Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
கலகல கடைசி பக்கம்

சின்னச் சின்ன ஆசை..!யுவா, ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம்

முகத்தை ‘உம்’ என வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த பிரசாந்த், “நான் அந்தத் தாத்தாகிட்டே போக மாட்டேன். ஒட்ட வெட்டிடறார். ‘யுவர்ஸ் ஸ்டைல்’ கடைக்குத்தான் போவேன்’’ என்றான்.

‘’உன் தாத்தா காலத்துல இருந்து அங்கேதான் முடி வெட்டிக்கறோம். காசும் கம்மி. அதென்ன யுவர்ஸ் ஸ்டைல்? இந்தச் சின்ன வயசுலேயே என்னடா ஸ்டைல் வேண்டியிருக்கு’ என்றார் பாட்டி.

“நீ சும்மா இரு பாட்டி.. நான் ஒண்ணும் சின்ன பையன் இல்லை. செவன்த் படிக்கிறேன். மொட்டை அடிச்ச மாதிரி கட்டிங் பண்ணிட்டுப்போனா, ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க’’ என்றான்.

“ஸ்டைலான்னா எப்படி? வயல்ல ஏர் ஓட்டின மாதிரி மண்டையில கோடு போட்டுக்கிட்டு... ஸ்கூல்ல மிஸ் திட்ட மாட்டாங்களா?’’ என்றாள் அம்மா.

“அப்படியெல்லாம் அசிங்கமா இல்லே. முன்பக்கம் கொஞ்சம் முடி இருக்கிற மாதிரி வெட்டிப்பேன். மிஸ் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இன்னும் 30 ரூபாய் கொடு!’’

“எனக்குத் தெரியாது. அப்பாவுக்கு போன் பண்ணிக் கொடுக்கறேன். நீயே பேசிக்க’’ என்றவாறு அம்மா செல்போனை எடுக்க...

“போ... போ... நான் பேச மாட்டேன்... கட்டிங் பண்ணிக்க மாட்டேன்... சாப்பிட மாட்டேன். என் இஷ்டப்படி கட்டிங் பண்ணிக்கக்கூட ஃப்ரீடம் இல்லே’’ என்றவாறு கட்டிலில் கவிழ்ந்துப் படுத்து விசும்பினான் பிரசாந்த்.

“இதையெல்லாம் உன் அப்பாகிட்டே சொல்லேன். அவர் முன்னாடி வாயே திறக்க மாட்டே. என்கிட்டேதான் குதிப்பே. நான் காசு கொடுக்க மாட்டேன்’’ என்றபடி அம்மாவும் வேறு வேலையைப் பார்க்க போய்விட்டாள்.

அவனை சமாதானம் செய்ய பாட்டி செய்த முயற்சிகள் தோற்றன. நேரம் நகர நகர பாட்டியின் பதற்றம் அதிகமானது. “பாவம் குழந்தை... காலையில இருந்து காபிகூட குடிக்கலை. அவன் இஷ்டப்படிதான் செய்துக்கட்டுமே. இப்போ பசங்க எல்லாம் அப்படிதானே இருக்காங்க” என்றவர்,

“டேய் கண்ணா... உன் அப்பாகிட்டே நான் பேசிக்கிறேன். இந்தா காசு. போய் அந்த யூஸ் ஸ்டைலோ, பியூஸ் ஸ்டைலோ... அங்கேயே கட்டிங் பண்ணிட்டு வந்து குளிச்சுட்டு சாப்பிடுடா” என்று பணத்தைக் கொடுத்தார் பாட்டி.

துள்ளிக்கொண்டு ஓடினான் பிரசாந்த். அழகாக கட்டிங் செய்துகொண்டு வந்து கண்ணாடியில் பார்த்துப் பார்த்து பெருமைப்பட, “ராத்திரி உன் அப்பா வந்ததுக்கு அப்புறம் இருக்கு கச்சேரி” என்றாள் அம்மா.
“அதுக்குள்ளே நைசா நான் தூங்கிடுவேனே... வெவ்வெவ்வே’’ என்றான் குஷியாக.

இரவு வீடு திரும்பிய அப்பாவிடம், தயங்கியவாறு விஷயத்தைச் சொன்னாள் அம்மா. எரிந்து விழுவார் எனப் பார்த்தால், எதுவும் பேசாமல் சாப்பிட்டார். பிறகு, மகன் அருகே படுத்துக்கொண்டார்.
“திட்டுவீங்கன்னு பயந்தேன்’’ என்றாள் அம்மா.

“நான், சின்ன வயசுல இருந்தே மத்தவங்க சொன்னதை மட்டுமே தலையை ஆட்டி ஆட்டி செய்யப்பழகிட்டேன் சுயமாக சிந்திக்க முடியலை. என்னோட சின்னச் சின்ன ஆசைகளைக்கூட என்னால நிறைவேத்திக்க முடியலை. அந்த எரிச்சலைதான் கோபமா உங்ககிட்டே எல்லாம் காட்டறேனோனு தோணுது. சில சமயம் சின்னச்சின்ன எதிர்ப்புகளை காண்பிச்சு, நமக்குப் பிடிச்சதை செய்யறதில் தப்பில்லே சாந்தி. இந்த ஸ்டைல் அழகா, நல்லாதானே இருக்கு!” என, ரசனையோடு தூங்கும் மகனின் தலையைக் கோதிவிடுபவரை வியப்போடு பார்த்தார் பிரசாந்தின் அம்மா.