களை மேய்ப்பதற்குக் காடு அவசியமானது. காட்டையும், காட்டைச் சார்ந்த  இடங்களையும் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் எனப் படுவோர், தங்கள் தலைவனாகக் கண்ணனை வழிபட்டார்கள். தமிழ் இலக்கியங்களில் சிறந்த  ‘பிள்ளைத் தமிழ்’ என்ற நூல் வரிசைகளும் இறைவனைக் குழந்தையாக பாவித்துப் போற்றும் தன்மையிலேயே அமைந்துள்ளது இங்கு நோக்கத் தகுந்தது.

பக்தர் ஒருவர் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிப் பாடும் ஒரு நிகழ்ச்சி இவ்வுண்மையை நமக்கு நன்கு விளக்குகின்றது. யசோதை, பகவானின் அருளால் அக்கடவுளையே புதல்வனாக அடைந்தாள்.

அக்குழந்தையை அவள் தெய்வத்தைப் போல் கொண்டாடினாள். அந்த பாலனும் வளர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றான். சாதாரணமாக  நம் குழந்தைகளின் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவது போல் யசோதையும் கொண்டாட நினைத்தாள். கண்ணன் ஆண்டு நிறைவைப் பெறும் நன்னாளில் பிரம்ம லோகத்திலிருந்து, பிரம்மாவின் புத்ரனும் தேவரிஷியுமான நாரதர் வீணையைக் கையிலேந்தி நந்தகோகுலம் வந்தார். ஸ்ரீபகவானுக்கு பந்துக்கள் தேவர்களும் பக்தர் களும்தானே?!

நாரதர் வந்த சமயம் ஸ்ரீகண்ணனுக்கு மங்கள ஸ்நானமாகிய எண்ணெய் தேய்த்தலை யசோதை செய்து கொண்டிருந்தாள். பணிப் பெண்கள் பலர் இருந்தும் யசோதை தானே அதைச் செய்து கொண்டிருந்தாள். எவருக்கும் கிடைக்காத இந்த பாக்யத்தை நாரதர் பார்த்து, யசோதையை அழைத்து, ‘‘ஹே! யசோதே! நீ என்ன புண்யம் செய்தாய்! உனது பாக்யத்தை என்னவென்று சொல்வேன்! எந்தக் கண்ணனுடைய திருவடிகளில் பிரம்மா, இந்திரன், வருணன், இயமன், குபேரன் முதலிய சிறந்த தேவர்கள் விழுந்து நமஸ்கரிக்கின்றனரோ, அந்தப் பரமாத்மாவான ஸ்ரீகண்ணன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்காக உன் கால்களில் விழுந்து கட்டிக் கொண்டிருக்கிறானே! இம் மாதிரியான பாக்யம் வைகுண்டம் சென்றவர்களுக்கும் கிடைக்காது. உனது இடைச்சேரியான இந்த நந்தகோகுலம்  வைகுண்டத்துக்கும் மேலாகிவிட்டதே. உன் பாக்யமே பாக்யம்!’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட யசோதை, குழந்தையை தெய்வம் போல் நினைத்துப் பணிவிடை செய்து வந்தவள், இக்குழந்தை தெய்வமா என்று நினைத்து அப்யங்க ஸ்நான காலத்தில்  இரண்டு தோள்களையும் பிடித்துத் தூக்கிப் பார்த்தாள். உடனே ஸ்ரீபகவான் வைகுண்ட தரிசனத்தைத் தாய்க்குக் காண்பித்தார். அப்பொழுது யசோதை அழகிய சொற்களால் பகவானை ஸ்தோத்திரம் செய்தாள். ‘‘குழந்தை யும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்  அன்பு காட்டும்’’ என்ற நம் பெரியோர்களின் சொல்லின் உண்மையை யசோதை அனுபவித்தாள்.

அருட்களஞ்சியம்

உண்மையில் நன்மக்களைப் பெறுவதால் கிடைக்கும் பேரின்பத்தை யசோதையின் இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். குழந்தை தெய்வப் பிறவியென்று அறியாமலேயே அவள் தெய்வத்தைக் கொண்டாடுவது போல் போற்றினாள். அவ்வாறு போற்றப்பட்டதன் காரணமாகவே அவளுக்கு பகவானின் திவ்ய தரிசனம் கிடைத்தது.

** 1954 -ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

அருட்களஞ்சியம்

தாய்ப்பாலோடு பருகிய தியாகம்

‘‘விதியின் பிழைக்கு வெகுண்டு பயன் என்ன?” என்று கேட்டான் ராமன். ‘பழிச் சொற்களோடு இரண்டு தோளும் அம்புப் புட்டிலும் வில்லும் சுமக்கப் பிறந்த நான் வெகுண்டு என்ன பயன்?” என்று லட்சுமணன் பதில் கேள்வி கேட்கிறான்.

இப்படிப்பட்ட தம்பி, ராமனுக்காக எத்தகைய தியாகமும் செய்துவிடுவான் என்று நாம் முன்கூட்டியே ஊகிக்கக் கூடும். இனி, இவன் தாயார் இவனுக்குச் செய்யும் உபதேசத்தைக் கேட்போம்.
அண்ணனுடன் காட்டுக்குப் போக வேண்டும் என்று லட்சுமணன் தன் தாயாகிய சுமித்திரையிடம் விடை கேட்கிறான்.

உடனே தாய், ‘‘குழந்தாய்! நீ ஏன் போக வேண்டும்? சக்ரவர்த்தியாவது சக்களத்தியாவது உன்னைக் காட்டுக்குப் போகும்படி உத்தரவு செய்ய வில்லையே?” என்று சொல்லவில்லை.
‘‘அண்ணன்தான் அநியாயமாய்க் காட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது; நீயாவது இங்கே இருந்து தாய்மாராகிய என்னையும் கோசலை யையும் தேற்றிக் கொண்டிருக்க லாகாதா?” என்றும் சொல்லவில்லை.

‘‘மகனே! வனமே உனக்கு அயோத்தி” என்கிறாள்.

அருட்களஞ்சியம்

‘‘தந்தையும் அரசனும் ராமன்தான்; சீதையே உன் தாய்!” என்றும் சொல்லுகிறாள்.

‘‘இனி இங்கே தாமதிப்பதும் குற்றம்!” என்கிறாள். ‘‘எப்பேர்ப்பட்ட தாயார்! எப்பேர்ப் பட்ட மகன்!” என்று ஆச்சரியம் அடைகிறோம். கேளுங்கள், இந்த அதிசயத் தாயின் அதிசய வார்த்தைகளை:

‘‘ஆகாத(து) அன்றால் உனக்(கு) அவ்வனம் இவ்அ யோத்தி;
மாகாதல் மன்னன் இவன்; வையகம், ஈந்து வானில்
போகா இருதாயாரும் பூங்குழல்சீதை; என்றே,
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும்ஏதம்!” என்றாள்

லட்சுமணன் தாயின் அனுமதி பெற்றுக் குதூகலத்தோடும் பெருமிதத்தோடும் அண்ண னுடன் புறப்படுகிறான்.

ஆனால், இப்பொழுது சுமித்திரை ‘மகனே!’ என்று அவனை அழைத்து, ‘ராமனுடன் செல்லாதே!’ என்கிறாள், ஏன்?

‘அவன் பின் செல்’ என்று சொல்லும்போது தான் சுமித்திரையினுடைய கருத்து விளங்குகிறது. லட்சுமணன் ராமனுடன் கம்பீரமாகப் போனால், அவனுக்குத் தானும் சமானன் என்ற எண்ணம் உண்டாகுமாம்; தானும் ஒரு ராஜகுமாரன் என்பதும் நினைவுக்கு வருமாம்; தன்னை, ராமன் தம்பியென்றே நினைத்துக் கொள்ளவும் கூடும். இப்படிப்பட்ட நினைப்பினால் வனத்திலே ராமனுக்கு வேண்டிய குற்றேவல் செய்வதில் குறைகள் ஏற்படக் கூடுமாம்.

ஆகவே சுமித்திரை, ‘உடன் செல்லாதே, பின் செல்’ என்று சொல்லத் தொடங்குகிறாள்:

பின்னும் பகர்வாள்; ‘‘மகனே! இவன் பின்செல்; தம்பி
என்னும் படியன்(று), அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்வந்திடின் வா, அ(து) அன்றேல்,
முன்னம் முடி!” என்றனள், பால்முலை சோர நின்றாள்.


லட்சுமணனைப் பார்ப்பவர்களும் ‘‘இவன் ராமன் தம்பி” என்று தெரிந்துகொள்ளாமல் ‘‘அவன் ஏவும் தொழிலைச் செய்யும் அடிமை!” என்றே நினைக்கும்படி நடந்துகொள்ள வேண்டு மாம். இவ்விதமாகப் பணி செய்து, ‘‘நகரத்துக்கு ராமன் மீண்டு வந்தால் நீயும் வா’’ என்று தாய் சொல்லுகிறாள். ஆனால், ‘‘அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேருமாயின்’’ என்பதைச் சொல்லவும் கூசி, ‘‘அது அன்றேல் முன்னம் முடி!”

- ‘‘அப்படியல்லாமற் போனால், நீ அவனுக்கு முன்னமே உயிரை முடித்துக்கொள்ள வேண்டும்” என்று ஆசீர்வதிக்கிறாள்.

இத் தாயைப் ‘‘பால்முலை சோர நின்றாள்” என்கிறான் கவிஞன். அவ்வளவு பேரபிமானம் பெற்ற பிள்ளையிடம்!

இவளன்றோ வீரத் தாய்!

ராமாயண கீதை

துயரப் பெருங்கடலில் கால் வைத்த வசிஷ்டர் பொங்கி வரும் துன்ப அலைகள் தாக்கத் தம் வசம் அற்றவரானார்; தம்மை மறந்தார் சிறிது நேரம், பிறகு அவர் லட்சுமணனை மறந்துவிட்டு, ராமனையே வைத்த கண் வாங்காமல் நோக்கி,

‘‘குழந்தாய்! நீ காட்டுக்குப் போனால் சக்கர வர்த்தி வாழமாட்டார்; அவருக்கு உயிர் போய் விடும்” என்ற முடிவான வார்த்தையைச் சுருக்கமாக, உறுதியான குரலில் சொல்லுகிறார்.

இதற்கு ராமன் கூறும் விடை முனிவரை அப்படியே பிரமிக்கச் செய்துவிடுகிறது:

‘‘அன்னவன் பணிதலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன், அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன்” இது நெறியும், என்றனன்:
பன்னகப் பாயலுள் பள்ளி நீங்கினான்.


ஒரு சேனாபதியின் உயிரைக் காப்பதைக் காட்டிலும் அவன் கட்டளையைத் தலை மேல் தாங்கித் தொண்டாற்றுவதுதான் படைவீரனது கடமையென்று கூறுவதுண்டு. அப்படியே தந்தையும் தலைவருமாக இருக்கும் அரசர்பிரானது பணியைத் தலைமேல் ஏந்தி அதன்படி ஒழுகுவதுதான் புதல்வனாகிய தன் கடமை என்று உண்மை வீரனாகிய ராமன் சொல்லுகிறான். ஆனால், தசரதருடைய துன்பத்தை நீக்குதல் குருவான வசிஷ்ட முனிவர் கடமை என்பதையும் ஞாபகப்படுத்துகிறான்.

‘ஆ, ராமாயணத்திலும் ஒரு கீதையா?’ என்று ஆச்சரியமடைகிறோம். அந்தக் கீதை, கண்ணனால் தனக்கு நண்பனாகவும் சீடனாகவும் இருந்த அர்ஜுனனுக்குப் பல சுலோகங்களால் உபதேசிக்கப் பெற்றது. இந்தக் கீதையோ மூன்றே அடிகளால் சிஷ்யன், குருவுக்கே உபதேசம் செய்வது!

அருட்களஞ்சியம்

கடைசியாக, தத்துவ சாஸ்திர நிபுணர் கேவலம் ஒரு சட்ட நிபுணரைப் போல் விவகாரம் செய்து பார்க்கிறார். ‘‘அரசர் காட்டுக்குப் போ என்று உனக்குக் கட்டளையிடவில்லை; ஆராய்ந்து ஆலோசித்துப் பாராமல் கைகேயிக்கு இவ்வரங்களைக் கொடுப்பதாகச் சம்மதித்தது உண்டு. எனவே, சட்டப்படி நீ காட்டுக்குப் போக வேண்டியதில்லை!” என்பது வசிஷ்டர் வாதம். இதற்கு ராமன் சுலபமாக அளிக்கும் விடையைக் கேளுங்கள்.

“ஏன்றனன் எந்தைஇவ் வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள்; யானது சென்னி ஏந்தினேன்;
சான்றென நின்றநீ தடுத்தியோ?” என்றான்.
தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான்.


‘‘நீர் சொல்கிறபடி, என் தந்தை சம்மதித்து விட்டார். கட்டளையிட்டவரோ நான் பெற்ற தாயாகவே மதிக்கும் சிறிய தாயார். ஆகையால் பிதாவின் வாக்கியத்தைப் பரிபாலிப்பதோடு, மாதாவின் வாக்கியத்தைப் பரிபாலிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் சாட்சியாக நிற்கும் நீர் இப்பொழுது தடுப்பீரோ?” என்று ராமன் சொன்னதும், வசிஷ்டர் பதில் ஒன்றும் சொல்ல மாட்டாதவராய்க் கண்ணீர் தாரையாகப் பெருக, அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறார்.

ராமன் தோல்வி!

லட்சுமணனும் தன்னைப்போல் மரவுரி கட்டிக் கொண்டதைப் பார்த்து ராமன், ‘‘தம்பி! நீ அயோத்தியில்தான் இருக்க வேண்டும்” என்று சொன்னான்.

ஆனால், அப்படிச் சொல்லி லட்சுமணனைப் பிரிந்திருக்கும்படி வற்புறுத் துவது எவ்வளவோ கஷ்டமான காரியம் என்பது ராமனுக்குத் தெரியும்.

ஆகவே, லட்சுமணனுடைய புகழையும் பண்பையும் பெரிதும் போற்றி, அப்பேர்ப் பட்டவன் தான் சொல்லக்கூடிய உறுதியான காரியத்தை மறுக்காமல் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறான். இனி, ராமன் சொல்லும் அதிக உறுதியான வார்த்தையையும் கேட்போம்:

‘‘அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர், வெந்துயரின் மூழ்கினார்.
என்னையும் பிரிந்தனர். இடர்உ றாவகை
உன்னைநீ  என்பொருட்(டு) உதவுவாய்” என்றான்.


‘‘தம்பி! நம் தாய்மாரும் சக்ரவர்த்தியும் என்னைப் பிரிவதால் இனி முன் இருந்த நிலைமையில் இருக்கமாட்டார்கள். அவர்கள் உன்னையும் பிரிந்து துயருற வேண்டுமா? என்னைப் பிரிந்த தாய் தந்தையர் துயரத்தை நீ ஆற்றிக்கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்” என்று சொல்லும் ராமன், ‘‘என் பொருட்டு நீ அப்படி உன்னை உதவ வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறான்.

இவ்வளவு சாதுரியமாகவும் சிறந்த பண்பு டனும் ராமன் பேசியபோதிலும், லட்சுமணனால் அந்த வார்த்தையைக் கேட்கவும் முடியவில்லை. அவன், தோள் நடுங்கத் திடுக்கிட்டுப் போகிறான்.

பிறகு, போன உயிர் மீண்டது என்று சொல்லும்படி ஒரே கலக்கமாய்க் கலங்கி நின்று, ‘‘இப்பொழுது அடியேன் உனக்குச் செய்த பிழை யாது?” என்று பொருமுகிறான்.

‘‘நீர்உள எனின், உளமீனும் நீலமும்;
பார்உள எனின், உள யாவும் பார்ப்புறின்
நார்உள தனுஉளாய்! நானும் சீதையும்
ஆர்உளர் எனின்உளேம்? அருளு வாய்” என்றான்.


நீர் நிலையை அழகு செய்வது நீலமலர் என்றால், அந்த நீரைத் தூய்மை செய்வது மீன் அல்லவா? அந்த நீலமலரைப் போல் இருக் கிறாளாம் சீதை; மீனைப் போல் இருக்கிறானாம் லட்சுமணன். மீனுக்கும் நீலமலருக்கும் ஆதாரமான உயிர்நிலை ராமன்தானாம். பொருள்களுக்கு ஆதாரம் நிலம் அல்லவா? ராமனும் ஆதார பூமியாக இருக்கிறானாம் சீதைக்கும் லட்சுமணனுக்கும்.

அருட்களஞ்சியம்

‘‘கேவலம் ஒரு பெண்ணின் வார்த்தையால் பொது ஜனங்களெல்லாம் நைந்து உடல் ஒடுங்கும்படி, உன்னைக் காட்டுக்கு ஏவி விட்டு, தான் பத்திரமாக அரண்மனையிலே பிழைத்திருந்து சத்தியத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு சுகமாயிருக்கும் அந்த அரசனுடைய மகன்தானே இவன் என்று எண்ணித்தானா, அண்ணா, என்னிடம் இந்த வார்த்தை சொன்னாய்?” என்று புண்பட்ட நெஞ்சோடு புலம்புகிறான் லட்சுமணன்.

நோக்கும்போதே அருள்நிறைந்த அம்மலர்க் கண்களில் நீர் நிறைந்து தாரை தாரையாக வழிகிறது. அந்தக் கண்ணீர், லட்சுமண கோபத்தை அநாயாசமாக ஜயித்த ராமனுக்குத் தோல்வியையும், லட்சுமணனது அன்புக்கும் தியாக உணர்விற்கும் வெற்றியையும் எளிதாக அளித்து விடுகிறது.

** 19.1.47, 26.1.47 மற்றும் 2.2.47  ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து.