மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

விரதம் இருப்பவர் பகலில் தூங்கலாமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

? மூன்றாம் பிறை தரிசனத்தைச் சிறப்பாகவும், நான்காம் பிறை தரிசனத்தை கூடாது என்றும் சொல்கிறார்களே. ஒருவேளை நான்காம் பிறையைப் பார்க்க நேர்ந்தால், பரிகாரம் என்ன?

- சங்கவி ராமச்சந்திரன், திருநெல்வேலி-2


மூன்றாம் பிறைச் சந்திரன், வளர்பிறை, கண்ணுக்குப் புலப்படும் பிறை. முன்பிறைகள் விண்வெளியில் பளிச்சென்று தெரியாது. வளரும் சந்திரனைப் பார்ப்பது நமது வளர்ச்சிக்கு உதவும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும். சந்திரன் தேய்ந்த வடிவில் தென்பட்டாலும், படிப்படியாக வளரும் திறமையோடு இருப்பவன் என்பதால், முளையில் இருக்கும் நமது முன்னேற்றமும் படிப்படி யாக வளரும் என்பது திண்ணம்.

தேய்ந்தும் வளர்ந்தும் இருப்பது சந்திரனின் இயல்பு. அது நம் மனதுக்கும் பொருந்தும்; துயரத்தில் தேய்ந்தும், மகிழ்ச்சியில் வளர்ந்தும் தென்படும். சந்திரனை மனதோடு ஒப்பிடும் ஜோதிடம். மன வளர்ச்சிக்கு சந்திரனின் பங்கு முக்கியமானது என்றும் அது கூறும். சூரியனில் மறைந்து கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தவன் இப்போது உலகத்தின் பார்வைக்குத் தென்படுகிறான். அது மூன்றாம் பிறை. பஞ்சாங்கத்தில் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘சந்திர தரிசனம்’ அதாவது சந்திரனைப் பார்க்கும் வேளை என்று குறிப்பிட்டிருக்கும்.

ஆயிரம் சந்திரனைப் பார்த்தவன் சதாபிஷேகம் செய்து கொள்கிறான். நீண்ட ஆயுள் இருப்பவனுக்கு சதாபிஷேகத்தில் மகிழ வாய்ப்பு இருக்கும். மூன்றாம் பிறையைப் பார்த்தவர்களுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையுடன் சதாபிஷேக வைபவத்தையும் அவர்களுக்கு வழங்குவான் மூன்றாம் பிறைச் சந்திரன் என்ற நம்பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. பண்டைய காலத்தில் கிராமத்தில் வாழும் முதியோர்கள் சிரமம் பாராமல் மூன்றாம் பிறையைப் பார்த்து மகிழ்வர். அதைக் கடமையாகப் பின்பற்றுவார்கள். நம் குழந்தைகளுக்கும் அந்தப் பண்பு வளர வேண்டும்.

கேள்வி - பதில்

பார்த்துத் தெரிந்துகொண்ட விஷயங்கள் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும். மனதைப் பண்படுத்தும் பழைய நம்பிக்கைகள் பலவற்றை நாம் உதாசீனத்தால் இழந்து விட்டோம். சுறுசுறுப்போடு சிறுகச் சிறுக வளர்ந்தால் முழு வளர்ச்சியை எட்டி விடலாம் என்ற படிப்பினையை மூன்றாம் பிறைச் சந்திரன் நமக்கு அறிவுறுத்துகிறான். ஈசனும், உமையும், கணேசனும் பிறைச் சந்திரனை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். சந்திர மௌலி, பாலச்சந்திரன் என்ற பெயர்கள் அவர்களுக்குப் பெருமை அளிக்கின்றன.

ஒருமுறை சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார் கணபதி. கையில் கொழுக்கட்டை ஏந்திய கணபதியின் தோற்றத்தைப் பார்த்து ஏளனம் செய்தான் சந்திரன். அன்று பிள்ளையார் சதுர்த்தி. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் கலங்கிய சந்திரன் மன்னிக்கும்படி வேண்டி, அவரை வழிபட்டார். சாப விமோசனம் கிடைத்தது. அதோடு மூன்றாம் பிறையைப் பார்ப்பவர்களுக்கு முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார். சதுர்த்தி சந்திரனைப் பார்த்து வீண் பழிக்கு ஆளானான் கண்ணன். கணபதியை வேண்டி பழியில் இருந்து விடுபட்டான். சதுர்த்தி சந்திரனைப் பார்த்தவர்கள் கண்ணனின் ஸ்யமந்தக வரலாற்றைச் சொன்னால் பழியிலிருந்து விடுபடுவார்கள் என்று புராணம் தெரிவிக்கிறது. சொல்ல வேண்டிய செய்யுள் இதோ...

சிம்ஹ: ப்ரசேனமவதீத் சிம்ஹோ ஜாம்பவதா ஹத:
சுகுமாரக மாரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:


?     விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாதா?

- கே.மாரிமுத்து, மதுரை-3


விரதம் என்றாலே ஏதோ ஒரு லட்சியத்தை மனதில் வைத்து, ஏதோ ஒரு தெய்வத்தை ஆராதிக்கிறோம் என்றுதானே பொருள். அப்படி இருக்கும்போது எப்படித் தூக்கம் வரும்?!
 
இரவு செகண்ட்ஷோ சினிமாவுக்குப் போகணும் என்றால், தூங்கமாட்டோமே... நாளைக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றாலோ, ஓர் அலுவலகத்துக்கு ஒரு காரியமாகப் போக வேண்டும் என்றாலோ நமக்குத் தூக்கம் வராது. இப்படி சாதாரணப் பொழுதுகளிலேயே தூக்கம் வருவதில்லையே! விரதம் இருக்கும்போது தூங்குவேன் என்றால், என்ன விரதம் அது? தர்ம சாஸ்திரம் தூங்கக் கூடாது என்கிறதே என்பதை விட நீங்களே தூங்காமல் அல்லவா இருக்க வேண்டும்? விரதத்தின்போது தூங்கினீர்கள் என்றால், விரதத்தில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றுதான் அர்த்தம். விரதத்தின் போது உற்சாகமாக இருக்க வேண்டாமா? தூங்குமூஞ்சியாகவா விரதம் இருப்பது? தெய்வத்திடம் ஒன்றை எதிர்பார்க்கும் போது ஈடுபாடு, சுறுசுறுப்பு வேண்டாமா? மனதில் சுறுசுறுப்பு இருக்கும்போது தூக்கம் எப்படி வரும்? அர்த்தம் இருப்பவன் தூங்க மாட்டான். அனர்த்தம் இருப்பவனும் தூங்க மாட்டான். அனர்த்தம் - அதாவது ஏதோ தொந்தரவு இருப்பதால்தான் நீங்கள் இந்த விரதத்துக்கே வந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உங்களுக்குத் தூக்கமே வரக் கூடாதே... எப்படித் தூங்குகிறீர்கள்? முக்கியமான காரியங்கள் இருக்கும்போது தூக்கம் வந்தால், உங்கள் உடலில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று பொருள்.

? என் சகோதரியின் வீட்டில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் இல்லை. புதிதாகத் திருமணமாகி வந்திருக்கும் அவளுடைய மருமகள், வரலட்சுமி பூஜை செய்யலாமா?

- எம்.குணசங்கரி, ஆழ்வார்திருநகரி


புகுந்த வீட்டில் உள்ள சம்பிரதாயத்தையே அந்த வீட்டின் மருமகளும் பின்பற்ற வேண்டும். இனி அதுவே அவளின் வீடு, குடும்பம்! திருமணத்துக்குப் பிறகு... பிறந்த கோத்திரத்தைத் துறந்து, கணவன் கோத்திரத்துடன் இணைந்துவிடுகிறாள். பெண். பிறந்த வீட்டு சம்பிரதாயத்தை அவள் தவிர்க்கலாம்.

பற்றுதலுடன் ஒரு சம்பிரதாயத்தை ஏற்பதே சிறப்பு. புராணங்கள் நிறைய விரதங்களை ஏற்கச் சொல்லும். நமக்குப் பிடித்தமானதைத் தேர்ந் தெடுக்கலாம். அலுவல்கள் பல நிறைந்த இன்றைய குடும்ப வாழ்க்கையில், ஆர்வக் கோளாறினால் எண்ணிக்கைக்கு அதிகமான விரதங்களை ஏற்று, சுமையாக்கிக் கொள்ளக் கூடாது.

? எலுமிச்சை தீபம், தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றலாமா? இதுபோன்ற பிரார்த்தனைகள் குறித்த செய்திகள் தர்ம சாஸ்திரம் மற்றும் புராணங்களில் உண்டா?

- வே.தணிகாசலம், காரமடை


தற்காலத்தில் தோன்றியவை, சாஸ்திரங்களில் தென்படாது. தீபத்துக்கான இலக்கணத்தில் எலுமிச்சையும் வராது; தேங்காய் மூடியும் வராது. பக்தி மேலீட்டால், புதுப் புது நடைமுறைகளை நாம்தான் வகுத்துக் கொண்டிருக்கிறோம்.

கருவறை இருட்டில், அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் இறையுருவத்தைக் கண்கூசாமல் தெளிவாக தரிசனம் செய்ய இயலும். அப்படி யிருக்க, தற்காலத்தில் மின் விளக்குகளின் வெளிச்சத்தைப் பாய்ச்சி, கருவறையின் குளிர்ந்த சூழலை, வெப்பமாக மாற்றி அமைக்கிறோம். நம்முடைய கண்களுக்கு அவ்வளவு வெளிச்சம் தேவையில்லை. உள்ளே இருக்கும் அர்ச்சகரின் உடலுக்கும் அது உகந்ததல்ல.

கேள்வி - பதில்

ஆனாலும், விஞ்ஞானத்தின் பெருமையைப் புகழ்கிறோம். கற்பூர ஆரத்தி தீபாராதனைக்கு உகந்தது. அதிலும் குறை கண்டு, சீர்திருத்தவாதிகளின் பரிந்துரையில் மாற்று வழியைக் கையாண்டு, மெய்ஞ்ஞானத் தில் விஞ்ஞானத்தைத் திணிக்கிறோம். நல்லதைச் செய்வதாக நினைத்துக்கொண்டு பல நன்மைகளை இழக்கிறோம். புதுப் புது பிரார்த்தனைகளும் அந்த வழியில் நுழைந்து இடம்பிடித்தவையே!

? சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகங்களைச் சொல்லி அம்பாளை வழிபடும்போது, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் உரிய வழிபாட்டு முறை, நைவேத்தியம் மற்றும் கோலம் எல்லாம் உண்டு என்றார் பெரியவர் ஒருவர். தெய்விக கோலங்களுக்கும் தெய்வ ஆற்றல் உண்டுதானே?

- ரேணுகா கலைச்செல்வி, தூத்துக்குடி


ஸ்தோத்திரம் என்றால் இறைவனிடம் இருக்கும் குணங்களை எடுத்துச் சொல்லுதல். அம்பாளின் அளவில்லா குணங்களில் சிலவற்றை விளக்குகிறது, அந்த ஸ்தோத்திரம். அதனுடன் தந்திர சாஸ்திரத்தை இணைத்துப் பெருமை சேர்க்க முற்பட்டிருக்கிறார்,  உங்களுக்கு விளக்கம் சொன்ன பெரியவர்.

மகான்கள் பலர், பல்வேறு கோணங்களில், தங்களுடைய தகுதிக்கும் சிந்தனைக்கும் எட்டிய விதத்தில், மாறுபட்ட விளக்கவுரைகளைத் தந்து, நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக் கிறார்கள். அவை அத்தனையையும் ஸ்தோத்திரம் இயற்றியவரின் கருத்தாக ஏற்க முடியாது. பூஜையறையில் கோலம் போட்டு அழகு பார்ப்பதில் எந்தப் பலனும் கிடையாது. பூஜைக்கு வேண்டிய பொருளை ஈட்டுவதிலேயே நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கக் கூடாது. இவையெல்லாம் பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள். அவையே தெய்வ வடிவெடுத்து அருள் பாலிக்காது. அம்பாளை மனதில்  இருத்தி, ஸ்தோத்திரத்தை ஆழ்ந்து படியுங்கள்; விருப்பம் ஈடேறும்.

- பதில்கள் தொடரும்...

கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -  600 002

svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.