Published:Updated:

உற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்... மனமறிந்து அருள்புரியும் மணலூர் மாரியம்மன்!

குழந்தை வரமருளும், அம்மைநோய் தீர்க்கும்... மணலூர் மாரியம்மன் அருள் பார்வை!

உற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்... மனமறிந்து அருள்புரியும் மணலூர் மாரியம்மன்!
உற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்... மனமறிந்து அருள்புரியும் மணலூர் மாரியம்மன்!

மணலூர் மாரியம்மனை வேண்டிக்கொண்டால், அவள் நம்மை அன்போடு அரவணைத்து உடலிலுள்ள தீராத நோய்களைத் தீர்ப்பாள்; மனதிலுள்ள சுமைகளையும் இறக்கிவைப்பாள்; நம் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியைத் தருவாள்.

`வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி' என்று காவிரி சிறப்புப் பெற்றிருந்த காலத்தில், சோழ தேசம் முழுவதும் பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்திருந்தன; `தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றும் பெயரெடுத்திருந்தது. 

சோழ தேசத்தை ஆட்சிசெய்த மன்னர் ஒருவர், ஒருநாள் தஞ்சையில் பயணம் செய்துகொண்டிருந்தார். இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் அழகுறத் தவழ்ந்து சென்ற அரசரின் பயணப் பாதையில் அழகான ஒரு வனப்பகுதியைக் கண்டார். 

சலசலவென்ற இசைநயத்துடன் தவழ்ந்தோடிய காவிரியின் குளிர்ச்சியிலும் வனத்தின் வனப்பிலும் பரவசமடைந்த சோழ மன்னர், அந்த இடத்துக்குப் பலரும் வந்து மகிழ வேண்டும் என்று விரும்பினார். 'இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினால் நன்றாக இருக்கும்; மக்களும் வருவார்கள்; தெய்வத்தை வழிபடுவார்கள்; இயற்கையை நேசிக்கவும் செய்வார்கள்' என்றெல்லாம் எண்ணிய மன்னர், அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். அதுதான் மணலூர் மாரியம்மன் கோயில்.

கோயிலில் அம்மன் எட்டுத் திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, திருமுடியை அக்னி கிரீடம் அலங்கரிக்க, வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி திருக்காட்சி தருகிறாள். கோயில் கட்டப்பட்டதுமே சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர். மக்களுடன் மகமாயியும் மனம் குளிர்ந்தாள்.

மணலூர் பகுதியில்தான் காவிரி ஆற்றிலும், கொள்ளிடம் ஆற்றிலும் மணல் அதிக அளவிலிருக்கும். அதனாலேயே இந்த ஊருக்கு `மணலூர்’ என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மண்ணில் கிடைத்ததாலும்,மணலூரில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவதாலும் அம்மனுக்கும் `மணலூர் மாரியம்மன்’ என்றே பெயர் வந்தது.

இந்தக் கோயிலில் உள்ள அம்மனின் உற்சவ மூர்த்தத்தின் திருமுகத்தில் முத்து முத்தாக அம்மை போட்டது போன்ற தழும்புகள் காணப்படுகின்றன. அம்மனின் உற்சவ மூர்த்தம் இங்கே வந்ததே ஓர் அற்புத நிகழ்வுதான்!

உற்சவ அம்மனின் முகத்தில் அம்மைத் தழும்புகள்

மணலூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் நல்லூர். அந்த ஊரில் மக்கள் நடவுப் பணிகளை செய்துகொண்டிருந்தபோது, அழகிய அம்மனின் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. ஊர்ப் பெரியவர் ஒருவர் அம்மன் விக்கிரகத்தை ஒரு துணியில் சுற்றி, தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்தார். 

அன்றிரவே அவரின் கனவில் தோன்றிய அம்மன், 'நான் மணலூர் மாரியம்மன். என்னை நான் இருக்குமிடமான மணலூருக்கே கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று கூறியிருக்கிறாள். விடிந்ததும் முதல் வேலையாக அம்மனை மணலூருக்குக் கொண்டு செல்வதற்காகத் துணியைப் பிரித்தார். அம்மனின் முகத்தில் சின்னச் சின்ன அம்மைத் தழும்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர் ஊர் மக்கள். உடனே கொஞ்சமும் தாமதிக்காமல் அந்த அம்மன் விக்கிரகத்தை மணலூருக்குக் கொண்டு சென்று சேர்த்துவிட்டனர்.

இன்றைக்கும் பிரதான உற்சவராக விளங்கும் மாரியம்மன், முத்து முத்தாக அம்மை தழும்புடனும், கைகளில் உடுக்கை, கத்தி, பாசம், கபாலம் ஏந்தியபடி காட்சி தருகிறாள்.

பாலாபிஷேகம் செய்தால் அம்மை நோய் குணமாகும்!

உடலில் அம்மையால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்களும், தொடர்ச்சியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அம்மை போட்டாலும் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, அந்தப் பாலில் கொஞ்சம்  தீர்த்தம்போல் குடித்தால், உடனே அம்மை குணமாகும் என்பது ஐதீகம். குழந்தை வரம் இல்லாதவர்கள் அம்மனிடம் வந்து தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், உடனே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.  

காவிரியின்  வடகரையிலும்,கொள்ளிடத்தின் தென் கரையிலும் கம்பீரமாக வீற்றிருக்கும் அம்மன் மணலூர் மக்களுக்கு மட்டும் அருள்புரியாமல், மாசி மாதத்தில் மகா சிவராத்திரி முடிந்ததும் கும்பகோணம், அதைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் நெடும்பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் மக்களுக்கும் அருள்புரிகிறாள்.

விழாக்கள் விசேஷங்கள்

சித்திரை திருவிழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அலகுக் காவடி, பறவைக் காவடி, அங்கப் பிரதட்சிணம் என பக்தர்கள் அந்த சமயத்தில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதோடு தேரோட்டமும் விமர்சையாக நடைபெறும்.

அதேபோல் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் வீதியுலா நடைபெறும்.வெயில் முடிந்து மழை தொடங்கும் இந்தக் காலத்தில், மக்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருப்பதற்காக அம்மன் இப்படி மக்களைத் தேடி வீதியுலா வருவதாக ஐதீகம்.

மணலூர் மாரியம்மனிடம் வந்து வேண்டிக்கொண்டால், வாழ்வில் அனைத்து நன்மைகளையும் மகிழ்ச்சியையும் பெறலாம்!

எப்படிச் செல்வது?

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையிலுள்ள அய்யம்பேட்டையிலிருந்து  சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது மணலூர்.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை: 7 மணி முதல் 12 வரை. மாலை : 4 மணி முதல் இரவு 8 வரை.