மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 22

சிவமகுடம்  - 22
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 22

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 22

காலைக் கதிரவனை முகம் காட்டவிடாமல், ஆங்காங்கே திட்டுத் திட்டாக மேகப் பொதிகள் சூழந்துகொண்டு, அடிவானை கருஞ்சாம்பல் வண்ணமாக அடித்துவிட்டிருக்க, ஆதவக் கிரணங்கள் தலைகாட்டாததால், அந்த வனத்தின் விலங்குகளும் பட்சிகளும் கூட இன்னும் இரவின் சோம்பலை நீட்டித்தபடி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. ஆகையால், அவற்றின் கர்ஜனையோ, உறுமல் ஒலிகளோ, பட்சிகளின் குரல் ஜாலங்களோ இல்லாமல் போக, தனது சுயத்தை மொத்தமாக தொலைத்துவிட்டிருந்த அந்த உஷத் காலத்தில், கோச்செங்கணை அவனது வெண்புரவி வெகு பத்திரமாக உறையூர் கோட்டை முகப்பில் சேர்த்துவிட்டிருந்த அதே தருணத்தில், இங்கே பாசறைக் குடிலின் அருகில், தங்களின் மோதலால் அந்த வனத்தின் நிசப்தத்தை விரட்டிக்கொண்டிருந்தார்கள், வீரர்கள் இருவர். இருவரது கையிலும் சஸ்திர வகை ஆயுதமான பெரும் வாள்!

ஆயுதங்களை, அவற்றின் தன்மையையொட்டி *சஸ்திரம், அஸ்திரம் என்று இரு வகையாகப் பிரித்துச் சொல்கின்றன ஆயுத விளக்க நூல்கள். வீரர்களின் கையை விட்டு நீங்காது இருப்பது சஸ்திரம். இதை, ‘கைவிடாப்படை’ என்றும் சொல்வார்கள். இரண்டாவது, வீரர்களால் குறியை நோக்கி ஏவப்பட்டு இலக்கைத் தாக்கும் அஸ்திர வகை.

இங்கே இந்த வீரர்கள் நிகழ்த்தும் போர், ஓர் இலக்கில்லாத இலக்கைக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கைவிடாப் படையான வாளாயுதத்தை, கையில் எடுத்துக்கொண்டார்கள் போலும்!

வீரர்கள் இருவரில் ஒருவர் சைவத் துறவி! கடும் சண்டை யின் காரணமாக அவரது சடாமுடி அவிழ்ந்து, அவருடைய கேசம் முகத்தில் பாதியும் முதுகில் பாதியுமாக புரண்டு கொண்டிருந்தது. மெலிந்த தேகத்தினர்தான் என்றாலும், இரும்பில் வார்த்தது போன்ற தேக உறுதியும், கைகளிலும் முகத்திலும் காணப்பட்ட வீரத் தழும்புகளும், வாளின் கைப்பிடியை இறுகப் பற்றி அவர் அதை சுழற்றிய விதமும்... அந்த சைவத் துறவி போரில் வல்லவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டின. முழுக்கவசம் அணிந்தபடி அவரை எதிர்த்துப் போராடியவனும் போர்க் கலையில் சளைத்தவனாகத் தெரியவில்லை. காற்றைக் கிழித்தபடி தனது கழுத்தைக் குறிவைத்து இறங்கிய துறவியின் வாளை, வெகு லாகவமாகத் தடுத்துச் சுழற்றி திசைதிருப்பிவிட்டதோடு, துறவியைவிடவும் அதீத பாய்ச்சலை அவர் மீது காட்டினான், அந்தக் கவச மனிதன். இப்படியே இரண்டு நாழிகைகள் வெற்றி-தோல்வியின்றி நீடித்தது, அந்தச் சண்டை.

ஒரு நிலையில், துறவியைப் பெரும் பாறை ஒன்றின் மீது சாய்த்து,  தன் வாளையும் அவர் கழுத்தருகே கொண்டுசென்று, அழுத்திப் பிடித்தபடி கவச மனிதன் சொன்னான்... ‘‘எச்சில் பரிசுத்தம்’’ என்று. அதைக்கேட்டதும் துறவியின் முகத்தில் மலர்ச்சி! பதிலுக்கு அவர் ‘‘பசுவின் பால்’’ என்று கூற, கவச மனிதனும் மகிழ்ந்திருக்க வேண்டும். தனது பிடியை சற்று தளர்த்தினான். அதைப் பயன்படுத்தி அவனைப் பின்னோக்கி உந்தித் தள்ளிய சைவத் துறவி, ‘‘வாந்தி பரிசுத்தம்’’ என்று கூறி நிறுத்த, கவச மனிதனோ ‘‘தேன்’’ என்றான்.

இப்போது இருவருமே தத்தமது பிடியை தளர்த்தினார்கள்.

‘‘இறந்தவன் போர்வை பரிசுத்தம்’’ என்ற துறவியார், கவச மனிதனைப் பார்த்து கண்சிமிட்ட, அவன் ‘‘பட்டு வஸ்திரம்’’ என்று கூறி பெரிதாக நகைத்ததோடு, ‘‘என்னை அடையாளம் கண்டுவிட்டீரா, துறவியாரே?’’ எனக் கேட்கவும் செய்தான்.

பதிலுக்கு இதழ்களில் குறுநகையை வெளிப்படுத்திய சைவத் துறவியார், ‘‘தென்னவா! தாங்கள் புதிரை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, வந்திருப்பது நீங்கள்தான் என்பதைத் தெரிந்துகொண்டு விட்டேன். எனக்குச் சரிசமமாக வாள் வீசுவதில், தங்களைத் தவிர வேறு திறமைசாலி இந்த தென்ன கத்தில் யார் இருக்கிறார்கள்?’’ என்றார். காரண காரியம் தொட்டு துறவி வேடத்தில் திரியும் அந்த மனிதரின் பேச்சில்...

இப்போது மன்னவனின் முன் நிற்பதாலும், தனது பதவியின் நிலை பொருட்டும் மட்டற்ற மரியாதை தொனித்தது.

வெகு ஆனந்தத்துடன் அவரை நெருங்கி, தன் மார்போடு அணைத்துக்கொண்டான் கவச வீரன்.

அவனிடம் சைவ த்துறவியார் சொன்னது முற்றிலும் சரியே. அவரின் முதல் வாள் வீச்சை கவச வீரன் தடுத்தபோதே மிகச் சரியாய் யூகித்துவிட்டார், வந்திருப்பது தென்னவன் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி என்று. அவர் யூகத்தை மெய்ப்பித்தது, ‘எச்சில் பரிசுத்தம்' என்று மன்னவன் ஆரம்பித்து வைத்த புதிர்க் கதை!

ஆம்! சைவத் துறவியின் வேடத்தில் இருப்பவரும், பாண்டிய மன்னனுக்கு மிக நெருக்கமானவரும், சரித்திரக் கதைகள் மட்டுமல்லாமல், திருத்தொண்டத் தொகை, பெரிய புராணம் போன்ற ஞானநூல்களாலும் போற்றப்பட்டவருமான அந்த மாமனிதர், மன்னவனின் பழக்கம் வாய்த்த ஆரம்ப காலத்தில் அவனுக்குக் கூறிய சிறு கதையையே, இப்போது ஒரு புதிராக மாற்றிக் கூறி, தன்னை அவரிடம் வெளிப்படுத்திக் கொண்டான், தென்னவன் பாண்டியன்.

குருகுலத்தில் பயின்ற சீடன் ஒருவன், கல்வி ஞானத்தில் தான் பூரணத்துவம் பெற்றுவிட்டதாக நம்பினான். குருவிடம் விடைபெற வந்தான். அவருக்கோ, அவனது ஞானத்தில் திருப்தி இல்லை.

என்றாலும், அனுபவம் அவனைப் பூரணா மாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு. மூன்று வரி உபதேசத்துடன் அவனை வழியனுப்பிவைத்தார்.

‘எச்சில் பரிசுத்தம், வாந்தி பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ இதுதான் குருநாதர் அவனுக்குச் சொன்னது.

சிவமகுடம்  - 22

சீடன் கிளம்பினான். அவன் சென்றடைந்த கிராமத்தில் ஒரு வீட்டில் ஏதோ சுபமங்கல வைபவம். அங்கே விருந்துக்குப் பின்னர், எச்சில் இலைகளை வெளியே வீசியெறிந்தார்கள். அதைக் கண்ட சீடனுக்கு. ‘எச்சில் பரிசுத்தம்’ என்ற குரு உபதேசம் நினைவுக்கு வந்தது.ஓடோடிச் சென்று எச்சில் இலைகளை சேகரிக்க முயன்றான். அவனைத் தடுத்த முதியவர் ஒருவர், அவன் செய்கைக்கான காரணத்தை வினவினார். அவரிடம், குருநாதரின் உபதேசம் குறித்து விளக்கினான் சீடன்.

அவனுடைய அறியாமையை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக்கொண்ட முதியவர், ‘‘எச்சில் பரிசுத்தம் என்றால், கன்றின் எச்சில் பட்ட பசுவின் மடியில் கிடைக்கும் பாலைக் குறிக்கும்; அது, இறைவனை அபிஷேகிக்கும் அளவுக்குப் பரிசுத்தமானது. தேனீக்களின் வாந்தியே அருமருந்தாகத் திகழும் தேன் ஆகும். அதேபோல், பட்டுப் புழுக்களின் கூட்டில் இருந்தே மிக உன்னதமான பட்டு இழைகள் உருவாகின்றன’’ என்று விவரித்து, குருநாதரது உபதேச மொழிகளின் உண்மையை அந்தச் சீடனுக்கு விளக்கியதாக ஒரு கதை உண்டு. இந்தக் கதையையே துறவியாரிடம் புதிராக்கி விளையாடினான் தென்னவன் பாண்டியன்!

இருவரும் தழுவிப் பிரிந்ததும் துறவியார் கேட்டார்: ‘‘புதிர் விளையாட்டு இருக்கட்டும்... போர் விளையாட்டு எப்படியிருக்கிறது, மன்னவா?’’

தலைக்கவசத்தைக் கழற்றியபடியே துறவி யாருக்குப் பதில் சொன்னான் பாண்டியன்.

‘‘இலக்கை நோக்கி நகர்கின்றன நம் அஸ் திரங்கள்’’

‘‘உறையூரும் நமது இலக்குகளில் ஒன்று தானே?’’

‘‘ஆம்! அங்கும் சுழலப் போகிறது நமது பெரும் சக்கர வியூகம்!’’

‘‘உறையூரில் நம் வீரர்கள் சிறைப் பட்டிருப்பதாக அல்லவா தகவல் வந்தது?’’

வினா தொடுத்த துறவியாரின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு, பாசறைக் குடிசையை நோக்கி மெள்ள நடந்தபடியே பதிலுரைத்தான் பாண்டிய மன்னன்.

‘‘உண்மைதான். ஆனாலும் நாம் எதிர்பார்த்தபடியே அனைத்தும் நடந்திருக்கிறது’’

‘‘தென்னவா! உண்மையில் இப்போதுதான் நீங்கள் புதிர் போடுகிறீர்கள்! நம்மவர்கள் சிறைப் பட்டிருக்க, சக்கர வியூகம் எப்படிச் சுழலும்? போர் எப்போது துவங்கும்?’’

இந்தக் கேள்வியை துறவியார் கேட்டதும், தலையை சற்று சாய்த்துப் புன்னகைத்தான் பாண்டிய மன்னன். பிறகு கூறினான்.

‘‘பொறுத்திருந்து பாருங்கள்’’

அப்போது அவர்கள் குடிசையை நெருங்கி விட்டிருந்தபடியால், கடைசியாய் மன்னவன் சொன்ன பதிலை, துறவியாரும் ஆபத்துதவி படைவீரர்கள் மட்டுமின்றி, வேறு இருவரும் செவிமடுத்தார்கள்.

அந்த இருவர்... கை-கால்கள் பிணைக்கப் பட்டு, ஒரு விருட்சத்தின் அடியில் கைதி களாய் அமர்ந்திருந்த பொங்கிதேவியும், நம்பியும்தான்!

பொங்கியோடு குடிசைக்குள் நுழைந்த நம்பி, ஆயுதக் கிடங்காகவே திகழ்ந்த அந்தக் குடிசையின் தரைத் தளத்தின் மரப் பலகை களைப் பெயர்த்தெடுத்து, அவற்றுக்குக் கீழே  பதுங்கிக் கிடந்த விநோத ஆயுதங்களை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில்தான் பாண்டியர் பிரவேசம் நிகழ்ந்தது.

அப்படி, திடுமென சூழ்ந்துவிட்ட ஆபத்தால் அதிர்ச்சிக்கு ஆளானவன், அதிலிருந்து மீள்வதற்குள், பாண்டியனின் ஆபத்துதவி படையினரால் சிறைப்பட்டான். அவர்கள் அவனையும் பொங்கியையும் பிணைக்க முற்பட்டபோதுதான், ‘‘நிறுத்துங்கள்’’ என்று குரல் எழுப்பிய படி தானும் பிரவேசித்தார் சைவத் துறவி!

வந்திருப்பது யாரென்று அனுமானிக்காமல், ‘‘என்னை வீழ்த்திவிட்டு அவர்களைச் சிறைப் படுத்துங்கள்’’ என்று அறைகூவலும் விடுத்தார். அதன் விளைவாகவே மன்னவருக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்தது வீர விளையாட்டு!

சிவமகுடம்  - 22

இங்கே நிலைமை இவ்வாறு இருக்க, பாண்டிய மன்னன் மாற வர்மன் அரிகேசரி, சைவத் துறவியாரிடம்  சொன்னதுபோன்று, அங்கே உறையூரின் சிறைக்கொட்டடியில் சுழலத் துவங்கியிருந்தது, பாண்டிய சேனையின் சக்ர வியூகம்.

இளவரசி மானி வெகுண்டெழுந்தாள்! மந்திராலோசனைக்கும் வாய்ப்பு இல்லாதபடி மிக இக்கட்டான சூழலின் வசப்பட்ட உறையூர்க் கோட்டையின் பெரு மதில்களிலும், சோழ முரசுகள் பெரிதாய் முழங்கின.

‘நாழிகை யிறவாமல் கோழியுள் வென்று கொண்டும்’ என்று சரித்திரச் செப்பேடுகள் பெரிதாய் பேசும், பெரும்போர் மூண்டே விட்டது!

- மகுடம் சூடுவோம்...

*போருக்கு உரிய நாளிகைக் கருவிகள் சஸ்திரம், அஸ்திரம் என்று இருவகைப்படும். இவைதவிர, சிறுநாளிகம் பெருநாளிகம் ஆகிய ஆயுத வகைகளும் உண்டு - அபிதானசிந்தாமணி (போர்க் கருவிகள்).