Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

Published:Updated:
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32
பிரீமியம் ஸ்டோரி
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32

53 - காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே ?

இங்கே பெருமாள் என்றது ஸ்ரீராமனை. கம்பர் உளவியல்பாங்கிலும், அழகியல்பாங்கிலும் ராமகாதையை அணிசெய்தது போல இன்னொரு கவிஞன் செய்யவில்லை. பால காண்டமும் அயோத்தியா காண்டமும் பல அருமையான பாடல்களால் நெய்யப்பட்டது. கைகேயியை பற்றி ஊர்மக்கள் கூறுவதுபோல  ‘’தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால் கேகயன் மடந்தை“ என்கிறான். ராமகாதை இன்று நேற்றல்ல பலகோடி வருடங்களாக அனைவராலும் அறியப்பட்டு உருப்போடபட்ட கதை. சொல்நயமும் பொருள் நயமும் இன்றி அதனை மீண்டும் கூற முடியாது என்று உணர்ந்து கம்பன் எழுதப்போக பல நூற்றாண்டுகளாக அது காலத்தை விஞ்சி நிற்கிறது.

கௌசல்யையை விட கைகேயியிடம் வளர்ந்தவன் ராமன். அவனுக்கு மறுநாள் பட்டாபிஷேகம் என்றால், மற்ற அனைவரைக் காட்டிலும் அவளுக்குத்தான் மகிழ்ச்சி. இன்னல் செய் ராவணன் இழைத்த தீமை போல அங்கு கூனி தோன்றி கைகேயியிடம் ராமன் முடிசூடப் போவதைக் கூற, ஆய பேரன்பில் ஆர்த்தெழும் அவள் முத்துமாலையை கூனிக்கு பரிசாகக் கொடுக்கிறாள். துன்னரும் கொடுமனக் கூனியும் விடாது கைகேயி மனதை மாற்றி தசரதனை வீழ்த்தி முன்பெற்ற இருவரங்களை செயல்படுத்துகிறாள். ஆழிசூழ் உலகெலாம் பரதன் ஆளவேண்டும். ராமன் தாழ் இருஞ் சடைகள் தாங்கி பூழி வெம்கானம் நண்ணி ஏழ் இரண்டு ஆண்டு தவம் மேற்கொள்ள வேண்டும். ஒரு நொடியில் ராமனுக்கு சகலமும் விளங்கி விடுகிறது. அவன் முகத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லை.அவ்வாசகம் உணரக் கேட்ட ராமன் திருமுகச் செவ்வி அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா என்கிறான் கம்பன். இதைவிட ராமனின் நற்பண்பினை எவரால் எளிதில் விளங்க வைக்க முடியும்?
மன்னவன் பணிஅன்று ஆகில்நும் பணி மறுப்பேனோ?என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனே பெற்றது அன்றோ?

எம்பெருமானைவிட வேறு எவரால் இப்படி ஒரு வாக்கியத்தைக் கூற முடியும்? லக்குவன் மனதை மாற்றி, அவதார நோக்கத்துக்காக பிராட்டி விண்ணப்பத்தை ஏற்று ராமன் காடு செல்வதை கம்பரின் வரிகளில் காண நேரும்போது கலங்காத கல்நெஞ்சும் கலங்கும்.

குழைகின்ற கவரி இன்றிக்
    கொற்றவெண் குடையும் இன்றி
இழைக்கின்ற விதிமுன் செல்லத்
     தருமம் பின்இறங்கி ஏக.......


விதி முன்னால் துரத்த தருமம் பின்னால் செல்கின்றது என்கிறார் கம்பர்.

பெற்றோரை மதித்து வாழவேண்டும், சகோதரர்கள் இடையே பகைமை பாராட்டக் கூடாது , பிறன்மனை நோக்காமை பேராண்மை போன்றவற்றை வெறும் வாயில் சொல்லலாம். ஆனால், செய்து காட்டினால்தானே அவன் மகன்? எம்பெருமான்? ராமன் காட்டுக்குச் செல்வதன் மூலம் பல அறங்களை எளிதில் விளங்கவைத்தான். அப்படிப்பட்ட பெருமாள் ராமனைப் போல தான் காட்டுக்கு செல்லவில்லையே ஆகையால் திருக்கோளூரில் இருக்க தனக்கு யோக்கியதை இல்லை என்று அந்த பெண்பிள்ளை கிளம்புகிறாள்.

54- கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே ?

ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு திருவடிகள் உண்டு என்றும் ஒன்று பெரிய திருவடி கருடாழ்வார் என்றும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இப்போது அடுத்த திருவடி அனுமன்.

அனுமனை கம்பர் சொல்லின் செல்வனாகவே சித்திரிக்கிறார். கம்பன் காவியத்தில் அஞ்சனா மைந்தன் முதலில் கூறும் வாசகமே “இவ்விடத்து இனிது இருமின்; அஞ்சல்“ என்பதுதான். அதாவது சுக்ரீவன் தூரத்தில் ராம லக்குவனர்களைக் கண்டு பயந்து வரும்போது அவனுக்கு ஆறுதல் கூறுவது போல அவன் கூற்று முதற்கூற்றாக அமைகிறது. மதியூகம் கொண்ட ஒரு சிறந்த வீரனாகவே அனுமன் சித்திரிக்கப்படுகிறான். இந்த சொல்லின் வன்மை ராமகாதை முழுவதும் தொடர்கிறது. அது சிறப்பாக பரிமளிக்கும் ஓர் இடம் உண்டு.

ராமன் வானரங்களுடன் கடலின் இக்கரையில் நிற்க, பேருருவம் எடுத்து அனுமன் யோகத்தால் கடலைக் கடந்து மகேந்திர மலையில் நின்று லங்கா தேவியை ஏமாற்றி லங்காபுரி சென்று பிராட்டியை அசோகவனத்தில் கண்டு தேற்றி ஆறுதல் கூறி, சீதை அளித்த சூளாமணியை வாங்கிக் கொண்டு, போகிற போக்கில் லங்கையை எரித்து மீண்டும் ராமனிடம் வந்து நிற்கிறான். ராமனுக்கு தவிப்பு. அனுமன் நிஜமாகவே இலங்கை சென்றானா? சீதையைப் பார்த்திருப்பானா? வேறு யாரையும் பார்த்து சீதை என்று நம்பி திரும்பியிருப்பானோ? என்பது போன்ற சந்தேகங்கள் எழ அனுமன் முகத்தை ஆவலோடு பார்க்கிறான்.

கம்பன் மிக அற்புதமாக,

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத்தென்நகர்
அண்ட நாயக! இனித் தவிர்தி ஐயமும்
பண்டுஉளதுயரும் என்று அனுமன் பன்னுவான்.


சீதையைப் பார்த்தேன் என்று ஆரம்பித்தால் ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையில் தவறான அர்த்தத்தை ராமபிரான் கற்பித்துக் கொண்டால் என்ன செய்வது என்று கண்டனென் என்று தொடங்குகிறான். அடுத்து முக்கியமான விஷயம் பிராட்டியின் கற்பின் நிலை. சீதை என்று கூறாமல் கண்டனென் கற்பினுக்கணியை என்பதன் மூலம் கம்பன் தன் அற்புத வார்த்தைகளால் அனுமனை சொல்லின் செல்வனாக மாற்றி விடுகிறார்.

அப்படிப்பட்ட திருவடியாகிய அனுமனைப் போல தான் இலங்கை சென்று சீதையைக் கண்டுவந்ததைக் கூறினேனா இல்லையே பிறகு நான் இந்தத் திருக்கோளூரில் இருந்து என்ன பயன் கிளம்புகிறேன் என்று அந்தப் பெண் கிளம்பினாள்.