Election bannerElection banner
Published:Updated:

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் `திருமுலைப்பால் வைபவம்!’ நடப்பது ஏன்?

விகடன் விமர்சனக்குழு
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் `திருமுலைப்பால் வைபவம்!’ நடப்பது ஏன்?
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் `திருமுலைப்பால் வைபவம்!’ நடப்பது ஏன்?

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் `திருமுலைப்பால் வைபவம்!’

ந்தக் காலை வேளையில் ஒரு மூன்று வயதுக் குழந்தை கோயில் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தையார் குளித்துக்கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. தந்தையார் தினந்தோறும் இந்தத் தோணியப்பர் கோயில் குளத்தில் மந்திரங்களை ஜபித்தபடி நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இன்றைக்கு அவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவரது குழந்தை தானும் வருவதாக அடம்பிடித்தது.

தந்தை மறுத்தார். ஆனால், குழந்தை அழுது அடம்பிடிக்கவே, வேறு வழியில்லாமல் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றார். குழந்தையின் இந்தப் பிடிவாதம், இந்த உலகத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லப்போகிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது. குழந்தையை குளத்தின் படியில் அமரவைத்துவிட்டு, குளத்தில் இறங்கி நீராடத் தொடங்கினார்.

அவர் மந்திரங்களை ஜபித்தபடி குளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்துகொண்டிருந்தார். ஒருமுறை மூழ்கியபோது அவர் சிறிது நேரம் வெளியே வராமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு மனதில் மந்திரங்கள் ஓதியபடி இருந்தார். சிறிது நேரம் கவனித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, குளித்துக்கொண்டிருந்த தனது தந்தையாரை திடீரென்று காணவில்லையே என்று தனது மழலைக் குரலில் அவரை அழைத்தது. பதிலில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தபோதும், அவர் தண்ணீருக்குள் மூழ்கியபடி இருந்ததால், குழந்தையின் குரல் அவருக்குக் கேட்கவில்லை.

தந்தை வராதுபோகவே, குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் அழைப்பு மட்டுமல்ல, அழுகுரலும் அவருக்குக் கேட்கவில்லை. அவருக்குக் கேட்காவிட்டால்தான் என்ன? உலகத்துக்கே தந்தையான சிவபெருமானின் காதில் இது விழுந்தது. அவர் பார்வதியைப் பார்த்தார். 'உமா, தந்தையைக் காணாமல் குழந்தை அழுகிறது. நீ போய் அதற்குப் பால் ஊட்டி அழுகையை நிறுத்திவிட்டு வா!" என்று பார்வதியிடம் கூறினார் சிவபெருமான்.

குழந்தை அழுதால் தாய்க்குப் பொறுக்குமா? அம்பிகை உடனே கோயில் குளத்துக்கு வந்தார். குழந்தையை வாரி எடுத்து, தன் கையில் வைத்திருந்த வெள்ளிக் கிண்ணத்தில் உள்ள பாலைக் குழந்தைக்கு கொடுத்தார். அது ஒரு தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் பால் மட்டுமல்ல, முருகனின் அவதாரமாகப் போற்றப்பட்டவரும், பிற்காலத்தில் 'திருஞானசம்பந்தர்' என்று அழைக்கப்பட்டவருமான அந்தக் குழந்தைக்கு அம்பிகை கொடுத்தது ஞானப்பால்! பாலைக் கொடுத்ததும் அம்பிகை மறைந்தாள்.

மூழ்கி இருந்த தந்தையார் எழுந்து மேலே வந்தார். குழந்தையின் கடைவாயில் பால் இருப்பதைக் கண்டார். ''யார் கொடுத்த எச்சில் பாலை நீ குடித்தாய்?'' என்று கேட்டு அருகில் இருந்த ஒரு கம்பை எடுத்து குழந்தையை அடிக்க ஓங்கினார். குழந்தை கோயில் கோபுரத்தில், விடை வாகனத்தில் காட்சி தரும் திருநிலைநாயகி சமேத தோணியப்பரின் திருவுருவத்தை நோக்கி தனது சுட்டு விரலை நீட்டியது. ஒன்றும் புரியாத தந்தை மறுபடியும் குழந்தையை அடிக்க முற்பட்டார். குழந்தை மறுபடியும் தன் சுட்டு விரலை கோபுரத்திலிருந்த அம்மையப்பரின் திருவுருவத்தை நோக்கி நீட்டியபடி பாடத் தொடங்கியது:

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப்பொடி பூசியென் னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

தந்தை இப்போது நம்பினார். மூன்று வயதுக் குழந்தைப் பாடுகிறதே!

உடனடியாக இந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. குளத்தருகே கூட்டம் சேர்ந்தது. ஞானசம்பந்தரை அவரது தந்தையார் சிவபாதஇருதயர் தனது தோளில் தூக்கிக்கொண்டு, பக்தர்கள் சூழ தோணிபுரத்து பெருமானை தரிசிக்கச் சென்றார். அதன் பின்னர் அந்தக் குழந்தை, திருஞானசம்பந்தராகத் தனது 16 வயதுவரை பல கோயில்களைத் தரிசித்து, பல பாடல்களைப் பாடி தமிழை வளர்த்தார்.

இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணம், தொன்றுதொட்டு இன்றும் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 'திருமுலைப்பால் வைபவம்' சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த வருடம், வரும் 21.4.2018 அன்று இந்தத் திருவிழா நடைபெற உள்ளது. காலையில் சம்பந்தருக்கு தோணியப்பர் தரிசனம் தந்து திருமுலைப்பால் உற்சவம் நடைபெற்று, பின்னர் சம்பந்தப் பெருமான் அருகிலுள்ள திருக்கோலக்கா கோயிலுக்குச் சென்று பதிகம் பாடி பொற்றாளம் பெற்றுத் திரும்பும் நிகழ்வும் நடைபெற உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பக்தர்கள் சீர்காழி சென்று சிறப்புமிக்க இந்த விழாவில் கலந்துகொண்டு சிவபெருமானின் அருளைப் பெற வேண்டுகிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு