Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

ராசிக் கட்டத்தில் பல வீடுகளில் தென்படும் கிரகங்கள் அத்தனையும், அம்சகக் கட்டத்தில் குரு வீட்டில் ஒதுங்கியிருந்தால்... அதாவது அம்சகக் கட்டத்தில் தனுசு ராசியிலும் மீன ராசியிலு மாக இடம்பிடித்து இருக்கிறார்கள். அதேநேரம், ராசிக் கட்டத்தில் அத்தனை கிரகங்களும் லக்ன கேந்திரத்தில் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் அல்லது 9-ம் வீட்டில் அல்லது 2-ம் வீட்டில் அமர்ந்து இருக்கும் அமைப்பு இருந்தால், இயல்பாகவே அவன் உலகவியல் சுகபோகங்களில் பற்றற்ற நிலையை அடைந்திருப்பான்.

தான் இருக்கும் இடத்தை, சொந்த வீட்டைத் துறந்து, பல தத்துவ விளக்கங்களின் உள்ளர்த்தத் தை உணர்ந்து, அவற்றை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் பல நூல்களை இயற்றி,
உலகம் உய்ய உறுதுணையாக தனது வாழ்க்கை யைத் திருப்பிவிடுவான் என்கிறது ஜோதிடம் (ஜீவாம்சகஸ்தா; ஸதலாக்ர ஹேந்த்ரா:...).

ராசிக் கட்டத்தில் கிருத்திகை முதல் பாதத்தில் இருக்கும் கிரகம், அம்சகக் கட்டத்தில் தனுசில் வந்துவிடும். கிருத்திகை 4-ம் பாதத்தில் இருக்கும் கிரகம், அம்சகத்தில் மீனத்தில் வந்துவிடும். திருவாதிரை முதல் பாதம், 4-ம் பாதத்தில் உள்ள கிரகம், தனுசிலும் மீனத்திலும் வந்துவிடும்.ஆயில்யம் 1, 4-ம் பாதங்களில் இருப்பவை, தனுசிலும் மீனத்திலும் வந்துவிடும். உத்திரம் 1, 4-ம் பாதங்கள், தனுசு-மீனம் ஆகியவற்றில் இடம்பிடித்துவிடும். சுவாதி 1, 4-ம் பாதங்கள், தனுசு-மீனத்தில் இடம்பிடித்துவிடும். அனுஷம் 1, 4-ம் பாதங்களும் அம்சகத்தில் தனுசு-மீனம் ஆகியவற்றில் இடம் பிடித்துவிடும். உத்திராடம் 1, 4-ம் பாதங்களும், சதயம் 1, 4-ம் பாதங்களும், ரேவதி 1, 4-ம் பாதங்களும் முறையாக தனுசு, மீனம் ராசிகளில் இடம்பிடித்துவிடும்.

ராசிக் கட்டத்தில் கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில், குறிப்பிட்ட பாதத்தில் அமர்ந்த கிரகங்கள், அம்சகத்தில் தனுசிலோ மீனத்திலோ ஒன்றிவிடும். ராசிக் கட்டத்தில் இந்த நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்கள் லக்னத்தில் இருந்து 1, 4, 7, 10, 9, 2 - இந்த வீடுகளில் அமர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்த ஐந்து வீடுகளும் பிறந்தவனது தரத்தை நிர்ணயம் செய்பவை. ஆயுள், மகிழ்ச்சி, பெருந்தன்மை, செயல்பாடு, பிறப்பிலேயே ஏற்பட்ட தகுதி, செயல்படுத்தும் திறனுக்கு உகந்த ஒத்துழைப்பு ஆகிய அத்தனையையும் அவனை அடையச் செய்வன.

அத்தனைப்பேரும் அம்சகத்தில் குரு வீட்டில், தனுசு, மீனம் ஆகியவற்றில் அமர்ந்திருப்பது, அவனது திறமையின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துவிடுகிறது. பற்றின்மை வலுப்பெற்ற நிலையில், சொந்த வீடு என்ற பற்று அகன்றதால், அவன் வெளியேறி விடுகிறான் என்று பொருள். அம்சகத்தில் குருவின் கட்டம் ஒன்பதாகவும், பன்னிரண்டாகவும் அமைந்திருக்கும். ராசி புருஷனின் கோட்பாட்டில், 9-பிறப்பின் தகுதியை முழுமையாக்கி பூர்ணத்துவம் பெற வைக்கிறது. 12-பிறப்பின் பூர்ணத்துவத்துக்கு எதிரிடையானவற்றை இழக்கவைக்கிறது. பத்தும், பன்னிரண்டும் ஒன்றுக்கொன்று 4, 10 என்கிற கேந்திரத்தில் அமைந்தபடியால், ஒன்பதை... 4-ம் கேந்திரமான மீனம் ஒத்துழைப்பை அளித்து, 9-ஐ அதாவது ஐந்தின் ஐந்து- பூர்வபுண்ய பாவாத்பாவத்தை செழிப்பாக்கி, உலகம் போற்றும் உத்தமனாக மாற்றிவிடுகிறது.

அவனுடைய சிறப்பான கர்மவினை, பிறக்கும் வேளையில் தனுசிலும் மீனத்திலும், அம்சகத்தில் உள்ள எல்லா கிரகங்களும் அமையும்படி, ராசிக்கட்டத்தில் கேந்திரத்திலும் 1, 4, 7, 10, 9 -லும் இரண்டிலும் அமைந்திருக்கும் அமைப்பை ஏற்படுத்திவிட்டது. இப்படியும் சொல்லலாம். அதாவது, எந்த வேளையில் பிறந்தால் அத்தனை கிரகங்களும் தனுசிலும் மீனத்திலும் அம்சகத்தில் ஒதுங்கி விடுமோ, அந்த வேளையை கர்மவினை யின் தரம் தேர்ந்தெடுத்தது என்றும் சொல்லலாம்.

பிறந்த வேளையை வைத்து ஆண், பெண் தரத்தை வரையறுத்த பிறகு, திருமணத்தில் பொருத்தத்தை ஆராய வேண்டும். பொருத்தக் கோட்பாடுகளை மனப்பாடம் பண்ணி, கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்து பொருத்த முடிவை எட்டுவது, ஜோதிடத்துக்கு ஆற்றும் சேவையல்ல; மக்களுக்கு உதவும் சிபாரிசும் அல்ல.  இரண்டு பொருள்களின் இணைப்பு வலுப்பெற, இரண்டு பொருள்களின் தரம்தான் முக்கியம். பொது மருத்துவத்தில் முழுத்தேர்ச்சி பெற்றவர்கள், தனி மருத்துவத்தை ஏற்கிறார்கள். கண், காது, எலும்பு போன்ற சிறப்பு மருத்துவம் பெற்றவர்கள் அனைவரும், பொது மருத்துவத்தில் முழுத்திறமை பெற்றவர்களே.

அதேபோல், ஜோதிடத்தில் முழுத் திறமையை பெற்ற பிறகு, பொருத்தத்தில் செயல்பட வேண்டும். கையேடுகளை வைத்து வழிகாட்டியாக மாறும் எண்ணம், ஜோதிட பிரபலங்களுக்கு இருக்கக்கூடாது. ஜோதிட சாஸ்திரம் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. நம்மோடு என்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் காலத்தின் அலசல், என்றைக்கும் எளிமையானதுதான். திறமை யற்றவன் கடினம் என்று சொல்வதால், அது கடினமாகிவிடாது. அதுவே விஞ்ஞானம். அதைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானக் கருவிகள் உதவாது. அந்தக் கருவிகள் செயற்கையானதால், இயற்கை ஜோதிடத்துக்கு அது உதவாது. இயற்கையின் விளைவுதான் ஜோதிடம். அதன் பெருமையை சிறுமையாக்கும் சொற்றொடர்கள், பாமரர்களை ஈர்க்கும் பண்டிதனை நெருங்காது.

ஜோதிடத்தைப் படித்து ஆராய்ந்து திறமை பெற்று, பொருத்தம் சொல்லும் முறையை கையில் எடுக்க வேண்டும். அந்த எண்ணம் தான் பெருந்தன்மைக்கு அடையாளம். கணினியின் கணிப்பில் பலன் சொல்வது உண்மை ஜோதிடமாகாது. மாவரைக்கும் கல்லுக்கு எந்த சுவையும் தெரியாது. சுமை தாங்கிக்கு பொருளின் எடையும், வாசனையும், தரமும் தெரியாது. பொருத்தம் பார்ப்பதுதான் ஜோதிடம் என்று கிணற்றுத் தவளையாக மாறக்கூடாது. இருவரின் தரம் சிறப்பாக இருக்கிறதா என்பதை இறுதி செய்வதுதான் பொருத்தத்தின் பொருள். பத்துப் பொருத்தங்கள் அவர்களின் தரத்தை இறுதி செய்யாது. அவர்களின் தரம் சிறப்பாக இருந்தால், பொருத்தம் ஒத்துழைக்கும். பொருந்துகிறது என்றால் ‘தகுதியில் பொருந்துகிறது’ என்று பொருள். எல்லாவற்றிலும் தகுதியை வைத்துதான் பெருத்தத்தை இறுதி செய்கிறார்கள்.

‘ஆனுகூல்யம்’ என்ற சம்ஸ்கிருத சொல் ‘ஒத்துழைப்பு’ என்று பொருள்படும். ‘எதற்கு ஒத்துழைப்பு’ என்ற வினாவுக்கு, ‘அவர்கள் இருவரது வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு’ என்று பதில் வரும். வாழ்க்கை வேறு, பொருத்தம் வேறு. பொருத்தமே வாழ்க்கையை சீராக்காது. வாழ்க்கை முழுமையாக சிறப்பாக இருந்தால், அதற்கு பொருத்தம் ஒத்துழைக்கும் என்று பொருள். பத்துப் பொருத்தங்கள் அவர்களது வாழ்க்கையின் தரத்தை வரையறுக்காது. வாழ்க்கையின் தரத்தை ஆராய, அவர்களது பிறந்தவேளையை ஆராயவேண்டும். அதில் கவனம் செலுத்தாமல், பொருத்தத்தை மட்டும் உதிர்த்து அவர்களை இணையவைப்பது அறிவீனம்.

ஜோதிடத்தை அறிய விரும்பாதவன், நடை முறையில் ஜோதிடம் விபரீத விளைவுகளை ஏற்க வைப்பதால், அதில் நம்பகத்தன்மை இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்கிறான். ‘பொருத்தம் பார்ப்பது உண்மையோ, பொய்யோ என்று தெரியாது; பலபேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. அது உண்மை’ என்கிறான். பலர் வாழ அது பயன்படுவதால், அதை அழிக்கக் கூடாது என்பவர்களும் உண்டு.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே, அம்சகத்தில் குரு வீட்டில் அத்தனை கிரகங்களும் அமையப் பெற்றிருக்கின்றன. ராசிக் கட்டத்தில் அவர்கள் 1, 4, 7, 10, 9, 2 ல் இருக்கிறார்கள். இந்த வீடுகள் அனுகூலமான பலத்தை ஈட்டித்தரும் வீடுகள். அவர்கள் அம்சகத்தில் குருவின் வீட்டில் இடம்பெற்றபடியால், அத்தனை கிரகங்களும் தரம் பெற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். பிறந்தவன் முழுத் தகுதி பெற்றவன் என்பதை இந்த கிரக அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. அது கர்மவினையின் விரிவாக்கம். முற்பிறவியில் சேமித்த அவனது செயல்பாடு, அவனது முன்னேற்றத்தை எளிதில் அளித்து, தனது செயலால் பலனைச் சுவைக்கவைக்கிறது.

எப்போதும் நல்ல பலனை அளிப்பவர் குரு. தான் கெட்டாலும் நல்ல பலனை அளிப்பதில் சுணக்கம் இருக்காது. தனுசும் மீனமும் அவரது வீடு. அது, அவருக்குச் சுதந்திரமாக செயல்பட, அதாவது இடையூறின்றி தனது செயலை இறுதியாக்க இடமளித்து விடுகிறது. தன்னில் அடைக்கலமான எதிரிடையான கிரகங்களின் முயற்சியையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, நல்ல பலனை நிறைவு செய்துவிடுகிறார் குரு. அதைச் சுட்டிக்காட்ட, அம்சகம் வரை ஆராய்ந்து பதில் சொல்லவைக்கிறது ஜோதிடம்.

ஆண்-பெண் இருவரும் வாழ்க்கையில் இணைந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு நுகரும் தகுதியை இறுதி செய்ய வேண்டும். அதற்கு ஜாதகத்தை ஆராய வேண்டும். மகிழ்ச்சி அறுபடாமல் அதை நுகர, அவர்கள் வாழும் காலத்தில் ஒத்துழைப்பை இறுதி செய்ய, பத்துப் பொருத்தத்தை ஆராய வேண்டும். தகுதியற்ற வர்களை ஒத்துழைப்பில் நுகரவைக்க இயலாது. ஆகையால் தகுதி நிர்ணயம் முதன்மை பெறுகிறது.

நேற்று, இன்று, நாளை - இந்த முக்காலத்துடனும் ஒட்டியிருப்பது ஜோதிடம்; அத்தனை நிகழ்வு களுக்கும் ஆதாரமாகத் திகழ்வது. காலத்துக்கு உருவத்தை அளிப்பது ஜோதிடம். கிரக நாயகர்களான சூரியனும், சந்திரனும், நட்சத்திரமும் ஜோதிடத்தை வடிவமைத்தவர்கள். ஒளியில் தோன்றிய ஜோதிடம், இருட்டில் (அறியாமையில்) இருப்பவரை வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது (தமஸோமா ஜோதிர்கமய). பரந்து விரிந்து வளர்ந்த ஜோதிடத்தின் ஒரு மிகச்சிறிய பகுதியே ஜாதகப் பொருத்தம் பார்த்தல். அதையே ஜோதிடத்தின் அளவாக நினைத்து, எதிர்ப்பவர்களும் உண்டு.  மருந்துக்கடை வைத்தவன் மருத்துவராக முடியாது. பரிமாறுபவனுக்கு சமையல் தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை!

லக்னத்துக்கு உடையவள், அவனது அம்சக ராசி அதிபன், 11-ம் வீட்டுக்கு உடையவன் - இவர் களில் ஒருவர், 2-ம் வீட்டில் அமர்ந்தால், பிறந்து 20 வயதுக்குப் பிறகு வாழ்க்கை செழிப்புற்று இன்பத்தைச் சுவைப்பான் என்கிறது ஜோதிடம் (லக்னேசே தனராசி ஸ்தே...). லக்னாதிபன்- இன்பத் தைச் சுவைப்பவன். அவன் அம்சகம் பெற்ற  ராசி யின் அதிபன்- அவனுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பவன். லாபத்துக்கு உடையவன் அவனது விருப்பத்தை அடையவைப்பவன். அவன் 2-ல் இருப்பது, பண வரவை உறுதி செய்து, சுகத்தை உணர வைக்கும் என்கிறது ஜோதிடம். பிறக்கும்போதே 2-ல் இருந்தாலும், சிறுபிள்ளைத்தனம் மறைந்து இளமை எட்டிப்பார்க்கும்போதுதான் சுவையை உணரும் தகுதி பளிச்சிடும். அது ஏற்பட 20 வயது தேவைப்படும்.

லக்னத்திற்கு உடையவன், அவன் அம்சகம் பெற்ற ராசியின் அதிபதி, 11-க்கு உடையவன் - இவர்களில் ஒருவன் உச்சம் பெற்று கேத்திரத்திலோ (1, 4, 7, 10 வீடுகளிலோ), த்ரிகோணத்திலோ
(1, 5, 9 வீடுகளிலோ) இருந்தால், முப்பது வயதுக்கு மேல் சுகத்தை நுகர்வான் என்கிறது ஜோதிடம் (லக்னேசஸ்தாம்சநாதேது...).

12 வீடுகளில் ஒன்றில் அமைந்த கிரகத்தின் தரத்தை ஆராயும்போது, அந்த கிரகத்தின் அம்சக நாதனையும் இணைத்துக்கொள்ளச் சொல்லும் ஜோதிடம் (பலமம் சர்ஷயோ...). ராசியின்  30 பாகைகளில் 9 நவாம்சகம் இருக்கும். ஒரு நவாம்சகம் 3.20. ராசிக் கட்டத்தில்-அதில் இருக்கும் கிரகம் எந்த நவாம்சத்தைப்பெற்றிருக் கிறதோ, அந்த நவாம்சகத்தின் அதிபதி, அவனோடு மிக நெருங்கியவனாகவும் ஒத்துழைப்பவனாகவும் மாறிவிடுகிறான். இதை வைத்துத்தான் அம்சகாதிபதியையும் இணைத்து பலனை எடைபோட வேண்டும் என்று வலியுறுத்துகிறது ஜோதிடம்.

அம்சகாதிபதிக்கு லக்னாதிபதி சம்பந்தம் இருப்பதால், இருவரும் இணைந்து செயல்படும் தகுதி கிடைத்துவிடுகிறது. லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் (1, 4, 7, 10 வீடுகளில் இருந்தாலும்), த்ரிகோணத்தில் (1, 5, 9 வீடுகளில்) இருந்தாலும் நன்மையை எதிர்பார்க்கலாம். 6, 8, 12 வீடுகளில் இருந்தால் விபரீத பலனை சந்திக்க வேண்டியிருக்கும். 2, 3 வீடுகளில் அமைந்த கிரகங்களுக்கு, முறையே 11-ம் வீட்டையும் 8-ம் வீட்டையும் வைத்து பலன் சொல்லவேண்டிய கட்டாயம் உண்டு. 3, 6, 10-ல் (உபசய ஸ்தானம்) வெப்ப கிரகங்கள் நன்மையைச் செய்யும்; மற்ற வீடுகளில் தட்ப கிரகங்கள் நன்மையைச் செய் யும் (அபசய ஸ்தானங்கள்). 11-ம் வீட்டில் எந்த கிரகமானாலும் நன்மையை மட்டும் நடை முறைப்படுத்தும்; கெடுதலை முடக்கிவிடும்.

நல்லவனும் கெட்டவனும் 11-ல் அமர்ந் தால், நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்ற கோட்பாடு ஜோதிடத்தில் உண்டு. 11-க்கு உடையவன் வெப்ப கிரகமானாலும், தட்ப கிரகமானாலும் பாகுபாடின்றி நன்மையைச் செய்பவனாய் மாறுவதால், அவன் உச்சம் பெற்று, கேந்திர த்ரிகோணங்களில் வந்து அமர்ந்தால், 1, 4, 5, 7, 9, 10 இந்த வீடுகளில் கிடைக்கப்பெறும் விபவங்கள் அத்தனையையும் 11-க்கு உடையவன் ஈட்டித் தந்துவிடுவான் என்கிறது ஜோதிடம். லக்னாதிபதி, அதன் அம்சகாதிபதி, லாபாதிபதி - இவர்கள் உச்சம் பெற்று, கேந்திர த்ரிகோணங்களில் இணையவேண்டும். உச்சம் பெற்று என்பது மிக முக்கியமானது. லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் மட்டும் போதாது; உச்சம் பெற்றிருக்க வேண்டும் என்பது கவனத்துக்கு உரியது.

ஒரு கிரகத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் போது, பல கோணங்களில் அவனிடம் சேரும் தகுதியை ஆராய வேண்டும். ஜோதிடக் கோட் பாடுகள் நிறைய உண்டு. அவற்றை ஆராய்ந்து பதிலளிக்கும் பொறுப்பு ஜோதிட பிரபலங்களுக்கு இருக்க வேண்டும்; ஒரு வரி பதில் நம்பிக்கை அளிக்காது!

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism